அம்பையின் படைப்புலகம் :5

   [ மே 2024  நீலி இதழில் வெளியான கட்டுரை]

நெருப்பல்ல நீர்

[ சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை சிறுகதை தொகுப்பை முன்வைத்து]

அவளுக்கு நன்றாக நினைவில் இருந்தது. தினம் அவள் அறையின் அலமாரியில் இரவுமட்டும் வந்தமரும் ஒரு பட்டாம்பூச்சி. கறுப்பும் மஞ்சளுமாய் நாகப்பழ மரத்தில் அமர்ந்து கீச்சிடும் ஒரு குருவி. ஒரு நாள் பட்டாம்பூச்சி தரையில் கிடந்தது அசையாமல். குருவி அவள் கண் முன்னாலேயே ஒரு நாள் சொத்தென்று விழுந்தது. பிறகு ஒரு முறை காரில் போகும்போது ஆட்டுக்குட்டி சத்தமே போடாமல் சாய்ந்தது. நான்கு வயது அப்போது. பாட்டி,ஏன் எல்லாம் சாகிறது? பாட்டி அணைத்துக் கொண்டாள். செத்த பின்னே அதெல்லாம் எங்கே போகிறது? பாட்டி இன்னும் இறுக அணைத்துக்கொண்டாள்.

         _ அம்பையின் சிங்கத்தின் வால் என்ற சிறுகதையிலிருந்து

                                 அம்பை

இந்தத்தொகுப்பில் பிரிவு, இழப்பு, மரணம் சார்ந்த கேள்விகளும் அவற்றின் புரிந்துகொள்ளமுடியாத தன்மையும் கதைகளாகியிருக்கின்றன.

அறுபது வயதை நெருங்குபவர்களின் [குறிப்பாக பெண்கள்] மனமும் அவர்களின் குடும்பம் வழக்கமாக அவர்கள் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளும் சாம்பல் மேல் எழும் நகரம், வில் முறியாத திருமணங்கள் மற்றும் வீழ்தல் போன்ற கதைகளில் பேசப்படுகிறது.

தன் வயோதிகம் வரை தன் மாமியாரை கவனித்து சலிக்கும் ஒரு அம்மாள். அவர் தன் மாமியார் இடுப்பு உடைந்து மருத்துமனையில் இருந்து திரும்பி வரும் நாளன்று தற்கொலை செய்து கொள்கிறார். இந்தக்கதை இந்த தற்கொலையில் தொடங்கி ஒரு நகரத்தின் பெரும் குடியிருப்புகள் உருவாக்கப்படும் போது அழிக்கப்படும் பழைய குடியிருப்புகள் மற்றும் அங்கிருந்து நியாயமற்ற முறையில் வெளியேற்றப்படும் மக்களை பேசுகிறது. காண்டவப்ரஸ்தம் எரியும் போது உடல் எரிந்து ஊர்ந்து தப்பிக்கும் தட்சதனை இந்தக்கதையில் வரும் பெண் லாவணி பாடலாகப் பாடுகிறாள். மனித மனத்தில் இயலாமை எங்கு ஆங்காரமாக மாறி அழிவின் தொடக்கப்புள்ளியாகிறது என்பதை இந்தக்கதை உணர்த்துகிறது.

வீழ்தல் என்ற கதையில் வயோதிகத்திலும் சமநிலை அடையாத உக்கிரமான ஒரு காதல் உள்ளது. தற்கொலை இறப்பு பற்றி உள்ள பொதுவான பிம்பத்திற்கு மாறான ஒரு கதை. இங்கு இறப்பு என்பது விடுதலை என்ற உணர்விற்கு பக்கத்தில் செல்கிறது. கணவனின் பிரிவை ஏற்கமுடியாத வயோதிகமனம் தன் அல்லல்களை விட்டு விலகிச்செல்ல இறப்பை ஒரு வழியாக காண்கிறது. 

இறப்பு பற்றி ஒரு இளம்பெண்ணின் மனதிற்குள் தீவிர சிந்தனைகளும் விசாரணைகளுமாக சிங்கத்தின்வால் என்ற கதை உள்ளது. அவள் ஒரு விபத்தில் தன் குடும்பத்தை இழந்திருப்பாள். சட்டென்று இறப்பு ஏற்படுத்தும் அன்றாடத்தை எதிர்கொள்ள முடியாத தத்தளிப்பும், இறப்பு பற்றிய கேள்விகளாலும் அலைவுறும் அவள் மனம் கற்பனையாக உடல் என்பதையும் உயிர் என்பதையும் வேறொரு பரிமாணத்தில் உணரத்தொடங்கும்.


