Skip to main content

கண்ணாடி இல்லாத நாளின் நினைவுகள்

 'இமைகணத்தில்' ஒரு சம்பவத்தை கிட்டி [கிருஷ்ணவிகா] நடத்திவிட்டாள். அவளுடைய மூத்தகூட்டாளியான தனுஷ் ஆவணியாவட்டத்திற்காக பள்ளிக்கூடத்தை 'கட் ' அடித்துவிட்டு ஜாலியாக தங்கை பப்லுவுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கிட்டி நான்கு நாட்களுக்கு ஊருக்கு சென்று திரும்பியிருந்தாள். அவளைக் கண்டதும் ,"கிட்டு.."என்று அவன் ஓடி வரவும், இவள் அவனைக் அவனைக் கண்ட குஷியில் தாறுமாறாக என் முகத்தில் அடித்துக் குதித்தாள். நான்கு நாட்கள் பிரிவிற்கு இத்தனை வலிமை இருக்கும் என்று நினைக்கவில்லை. என் கண் கண்ணாடியின் சட்டம் உடைந்து கீழே விழுந்ததை கண்டுகொள்ளாமல் இரண்டும் குதித்து விளையாடத் தொடங்கியது. என் கண்கள் புகைமூட்டமாகி பார்வை கலங்க திகைத்து அமர்ந்திருந்தேன். சிறிது நேரம் கூட கண்ணாடியில்லாது  ஜீவிக்க முடியாத ஜீவன். மணி காலை பதினொன்று. இனி துறையூர் வரை செல்வது சாத்தியமில்லை. குழந்தைகளும் மூத்தவர்களுமாக குடும்பம் அப்படி. முதல் நாளே 'திட்டம்' போட வேண்டும். 

புதிதாக நடைபயின்ற குழந்தையும் ஊர்சுற்றும் பப்பியும் ஒன்று என்று பழமொழி உண்டு. [நாய் என்று சொல்ல மனம் துணியவில்லை]. நாள் முழுதும் நடந்து கொண்டே இருப்பது. காந்தி இப்போது இருந்தால் கண்டிப்பாக எதாவது ஒரு சத்தியா கிரக போராட்டம் தினமும் நடக்கும். இதுகளை நடக்க அனுப்பலாம். கிட்டி குட்டிநாய் போல வீடெங்கும் உச்சா அடித்து வைப்பாள். தன் நடை பயணத்தில் எங்காவது உச்சாவில் வழுக்கி விழுந்தால் அல்லது தட்டிக்கொண்டு விழுந்தால் உடனே அழமாட்டாள். மீண்டும் ஒன்றிரண்டு முறை வலிக்கும் இடத்தை, இடித்த இடித்தில் மீண்டும்  இடித்துப் பார்த்துக்கொண்டு உச்சஸ்தாயில் அழுவாள்.

அவள் பின்னாலேயே நாமும் சுற்றிக்கொண்டிருக்க வேண்டும். கண்ணாடி இல்லாமல் டைல்ஸ் தரையில் சுத்தமாக ஒன்றும் தெரியவில்லை. இரு முறை விழுந்தப்பின் அவளே, "மமலா..உச்சா," என்று துடைக்கும் துணியை எடுத்துக்கொடுத்தாள்.

இது சரிவராது என்று பாபநாசம் கமல்ஹாசன் போல ஆயுதங்களை தேடத்தொடங்கினேன். பெட்டியில் ஒன்றும் சரியாகத்தெரியவில்லை. அலைபேசி ஔியில் கட்டுகம்பித்துண்டை தேடி எடுத்துக்கொண்டு அமர்ந்தேன். இப்போதுதான் கண்ணாடி வேலை எத்தனை சிரமம் என்று தெரிகிறது. கிட்டப்பார்வை சரியாக இருப்பதால் தப்பித்தேன். வெளியே பப்லு சத்தம் கேட்டது. அவளின் அம்மா வழி தாத்தா தான் ஊரின் கடைசி பொற்கொல்லர்.


                           தட்டர் [பொன்வேலை]

