ஊரில் கார்த்திகை மாதம் மிக உற்சாகமான மாதம். ஐப்பசியில் நடவு வேலைகள் முடித்து பயிர் தலைதூக்கும் காலம். ஊரை சுற்றி கொல்லிமலை அடிவாரத்தை எங்கெங்கு காணினும் சீரகசம்பா நெல் குத்துகள். பறிந்து நட்ட பயிர்கள் தண்ணீர் தேங்கிய வயல்களில் வேர்பிடிக்க தொடங்கும் காலம். நிலமே குழந்தையாகி நிற்பதைப்போல இருக்கும். நுண்ணுணர்வுள்ள விவசாயி கண்கலங்குவார். உற்சாகமான விவசாயி தொடை தட்டி சிரித்துக் கொள்ளலாம்.
கார்த்திகை முதல் ஞாயிறு ஒவ்வொரு வீட்டிலும் மாரியம்மன் வழிபாட்டுடன் கார்த்திகையின் பயிர்பொங்கல் தொடங்கும். இந்த மாதம் முழுக்க ஊரே மணக்கும். வயல்களை சுற்றி எத்தனை எத்தனை சிறு தெய்வங்கள். அத்தனைக்கும் பொங்கலும் சேவல்களும் கிடாய்களும் பலிகொடுக்கப்படும். பலிகொடுக்காதவர்களின் சர்க்கரைப்பொங்கலுக்காக தெய்வங்கள் புன்னகைக்கும் காலம். அதுவும் இல்லை என்றால் ஒரு சூடம் ,பத்தி. பயிரை காக்கவும், பாம்பு போன்ற விஷ உயர்களிடமிருந்து தங்கள் உயிரை காக்கவும் வைக்கப்படும் பொங்கல் வழிபாடு.
தீபாவளி வெடிகளால் என்னை பதட்டப்படுத்தி மிரட்டி சிரிக்கும் விழா. கார்த்திகை தீபம் எனக்கு மிகப் பிடித்தவிழா.
இந்தநாளில்தான் என் முதல்சிறுகதையை எழுதி அனுப்பினேன். அப்பொழுது Microsoft word பற்றி பெயராக மட்டுமே தெரியும். கதையை கைகளால் எழுதி புகைப்படம் எடுத்து சொல்வனத்திற்கு அனுப்பினேன். முதல்நாள் தான் தொடுதிரை அலைபேசியை பிடிவாதமாகக் கேட்டு வாங்கியிருந்தேன். வாசிப்பதற்காக தனியாக அலைபேசி வேண்டும் என்று அடம் செய்து வாங்கினேன். என் தங்கை தான் முதலில் புரிந்து கொண்டாள். அவள் கறாராக 'கமலாவிற்கு அலைபேசி வாங்கி கொடுத்துவிட வேண்டும்' என்று வீட்டில் சொன்னாள். அப்போது நான் வேலைக்கான தேர்வுகளின் தொடர் தோல்விகளில் இருந்ததால் அவளுக்கு ஏதாே தோன்றியிருக்க வேண்டும். அவள் தேர்வுகளில் வென்றைழுந்து வேலைக்காக கோட்டைப்பட்டிணம் சென்றிருந்தாள்.
என்னை மீணாடும் பழைய வேலைக்கு அழைத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு நாளிற்கான விவசாய கூலி அளவும் இல்லாத சொற்ப சம்பள வேலை. தேர்வுகளுக்காக இலக்கியத்தை வாழ்வில் முதல் முறையாக எட்டுமாதங்கள் நிறுத்தி வைத்திருந்தேன். அந்த சோர்வில் புத்தகங்கள் ஆற்றில் மிதந்து செல்வதைப்போன்ற கனவுகள் என் இரவை பதட்டமடைய வைத்திருந்தன. அந்த நாட்களில் என் வலிப்பிரச்சனைகளுக்காக நானும் அம்மாவும் மருத்துவமனைகளில் காத்து சலித்தோம்.
ஒரு மருத்துவர் என் இதுவரையான வாழ்க்கையை படமாக வரைந்து எனக்கே காட்டினார்.
