கதை : மாலே

         புரவி ஜூன் இதழில்  வெளியான என்னுடைய கதை 'மாலே' . ஓவியங்கள் புரவி இதழிற்காக வரையப்பட்டவை. சுரதானியின் ஒரு ஓவியம் மட்டும் பதினாறு வயதான சிறுமி பார்கவி என்பவள் தனிப்பட்ட முறையில் எனக்கு வரைந்து தந்தாள். இந்த ஓவியத்தை எனக்கு கிடைத்த  ஆகச்சிறந்த வெகுமதியாக நினைக்கிறேன்.

இதழின் அட்டைப்படம் மனதிற்கு நெருக்கமானது. மே பதினேழாம் தேதி எழுத்தாளர் கி.ராவின் இறப்பிற்கு பின் அவருக்கு இந்த இதழ் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. 

நன்றி:புரவி



                                                                                      மாலே


                     

இளம்பனி திரையென படரும் வெளி அது. கனவுகள் விழுந்து  நகராக முளைத்து நிற்கும் நிலம். கனவுகள் துளிர்ப்பதென எழும் பேரரசுகள் வீழும் நிலம். அந்நிலத்தின் பனித்துளிகளை ஆதவன் உறிஞ்சி எடுத்து தனதாக்க பொழுது எழுந்துகொண்டிருந்தது.

இளங்காலையின் தண்மையும் வெம்மையும் படற அந்த அகன்ற பெரிய நீள்வட்டவடிவ, ஆறுசாளர அறையில் காலைக்காற்று புகுந்து வெளியேறியது. அதன் அமைதியில் கிணற்றில் விழும் முதல் துரும்பென பணிப்பெண் ஜவந்தா உள்நுழைந்தாள். வண்ண வண்ண சிறுப்பூவேலைபாடுகளும், மணிகளும், கற்களும் மின்னும் வெண்நிற சாளரத்திரைகளின் கயிற்றை இழுத்து விலக்கினாள்.

நழுங்கும் நீர் என சுரதானி திரும்பிப்படுத்தாள். மடந்தையின் பால் அன்ன வெண்முகம் துயிலிலும் மலர்ந்திருந்தது. திரும்பிப்படுத்ததால் மினுங்கும் வெண்ஆடை கணுக்கால்களில் வெண்மலரென விரிந்தது. கணுக்காலிலும் அதே பால்வெண்மை.

கலத்தில் பால் கலங்குவதைப் போன்றதொரு அலை முகத்தில் நெளிந்தது. மல்லிகை மலர்வதைப்போல விழிகளைத்திறந்தாள். பால்நிற விழிகள் பழுப்புநிற விழிமணியுடன் சுழன்று திடுக்கிட்டு நின்றன. கண்களை மூடி கசக்கிக்கொண்டு அனல்பட்டவள் என எழுந்தமர்ந்தாள். மீண்டும் கண்களைத் திறந்தாள். அங்கு அவனில்லை.

பஞ்சணையிலிருந்து குதித்து தான்விளையாடும் ஊஞ்சல் பஞ்சணையை நோக்கி ஓடினாள். அசையாமல் நின்ற ஊஞ்சல் அவளின் இடித்தலால் இழுவை ஒலியுடன் பதறி ஆடியது. அறைக்குள் இங்கும் அங்கும் ஓடினாள். ஒவ்வொரு இடமாகத் தேடினாள். கட்டிலின் அடியில், போர்த்தியிருந்த மாம்பழ நிற மென்கம்பளத்தினுள், சாளரக்கட்டைகளில், பொருள்களுக்கான மாடங்கள், துணிகளுக்கான பெரும்பேழைகள், ஆபரணங்களுக்கான பேழைகள், சொப்புசாமான் குவியல்கள் என்று மஹாலில் இருந்த பொருட்களை கலைத்துவீசினாள்.

