Skip to main content

2022 _ மீண்டும் மீண்டும்;1

                   மீண்டும் மீண்டும்

எப்போதும் ஒரு ஆண்டின் இறுதியில் என்ன செய்தோம் என்று நினைத்துப்பார்க்கும் போது புத்தகம் வாசித்தது தான் அந்த ஆண்டின் பொருள் உள்ள செயலாகத் தோன்றும். இந்த ஆண்டு என்ன வாசித்திருக்கறேன் என்பதும் , என்ன எழுதியிருக்கிறேன் என்பது முக்கியமானது. முன்பெல்லாம் டைரியின் பின்புறம் எழுதி வைப்பேன். இப்பொழுது அந்த நல்லப்பழக்கத்தை விட்டுவிட்டேன். மீண்டும் தொடங்க வேண்டும்.

எப்பொழுதும் போல வாசிக்காத ஒரு நாள் இல்லை என்பது நிறைவளிக்கிறது. எழுத்தாளர் அஜிதனின் முதல் நாவலான மைத்ரியை என் பிறந்தநாளன்று வாசித்தேன் என்பது சட்டென்று நினைவிற்கு வருகிறது. அன்றே நாவல் பற்றி பேரெழிலின் சங்கமங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். அது புரவி இதழில் வெளியாகியது. ஒரு இளம் எழுத்தாளரின் முதல் நாவல் வெளியான உடனே வாசிப்பது இது தான் முதல் முறை. அதுவே மனதிற்கு பரவசமாக இருந்தது. அதுவுமில்லாமல் அஜிதனை விஷ்ணுபுரம் விழாவில் சந்தித்து நாவல் பற்றி பேசியதும் நிறைவளிக்கிறது. புத்தம் புதிதாக எழுதுபவர்களை பார்ப்பதே உற்சாகமளிக்கும் என்று அன்று உணர்ந்தேன். நான் சுனிலை,கார்த்திக்கை,அகரமுதல்வனை,விஷால் ராஜாவை,ஷங்கரை,சுரேஷ் ப்ரதீப்பை இன்னும் சில எழுத்தாளரகளை எப்படி முதன்முதலாக ஒரு புது எழுத்தாளராக பார்த்தேனோ அதே போல் தான் அஜிதனையும் பார்க்கிறேன். 

ஒரு இளைஞனை பின்புலத்துடன் பார்ப்பது என்பது அவன் திறமைகளையும் அவன் முயற்சிகளையும் பற்றி சரியாக புரிந்து கொள்ள உதவாது. நாம் எப்படி நம் சூழல்களை வெட்டிக்கொண்டு உலகின் முன் நிற்கிறோமோ அப்படித்தான் அவனையும் கவனிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். காலத்தின் முன் எப்போதும் படைப்புகளினாலேயே ஒரு படைப்பாளி நிற்க முடியும் என்பதால் முதல் படைப்புடன் நம் முன்னால் வந்து நிற்கும் இளம் படைப்பாளிக்கு அவருக்குரிய கவனத்தை அளிக்க வேண்டும். நான் எழுத வந்த இரண்டு ஆண்டுகளில் வாசகசாலை என்னை கண்டு கொண்டு சிறுகதை தொகுப்பு கொண்டு வரலாம் என்று கேட்டதை நினைத்துக்கொள்கிறேன். நான் எழுத வந்த இந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு தொகுப்புகளை கொண்டு வர முடிந்தது அவர்களின் கவனத்தினால் தான்.

"சின்னப்பையனால இப்படி எழுத முடிஞ்சிருக்கேன்னுதான் வாசிச்சதும் மனசுல தோணுச்சு," என்று அஜிதனின் தோளில் கைவைத்து கூறியது இன்னும் காட்சியாக மனதில் இருக்கிறது. [நான் பெரும்பாலும் அண்ணன் தம்பி தங்கை அக்கா நண்பர்களிடம் பேசும்  போது ஒரு முறையாவது தோளில் தொட்டு பேசக்கூடிய ஆள். விஷ்ணுபுரம் விழாவில் அஜிதனிடமும் சக்திவேலிடமும் நான் இயல்பாக வெளிப்பட்டேன்] . அஜிதன்  நாவலில் கொண்டு வந்திருக்கும் அகத்தனிமையும், இயற்கையும் மிக முக்கியமானது என்று ஒரு வாசகியாக தயக்கம் இன்றி சொல்வேன்.

அடுத்ததாக எழுத்தாளர் வெண்ணிலாவின் கங்காபுரம்,எழுத்தாளர் கலைச்செல்வியின் ஹரிலால் எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜனின் காயாம்பூ மற்றும் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி போன்ற நாவல்களை மையப்படுத்திய நேர்காணல்களை செய்துள்ளேன். 