1984 என்ற கதையில் மதக்கலவரத்தால் பரவும் வன்முறைகளை, செய்யப்படும் கொலைகளை பேசுவதன் வழியே மனிதன் ஏற்படுத்திக்கொண்ட சமூகவாழ்க்கை பற்றி கேள்விகள் வலுவாக எழுப்புகிறது. சட்டென்று மனிதனுக்கு மனிதன் இத்தனை உணர்ச்சிவசப்பட்டு கொலைகள் மிக இயல்பாகும் என்றால் மனிதனை ஆளும் அடிப்படை உணர்ச்சி என்ன? என்ற கேள்வியை வலுவாக ஏற்படுத்தும் கதை இது.

வேலையில் இருந்து ஓய்வு பெறும் வயதில் ஒரு பெண் தனித்து இருக்கிறார். பிள்ளைகள் அயல்தேசத்தில் தங்கள் வாழ்வை அமைத்து கொண்டுவிட்டவர்கள். ஓய்வு பெறும் அம்மாவை என்ன செய்வது? என்று பிள்ளைகள் மனதிற்குள் ஒரு சின்ன தொந்தரவு இருக்கிறது. தங்களுடன் வைத்துக்கொள்ள முடியாது என்பதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டப்பின் வயோதிகர்களுக்கான துணை ஏற்படுத்தித்தரும் ‘சுயம்வர்’ தளம் மூலம் அம்மாவுக்கும் சொத்துகளுக்கும் பாதுகாப்பு உள்ள வரனை பார்க்கலாம் என்கிறார்கள். அம்மா தன்னுடைய கல்லூரிகால நண்பனை துணையாக்கிக் கொள்ளும் எண்ணத்தைக் கூறியதும் அவளுக்கு அறிவுரைகளும், வழிகாட்டல்களும் மட்டுமின்றி ‘அப்பா இறந்து இரண்டு வருஷம் தானேம்மா ஆச்சு’ என்ற கேள்வியும் எழுப்புகிறார்கள். அறுபது வயதில் சுயமாக முடிவு எடுக்க ஒரு ஸ்கைப் உரையாடலில் அத்தனை கேள்விகளை அம்மா எதிர்கொள்கிறாள். 

இதுபோல உறவுகளுக்குள் அன்பு செயல்படும் விதத்தை பலகதைகளில் அம்பை விவாதிக்கிறார். அது அன்பா என்ற கேள்வியுடன். வன்முறைகளுக்கு நடுவே அநாயசமாக அன்பு வந்து அமர்ந்து சிறகடிக்கும் கதைகளும் உண்டு. உதாரணத்திற்கு 1984 என்ற கதையை சொல்லலாம். ஒரு கதைக்குள்ளேயே இதுபோன்ற சமனமாக்கும் விசைகள் உள்ளன.

இந்தக்கதைகளில் பெரும்பாலான கதைகள் வாழ்வை இறப்பை பற்றிய கேள்விகளை யோசிக்கும் மனங்கள் இரண்டிற்கும் இடையில் உள்ள இருப்பையும் கேள்வி கேட்பதாக உள்ளன. எதிர்பாராத இறப்புகள் ஏற்படுத்தும் அதிர்ச்சிகளும், அதன் வழி மனம் எதிர்கொள்ளும் கேள்விகளும் ,தொந்தரவுகளுமாக கதைகள் நகர்கின்றன. உயிர் என்பதும், உடல் என்பதும் அவ்வளவு தானா என்ற வெறுமையும் கதைகளில் உள்ளது.

 இருத்தல் ,வாழ்தல் பற்றிய கேள்வி உள்ள வலுவான கதையாக தொண்டை புடைத்த காகம் என்ற கதை உள்ளது. பெருமறதிக்கு ஆளாகும் தந்தைக்கும் மகளுக்குமான கதை. இருத்தல் என்பதும் வாழ்தல் என்பதும் பிரக்ஞையால் என்று நகர்கிறது   இந்தக்கதை. மகளின் ப்ரக்ஞை எதோ ஒரு மாநிலத்தில் தன் சமையலறை சன்னலில் வந்தமரும் காக்கைக்கு உணவிடுதன் மூலம் இறந்த தந்தையை காண்கிறது. அதே போல் ஒரு காகம் சாலையில் அடிபட்டு சாகும் போது மீண்டும் அந்தமனம் இறப்பின் முன் செயலற்று நிற்கிறது.

இந்தத்தொகுப்பில் உள்ள கதைகள்  இறப்பின் முன் செயலற்று நிற்கும் மனிதர்களால் ஆனது.

சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை என்ற கதையில் காதுகேட்கமுடியாத குழந்தை  நாம் வாழும் உலகத்தை எப்படி உணர்கிறது என்பதிலிருந்து தொடங்குகிறது. அவள் இளமை வயதடையும் போது தந்தை காக்ளியர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறார். மகள் மறுக்கிறாள். அவள் உலகை உணரும் விதத்தை அப்பாவுக்கு எழுதுகிறாள். அதனால் சட்டென மனம் மாறும் தந்தை வீட்டை விட்டு வெளியேறி யாருடனும் பேசாதவராக ஒரு மலை சூழ்ந்த இடத்திற்கு சென்றுவிடுகிறார். அன்பை தளையாக்கி நெருங்கியவர்களை வாழ்நாள் முழுவதுமே புரிந்து கொள்ளாமலிருப்பதை மையப்படுததும் கதை இது.  இன்னொரு பக்கம் அவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் மனைவி அவர் வீட்டை விட்டு வெளியேறுவதை ஏற்றுக்கொள்ளும் புரிதலுடன் இருக்கிறார். அம்பை ஒரே கதையில் இதுபோன்ற சமமான எதிர்விசைகளை வைத்து விவாதிப்பதை கணிசமான கதைகளில் காணமுடியும்.

 வன்முறையை எழுதுகிறார் என்றால் காரணமின்றி ஊற்றெடுக்கும் அன்பும் அந்தக்கதையில் இயல்பாகவே இருக்கிறது. அம்பை தான் காணும் நிகழ்வுகளை, மனிதர்களை,ஊர்களை  தன் புனைவுலகிற்குள் வைத்து வாழ விடுகிறார். இயல்பாகவே அந்த  வாழ்க்கை ஒரு சமாதானத்திற்காக  புராணபாத்திரங்களை துணைக்கு அழைத்துக்கொள்கிறது. இந்த இணைவு கதைகளுக்கு ஒருவித விவாதத்தன்மையை அளிக்கிறது.

இறப்பை தவிர்க்க முடியாது. அது  திட்டவட்டமானது. அதற்கு இடையில் ஓடும் நதியில் சகமனித பரிவை, நட்பை ,அன்பை, காதலை சுதந்திரத்தை, சுயத்தை தன் கதாப்பாத்திரங்களின் இயல்பின் மூலம் நிரப்புபவை அம்பையின் கதைகள். 


                         அம்பை [புகைப்படத்திற்காக சொல்வனம் இதழிற்கு நன்றி]

அம்பையின் சிறுகதைஉலகை முன்வைத்து சில அவதானிப்புகள்:

பொதுவாகவே அம்பையின் புனைவுலகில் ஒரு சிறுமி தன் பலூன் உடைந்துவிட்டதை உணர்ந்து மற்றொரு பொம்மையை நண்பனுக்கு கொடுப்பதை போன்ற ஒரு உணர்வை அடையமுடிகிறது.

 எதிர்பாராமைகளால் ஆன வாழ்வில் மனிதனால் ஆகக்கூடுவது என்ன?

 உறவுகளால் ஆன கட்டமைப்பில் இயல்பாக தோன்றும் ஆதிக்கத்தில் சகமனிதனால் செய்யமுடிவது என்ன? 

தவிர்க்கமுடியாத இந்த வாழ்வில் அன்பும் அக்கறையும் செய்யக்கூடுவது என்ன? என்ற கேள்விகளால் ஆனது அம்பையின் புனைவுலகம். 

ஆதிக்கத்தின் ஆசனத்திற்கு அடியில் மறைந்து போன புரிதலை தோண்டி எடுக்கும் கடப்பாறை என்றும் அம்பையின் கதைகளை சொல்லலாம். 

எவ்விதம் சொன்னாலும் ஒரு படைப்பாளியை ,ஒரு படைப்பை இதுதான் என்று வரையறுத்து சொல்லிவிட முடியாது. ஒரு வாசகமனம் என்பது எல்லைக்கு உட்பட்டது என்ற தெளிவுடன் இந்த அவதானிப்புகளை சொல்கிறேன். 

கதாபாத்திரங்களுக்குள் உள்ள இயல்பான பரிமாறல்கள் அம்பை கதைகளின் சிறப்பு. அது உணவாகவா, சொல்லாகவோ, உதவியாகவோ,உடனிருப்பாகவோ இருக்கின்றன. உதாரணத்திற்கு கணவனை இழந்த ஒரு மௌசிஜீக்கு அந்தத்தெருவின் காய்கறி கடைக்காரர் அவர் செல்லும் போதெல்லாம் சாயா தருவது. 