அதே பொழுதில் அந்த ஹரம்சாராவில் இருந்த அனைத்து மாளிகைகளிலும், முந்தினநாள் அந்தியில் நடந்த நடன நிகழ்வைப்பற்றிய நினைவே விடியல் நேர பேச்சாக இருந்தது.

நடனஅரங்கில் அறியாமொழி இசையென உருமாறிய விந்தையை பேகங்களும், பணிப்பெண்களும் பேசிமாய்ந்தார்கள். முகஅசைவில், உடல் அசைவில், கால்களின் வேகத்தில், கைகளில் விரிவில் என்று உடல்மொழியால் கதைசொல்லி ஆடிய பரதநாட்டியம் அவர்களை ஆட்டுவித்ததை பேசித்தீராமல் பேசிக்கொண்டேயிருந்தார்கள். அவர்களின் சலிப்பான சொகுசு வாழ்வில் இப்படியொரு புதுநடனநிகழ்வு இன்னும் பலநாட்களின் சலிப்பை வெல்லும் மாமருந்தாக ஆகக்கூடும்.

***

பாதுஷாவின் இளையபேகமான பஷீராபேகம் தன்மஹாலில் பெரியசாளரத்திரையை விலக்கி ஹரம்சாராவின் நடமாட்டங்களை கவனித்துக்கொண்டிருந்தாள். வழக்கத்திற்கு மாறான ஒன்று அவர்களின் வழக்கமான நாளை வேறொன்றாக மாற்றியிருந்தது. அவளின் அந்தரங்கப்பணிப்பெண் ஹாகிமா பழச்சாறு கோப்பையுடன் அருகில் வந்து நின்றாள்.

கோப்பையை வாங்கிய பஷீராபேகம் பேசுவதற்காக ஹாகிமா பக்கம் திரும்பினாள்.

“ நேற்று தெற்கிலிருந்து வந்தவர்களின் நடனம் மனசிலேயே இருக்கிறதடீ…நடனத்தின் தொடக்கத்தில் எதையோ தொலைத்த அவள் பூந்தோட்டங்களில், காடுகளில் மலைகளில் தேடியலைந்தாள்…”

“தொலைக்கவில்லை பேகம்அவர்களே….அவன் ஔிந்துகொண்டான்…”

“இல்லையில்லை அவள் அத்தனை பறிதவிப்புடன் இருந்தாளே…”

“பின்பு அவள் மகாக்கோபம் கொண்டாளே…”

“அவனை யாரோ கவர்ந்து சென்றார்களாம்…யாராயிருப்பார்கள்?”

“முதுகை வளைத்து ஒருகையை இடையில் வைத்து, நீட்டிய கையின் விரல்களை குவித்து… வா…என்று முகத்தால்கெஞ்சும் போது அழுகையே வந்துவிட்டது. அவன் வந்தால்தான் என்ன? கவர்ந்தவர்கள் கொடுத்தால்தான் என்ன? எத்தனை துயரம்…”

“ஆண்களுக்கு புரியாது அம்மா…அவர்களுக்கு அனைத்தும் வெல்வதற்குரியவை…”

“அந்தக்குழுவில் ஆடவர்களும் இருந்தார்கள்…”

“நடனக்கலைஞர்கள் உருவை, மனதை மாற்றி எடுக்க முடிந்தவர்கள். இருவாழ்வும் அவர்களுக்குரியது அம்மா…”

“அந்த நடனப்பெண் இந்த உலகத்தையே கால்களால் தாண்டிவிட, எத்திவிட எத்தனிப்பவளாக கால் தூக்கி நின்றாளே…அருகில் ஆடியவன் உடல் குறுக்கி நின்றானல்லவா…”

“ஆம்…ஒரு வேளை…”என்று சட்டென்ற மனஅதிர்வால் ஹாகிமா பேச்சை  நிறுத்தினாள்.

“என்ன…என்னடீ பெண்ணே…”

“அவர்கள் வந்தது….”