'கிடக்கிற வேலைக்கு போங்க' என்று சொன்னார்.
இல்ல சார் எழுதனும்
எக்ஸாம்ல பாஸாகி வேலைக்கு போயிருந்தா என்ன பண்ணுவீங்க
எழுத வாசிக்க முடியலேன்னா வேலய விட்ருவேன் என்று சட்டென்று சொன்னேன்.
கொழுப்ப பாருங்க டாக்டர் என்று அம்மா முறைத்தார்.
அப்புறம் எதுக்கு எக்ஸாம் எழுதுனீங்க
பொருப்பில்லாம இருக்கற மாதிரி எனக்கே தோணுச்சு. எட்டு மாசம் செலவு பண்ணி எழுதிப்பாத்தேன். முடியல சார்.
பணத்துக்கு என்ன பண்ணுவீங்க
எனக்கு சோறு போட்டு, மருத்துவம் பாக்கறதுக்கு அய்யா செலவு பண்ணமாட்டரா..என் கல்யாண செலவு பணம் மிச்சம் தானே. அது என் வாழ்க்கைக்கே போதும் என்றதும் அவர் சிரித்தார்.
அம்மாவை வெளியே இருக்கச் சொன்னார்.
யாரையாவது லவ் பண்றீங்களா?
அது மாதிரில்லாம் இன்னும் யாரையும் பாக்கல சார்
அவர் மேலும் சிரித்தார்.
வீட்ல இருந்தா வீட்டு வேலை ..தங்கை தம்பி மேரேஜ்க்கு ..அவங்க குழந்தைகளுக்கு டைம் ஸ்பெண்ட் பண்றதுக்கே சரியா இருக்கும். அப்பா அம்மாவை பாத்துக்கனும்.
வேலைக்குப்போனா இந்த வலிகளுக்கும் வேலைக்குமே தான் பொழுது சரியாயிருக்கும் சார். யாரையாவது கல்யாணம் பண்ணினாலும் வீட்டுவேலை குடும்பப்பொறுப்பு இருக்கும் தானே
'ரேர் கேஸ்' என்று தனக்குள்ளேயே சொல்லியபடி கேஸ் ஹிஸ்ட்ரி எழுதினார்.
இனிமே யாரையாவது பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கனுங்க
ஏன் சார் நீங்க வேற...இப்பவே முப்பத்தி மூணு. இனிமே கல்யாணம் பண்ணி அங்க போராடில்லாம் எழுதறதுக்கு முடியாது. ஒருத்தனுக்கும் [மன்னிக்கவும் ஏதோ ஒரு கோவத்தில்] இலக்கியம்ன்னா என்னன்னு தெரியல. எங்க அண்ணன் அக்கா தங்கைக்கு வரன் பாக்கிற எடத்துலெல்லாம் ஒரு புத்தகம் கூட கண்ணுல படல.
[குறிப்பு :இனிமேலும் திருமணம் பற்றி எந்த ஐடியாவும் இருக்கப்போவதில்லை. இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் பார்க்கற ஆண்களை பையன்களை குழந்தைகளை எல்லோரிலும் அய்யாவை தேடத் தொடங்கிவிட்டேன். இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை.]
இவ்வளவு பேசறீங்களே இதுவரைக்கும் ஏன் எழுதல
சீக்கிரமே எழுதிருவேன் சார்..வீட்ல டைப் கிளாஸ்க்கு விட மாட்டிக்கிறாங்க
நீங்க அண்ராய்டு செல் வாங்கி முயற்சி பண்ணுங்க'
இப்படி தொடங்கித் தான் முதல் கதையை படம் எடுத்து சொல்வனத்திற்கு அனுப்பினேன்.
ஒரே ஒரு மணி நேரத்தில் பதில் மின்னஞ்சல் வந்தது.
'அன்புள்ள கமலதேவி அவர்களுக்கு,
முயற்சிக்கு வாழ்த்துகள். இப்படி அனுப்பக்கூடாது. மைக்ரோ சாஃப்ட் வேர்ட்டை டவுன்லோட் செய்து தமிழ்ஃபாண்டில் எழுதி அனுப்புங்கள்.'