2010 வரை தன் சின்னஞ்சிறு நகைபட்டறையை வைத்திருந்தார். கீழ்புறம் உடைக்கப்பட்டு கவிழ்த்த மண்பானை போன்ற அமைப்பில் தவிடு கொட்டப்பட்டு கங்கு கனன்றுகொண்டிருக்கும். சின்னஞ்சிறிய ஊதாந்தட்டையால் மெல்ல ஊதி கரியை கனியவைத்துக் கொண்டிருப்பார். சின்னஞ்சிறிய இடுக்கியை வைத்துக்கொண்டு உற்று பார்த்தபடி சிறிய நகைகளை அந்த இடுக்கியில் எடுத்து கங்கில் வைத்து வேலைபார்த்துக் கொண்டிருப்பார். பெரிய பெரிய நகைக்கடைகள் வந்து ஊர் பொற்கொல்லர்களின் தொழில் நசிந்த பிறகும் 2010 வரை தாலி மட்டுமாவது அவரிடம் செய்யும் வழக்கம் எங்கள் தெருவாசிகளுக்கு இருந்தது. அவர் பெயர் குப்பம்முத்துஆசாரியார். இறுதி பதினைந்து ஆண்டுகள் தளர்ந்த கொழுசுகளை வெட்டி ஒட்டித்தருவது,உடைந்த நகைகளை ஒட்டித்தருவது,திருமணத்தின் போது பழைய நகைகளுக்கு மெருகிட்டு தரும் வேலைகளையே பார்த்தார். அவர் நுணுக்கமான ஆசாரி என்று வயசாளிகள் சொல்வார்கள். எந்த மாதிரியான தோடு எந்த முகத்துக்கு எடுக்கும் என்று பெண்களின் முக அமைப்புக்கு ஏற்ற தோடுகளை செய்வாராம். அவர் செய்து தந்த சங்கிலிகள், இரட்டைவட சங்கிலிகள்,சரப்பொலிகள் போன்றவை இன்றும் கிழவிகளின் கழுத்துகளில் ஆடிக்கொண்டிருக்கின்றன. 'சோறு போட்டு கட்டை ஏத்தறவனுக்கு தான் இந்த சங்கிலி வடமெல்லாம்' என்று கிழவிகள் 'கெத்தாக' சொல்லிக்கொள்ளும். அப்போதெல்லாம் வாழ்நாளுக்கு ஒரு நகை தான். திருமணம் செய்யும் போது தகப்பனார் செய்து தரும் ஒரு ஜதை தோடும், மூக்குத்தியும் வாழ்நாள் முழுதும் காதில் மூக்கில் கிடக்கும். பி்ன் கட்டினவர் செய்து தரும் தாலியும் அதற்கு மேல் பாடுபட்டு முடிந்தால் ஒரு சங்கிலியோ இரட்டை வடமோ 'சாவு முதல்' என்று கழுத்தில் கிடக்கும். [சாவுமுதல் என்றால் ஒருவர் சாகும் போது செய்யும் செலவிற்கான தொகை]

                     கொல்லர் அல்லது கருமான் [இரும்பு வேலை]

பொன்னாசாரிகளுக்குப் [தட்டர்கள்]பிறகு தச்சாசாரிகளும் [தச்சர்கள்] தற்பொழுது பழுதுபார்க்கும் வேலைகளுக்கு வந்து விட்டார்கள். இடையில் ஊருக்கு வெளியே இருந்த இரும்பு கொல்லுப்பட்டறை [கொல்லர்கள்] 'களை' இழந்து அதன் ஒலி கேட்காமலாகியது. அந்த பட்டறையின் செந்தீ எப்போதோ லேத்துபட்டறைக் காரர்களால் அணைந்து விட்டது. பசும் வயல்களுக்கு நடுவில் ஒரு குடிசை வீட்டின் முன்பு அய்யாற்று பாசனவாய்க்கால் கரையில் இருந்தது அந்தக் கொல்லுப்பட்டறை. பள்ளி செல்லும் போது அங்கு சூடான இரும்பை வாய்க்காலில் போடும் ஸ்ஸ்ஸ் என்ற தீவிரமான சத்தத்தை கேட்கும். தண்மைக்கும் வெம்மைக்குமான ஒலி. படிப்படியாக வெம்மை தணியும் ஒலி. பெரிய கத்திகள் கொடுவாள்கள்,அரிவாள்,கடப்பாறை,கோடாரி,மாட்டு லாடங்கள்,களைவெட்டிகள்,மண்வெட்டிகள் செய்யும் ஒலிகளுடன் உலைத்தீ அணையாத களம் அது.

                           தச்சர்[மரவேலை]

தச்சாசாரிகளின் உளிகளும்,கொல்லர்களின் இடுக்கியும் போல வாசிப்பவருக்கு இந்தக்கண்ணாடி. 

குப்பமுத்து ஆசாரியார் கண்களை இடுக்கியபடி குனிந்து கங்குக்கு நடுவிலிருந்து இடுக்கியில் தங்க உருண்டையை எடுப்பதை பல முறை பார்த்திருக்கறேன்.

சங்கத்தலைவி இதை , " கிள்ளை

வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்"

 [குறுந்தொகை] என்று சொல்கிறாள். அந்த தங்க வேப்பம்பழங்களை இனி வழியில் எங்கும் காணமுடியாது. கிளியின் கால்நகத்தில் பற்றியிருக்கும் வேப்பம்பழமானது ,பொற்கல்லர் பொன்நாணில் தாலி கோர்ப்பதை போல் உள்ளதாம். தலைவர் பொருளீட்ட செல்லும் வழியிலும் வேம்பு பழுத்திருக்கும் தானே தோழி? அதைக்கண்டாவது என் நினைவு வருமா என்று கேட்கிறாள். 