“ஆமடி…அவர்கள் அந்த பொம்மைக்காக வந்தார்களா? அவ்வளவு மதிப்புள்ளதா அது…”

“பேகம் அவர்களே…இங்கே பொம்மைகளுக்குத்தான் மதிப்பே…”என்று சிரித்தாள்.

“சிரிக்காதேடீ…சுரதானி கைகளில் இருந்து அதை பிரிக்கவே முடியவில்லையாம்…தன்னுடலில் ஒன்றென பிணைத்திருந்தாளாம்..”

“ஆமாம் அம்மா. நம் ஹரம்சாரா முழுக்க அதுதான் பேச்சு. அவள் துயில் கலைந்து எழுந்தால் ஏதேனும் அனர்த்தம் நிகழுமென்று மனம் பிசறுகிறது…”

“அவ்வளவு ஈடுபாடா…”

“எப்படி அம்மா கூறுவது…”

கசன்பீ பாதுஷா ஹரம்சாராவில் நுழைவதற்கான வாத்திய ஒலிகள் கேட்டன.

“இத்தனை காலையிலா…”

“நான் சொல்லவில்லையா அம்மா…இளவரசிக்காக வருகிறார் என்று நினைக்கிறேன்…”

“சொல்ல நினைத்ததை சொல்…ஆணை,”

“இளவரசிக்கு அது வெறும் பொம்மை அல்ல பேகம் அவர்களே…”

“….”

“மனதில் விழுந்த முதல் இனிமை…அந்த தித்திப்பில் அவர் மூழ்கிவிடலாகாது…”

“பொம்மை மீதா...!”

அவர்கள் பேசிமுடிப்பதற்குள் அறைக்கு வெளியே திரைக்கு அப்பால் சிறுமணி ஒலித்தது.

“அடிமை பணிகிறேன்…”

“சொல்,”

“அந்த நடனக்குழுவிடமிருந்து பொம்மையை வாங்க படை கிளம்பிவிட்டது. இளவரசி படைகளுடன் செல்ல ஒப்புதல் கிடைத்துள்ளது… இளவரசி எந்த ஒப்பனைகளும் இன்றி அப்படியே ஆயத்தமாகிவிட்டார்,”

“அப்படியா…! நீ செல்லலாம்,”

அவள் பின்புறமாக நடந்து மறைந்தாள்.

“அவர் செல்லலாகாது பேகம் அவர்களே…செல்லலாகாது…”என்ற ஹாகிமா குனிந்து நின்றாள்.

“பாதுஷாவின் ஆணைக்குப்பின் அவளுக்கு தடை ஏதடீ…”

“தடுத்தால் மீட்டுவிடலாம்…”

“மீட்டுவிடக்கூடியது என்றும் கரைகளை கடந்து செல்வதில்லையடீ…அவள் பெரும்பாறைகளை கடக்கும் காற்று ,”

***

பூந்தோட்டங்கள், புல்வெளிகள், நீரூற்றுகளின் நடுவில் இருந்த மஹால்களை செம்மையான கல்பாவிய பாதை இணைத்தது. அந்தப்பாதையின் வலப்புறத்தில் தோட்டத்தை கடந்து சுரதானியின் மஹால் இருந்தது.

ஜவந்தா மஹாலின் வெளியே நீரூற்றிற்கு அருகில் வந்து நின்றாள். அடிக்கடி அவளது கரம் சிவந்தமுக்காடை சரிசெய்து கொண்டது. கைகளை வீசிக்கொண்டு வேகமான பதட்ட நடையுடன் ஆபரணங்கள் அதிர்ந்து ஒலிக்க வெளியேவந்த மூத்தபணிப்பெண்ணான ஹசன்அலி, நீண்ட படிக்கட்டில் நின்றபடி ஜவந்தாவிடம், “ஏய்…பெண்ணே தகவல் ஏதும் உண்டா…”என்றாள்.

