Skip to main content

அகமும் புறமும் 12

          மணிஒலி தயங்குக



படு மழை பொழிந்த பயம் மிகு புறவின்

நெடுநீர் அவல பகுவாய்த் தேரை

சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க

குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி

செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப,

வெஞ் சின அரவின் பை அணந்தன்ன 

தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ,

திரி மருப்பு இரலை தௌ அறல் பருகிக்

காமர் துணையொடு ஏமுற வதிய,

காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி

ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்

தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப

ஊர்மதி வலவ தேரே சீர் மிகுபு

நம் வயிற் புரிந்த கொள்கை

அம் மா அரிவையைத் துன்னுகம் விரைந்தே

அகநானூறு 154

பாடியவர்: பொதும்பில் புல்லாளங்கண்ணியார்

திணை :முல்லைத்திணை

வினைமுடித்து திரும்பும் தலைவன் தேர்ப்பாகனிடம் சொல்லியது.

இது தலைவன் கூற்று பாடல். மிகச்சிறிய விஷயங்களில் தலைவன் உணரும் மெல்லுணர்வுகளே தலைவன் கூற்றுப்பாடல்களை அழகாக்குகின்றன. சங்கக்கவிதைகளில் தலைவி கூற்று பாடல்கள் பேசப்பட்ட அளவு தலைவன் கூற்றுப்பாடல்கள் பேசப்படவில்லை என்று நினைக்கிறேன்.

தலைவி தன் காதலை ஆழமானது அகலமானது பெரிது என்று எப்படியோ சொல்லிவிடுகிறாள். அவளைவிட அவள் தோழி இன்னும் அழகாக எடுத்துரைக்கிறாள். ஆனால் தலைவன் எப்பொழுதும் சரியாக சொல்லத்தெரியாதவனாகவே இருக்கிறான். தலைவியை சந்திக்க இரவில் வனவிலங்குகளை, காவல்களை, காட்டுப்பகுதிகளைக் கடந்து வருகிறவனுக்கு சொற்கள் வழிகொடுப்பதில்லை என்றே நினைக்கிறேன். 



இப்படி தலைவன் செயல்கள் மூலமே காதலை காட்டுபவனாக இருக்கிறான். திருமணத்திற்கு முன் தலைவன் உணரும் மெல்லுணர்வுகள் கொண்ட சங்கக்கவிதைகள் அழகானவை. காதல் ஒருவனை அதுவரை இல்லாத ஒரு அனிச்ச நிலைக்கு மாற்றுகிறது. தலைவி தன்னையே அனிச்சமாக்கும் போது தலைவன் தான் காணும் அனைத்தையும் அனிச்சமாகக் காணும் ஒரு ஆழமான மனநிலையை எய்தும் இந்தப்பாடல் முக்கியமானது என்று நினைக்கிறேன்.



வேலெடுத்து போருக்கு செல்லும் தலைவன் போர் முடிந்து தேரில் திரும்புகிறான். தேர்ப்பாகனிடம் தன் மனஉணர்வுகளை சொல்கிறான். போருக்கு முற்றிலும் எதிர்நிலையான மனநிலையை இங்கு அவனுள் பூக்கவைப்பது காதலே. இதையே நான் வியந்து பார்க்கிறேன். அவன் போரில் ஒரு உயிரையாவது கொன்றிருக்கலாம். குதிரையை  விரட்டியடித்திருக்கலாம். உச்சக்குரலில் வெற்றி என்று வெறிகொண்டு கத்தியிருக்கலாம். இந்தப்பாடலில் உள்ள அதற்கு முற்றிலும் எதிரான மனநிலை வியக்கவைக்கிறது. அழகிய காட்டின் அமைதி கெடாதவாறு தேரை செலுத்த சொல்லும் தார்மணி தயங்குபு இயம்ப ஊர்மதி வலவ என்ற வரி தலைவனின் மனநிலையை ஒரு பூவைப்போல காலத்தின் மீது எடுத்து வைக்கிறது.

என்னுடைய அண்ணன் திருமணத்திற்காக பெண்பார்த்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. இரண்டு பெண்கள் அண்ணனை பிடிக்கவில்லை என்று மறுத்திருந்தார்கள். இரண்டாவது பெண்பார்த்தல் முடிந்த அன்றுஇரவு அம்மாச்சியின் வயல்வீட்டில் இருந்தோம். இரவு உணவுக்குப்பின் களத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது அலைபேசியில் பெண்ணுக்கு அண்ணனை பிடிக்கவில்லை என்ற செய்தி வந்தது. 

அண்ணன் முகம் சுருங்கியிருந்தான். பெரியம்மா இந்தப்பெண் அமைந்தால் நல்லது என்று சொல்லியிருந்தார். 

அண்ணனையே பார்த்துக்கொண்டிருந்த நான் அவன் தோளில் கைப்போட்டு , “ ரொம்ப டென்ஷனாவே இருக்காத.. முன்னாடி சொட்டை விழுன்னு சொன்னா கேட்டாதானே,” என்று முதுகில் தட்டினேன்.

உடனே அம்மா பெரியம்மாவிடம், “எல்லாம் உன்னால தான். பொண்ணு பாக்கறதுக்கு மொத நாளு போய் இவன முடி வெட்டிட்டு வர சொல்லியிருக்க…கிருதாவும் முடியுமா இருந்தா தானே பிள்ளைங்களுக்கு பிடிக்கும்,” என்றார்.

