பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது.


அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன். 

  மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை நாச்சி என்றும் அழைக்கப்படுகிறாள். நான் வெள்ளையம்மாளை மையப்படுத்தி சக்யை என்ற கதை எழுதியிருக்கிறேன். சக்யை என் இரண்டாவது கதை. சுரதானியை மையப்படுத்தி 'மாலே' என்ற கதையை எழுதியுள்ளேன். இவள் துலுக்கநாச்சி என்று அழைக்கப்படுகிறாள். அரங்கத்தில் ஒருத்தி சிலையாக நிற்கிறாள். மற்றவள் ஓவியமாக படிந்திருக்கிறாள்.

 இவள் சூழ்ந்து நிற்கிறாள் அல்லது இவள் மண்ணிற்கு வழிவிட்ட இடங்களெல்லாம் அவன் உறையும் அரங்கங்களாகிறது. தலைகாவிரியில் இருந்து வரிசையாக அவன் துயிலும் அரங்கங்கள்.

கோபுரங்களை பார்த்த படியிருந்த என்னை ஒரு மணியடித்ததை போன்ற சிரிப்பு திருப்பியது. காவிரி பாலத்தில் பேருந்து ஓடிக்கொண்டிருந்தது.

'வாய்க்கால தண்ணி ஓடுது...ஆடிமாசம் ஆறு வத்தி கிடக்கே'  [ அவர் வாய்க்கால் என்று சொல்வது கொள்ளிடத்தை] என்று பின் இருக்கையில் ஒருவர் சொல்ல மற்றொருவர் 'ஆறுன்னா எல்லாத்துக்கும். வாய்க்காலுன்னா காவேரி நமக்கு மட்டுமாக்கும்'என்று சிரித்தார்.

காவிரி எப்படியிருந்தாலும் எப்போதும் என் மனதை மலர வைப்பவள். அந்த மலர்ச்சி சில நாட்களுக்கு நீடிக்கும். அந்த மனநிலையில் சுற்றி நடப்பவற்றை கவனிக்கிறேன்.

 நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு எங்கள் தெருவில் பெரும்பாலான குடிகளுக்கான குலதெய்வம் மற்றும் அதனுடன் சேர்ந்திருக்கும் துணை தெய்வங்களுக்கு பெரும்பூசை நடக்கிறது. இந்த பூசை ஐந்து வாரங்கள் நடக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நள்ளிரவு பலிகொடுத்தல் நடக்கும். வெள்ளி சாயுங்காலங்களில் தெரு வெறிச்சோடிவிடுகிறது.  சனிக்கிழமை அதிகாலையிலையே உணவு சமைக்கப்பட்டுவிடுகிறது. ஒரு குடும்பத்திற்கு சராசரியாக ஐம்பதாயிரம் ரூபாய் கெடாக்களுக்கே செலவாகிறது. 

வானம் பார்த்த பூமியின் தெய்வங்கள் அவை. இங்கு நன்செய் விவசாயம் என்பதால் ஆடு வளர்ப்பு மிகக்குறைவு. பசு வளர்ப்பு அதிகம். ஒரு குடும்பத்திற்கு ஐந்து வாரங்களுக்கு ஐந்து கெடாக்கள். முடியாதவர்கள் மூன்று. இன்னும் சிரமப்படுபவர்கள் ஒன்று. இன்று நான்காவது வாரம். ஒரே கொண்டாட்ட மனநிலை. மாமன் மச்சன்கள் புது ஆடைகள் எடுப்பது, உறவினர்கள் வருவது, தெருவில் செல்பவர்களை விடாப்பிடியாக இழுத்து உண்ண வைப்பது என்று மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறார்கள். வயசு பிள்ளைகள் பயல்களின் பாடு கொண்டாட்டம். இந்தப்பக்கம் ஓடி ஒரு வீடு அந்தப்பக்கம் ஒரு வீடு என்று உணவு. அதுவும் பயல்கள் பற்றி கேட்க வேண்டியதில்லை. முக்கியமாக கிழவிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

தெருவில் பெரும்பாலானவர்கள் பத்திரிக்கை வைத்திருக்கிறார்கள். தம்பி எத்தனை வீட்டில் சாப்பிடுவது என்று விழிக்கிறான். சோறும் குழம்பும் மட்டும் தான். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரி சமைக்கிறார்கள் என்று அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான். 

எனக்கு தெருவை பார்க்கும் போது சில நேரம் ஆற்று வெள்ளத்தை கரையோரம் நின்று பார்ப்பது போல இருக்கிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு சின்னஞ்சிறிய ஊற்றுமுகம் உண்டு. அது எதனால் பெருகி ஓடும் என்பதை யாரறிவார். ஆனால் அந்த காவிரி வற்றினாலும் பெருகும் என்பதும் நியதி.

சக்யை கதைக்கான இணைப்பு

https://kamaladeviwrites.blogspot.com/2020/06/blog-post_22.html

மாலே கதைக்கான இணைப்பு

https://kamaladeviwrites.blogspot.com/2021/08/blog-post_24.html


Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்