“இல்லை அம்மா…”

ஹசன்அலி மீண்டும் அதிர்ந்த நடையுடன் உள்ளே சென்றாள்.

ஜவந்தா சிவந்த பாதையை பார்த்தவாறு நின்றாள். குன்றின் மேலிருந்த தன் அரண்மனை நினைவில் வந்தது. அந்தக் கோட்டை அழிக்கப்பட்ட நாளில் இங்கு கொண்டுவரப்பட்டாள்.

கசன்பீ பாதுஷாவின் வருகையை  அறிவிக்க ஹரம்சரா வாயில்பெண்டுகளில் இளையவளான சகீனா ஓடிவந்தாள். ஜவந்தா உள்ளே ஹசன்அலிக்கு அறிவிக்க ஓடினாள். ஹசன்அலியின் வரவேற்பு மொழிகளை கையசைத்து நிறுத்திய சுல்தான் நடந்து கொண்டே, “சுரதானியா இவ்வாறு நடந்துகொள்கிறாள்…அந்த பொம்மைக்காகவா?”என்றார்.

“ஆம் பாதுஷா…ஆனால் அவர் அதை பொம்மையாக எண்ணவில்லை…”

“பிறகு…?” என்ற பாதுஷா நின்றார். அப்பால் சீனக்களிமண்ணாலான வெண்பாவை உடைந்து சிதறியது. சுல்தான் அந்த சிதறல்களை கடந்து உள்ளே சென்றபடி, “அல்லா…என் மகளை காத்துக்கொள்ளுங்கள்…”என்று முணுமுணுத்தார்.

“உணவு உண்டாளா?”

“இல்லை பாதுஷா அவர்களே…”

“நீங்களெல்லாம் என்ன செய்கிறீர்கள்…வெட்டி குளத்து மீன்களுக்கு வீசுகிறேன்…”

ஹசன்அலி மூச்சை இழுத்துப்பிடித்துக்கொண்டு பின்வாங்கி சுவரில் ஒதுங்கி நின்றாள். ஜவந்தா முக்காடை நன்றாக இழுத்துவிட்டபடி ஊஞ்சலுக்கு பின்னிருந்த தூண் அருகில் நின்றாள். மற்ற பணிப்பெண்கள் பின் வாயில் வழியாக வெளியேறியிருந்தார்கள்.

“மகளே…”

சுரதானி எந்த அசைவுமின்றி களைத்த முகத்துடன் படுக்கையில் அமர்ந்திருந்தாள். தன் இரும்பு குறடுகளை கழற்ற ஹசன் அலிக்கு அணையிட்டார். மிகமெல்ல சிதறிக்கிடந்த பொருட்களை தாண்டிக்கொண்டு மகளின் அருகில் சென்றார். கறுத்து அடர்ந்த கூந்தல் முதுகுபுறம் பரவி விரிந்திருந்தது. இடதுகையை அவள் உச்சந்தலையில் வைத்தார். அவர்கள் இருவரையும் முக்காடுக்குள்ளிருந்து அந்த இளம்கண்கள் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தன.

சுரதானி நிமிர்ந்து தந்தை முகத்தைப் பார்த்தாள். நெற்றியில் சிறுமுடிகள் கலைந்து வியர்வை ஈரத்தில் ஒட்டியிருந்தன. அடர்ந்த புருவங்களில் கண்களில் மை கரைந்து முகமெங்கும் பரவியிருந்தது. கண்கள் குருதியின் செம்மையில் கலங்கின. பாதுஷாவின் கால்கள் பதறத்தொடங்கின.

“அடிமையே....இந்த ஆணை இக்கணமே..”

ஹசன்அலி ஓரடி முன்னால் வந்து குனிந்து நின்றாள்.