இதற்காக சொல்வனம் ஆசிரியர் மைத்ரேயன் மற்றும் வாசகசாலை கார்த்திகேயன் மற்றும் அருணிற்கு என் அன்பு. இவர்களிடம் நான் தயக்கமின்றி  அவர்களின் இதழில் என் நேர்காணல்கள் மற்றும் கட்டுரைகளுக்கான இடத்தையும் சுதந்திரத்தையும் கேட்கவும் பெறவும் முடிகிறது. நான் வாசிக்கும் நாவல்கள் சிறுகதைகள் பற்றி எழுதி அனுப்புவதை இவர்கள் ஒருமுறை கூட மறுத்ததில்லை.

எழுத வந்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஆண்டில் தான் நிறைய கட்டுரை முயற்சிகளை செய்திருக்கிறேன். வாசகசாலை இணைய இதழில் அகமும் புறமும் என்ற சங்கக்கவிதைகள் பற்றிய தொடரும்,புரவியில் மூத்தப்படைப்பாளிகளான கி.ரா மற்றும் அழகிரிசாமி நூற்றாண்டிற்காக எழுதும் வெந்ததழலால் வேகாது என்ற கட்டுரைத் தொடரும் இந்த ஆண்டில் முக்கியமானவை. 

நான் எழுதிய கட்டுரைகளில் அக்கமகா தேவியின் கவிதைகள் பற்றி எழுதிய கட்டுரையை இந்த ஆண்டின் கட்டுரைகளில் முக்கியமானதாக நினைக்கிறேன்.

2022 ன் துவக்கத்தில் தமிழினி இலக்கிய இதழில் இந்த ஆண்டு தொடர்ந்து எழுத வேண்டும் என்று நினைத்தேன். அது முடிந்திருக்கிறது.

அன்றாடத்தில் குடும்ப சூழலில், வாழ்வின் பின்னால் திரிபுரம் போல காலனின் இருப்பை உணர்ந்து கொண்டிருக்கும் காலகட்டம் இது. இலக்கியமே கைப்படித்துக் கொண்டிருக்கிறது. இலக்கியம் தந்த வாழ்விது. இல்லை என்றால் உழன்னு ஒன்றுமில்லாமல் போயிருக்கூடிய ஒரு எளியவளை இன்றுள்ள நானாக மாற்றியது இலக்கியமே.

இந்த ஆண்டின் விஷ்ணுபுரம் விழா  எனக்கு முக்கியமானது. நான் தனியள் இல்லை என்று உணர்ந்தேன். 


மூத்த எழுத்தாளர்களின் சொற்கள் எனக்கு முக்கியமானவை. அவர்களிடம் பேசியவற்றை மனதில் ஊறப்போட்டிருக்கிறேன். 

விஷால் ராஜாவின் சொற்கள் என்னை 'ஏன் சப்ரஸ் பண்ணி எழுதுகிறாய்' என்று கறாராக கேட்கிறது.

'என்னத்தை செய்யலாம்' என்றோ எதையும் செய்யலாம் என்றோ  ஆர்வத்துடன் நிற்கும் ரம்யா,தீவிரமாக இருக்கு சுனில்,கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் சாந்தமான நிதானம்,கார்த்திக் புகழேந்தியினுள் இருக்கும் துறு துறுப்பான சிறுவன் ,சுரேஷ் ப்ரதீப்பின் தீவிரம்,விக்னேஷ் ஹரிஹரனின் தேடல் என்று இன்னும் பலமுகங்கள் மனதில் கொந்தளிக்கின்றன.


அகரமுதல்வனின் அந்த கோபத்தின் வேகத்தின் பின்னால் இருக்கும் காலம் தொந்தரவு செய்கிறது. எனக்குப் பின் பிறந்தவர். எந்த விதமான வாழ்க்கை. எழுத்தாளரின் தனிவாழ்க்கை ஒரு புறம் இருக்கட்டும். எழுத்தாளனுக்கு தனி வாழ்க்கை மட்டுமா வாழ்க்கை. ஒரு சமூகத்தின் கேள்விகளை, அக அலைகழிப்புகளை, துயரங்களை, பாடுகளை நாம் உணர்வதாலேயே எழுதுகிறோம். அகரமுதல்வன் ஒரு போரை சுமக்கிறார். அது அத்தனை எளிதா என்ன?  தொந்தரவு பட்ட சமூகத்தின் ஆன்மாவை கண்முன்னால் காண்பது பதட்டமடைய வைக்கிறது. ஒரு எழுத்தாளன் எழுத்திற்கு அப்புறமும் நம்மை பாதிப்பதை, நாம் இல்லை என்று சொல்லிவிட முடியாது.