இதற்காக அன்று காலையில் இருந்து சாயுங்காலம் வரை வீட்டில் உள்ள பயல்களின் பின்னாலேயே திரிந்தேன். கார்த்திகை தீபத்திற்கான வேலைகள் வேறு. அந்த வேலைகள் முடிந்து இரவு தொடங்கும் நேரத்தில் தீபங்களை பார்த்தபடி மாடியில் அமர்ந்திருந்தேன். சட்டென்று இந்தப்பயல்களை நம்பி ஒன்றும் செய்வதற்கில்லை என்று தோன்றியதும் புதிய அலைபேசியை எடுத்து வேர்ட் டவுன்லோட் கொடுத்துவிட்டு கதை எழுதிய இரு காகிதங்களை எடுத்துவந்தேன்.
தமிழ் எழுத்துருக்காக தேடும் போது, இரவு உணவுக்கான வேலைகளுக்காக அம்மா அழைக்கத்தொடங்கினார். இரவு உணவுக்குப்பிறகு தீபங்கள் ஓயும் நேரம் மீண்டும் மாடிக்குளிரில் குளிராடையுடன் வந்தமர்ந்து 'அ' ஃபாண்டை தேர்வு செய்தேன். மிக எளிய தமிழ் எழுத்துருவை கண்டடைந்ததற்காக இப்பொழுது எழுதும் போதும் மகிழ்கிறேன்.
எழுத்துகளை தேடித்தேடி முதல் கதையை தட்டச்சிடத் தொடங்கினேன். கதையை முடிக்கும் போது பனிரெண்டு மணி கடந்திருந்தது. பொங்கும் மனத்துடன் வானத்தைப் பார்த்தேன். முழுநிலா தன் முழுவீச்சுடன் பொழிந்து கொண்டிருந்தது. மாடியில் ஏற்றி வைத்த அகல்களில் சிலவற்றில் எண்ணெய் மீதமிருந்தது. எண்ணெய் இருக்கும் போதே எதனாலோ அணைந்து போன அகல்கள் சில. அவற்றை எடுத்து நீர் தேக்க தொட்டியின் அடியில் பாதுகாப்பாக வைத்தேன். நாளை ஏற்றிக்கொள்ளலாம்.
மாணைக்கொடி என்ற சங்கத்தமிழ் கொடி இன்று எழுத்தாளர் ஜெ வால் பிரபலம். எதார்த்த யோசனை இன்றி காதலை ஏற்கும் பெண்களை குறிப்பது. யானையை பாறை என்று நினைத்து படறும் கொடி. எத்தனை மடமை. யானை எழுந்தால் என்னாகும்.
- தலைவி கூற்று
- குறுந்தொகை
- துறுக லயலது மாணை மாக்கொடி
- துஞ்சுகளி றிவருங் குன்ற நாடன்
- நெஞ்சுகள னாக நீயலென் யானென
- நற்றோண் மணந்த ஞான்றை மற்றவன்
- தாவா வஞ்சின முரைத்தது
- நோயோ தோழி நின்வயி னானே.
- பாடலின் ஆதாரம் என்னவென்றால் நிலையான பாறைஇருக்க, உறங்கும் யானை மேல் படர்ந்த மாணைக்கொடி.
- யானையை பாறை என்று படர்ந்த கொடியின் பைத்தியகார தனத்தை என்னவென்று சொல்வது.
- கதை என்ற வார்த்தையே சிறுவயதில் எனக்கு அத்தனை மகிழ்ச்சியானது. பாதர்பேட்டை அவ்வா என்ற கிழவி என்னை கதையால் சூழ்ந்து நிறைத்தாள். அவளுடைய மகன்கள் விவசாயமும், ஊர்நாடகங்களும், பொன்னர் சங்கர் கூத்தும் ஆடுபவர்கள். அவ்வா என்னுடைய அம்மாச்சியின் மூத்த அக்கா. விளையாட முடியாத நான் அவள் கதைகளுடனே இரண்டு மாதங்கள் கிடந்தேன்.
