போதவிழ் அகம்

 [2024 ஜூலை கவிதை இதழில் வெளியான வாசிப்பனுபவம்]

போதவிழ் அகம்

சங்கப்பாடல்களில் ‘போதவிழ் வான்பூ ‘ என்ற ஒரு சொல் உண்டு. மொக்கு போன்ற கூம்பிய இருள். ஔி வந்து தொட்டதும் பூவைப் போல பூத்த வானமாகிறது என்று சங்ககாலக் கவி சொல்கிறார். இங்கு இருள் என்பது கூம்பியிருத்தல். மொக்குக்குள் இருப்பதும் அதே பிரபஞ்ச இருள் தானே. இங்கு மொக்கு ஒரு குட்டி பிரபஞ்சமாவதை உணரமுடியும்.


ஒரே நேரத்தில்

பூக்க வைக்கும்

வேர்ப்பின்னல்


ஆயிரம்

அலைகளுக்கு அடியில்

இம்ம் என்றமைந்திருக்கும்

ஆழ்கடல்


ஈர்த்தும்

விலகியும்

சுற்றும்

அனைத்தையும்

தாங்கி நிற்கும்

கடுவெளி


என் ஆழத்து

அகவிழி


கல்பனா ஜெயகாந்த்தின் இந்தக்கவிதையில் இவர் சொல்லும் அனைத்திலும் அந்த மொக்கு வெவ்வேறு வடிவில் உள்ளது. அசையாத ஒரு தன்மை. ஔியோ, காற்றோ, எதுவோ வந்து தொட காத்திருக்கும் தவம். அல்லது வெறும் இன்மை. 

 மலர்தலுக்கும் விரிதலுக்கும் அசைவிற்கும் அடியில் உள்ள ஔியை, அசைவின்மையை, ,செறிவை எங்கெங்கிருந்தோ தொட்டெடுக்கும் கவிமனம் பின் தன்னுள்ளே அதை உணர்கிறார். அசையாத ஆழம். அதிகாலை குளம் போல. கன்னியின் மனம் போல. பெரியோர்கள் சொல்லும் அறிதலுக்கு முந்தைய நிலை போல அல்லது பிரபஞ்சம் உருவாவதற்கு முந்தைய நிலை போல. 

இறுதி வரியில் ஒரு குழந்தை கை சுட்டி சுற்றியிருப்பவரை தாய் தந்தை என்று சொல்லியப்பின் முதன்முதலாக தன் நெஞ்சை தொட்டு சொல்லதைப்போல தன்னில் முடிக்கிறார்.

இன்னொரு கவிதையில்…

காணா அவ்விழியின்

பெருநோக்கு

எதைக்கண்டதால்

விரியா அதன் இதழில்

இச்சிறுநகை என்று கேட்கிறார்.

மண்ணிற்குள் வேரில், பிரபஞ்ச கடுவெளியில், ஆழ்கடலில், பின் தன்னில் கூம்பிய மொக்கை மலர்த்தியது எது?

அகத்தை மலரச்செய்வது எதுவோ அதுவே இந்தக்கவிதைகளில் நகைக்கிறது. [எவையோ என்றும் சொல்லலாம்.  தான் என்று உணர்தலில் இருந்து ஞானம் அடைவது வரை.]

அதுவே ஒன்று பலவாகி மலர்கிறது. இம்ம் என்று அமர்ந்திருந்த அதுவே எண்ணற்ற  அலைகளாகிறது. ஈர்த்து விலகியும் நிற்கும் அதுவே சுழல்கிறது. பின் தான் என்றாகி லயிக்கிறது. அதன் பின் ஒவ்வொரு இதழாக மலர்கிறது. இந்த இருக்கவிதைகளில் உள்ளது ஒரு முடிவிலா வட்டம். பிரபஞ்சம் என்றும், அறிதல் என்றும், மனம் என்றும் உணரமட்டுமே முடிந்த ஒன்று. ஈதொன்றும் இல்லாமல் கூட இந்தக்கவிதையை வாசிக்கலாம். போதவிழ் அகம். எதனாலோ தொடப்பட்ட உள்ளம்.  


Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்