***

சுரதானி அந்த ஹரம்சாராவிலிருந்து மின்னும் வெண்அடையுடன், கலைந்த கருங்குழலுடன், எவரையும் நோக்காத பார்வையுடன், கீழுதடுகளை இறுக்கிக் கடித்தபடி பல்லக்கில் ஏறும் பொழுது அனைத்துப்பெண்களும் மூச்சை இழுத்துப்பிடித்துக்கொண்டார்கள். அவள் தாய்வயது பேகங்கள் கண்ணீர் வழிய நெஞ்சில் கைவைத்து குனிந்து நின்றார்கள். அவளின் தாய் ஆனீஷாபேகம் தன்மஹாலை விட்டு வெளியே வரவே இல்லை. அவர்களுக்கு அப்பட்டமாக புரிந்த ஒன்றை ,தொட்டு எடுக்கமுடியாத தரப்பினர் எக்காளங்களோடு ஒலியெழுப்பி வெற்றியுடன் திரும்புவதாக சபதம்செய்து அரண்மனை விட்டு வெளியேறினர்.

“இந்தப்போரில் எப்போதோ தோற்றுவிட்டோம் பேகம் அவர்களே..”என்ற ஹாகிமாவை பஷீராபேகம் முறைத்து அடக்கினாள். 

டெல்லியிலிருந்து தெற்கு நோக்கி படை செல்லத்தொடங்கியது. அதன் மத்தியில் இரண்டு பெரிய மூடுபல்லக்குகள் சென்றன. சுல்தான் கண்களில் இருந்து காட்சி மறையும் வரை உப்பரிகையில் நின்றார். 

“நானும் செல்கிறேன்…நான் செல்ல வேண்டும்…சென்றாக வேண்டும்…”

என்ற வார்த்தைகளைத் தவிர வேறெதையும் சுரதானி அவரிடம் கூறவில்லை. போர்க்களத்தில் வாளின் முன் நிற்கும் மிகஇளம்வீரன் அவர் கண்முன்னால்  வந்து சென்றான். அவளின் சொல்லில், பார்வையில் இருந்த உறுதி முதலில் எரிச்சலை, பின் வியப்பை உண்டாக்கியது. இந்த புறாக்களுடன் வளர்ந்தவளா! இந்த ஹரம்சாராவை விட்டு வெளியேறாத கால்களுக்கு எங்கிருந்து வந்தது இத்தனை தீவிரம். ஒரு பொம்மைக்காகவா!

பல்லக்கினுள் சாய்வுபலகையில் சுரதானி சாய்ந்து அமர்ந்திருந்தாள். கண்களில் பழைய ஔி வந்திருந்தது. கண்கள் கனவில் அலைபாய்வன என்றிருந்தன. உடல் சோர்ந்து சாய்ந்திருந்தாள். அவள் காலடிகளில் அமர்ந்திருந்த ஹசன்அலி வாய்நீண்ட கலத்திலிருந்து பழச்சாறை வெள்ளிக்கோப்பையில் ஊற்றி இடதுபுறம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஜவந்தாவின் கைகளில் கொடுத்தாள்.

அவள் மெல்ல நகர்ந்து, “இளவரசி…”என்றாள். அவள் ஔிகொண்ட கண்களால் முன்னால் படபடத்த திரையை பார்த்திருந்தாள்.

“இளவரசி…”

அவள் திரும்பி புன்னகையுடன் கோப்பையை வாங்கி இருமிடறுகள் விழுங்கி திருப்பி அளித்தாள். ஹசன்அலி கோப்பையை கவலை தோய்ந்த முகத்துடன் வாங்கினாள்.

படை நகர்ந்து கொண்டிருந்தது. வெற்றிகொள்ள வேண்டிய உந்துதல் எதுவுமற்ற நகர்வு. கேட்டால் கொடுத்துவிடப்போகிறவர்களை சென்றடையும் சலிப்பு அதன் நகர்வில் தெரிந்தது.

சுரதானி புன்னகையுடன் இருந்தாள். அவள் எண்ணங்களெல்லாம் பின்னால் வெகுதூரத்தில் ஆடித்திளைத்திருந்தன.

