காலத்தின் துளி

       [ஜூலை 2023 கவிதை இதழில்  வெளியான கட்டுரை]

கவிதை என்பது ஒரு மொழி அனுபவம் அல்லது எடுத்த பாடுபொருளை தொடர்புறுத்தும் விதம் அல்லது உணர்வுநிலை சார்ந்தது என்று பல அவதானிப்புகள் உண்டு.  சில நேரங்களில் மொழியின் ஒவ்வொரு வார்த்தையும் கவிதை என்ற பித்து நிலையும் உண்டாகும். எனக்கு அரங்கன்,அரங்கம் என்ற சொல்லின் மீது தீராத பிரேமை உண்டு. காவிரி நீர் சூழ அவன் கோயில் கொள்ளும் அரங்கம் என்பதில் இருந்து மனம் என்னும் அரங்கில் குடி கொள்பவன் என்பது வரை அதை விரிக்கமுடியும். அவன் குடி கொள்ளும் ஒவ்வொரு சொல்லுமே அரங்கம். ஆழ்வார்களின் கவிதைகளின் ஒவ்வொரு சொல்லிலும் அவன் குடியேறுகிறான். பச்சை மாமலை போல் மேனி என்ற வரியுடன், பசுமை தீப்பிடிக்கும் ஜூன் மாத கொல்லிமலையின் முன் நிற்பது நெகிழ்ச்சியான கவிதானுபவம். அந்த ஒற்றை வரி தீர்வதில்லை.

இதே போல பதின்வயதில் வாசித்த இந்த இருகவிதைகள் ஒரு மங்கிய புகைப்படம் போல மனதில் தங்கியிருக்கின்றன. பழைய இதழில் எதேச்சையாக வசித்தக்கவிதை. அந்த வயதில் கவிதைகள் சரிவர புரியாது. இந்தக்கவிதைகளின் எளிமையே இவற்றை நினைவில் இருக்கச் செய்கின்றன. தொடர்ந்து  கவிதைகளை வாசிக்கிறேன். இவை இன்று வரை நினைவில் இருப்பதையே இவற்றின் தகுதி என்று நினைக்கிறேன்.


                        கவிஞர் கல்யாண்ஜீ

காலம் 

புழுதி ஒத்துக்கொள்ளாத

நுரையீரல்களுடன் மாடிப்படியேற்றம்.

துருவேறிய சாவிகள் குலுங்கத்

திறக்கின்றன இறந்த காலங்கள்.

புத்தகஅலமாரி இடதுகோடியில்;

கண்ணெடுத்துப் பார்க்கலாமா அதை?

ஊஞ்சல் பலகையில் அல்ல,

சங்கிலிகளில்

கோர்த்துக்கிடக்கின்றன

தாத்தாவின் பிரதான ஞாபகங்கள்.

அந்த நிலைக்கண்ணாடியின்

நெடுக்கு வாட்டிலிருந்து

அடுக்கடுக்காக அலையெழுப்பி

வருகின்றன ஆச்சியின் முகங்கள்.

செப்பனிடுவதற்கு முந்தி

வேயப்பட்டிருந்த கொல்லம் ஓடுகளின்

வாசனை திரும்புமா என

மூச்சிழுத்து பயனற்று விட்டது.

வேப்பமர நிழலை அபகரித்து

முத்திரை குத்தி விட்டது

பாகப்பிரிவினை பத்திரங்கள்.

சற்று காத்திருப்பேன் எனில்

குருவி முட்டைகள் விழுந்து

உடைந்து சிதறியிருக்கிற

விகாரத்திலிருந்து

என் பெயர் சொல்லி

எவரேனும் அழைக்ககூடும்.

ஒரே ஒரு தடவை

கேட்டுவிட்டால் போதும்.

அனுமதிக்குமா

ஓநாய்பற்களுடன் 

துரத்துகிற நிகழ்காலம்.

தெரியவில்லை.

                      _கவிஞர் கல்யாண்ஜீ



                        கவிஞர் : எம்.யுவன்


நவீன வாழ்க்கைக்கு சித்தப்பாவின் பங்களிப்பு


ஆறு கழுவிப் போகும்

ஊர் அது.

வைக்கோல் கூரைகள்.

பருவங்களின் மாற்றம்

வயல்வெளிகளில் பூவரச மரங்களில்

தலைமுறைகளின் இழப்பு.

எலும்புகள் இடறும்

புழுதி செறிந்த மயானக்

கரையில் தெரியவரும் சிற்றூர்.

வெட்டவெளி நார்க்

கட்டிலில் மைல்கள் தள்ளி

காற்று சுமந்து வரும்

கிட்டப்பாவின் குரல்.

ஜாதிக்கொரு சாமி நின்று பாலித்த ஊர்.

ஈஸிசேரில் படுக்க

கற்றுக்கொண்டார் சித்தப்பா

கடிகாரமாய் நண்பனாய்

சாப்பாடாய் டி.வியை 

உபாஸிக்கக் கற்றார்.

அலமாரிக்கதவு மைக்கேல் ஜாக்ஸன்

ஆணா பெண்ணா கேட்டறிந்துகொண்டார் பேரனிடம்.

பாலியெஸ்டர் கோமணம்

கொடியில் துவளும் 

மத்யானத்தில் கடைசிமூச்சு விட்டார்.

தனிச்சிதை  மறந்து

ஆதுரம் பொங்கும்

நாவிதன் வெட்டியான்

அழுகை துறந்து

துஷ்டி கழுவி விட

காத்து நிற்கும்

ஆறு மறந்து

பட்டணக்கரையில்

தகரக்கொட்டடியில்

எரிந்தார் சித்தப்பா

                            _கவிஞர் எம்.யுவன்


இரு கவிதைகளுமே காலமாற்றத்தால் மனதில் ஏற்படும் தத்தளிப்புகளாலானவை.  கல்யாண்ஜீயின்[ எழுத்தாளர் வண்ணதாசன்], கவிதையில் ஒரு கூட்டுக்குடும்பத்தின் கடைசி ஆளாக சிதைந்துகொண்டிருக்கும் வீடு வருகிறது. எம்.யுவன் [எழுத்தாளர் யுவன்சந்திரசேகர்] கவிதையில் ஒரு ஊரும், ஆறும், அதனுடன் இணைந்த ஒரு மனிதன் நகரவாழ்க்கைக்கும் நகர இறப்பிற்பிற்கும் தன்னை காலத்தின் போக்கில் ஒப்புக்கொடுக்கிறார். 

ஒன்று மாற்றத்தை செறிக்க இயலாத மனதின் கவிதை. இன்னொன்று மாற்றத்தை செறித்து முடிக்கும் மனதின் கவிதை.

ஊஞ்சல் சங்கிலிகளில் கோர்த்துக் கிடக்கும் தாத்தாவின் பிரதான ஞாபகங்களையும்,ஆறு கழுவிப்போகும் ஊரையும் மறக்க முடியாத ஒரு வாசகியாக இந்தக்கவிதைகளில் இருந்து வெகுதாலைவு வந்துவிட்ட பிறகும் இந்த கவிதைகளில் உள்ள கவிமனதை இன்றும் தொட்டுணர முடிகிறது. காலத்தின் துளிகளை சற்று நேரம் பார்த்துக்கொள்ளும் குவிந்த உள்ளங்கைகளாக நீராக இந்த இரு கவிதைகளும் உள்ளன.

[இந்தியா டுடே [1994_1995] இலக்கிய ஆண்டு மலரில் வெளியான கவிதைகள்]







Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்