ஈடுசெய்ய முடியாதவைகள் என்றாலும் ஏதோ ஒன்றை நிகர் வைக்க முயற்சி செய்யும் எத்தனிப்பு உள்ள கதாப்பாத்திரங்கள் இவருடையவை. கண்ணனுக்கு நிகராக ஒரு  துளசி இலை வைத்ததை போன்ற ஒன்று. ஒரு புன்னகைக்கு மலரும் மலர்கள் தானே நாம். காக்கைக்கு பிடித்தமான உணவை கண்டு கொண்டு வைப்பது என்ற சின்ன சின்ன விஷயங்களில் அந்த பரிமாறல் கதைகளெங்கும் இருக்கிறது. பெரும்பாலும் அனைத்து கதைகளிலும் இந்த அம்சம் உண்டு.

அம்பையின் சிறுகதைகள் ஒரு நேர்கோட்டில் நிற்கும் மூங்கில் போன்ற வடிவம் கொண்டவை அல்ல. அவை தன் கைகளை அங்கும் இங்கும் விரித்துக்கொள்ளும் மரங்கள். 

ஒரு கதை என்னும் ரூபத்தில் சிலகதைகள் ஔிந்திருக்கக் கூடியவை. ஒரு வரியாகக்கூட ஒரு கதை வந்து செல்லும். உதாரணத்திற்கு ஒரு கலவரத்தில் குடும்பமாக வெட்டப்பட்டவர்களின் சித்திரம் வந்து செல்லும். அதுவே தனிக்கதையாக விரியக்கூடியது.  அம்பையின் கதைகளில் அத்தனை மாந்தர்கள் நெருக்கியடித்துக் கொண்டிருப்பார்கள். கதைகள் குறுநாவல் போல நீண்டு செல்லும்.

ஒரு விபத்தில்,ஒரு பதற்றசூழலில், ஒரு பிரிவினையின் போது, ஒரு அவசரகாலத்தின் போது ஒரு மனிதன் [மனுஷி] சட்டென்று அனாதையாகி விடுவதன் அவலத்தை அவர் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கதைகளில் திரும்பத்திரும்ப வெவ்வேறு கதாப்பாத்திரங்கள் மூலம் உணரச்செய்கிறார்.

அம்பையின் சிறுகதைகளை முழுவதுமாக [சில விடுபடல்கள் இருக்கலாம்] வாசித்த அனுபவத்தில் முக்கியமான  இரு அவதானிப்புகளை முன்வைக்கிறேன்.

தவிர்க்க வேண்டியவை:

அவர் ஒரு பெண்ணியப் படைப்பாளி என்ற கவனத்துடன் மட்டும் அவரை வாசிப்பதை தவிர்க்க வேண்டும்.

கருத்துருக்களை கதையாக்கியவர் என்ற பார்வை அவர் கதைகளுக்கு சரியானது இல்லை. ஒருசில கதைகளில் அப்படித்தோன்றலாம். பெரும்பாலானவை அப்படி திட்டமிடப்பட்டவை அல்ல.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தத்தொகுப்பை வாசித்தப்பின் அம்பைக்கு ஒரு மின்னஞ்சல் எழுதினேன். அதில் இந்தக்கதைகளில் ‘கனிந்த அம்பை’யை காண்கிறேன் என்று எழுதியிருந்தேன். அவர் மகிழ்ச்சி என்று சில வரிகள் எழுதியிருந்தார். அவர் புன்னகைத்திருக்கக்கூடும். 

 துவக்கத்திலிருந்தே கனிதல் உள்ள கதைகள் அவருடையவை. கனிதலுக்கு முன்பாக துவர்ப்பு கசப்பு என்பவை இயல்பானவை அல்லவா..இந்தப் படைப்பாளி தன் கேள்விகளை அங்கிருந்தே எழும்பிக் கொள்கிறார். 

அம்பை ஒரு பெருமழைக்கு பின்பான காட்டு வெள்ளம் போன்றவர். காய்ந்த பின்னும் எங்கேயோ மண் தன்னுள்ளே பதுக்கி வைத்த சிறு சிறு ஊற்றுகள் சேர்ந்து மண்ணிற்கு மேல் வந்ததைப்போல எழுத வந்தவர். அல்லது கூட்டுமனதின் ஆழத்தில் இருந்ததை பிரக்ஞைக்கு கொண்டுவந்தவர். காலத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் சொல்லலாம்.

மழையின் முதல் தண்ணீருக்கு திசைகள் ,கரைகள் இல்லை. அதற்கு கரைகளை மாற்றிக்கொள்ளும் இயல்பும், திசைகளை மாற்றும் இயல்பும் உண்டு. அதில் இன்னும் பல கிளைநதிகள் கிளைத்து சென்று புதிய நிலங்களை சேரலாம். துணைநதிகள் வந்து சேர்ந்து அது பெரிய நதியாகலாம். 

இனிவரும் வாசகமனதில் நதியாக  நகர வாய்ப்புள்ள அது… நெருப்பாக புரிந்து கொள்ளப்பட்ட நீர்.

                                          _  நிறைவு


Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்