அந்த பொற்கொல்லர்களின் கருவிகளும் பானைகளும் எங்கோ கண்காணா இடத்திற்கு சென்று அமர்ந்துவிட்டன. நடராஜ் ஆசாரியார் தெருவில் அமர்ந்து சூரிய வெளிச்சத்தில் உடைந்த நாற்காலியை உற்றுப்பார்த்து சரி செய்து கொண்டிருக்கிறார். 

நுட்பமான தொழில் செய்து வாழ்ந்த ஒரு சமூகத்தின் பிள்ளைகள் இன்றைக்கு  வெவ்வேறு வேலைகளுக்கு கூலிகளாக செல்கிறார்கள். இவர்கள் கரங்களில் இன்னும் இருக்குமா அந்த நுட்பம்? இருந்தாலும் நாளை பப்லுவிற்குள்ளிருந்து அது எப்படி வெளிப்படும். பப்புலுவின் முப்பாட்டனார் தேர் செய்வதற்காக எங்கள் ஊருக்கு வந்து இங்கேயே தங்கிவிட்டவர். அவர் மரச்சிற்பங்கள் செதுக்குவதில் வல்லவர் என்று அய்யா சொல்வார். இன்றும் இந்தப்பக்கம் தம்மப்பட்டி மரச்சிற்பங்கள் உலகளாவிய தரம் கொண்டவை. தம்மம்பட்டி மரச்சிற்பங்கள் மிகுந்த கலைநயமும், நுணுக்கமும், விலையும் கொண்டவை. ஆனால் கிராமங்களில் சுயமாக தனியாக தொழில் செய்தவர்கள் காலப்போக்கில் நசிந்துவிட்டார்கள்.

வாசிக்க முடியாத நாளில் சிறிய இழப்புணர்வு போல ஒன்று இருந்து கொண்டே இருக்கும். நானே கம்பி கட்டி பழுது பார்த்த கண்ணாடி எங்கேயோ பிசகி காண்பவற்றை கோணலாக்கியது. வேறு வழி இல்லை. அதற்கு ஈடுகொடுத்து பயன்படுத்தினேன்.  அடுத்த நாள் மருத்துவமனையில் மருத்துவர் சிரித்தபடி, "எப்படி சமாளிச்சீங்க,"என்றார். கண்ணில் விடப்பட்ட மருந்தால் கண் மேலும் மங்கியிருந்தது. நான் அவரை 'என்ன பண்றது சார்' என்று சொல்வதைப்போல பாவமாக ஒரு பார்வை பார்த்தேன்.

"எனக்கும் உங்க பவர் தான்..அடிஸ்னலா ஒரு ஸ்பெக்ஸ் வச்சிக்கோங்க," என்றார்.

எங்கே போவது அடிஸ்னலுக்கு? ஒரு கண்ணாடியே எட்டாயிரம் ரூபாய்க்கு முன்னூறு ரூபாய் குறைவு. 'ஒனக்கு கண்ணாடி வாங்கறதுக்கு நகையே வாங்கிறலாம்," என்று அம்மா பெருமூச்சு விடுவார். 

பொன் ஆசாரிகளிடம்  'கைஆடி' ஒன்று இருக்கும். நுணுக்கமான வேலைபாடுகளுக்கானது. வாசிப்பும், கண்ணும் அப்படித்தான்.

நான் பதிமூன்று வயதில் கண்ணாடி ஆணியத் துவங்கும்போது டாக்டர் கோவிந்தராஜ் என்ற வயதான மருத்து என்னிடம், "யார் என்ன கிண்டல் பண்ணினாலும் கண்ணாடியை தூங்கறப்ப மட்டும் தான் கழட்டனும்...டீ.வி பார்த்துட்டு உடனே புக் படிக்காத..கொஞ்சம் நேரம் விட்டுட்டு படி..புத்தகத்து மேல வெளிச்சம் விழனும்..உனக்கு எதிர்த்தாப்ல, செங்குத்துல லைட் இருக்கறமாதிரி ஒக்காந்து படிக்காத," என்றார். நான் அவர் சொல்லியதை அப்படியே கேட்பதால் மோசமான கண் என்றாலும் தப்பிக்கிறது.

திரும்பும் போது சிறு பிள்ளைகள் கைகளில் அலைபேசியை வைத்துக்கொண்டு ஓடும் பேருந்தில் உற்று பார்த்து கொண்டிருப்பதை காண பதைக்கிறது. தங்கையிடம் கண்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தேன். ஒரு வேளை கண்கள் சார்ந்தும் பரிணாமத்தில் மாற்றம் நடைபெற்று கொண்டிருக்கிறதோ என்னவோ..

இன்று நமக்கு நாமே செய்து கொள்ளும் வன்முறை என்பது கண்களை பயன்படுத்தும் விதம் தான் என்று நினைக்கிறேன்.


Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...