இற்றைத்திங்கள் அந்நிலவில்: 13

 [ 2024 சொல்வனம் ஜூலை இதழில் வெளியான கட்டுரை]

மலைதெய்வம்

சங்ககாலத்தில் இல்லங்களில், கோயில்களில் களம் அமைத்து வெறியாட்டு விழா நடத்தும் வழக்கம் இருந்தது. இந்த விழாவைப்பற்றி பாடியதால் வெறிபாடிய காமக்கண்ணியார் என்று இந்தப்புலவர் அழைக்கப்படுகிறார். இவர் ஐந்து பாடல்கள் பாடியுள்ளார்.

வெறிபாடிய காமக்கண்ணியார் போர்க்களத்தின் இருநிகழ்வுகளை புறநானூற்றில் பாடியுள்ளார். சங்ககாலத்தில் புலவர்கள் போர்நடக்கும் போதும், போர் முடிந்த பின்னும் களத்திலிருக்கும் வழக்கம் உண்டு.

பகைஅரசனிடமிருந்து மதிலை காப்பதற்காக நொச்சிப் பூ மலை அணிந்து வீரர்கள் போரிடுகிறார்கள். போர்க்களத்தில் வீரன் காயம்பட்டு இறக்கிறான். மகளீரின் இடையில் ஆடையாக கண்ட நொச்சி மாலை [தழையுடன் இணைந்த நீண்ட பூங்கொத்தை இடைஆடையாக பயன்படுத்தும் வழக்கம்] மைந்தனின் மார்பை மாலையாக அழகுபடுத்தியது. நொச்சிப்பூவை கொத்தாக தலையில் சூடும் வழக்கமும் உண்டு. இப்போது அவன்  குருதியில் தோய்ந்த மலரை நிணம் என்று நினைத்து பருந்து கால்களில் கவ்விச்செல்கிறது.

இந்தக்காட்சி மூலம் பூங்கொத்து போன்று இருந்த மைந்தன்  போர்க்களத்தில் உயிரிழந்து  வெறும் தசை துண்டமென உடல் கசங்கிக் கிடக்கிறான் என்று உணரமுடிகிறது. அதுவும் நீரறவு அறியா நொச்சி என்று நொச்சி குறிக்கப்படுகிறது. அத்தனை வளமான உடல் கொண்ட மைந்தன். 

வெருவரு குருதியொடு மயங்கி உருவுகரந்து

ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன் செத்துப்

பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம்

மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே

                                    புறநானூறு 271

இருநாட்டு வீரர்கள் போரிடும் போது குதிரைகளின் யானைகளின் வீரம் புறநானூற்றில் பாடப்படுகிறது. இந்தப்பாடல் குதிரையின் வீரத்தை பாடுவதன் மூலம் அதில் அமர்ந்த வீரனின் போர்த்திறத்தைக் கூறும்  பாடலாக உள்ளது. இந்தவகைப்பாடல்கள் குதிரை மறம், யானை மறம் என்ற துறையின் கீழ் வரும். 

வெடிவேய் கொள்வது போல ஓடித்

தாவுபு உகளும் மாவே

           புறநானூறு 302

வளைந்த மூங்கில் சட்டென்று நிமிர்ந்தெழுவது போல ஓடித்தாவும் குதிரை இது.  அந்த குதிரை மேல் அமர்ந்தவனின் வேல் பட்டு இறந்த யானைகளை விண்ணில் உள்ள விண்மீன்கள்,உதிறும்  மழைத்துளிகளைப் போல எண்ண முடியாதவை. 

நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி

வேலின் அட்டகளிறு பெயர்த்து எண்ணின்

விண்ணிவர் விசும்பின் மீனும்

தண்பெயல் உறையும் உறையாற்றாவே

இந்த உவமையில் எண்ணமுடியாது என்று சொல்லப்படுவது நேரடியாக எண்ணிக்கை சார்ந்தது அல்ல. குதிரையின் வேகத்தையும் அவன் வாள் வீச்சின் வேகத்தையும் குறிப்பது. குதிரை போர்க்களத்துக்குள் நுழையும் போதே வளைந்த மூங்கில் நிமிரும் வேகத்தில் செல்லும் என்றால் அவன் வீசும் வாளுக்கு மாண்ட களிறுகளை எப்படி எண்ணமுடியும். 

காதல் கொண்டப்பின் தலைவனை பிரிந்திருக்கும் தலைவி பசலை உற்று உடல் அழகு குறைய மெலிகிறாள். காத்திருப்பு என்பது  காலத்தை நீளவும் குறுகவும் செய்யும் மாயம் கொண்டது தானே.  மகளின் உடல் நலிவை கண்ட கண்ட அன்னை வயதில் மூத்த பெண்களிடம் தன் கவலையை சொல்கிறாள். அவர்கள் வெறியாட்டு நடத்துமாறு கூறுகிறார்கள். வீட்டு முற்றத்தில் மணல் பரப்பி களம் அமைக்கப்படுகிறது. வேல் நட்டு அதற்கு மாலையிட்டு, குருதி கலந்த திணை அரிசியை தூவி முருகை அழைக்கிறார்கள். வெறியாட்டு ஆடுபவர் வேலன். வேலன் வந்து முருகனை பாடி ஆடி இரவு முழுவதும் அந்த நிகழ்வு நடக்கும்.அதனால் தலைவி நலம் பெறுவாள் என்று அன்னை நினைக்கிறாள்.

