Skip to main content

படுகளம் நாவல் வாசிப்பனுபவம்

[படுகளம் நாவல் குறித்து எழுதிய கடிதம்]

அன்பு ஜெ,

வணக்கம்.
நலம் விழைகிறேன்.



படுகளம் நாவல் வாசித்தேன்.

ஒரு கலைஞனை வியாபார சூழல் தூண்டும் போது அவனுளிருக்கும் வியாபாரி விழித்துக் கொள்கிறான்.  பொதுவாக சாதாரணனிலிருந்து கலைஞன் விழித்துக்கொள்வது நடக்கும். ஆனால் இங்கு கலைஞனிலிருந்து வியாபாரி. ஏனோ தானோ என்றில்லை. அவன் கலைஞனில் இருந்து முழுமையான வியாபாரியாகும் தருணம் வரை. ஒரு விஸ்வரூபம். அந்த விளம்பரத் தட்டி எழுந்து நிற்பது போல அந்தக்கடைத்தெருவில் அவனும் எழுந்து நிற்கிறான்.
 
இந்த நாவலில் அவனுடைய மனவேகம் தான் கலையனுபவமாகிறது. ஆதர்சனமாக உணர்பவர்களின் பாதிப்பால் உருவாகும் வேகம். துரத்தப்படுகையிலும் ஓடும்போதும் உள்ளே சுரக்கும் உயிர்திரவத்தால் நிறைந்தது தான் காடு...பசி தோற்று உயிரிச்சை வெல்லும் தருணம் நாவலாகியிருக்கிறது.

'இரும்பு ராடு ஒன்று சீட்டின் அடியில் வைத்திருந்தேன். அதை என்ன செய்வது என்று தெரியவில்லை' என்ற வரியில் சட்டென்று கண்கலங்கியது. ' அதை தூக்கிப்போட்ரு' என்று தான் வாசிக்கும் போது முதலில் மனம் சொல்லியது. அது இல்லாமலிருந்தால் அவன் அழிந்து போயிருப்பான். ஒட்டுமொத்த நாவலே அது தான். தன்னுள் உள்ள இரும்பு ராடை அவன் உணர்ந்து ,வெளியே எடுத்து, பயன்படுத்தி ஓரமாக வைத்துவிட்டு வாழ்க்கைக்குள் நுழைகிறான். அது அங்கே ஓரமாக இருக்கிறது. அது அங்கேயே இருக்கட்டும் என்று தோன்றியது. கழுவி பூசையில் வைத்த பொருள் போல. 

முதன்முதலாக அவன் கடைவீதியில் வந்து அமர்ந்ததும் எனக்கு அபிமன்யூ நினைவில் வந்து கொண்டிருந்தான். நாவலின் முடிவில் அபிமன்யூ வெல்வதை பார்த்த குதூகலம் இருந்தது. நிரந்தரமாக இங்கிருக்கும் வியாபார பத்மவீயூகத்திற்குள்ளேயே வாழக் கற்றுக்கொண்ட அபிமன்யூ. அவன் முதல் கொலை முயற்சிக்கு தப்பி ஓடும்போது அந்தத்தெருவே பத்மமாக தோன்றியது. வாழும் வரை வெளியேற முடியாத பத்மம். அங்கேயே ஒவ்வொருவராக எதிர்கொண்டு வென்று உயிர்த்து சிறிது சிறிதாக உயிர்குறைந்து அங்கேயே மடிய வேண்டிய ஒன்று. அது பெறும் முதல் உச்சத்தை மட்டும் தொடும் நாவல். நாவலை முடித்தப்பின் அந்த படுகளபத்மத்தின் ஒவ்வொரு இதழாக விரிகிறது.

 நாவலை மனதில் விரியச்செய்வதில் முக்கிய பங்கு  வகிப்பது நாவலின் களம். பின்பு தருணங்களின் தவிர்க்க முடியாத தன்மை. எதிர்கொண்டே ஆக வேண்டிய தருணங்கள். தலைப்பில் நீங்களே சொல்வது போல படுகளத்தின் இயல்பே இந்த நாவலை நல்ல அனுபவமாக்குகிறது. 
இன்னொரு தளத்தில் அனைத்து செயல்களங்களும் அவ்வாறு தானே என்று தோன்றியது.
குடும்பத்திலிருந்து நாடுகள் வரை....  அந்த இரும்பு ராடு வெவ்வேறாக உருமாறுகிறது.

 கற்பனை உலகிலிருந்து வாழ்வின் எதார்த்ததனதில் நுழையும் ஒவ்வொருவரிடமும் அந்த ராடு வந்து சேரும் தருணத்தை அனைவரும் உணர்ந்திருப்போம். புதிதாக திருமணமாகி வரும் பெண்ணிலிருந்து நாட்டு எல்லை வரை. சாந்தமாக வருகிற பெண்கள் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பிடிவாதத்தை அவ்வபோது கையிலெடுப்பார்கள். அவர்கள் அந்த காலகட்டத்தை இறுதி வரை சொல்லிக்கொண்டிப்பதை பார்க்கலாம். அவர்களுக்கு மிக முக்கியமான தருணம் அது.

அழகானது மெல்லியது தீங்கு என்பதே அறியாதது உலகிலேயே அழகானது புழு. கூட்டின் அழுத்தத்தால், தான் வளருவதால் அது பட்டாம்பூச்சியாக மாறுவது ஒரு தருணம். இது வரை அந்த சிறகு வண்ணமயமானது அழகானததாக இருந்தது. இந்த நாவலில் அது காற்றை கிழிக்கும் கத்தியாக மாறியிருக்கிறது. அந்த கலைத்தருணத்திற்காக அன்பு.

அந்த காற்றே தான் அதன் உந்துவிசை...அது பறக்கும் வெளியும் கூட.  அந்த கத்தி கலைஞனுடைய கையிலிருப்பதால் தன் பதையில் உள்ள காற்றை மட்டுமே கிழித்து சென்று அது சிறகாகவே எப்போதும் முயற்சி செய்து கொண்டே இருக்கும்.

 அந்த காட்டின் வேட்டையில் தப்பித்து அந்த காட்டை தன் சிறகுகளால் அனுதினமும் அளக்கும் வண்ணத்துப்பூச்சி அந்த கலைஞன். உண்மையில் நடைமுறை அன்றாட வாழ்விலும் கூட கலைஞர்கள் அப்படியாகவே இருக்கிறார்கள். அண்மையில் ஒரு இசைக்கலைஞரை அப்படி உணர்ந்தேன்.

அன்புடன்,
கமலதேவி

Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...