எழுத்தாளர் வெண்ணிலாவின் இருபத்தைந்து ஆண்டு கால இலக்கிய வாழ்க்கையும், தொடர்ந்த வாசிப்பும் எழுத்தும் பற்றி நினைத்துக்கொண்டே இருக்கிறேன். வாசகிகளின் மலர்ந்த முகங்கள் கண்முன்னே வருகின்றன. விழாவில் சிறுமிகளைப் போல எந்த கவலையும் இல்லாமல் சிரித்துக்கொண்டிருந்த நடுவயது பெண்களின் முகங்கள் கண்முன்னே வருகி்ன்றன. இதற்காகவே இந்த விழா எப்போதும் நிகழவேண்டும்.

அழிசி  ஸ்ரீநிவாசனில் என்னை நான் பார்த்தேன். அதை எப்படி என்று சொல்ல முடியவில்லை. அவர் வயதில் அவர் இருந்த மனநிலையில் தான் நான் இருந்திருப்பேன் என்று உள்ளுணர்வு சொல்கிறது.


நான் சுணக்கம் கொண்டிருக்கும் பக்கத்தை ஜெ இருமுறை காட்டித்தந்தார். 'இவ்வளவு வாசிக்கறேன்னு சொல்றியே இவங்களை வாசிச்சியா நீ' என்று கேட்பது மாதிரி இருந்தது. இனிமேல் தொடர்ந்து பெண் படைப்பாளிகளை வாசிக்க வேண்டும். 

பொதுவாக மனிதர்கள் பற்றி எழுதும் உங்களை பற்றி ஆன்ட்டி  ஃபெமினிஸ்ட் என்ற கருத்து வந்தால் அதற்கு பதில் என்ன ? என்று கேட்பதன் வழியே என் எழுத்தைப்பற்றிய புரிதலுக்கான புள்ளியை வைத்திருக்கிறார். இதைத்தான் நான் இத்தனை கதைகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அறுபதிற்கும் மேற்பட்ட கதைகள்.

இது ஒரு நிறுத்தம் என்று தோன்றுகிறது. என்னைப்பற்றி நானே பரிசீலனை செய்து கொள்ள வேண்டிய நேரம். என் இயல்புடன் நான் நகர வேண்டும்.



விழா முடிந்து வந்தப்பின் விழா நாயகர் சாருவுடன் இரண்டு நாள் அலைபேசியில் பேசினேன். பெரும்பாலும் நான் தான் பேசினேன். அவர் கேட்டார். சாருவிடம் நான் சொன்ன சொற்களுடன் முடிக்கிறேன்.

"நான் இங்க இருக்கனுங்கறதுக்கு...எனக்கான வேலை ஒன்னு இங்க இருக்கு. நிறைய வாசிக்கனும். நிறைய எழுதனும் சாரு" என்றேன்.

சாரு அவரின் அழுந்திய ஆழமான குரலில், " ம்ம்ம்ம்.."என்றார்.


[நினைவில் சட்டென்று பளிச்சிட்டதை எழுதியிருக்கிறேன். இனிமேல் ஆழத்தில் உள்ளவை மெதுவாக மேல்மனதிற்கு வரும். இதையே எழுதிக்கடத்தல் என்று சொல்கிறார்கள் என்று தோன்றுகிறது]

_தொடரலாம்


Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

டமருகத்தின் தாளமானவள்

 திரியை மட்டும் திரும்பத்திரும்ப மாற்றி..  ஒவ்வொரு முறையும் எரியும் சுடர் ஒன்றே தானா.. ?  வேறு.. வேறா..                             _  சம்யுக்தா மாயா நம் கவிதை மரபில் காதலுக்கும் பக்திக்கும் இடையில் ஈசலின் சிறகு போன்ற மெல்லிய தடுப்பே உள்ளது. அது இருபக்கமும் ஊடுருவும் சவ்வு. பக்தி அதிகமானால் காதல். காதல் அதிகமானால் பக்தி. இந்த மாற்றம் புதிரானது.  அதே போல நாயகன் நாயகி ஃபாவம். அரங்கனை நோக்கி பாடப்பட்ட பாடல்களில்  நாயகி ஃபாவம் மேலோங்கி உள்ளது. ஈசனுக்கு பித்தா..பிறைசூடா என்று சக்ய ஃபாவம் இயல்பாக வருகிறது.  ஈசனை காதலனாக ஃபாவிப்பது என்பது முன்னால் நின்று அவனை பாடுவது அல்ல. அவன் பாதியாகவே ஆவது. ருத்ரனின் பகுதி என்பது அத்தனை எளிதல்ல என்பதாலோ என்னவோ பெண்களில் திலகவதி மட்டுமே பாடியிருக்கிறார்.  காரைக்காலம்மையால் அவனை விளையாட்டு பிள்ளையாக்கி ஆட வைக்க முடிகிறது. ( பொதுவாகவே ஈசன் மீது பாடப்பட்ட பாடல்களில் நாயக நாயகி ஃபாவம் குறைவு)  பெண்கவிகளில் ருத்ரனுக்கு இணையான காளியை சம்யுக்தாவின...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...