- விடுமுறை முடிந்து ஊருக்கு வந்தப்பிறகு சிறுவர்மலர் தங்கமலர் போன்ற வார இதழ்களின் பழைய புத்தகங்களை நூலகத்திலிருந்து அய்யா வாங்கிவந்தார். தேதி வாரியாக அடுக்கித்தந்தார். எனக்காக சிறுவர் இதழ்களுக்கு சந்தா கட்டினார். இந்த பிள்ளை ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பது அவரை தொந்தரவு செய்திருக்கலாம். எனக்கான விளையாட்டை நான் கண்டு கொண்டது குறித்து என்னைவிட அவருக்கே மகிழ்ச்சி. அதற்கான களங்களை முடிந்தமட்டும் ஆக்கி அளித்தார்.
- நான்
- இலக்கியம் மீது கொண்டதும் தீவிர காதல் தான். எதார்த்தங்களை
- யோசிக்காமல் அந்தக் காதலால் ஆனது தான் என் வாழ்க்கை. அது சார்ந்தே என் வாழ்க்கை முடிவுகளை எடுத்தேன். அது இல்லாத வாழ்வு எனக்கு வாழ்வல்ல. என் துயரங்களை அதைக்கொண்டே கடக்கிறேன். நான் எழுதுவேனா என்று தெரிவதற்கு முன்பே வாசிப்பு தான் எனக்கு எல்லாமுமாக இருந்தது. [நான் இதை எந்தப்பெண்ணிற்கும் பரிந்துரைக்க மாட்டேன். இது சரியான உதாரணம் அல்ல. இது எனக்கு நடந்தது அவ்வளவே].
- நான் சின்னஞ்சிறிய எளிய எழுத்தாளராக இருக்கலாம். நான் எழுதுவது நிலைக்காமலும் போகலாம். எழுதமுடியாமலானால் கூட நான் இலக்கியவாதி தான். வாசகராகவே இருந்திருந்தாலும் நான் இலக்கியவாதிதான். இங்கே ஒரு சிறு மலையடிவார ஊரில் இறுதிவரை வாழ விரும்புகிறேன். இந்த ஊரில் இருந்தால் தான் நான் பதட்டமின்றி எழுதுகிறேன். வாசிக்கிறேன். விளையாட முடியாத நான் ,எனக்கான விளையாட்டை கண்டடைந்தேன். இன்னும் அது எனக்கு உற்சாகமான விளையாட்டாகவே இருக்கிறது. அந்த விளையாட்டை கலைத்துவிடும் என்று நினைப்பவற்றை கூட தவிர்த்துவிடுகிறேன். ஒரு சில புத்தகங்களுடன் வாழ்ந்துவிட்டு செத்துப்போவது ஒன்றும் செய்யக்கூடாத பிழை இல்லை.
- தீபத்திற்கு அடுத்தநாள் காலையில் மைத்ரேயனிடமிருந்து மின்னஞ்சல். கதை நன்றாக உள்ளது. ஆனால் ஒரு நாவலின் தொடக்கம் போல உள்ளது என்று பதிப்பாசிரியர்கள் நினைக்கிறார்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் அதில் கதை உள்ளது. கதையை பிரசுரம் செய்கிறோம். நான் உங்களில் ஒரு எழுத்தாளரை இப்பொழுதே காண்கிறேன். வாழ்த்துகள் என்று முடித்திருந்தார். தொடர்ந்து அவருடன் விவாதிக்கிறேன். சண்டை இடுகிறேன். ஆசி கேட்கிறேன். அன்பு செய்கிறேன். பகிர்ந்து கொள்கிறேன். அய்யா கைமாற்றி அளித்த சில கரங்களில் அவருடைய கரமும் ஒன்று.
- வரப்போகும் ஐந்தாவது சிறுகதை தொகுப்பை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.
- இந்த பயிர்ப்பொங்கலில் மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். என் வயலும் பூக்கட்டும் காய்க்கட்டும் கனியட்டும்.
- முதல் கதைக்கான இணைப்பு:
- https://solvanam.com/2016/12/15/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/
Comments
Post a Comment