***

ஹரம்சாராவின் தோட்டத்து இலைகள், தளிரிலிருந்து இளம்பசுமைக்கு மாறும் சோம்பிய பொழுதுகளில் சுரதானி தோட்டத்தை சுற்றி சுற்றி வந்தாள். அந்தி இறங்கும் பொழுதில் தோட்டத்து புறாக்களுடன் அமர்ந்தாள். அவளை பணிப்பெண்கள் துரத்தி துரத்தி களைத்து அமரத்துடிக்கும் நாட்கள் மெல்ல நகர்ந்து சென்றன. மரத்தடிகளில் அமர்ந்திருக்கும் அவளை, அவர்கள் தூரத்திலிருந்து கண்டு புன்னகைத்துக் கொண்டார்கள். ஜவந்தா அவள் அருகில் இன்னொரு சுரதானி என அமர்ந்திருப்பாள்.


குட்டிப்பெண் பார்கவி வரைந்த சுரதானி 


சுரதானி ஒருநாள் ஜவந்தாவை மிகஅருகில் அழைத்தாள். புல்வெளிபரப்பில் புங்கையின் வெண்சிறுமலர்கள் உதிர்ந்து நெருங்கிப் பரவியிருந்தன. அந்தப்பூக்களை ஒவ்வொன்றாக எடுத்து ஓரிடத்தில் வைத்துக்கொண்டிருந்தாள்.

“என்ன இளவரசி?”

“இவ்வளவு கட்டுப்பாடுகளை மீறி யாராவது நம் ஹரம்சாராவிற்குள் நுழையமுடியுமா ஜவந்தா…”

“முடியாது…அதில் ஐயம் உண்டாகும்படி எதாவது நிகழ்ந்ததென்றால் உடனே கூறுங்கள்…ஹசன்அலி அவர்களை அழைக்கட்டுமா?”

“ச்...சத்தமிடாதே…யாரோ பார்ப்பது போன்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது. குளியல்தொட்டியில் இருந்து விரைந்துவந்து ஆடைமாற்றினால் போதும் என்றிருக்கிறது…குளியல் இப்போதெல்லாம் பதட்டமானதாகிவிட்டது…பலநாட்களாக ஹசன்அலியை குளியலறைக்கு வெளியே நிற்க சொல்லிவிட்டேன். இதை யாரிடமாவது கூறினால் மனப்பிசகு என்பார்களோ என்று தோன்றுகிறது,”

ஜவந்தா புன்னகைத்தாள்.

“இதற்கும் ஒருகதை உண்டு இளவரசி…கிருஷ்ணாவின் கதை…”

“இதற்குமா…!”

“ம்…கேளுங்கள். நம் வயது கோபியர்கள் யமுனைக்கு குளிக்கசெல்லும் போது துணைக்கு சிறுவர்களை அழைத்து செல்வார்களாம்… கிருஷ்ணா கள்ளம் செய்தாலும் அன்பானவனாதலால் அவனை அடிக்கடி அழைப்பார்களாம்.  ஒருநாள் அவர்கள் யமுனையில் குளிக்கும்போது கிருஷ்ணா அனைவரின் ஆடைகளை எடுத்து சென்றுவிட்டானாம்…”

“அய்யோ…”

“கேளுங்கள்…அவன் ஆலமரத்திற்கு பின் ஔிந்துகொண்டானாம். இவர்கள் கிருஷ்ணா…கிருஷ்ணா…என்று கூப்பாடு போட்டிருக்கிறார்கள். கரையில் வரிசையாக நின்ற ஆல்,அரசு,புங்கை,மருதம்,கொன்றை மரங்களின் கிளைகளில் தேடிச்சலித்தார்களாம். அந்தக்கிளையில்இருக்கிறான்…இந்தக்கிளையிலிருக்கிறான் என்று ஆளுக்கு ஒருதிசையை சொன்னார்களாம். மற்றவர்கள் மனம் நினைத்ததை ஒருத்தி வாய்விட்டு, “  பயல் வளர்ந்துவிட்டானடி… “என்று பதைத்தாளாம். அவன் எங்கும் இல்லை. அவன் தங்களை பார்க்கவில்லை என்பதை அவர்கள் உணந்தப்பின் ஆடைகளை கொடுத்தானாம்…”