களம் அமைக்கப்படும் போது தலைவி தோழியிடம் இவ்வாறு சொல்கிறாள்.


அணங்குடை  நெடுவரை உச்சியின் இழிதரும்

கணம்கொள் அருவிக் கான் கெழு நாடன்

மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்

இது என் அறியா மறுவரற் பொழுதில் 

படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை 

நெடுவேட் பெண்டிர் ஆது வாய் கூற

களம் நன்கு இழைத்து கண்ணி சூட்டி….

             அகநானூறு 22


தலைவி தோழியிடம், ‘தெய்வங்கள் வாழும் மலையுச்சியில் இருந்து அருவிகள் ஆர்பரித்து வரும். அந்தக் காட்டில் உள்ள நாட்டினன் நம்  தலைவன். மணம் கொண்ட அவன்  மார்பை அணைக்கப்பெறாததால் நான் வருத்தம் உற்றேன் என்பதை அறியாத அன்னையும், முதியபெண்களும் வெறியாட்டுக்கு ஆயத்தம் செய்கிறார்கள். அச்சம் தரும் இந்த இரவில் சந்தனத்தின் மணம் வீச பலவகைப்பூக்களை அணிந்த தலைவன் யாரும் அறியாமல் வந்து என் அச்சத்தை, வருத்தத்தை நீக்கினான். அதனை அறியாத இவர்கள் வேலனால் நலம் பெற்றேன் என்று கொண்டாடுகின்றனர்’ என்று சிரிக்கிறாள்.

இன்னொரு தலைவி தோழியிடம்,’தலைவன் என்மீது சினம் கொண்டுள்ளான். அதனால் என்னைக் காண வராமலிருப்பதால் எனக்கு வருத்தம் மட்டுமே உண்டு. தெய்வம் உறையும் மலையில் வாழும் அவன் மீது வெறுப்பில்லை. அவன் வராததால் குழைந்த என் அழகு, அவன் வந்தால் பொலியக்கூடும். அதை அறியாத அன்னை காட்டுவிச்சிகளை அழைத்து பிரம்பரிசியை பரப்பி வைத்து குறிகேட்டு வெறியாட்டுக்கு களம் அமைக்கிறாள். வேலன் வந்து ஆடியப்பின்னும் என் அழகு  மலரவில்லை என்றால் நான் தலைவனுடன் கொண்டுள்ள காதல் பலர் முன்னிலையில் வெளிப்பட்டுவிடும். அல்லது தலைவன் நமக்கு தந்த துயருக்காக  வேலன் அருள் செய்து நலம் பெற்றேன் என்றால் தலைவன் என்னை பற்றி என்ன நினைப்பான். நான் அவனை நினைத்து துயரப்படவில்லை என்று தலைவன் நினைத்தால் நான் உயிரை விடுவேன்’ என்கிறாள். 


அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி

வெறிகமழ் நெடுவேள் நல்குவ னேனினே

செறிதொடி உற்ற செல்லலும் பிறிது எனக்

கான்கெழு நாடன் கேட்பின்

யான்உயிர் வாழ்தல் அதனினும் அரிதே

                                அகநானூறு 98

வெறியாட்டிற்காக முற்றத்தில் மணல் கொட்டிப்பரப்பி  களம் அமைக்கப்படுவதை பார்த்துக்கொண்டிருக்கிறாள் தலைவி. 

சூருடை நனந் தலைச் சுனைநீர் மல்க

மால்பெயல் தலைஇய மன் நெடுங் குன்றத்து

கருங் காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ

ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்த

நாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக்

காதல் செய்தவும் காதலண்மை

யாதனிற் கொல்லோ? தோழி வினவுகம்

பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு

மெய்ம்மலி கழங்கின் வேலற் தந்தே

                                  நற்றிணை : 268

 மழைபெய்து நிறைந்த சுனையினை உடைய அச்சம் தரும் மலை உச்சியில் நீலக்குறிஞ்சி பூத்து நிறைந்திருக்கிறது. அங்கே உள்ள ஓவியம் போன்ற இல்லங்களில் உள்ள தேனடைகளில் தேன் நிறைந்திருக்கிறது. அந்த மலைநாட்டில் உள்ள தலைவன் மீது நான் காதல் கொண்டிருக்கிறேன். இவர்கள் எதற்காக களம் அமைத்து வேலனை அழைக்கிறார்கள் என்று தோழியிடம் தலைவி கேட்கிறாள். தன் அன்னையிடமிருந்தும் ஊரிடமிருந்தும் மறைத்து வைத்திருக்கும் காதல் வெளிப்படுமோ என்று தலைவி அச்சம் கொள்கிறாள்.

அச்சம் தரும் மலைஉச்சியில் நிற்கும் தெய்வமாக அது நிற்கிறது. குறிஞ்சி பூத்த மலையின் தேனடையின் தேனாக இருக்கிறது. எளிதில் அடைய முடியாத ஒன்றாக மாயம் காட்டுகிறது. அதன் மாயத்தை நினைத்து தலைவி அச்சம் கொள்கிறாள். அதை மலைஇறக்க வேண்டியிருக்கிறது.  எங்கோ காட்டில், மரங்களுக்கிடையில், கனவில் இருந்துகொண்டு சிரிக்கும்  அதை தரைக்கு அழைக்கும் பாடல்களாகவும் அது தரையிறங்கி வரும் பாடல்களாகவும் இந்தப்பாடல்கள் உள்ளன.












Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்

முதல் கனி