மனம் ஆழத்தில் இருந்ததால் கண்ணாடியில் இறுக்கமான என் முகம் எனக்கே அன்னியமாக இருந்தது. ப்ரான்சிஸ் கிருபாவின் கவிதைகள் எனக்குள்ளே காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தன. சென்னை மேலும் அந்தக்காட்களை தீவிரப்படுத்தியது. நான் அதை தள்ளிக்கொண்டு புறத்துடன் இணைய முயன்று கொண்டே இருந்தேன்.
இந்த விருது சினிமாக்காரர்களால் வழங்கப்படுகிறது.
கிருபாவின் நண்பர்கள் இவர்கள். அவர்கள் என் கதைகளை வாசித்திருக்கவில்லை. இனி வாசிக்கிறேன் என்று சொன்னார்கள். என்னை இதற்குமுன் பெயராகக்கூட அவர்களுக்குத்தெரியாது. ஆனால் அவர்களுக்கு கிருபாவின் பெயரால் அளிக்கப்படும் விருதும் விருதுப்பணமும் சரியான எழுத்தாளருக்கு சென்று சேர வேண்டும் என்ற தீவிரம் இருந்தது. அந்தத் தேடலில் மூத்த எழுத்தாளர் தேனி சீருடையான் அவர்களையும்,என்னையும் கண்டு கொண்டார்கள்.
சினிமாக்காரர்கள் எழுத்தாளர்கள் மீது கொண்டுள்ள மதிப்பு அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தெரிந்தது. முதலில் என்னுடன் பேசியதில் இருந்து இறுதியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தது வரை அவர்கள் ஒவ்வொன்றிலும் மிக கவனமாக இருந்தார்கள்.
அந்தக்கூட்டத்தில் தேனிசீருடையான் அவர்களையும்,என்னையும் வாசித்தவர்கள் மிகக்குறைவு. ஆனால் எழுத்து என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. என்னுள் இருந்த தயக்கத்தை அவர்களின் நடவடிக்கைகளே சமனப்படுத்தின.
சினிமாக்காரர்களின் இயல்புகளான பேச்சும் சிரிப்பும் விழாவில் இருந்தது. அவர்கள் எதையும் கொண்டாடவே நினைக்கிறார்கள். அதன் பின்னுள்ள மனஅழுத்தத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ப்ரான்சிஸ்ஸின் வாழ்க்கையும் முடிவும் அவர்களை வெகுவாக பாதித்துக்கொண்டே இருக்கிறது. அவர்களால் அதில் இருந்து இன்னும் வெளிவர முடியவில்லை. 'கிருபாவின் பெயரால் எதாவது பண்ணனும்..'அது சரியான இடத்திற்கு சென்று சேர வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். அதன் மூலம் கிருபாவிற்கு எதையோ செய்ய முடிகிறது என்ற நிறைவை பார்க்க முயல்கிறார்கள்.
[எழுத்தாளர் பெருமாள் முருகன் விருதை அளிக்கிறார். எனக்கு வலப்புறம் இயக்குநர் தமிழ் மற்றும் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா]
ஓவியர் ஷ்யாம் கிருபாவின் முகத்தை வரைந்த தருணம் நிகழ்வில் முக்கியமான ஒன்று.
அதற்கு முன்
இறப்பை கனவு காண்கிறோம்
பிறப்பை யாராவது கனவு கண்கிறோமா என்ற கிருபாவின் கவிதையை நாடகமாக நடித்தார்கள்.
ஷ்யாம் வரையும் போது ஒரு பிறப்பு நடந்ததாக நான் உணர்ந்தேன். இதன் நிகழ்வின் ஆன்மா இது தான். கவின் மலர் கிருபாவுடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டார். எழுத்தாளர் அழகிய பெரியவன் உரையாற்றினார். எழுத்தாளர் பெருமாள் முருகன் கிருபா பற்றியும் என் எழுத்துகள் பற்றியும் பேசினார்.
இவர்கள் அவரை எந்த வகையிலோ அவரை தங்களுடனே வைத்துக்கொள்ள விழைகிறார்கள். அவர் அவர்களுடன் இருக்கட்டும் என்றே நினைத்துக்கொள்கிறேன்.
வாசகசாலை அருணையும்,ஓலைசுவடி இணைய இதழின் ஆசிரியர் கி.ச திலீபனையும் சந்தித்தது இனிய தருணம்.
வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDelete