பிறப்பு

 

நித்தியம்


காற்றில் அசைகையில்

இலைளெல்லாம்

மலர்களாகிவிடுகின்றன.

காற்றற்ற போதும்

மலர்களைக்காண

நீ இன்னும் கொஞ்சம்

உடைய வேண்டும்.



காலையில் கவிஞர் இசையின் இந்தக்கதையை வாசித்ததும் எனக்கு ராமனும் கைகேயியும் மனதில் வந்தார்கள். பத்துவயதில் சிறுவர்களுக்கான ராமாயணம் புத்தகத்தை வாசித்தேன். அந்தப்புத்தகத்தில் உள்ள ஓவியங்கள் மனதை கற்பனையில் அமிழ வைப்பவை. காட்டிலிருந்து திரும்பிய ராமர் மறுபடி கைகேயி மீது அன்பாக இருந்தார் என்ற கதையை இருபது வயது வரைக்கூட என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. நான் அப்போதெல்லாம் ஒருவருடன் பேசாமல் இருப்பதை அவருக்கு கொடுக்கும் தண்டனை என்று நினைப்பேன். 

காந்தி எபெஃக்ட் என்று அய்யா கிண்டல் செய்வார். [காந்தியை சரியாக புரிந்து கொள்ளாமை] . பேசாமல் ஒருவரை தவிர்ப்பது வன்மம்,இது மனிதர்களை கைவிடுவது,கோபக்காரர்களாக ஒருவரை மாற்றுவது என்ற கருத்து அவருக்கு இருந்தது. பெரிய பிழைகளுக்காக மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும் என்று சொல்வார். 

' பேசமாட்டேன்' என்று முதன்முதலாக சொன்ன போது தங்கை மகன் ராஜமித்திரன் 'ஏன் தம்பிக்கிட்ட கமலா பேசமாட்ட...'என்று முகம் சுருக்கிய முதல் தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. பள்ளியில் ஆசிரியராக வேலை செய்யும் போதும் குழந்தைகளிடம் இதையே செய்வேன். குழந்தைகளிடம் இது நன்றாக செல்லுபடியாகும். குழந்தை மனதுள்ளவர்களிடமும். 

ராமன் கைகேயிடம் இப்படி பேசாமல் இருந்திருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் காலத்தின் கைகளில் மிக்க அன்புள்ளவர்களின் அன்பே ஆயுதமாகிறது. அது சமநிலையை உடைக்கிறது. எதையோ நடத்திப்பார்க்கிறது.  மறுபடி ராமன் கைகேயியை காணும் நிகழ்வை பலமுறை பலவிதமாக மனதில் ஓட்டிப்பார்த்திருக்கிறேன். 

 ராமாயணத்தின் கதாப்பாத்திரங்கள் லட்சிய கதாப்பாத்திரங்கள். சென்று தொட முடியாத உளஉயர்வு கொண்டவை. மானுட பண்புகளின் கனவுவெளி என்றும் ராமாயணத்தை சொல்லலாம். ஒரு பெரும் சமூகத்தின் கனவு.

 அரண்மனையில் அனைவருக்கும் எதிராளியான கைகேயி தன் மகனால் உடைந்து சிதறி ராமனை எங்கும் கண்டாளா? அன்பை புரிந்து கொள்ள அன்பு உடைய வேண்டுமா? வைரத்தை வைரத்தால் அறுப்பதைப்போல. 

 இந்தக்கவிதை ஒரு பிறப்பை சொல்கிறது. உடைதலிற்கு பின்பு புதிதாக பிறக்கும் மனம். உடைதல் என்பது அன்பில் நேர்மறையாக மறையாகிறது.

அன்பை உணர துயரம் என்ற கூர்முனையின் ஔி வேண்டுமென்று கவிஞர் சொல்கிறாரா...அனைத்தும் சரியாக இருக்கும் போது பூக்கும் என்று சொல்ல முடியுமா...ஏதோ ஒன்று சமநிலை குழையும் போதே பூக்கிறது. எதோ ஒன்று சமநிலை குழையும் போதே பிறப்பு நிகழ்கிறது. உயிர்களின் பிறப்பு முதல் எழுத்து வரை. 

துயரங்களில் இருந்து, இழப்புகளில் இருந்து, நேற்றிலிருந்து 'பிறந்தெழுக' என்பதே படைத்தளித்து பூவுலகை ஆளும் காலத்தின் ஆணை.



Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்