அம்மாச்சி, “அத்தனையும் தங்கம் அரங்கில்லாத மாணிக்கம்,” என்று அண்ணன் முகத்தை வழித்தெடுத்து முத்தம் தந்ததும் சூழல் சிரிப்பாக மாறிவிட்டது. பெரியய்யா ‘எங்களையெல்லாம் யாரு இப்படி கொஞ்சினாங்க’ என்ற முணுமுணுப்புடன் எழுந்து சென்றார்.

அடுத்தப்பெண் உடனே சரி சொன்னதாலேயே அண்ணனுக்கும் மிகவும் பிடித்துப் போனது. அன்றிலிருந்து திருமணம் ஆகும் வரை இப்படிதான் இருந்தான். நான் தான் ‘பூல்லாம் பறிக்கறதுக்கில்லை… செடியிலயே இருக்கறதுக்குன்னு பூத்தது,”என்று சொல்லிக்கொண்டு திரிவேன். அவன் செடிகள் மீதும், எப்போதும் அவன்  துரத்தியடிக்கும் மணி என்ற நாய் மீதும் அன்பானவனாக ஆனான். காதல் செய்யும் மாயம் என்று இதை சொல்லலாம். மூன்றுமாதங்களுக்குள் கணினி துறையாளனின் இறுக்கங்களும், கத்தல்களும் ,சிடுசிடுப்புகளும் மாறி பார்க்கவே அத்தனை அழகாக இருந்தான். காதல் மனிதருக்குள் ஒரு இயல்பான கனிவை மந்தகாசத்தை கொண்டு வருகிறது. மலரும் மொட்டின் நுனியில் உள்ள மினுமினுப்பை போன்ற ஒரு ஔி காதலிப்பவர்களை சூழ்ந்து கொள்கிறது.

அண்ணனின் பாடலாக இதைக்காண்கிறேன்.  அப்போது அவனை அருகில் இருந்து ரசிக்கும் வாய்ப்பை பெற்றவள் நானே. காதலிகளே அறியாத அண்ணன்களை சகோதரிகள் நம் கண்முன்னே கண்டு வியக்கிறோம். இந்தப்பாடல் அத்தகையதொரு இனிய தலைவனின் பாடல்.[ இப்பாழுது அண்ணனன எப்பொழுதும் போல இயல்பாக அவனுடைய முரட்டுத்தனங்களுக்கு மீண்டுவிட்டான்]


மழை பொழிந்து நிறைந்த

இம்முல்லை நிலத்தின் குளங்களில்…

பலஇசைக்கருவிகளை 

இசைப்பதைப்போல

தேரைகளின் குரல்கள் 

வழி நெடுக கேட்கின்றன.


நீண்ட காம்புகளை உடைய பிடவம் பூக்கள்

இந்த செந்நிலத்தின் 

வழியெங்கும் உதிர்ந்து கிடக்கின்றன.


படம் எடுத்த 

நாகப்பாம்பின் நச்சுப்பைகளைப் போல

வெண்காந்தள் மலர்கள் மலர்ந்துள்ள

வழி இது.


சுழல் கொம்புகளை உடைய மான்கள்

தன் இணையோடு நீரருந்தி

இளைப்பாறுகின்றன.


தேரோட்டியே…

காடு அழகுற விளக்கும் இவ்வழியில்

குதிரைகளின் கழுத்து மணிகள் 

மெதுவாக ஒலிக்க நம் தேர் செல்லட்டும்.

நாமும் தலைவியை சென்று காண்போம்.



Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

காலம் சிதறி கிடக்கும் வெளி

வரலாற்றுப் புத்தகங்களை ‘காலம் சிதறிக்கிடக்கும் வெளி’ என்று சொல்லலாம். ஒரு வரலாற்று புத்தகத்திற்குள் நுழைவது என்பது காலத்திற்குள் நுழைவது. ஒரு வரலாற்று ஆய்வாளரோ ,வரலாற்று ஆசிரியரோ எவ்வளவு தான் வகுத்து தொகுத்து எழுதினாலும், ஒரு வரலாற்று நூல் தன்னை வாசிப்பவர்களை திசையழிந்த பறவை போல காலத்தில் பறக்க வைக்கிறது. நம் மனதிற்கு உகந்த அல்லது நெருக்கமான வரலாறு என்றால் அந்த வாசிப்பனுபவத்தை தேன் குடித்த வண்டின் திசையழிதல் என்று சொல்லலாம்.                 [  முனைவர் வெ. வேதாசலம் ] முனைவர் வெ.வேதாசலம் அவர்களின் முதல் நூலான திருவெள்ளறை என்ற அவரின் முனைவர் பட்ட ஆய்வு நூலை வாசித்த அனுபவத்தை ‘காலத்துக்குள் திசையழிந்த அனுபவம்’ என்று சொல்வேன். ஆசிரியர் சங்ககாலத்திலிருந்து நம் காலம் வரை [1977], பல்லவர், சோழர் ,பாண்டியர் நாயக்கர் ,காலனியதிக்க காலகட்டம் வரை காலவாரியாக திருவெள்ளறையின் வரலாறு, அதன் சமூகஅமைப்பு,கோயில்கள்,கலை,மக்கள் என்று தொகுத்து ஆதாரபூர்வமான தரவுகளுடன், ஆண்டுகளுடன், கல்வெட்டு சான்றுகளுடன், அச்சு தரவுகளுடன் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு இலக்கியவாசகராக இ...