“ஏன் இவ்வாறு செய்தான்…”

“ஆடைதான் மனிதரின் ஆகப்பெரிய அச்சமாம். அங்கங்கள் பற்றிய அச்சம் இன் னொரு தரப்புக்கு அகங்காரத்தை,கீழ்மையான எண்ணங்களை விதைக்கிறது…அந்த அச்சம் எல்லைக்குள் இருப்பது நுண்ணிய விடுதலை இளவரசி…அதனால் தான் அவர்கள் ஆடையின்றி கரையேற துணிந்த பொழுதில் சிரித்துக்கொண்டே ஆடைகளை வீசிவிட்டு ஓடி, அவன் தோழிகளுக்கு அந்த விடுதலையை உணர்த்தினானாம்…வெகுதூரம் வரை அவன் சிரிப்பொலி ஒலித்ததாம்,”

“என்ன அழகிய சிரிப்படி அவனுக்கு…”

“அதனால்தான் ஆய்ச்சியர்கள் மேலாடையுடன் இணைந்த முக்காடுகளை எடுத்துவிட்டு மோர்க்கடையும் பொழுதும், பாவாடைகளை சுருட்டி குத்துக்காலிட்டு அமர்ந்து பால் கரக்கும் போதும் ஓடிவரும் வளர்ந்த கிருஷ்ணாவை கண்டுகொள்ளமாட்டார்களாம்…பால்,வெண்ணெய்யைத்தான் ஔித்துவைப்பார்களாம்…”

சுரதானி தலையுயர்த்தி சிரித்தாள். பின் வானத்தை பார்த்தபடி,

“என்ன அழகான கண்கள் அவனுக்கு…”என்றாள்.


                 


“ஆமாம் இளவரசி…கமலக்கண்ணன்…”

“நான் கூறியது பற்றி…”

“நம் வயதில்தான் ஆடைபற்றிய அச்சம் உச்சத்திலிருக்குமாம்…அனைவருக்குமானது…குழப்பம் வேண்டாம்,”

“இவ்வளவையும் எங்கிருந்து கற்றாயடீ…”

“எங்கள் அரண்மனைகளில், இல்லங்களில் கிருஷ்ணாவின் கதைகளை முதுதாய்கள் சமைக்கும்போதும், தாயக்கட்டைகைளை உருட்டும் போதும், உண்ணும் போதும், உறங்கும் போதும் சொல்லிக்கொண்டிருப்பார்கள்…” என்று ஜவந்தா பேசிக்கொண்டேயிருந்தாள்.

தன் முக்காடை எடுத்து முகத்தை காற்றுதொட அனுமதித்த சுரதானி புன்னகைத்துக்கொண்டாள்.

புல்வெளியின் பசுமையை, வானின் நிலத்தை, செம்மஞ்சள் அந்தியை,அந்தி கடந்த மென்இருளின் நீலத்தை தினமும் கண்டு அமர்ந்திருந்தவளின் முகத்தில் மெல்லிய சோபை படர்ந்திருந்தது. 

ஜவந்தா கூறும் கதைகளில் சொற்களாக இருந்தவன், சுரதானி மனதில் உருவமில்லாதிருந்து பின்னர் மெல்ல கண்கள் காணும் ஒவ்வொரு பொருளில் இருந்தும் எழுந்துவந்தான்.

அப்படி ஒருஅந்தியில் தெற்கிலிருந்து படைகள் திரும்பியிருந்த ஆரவார ஒலிகள் அரண்மனை முழுக்க ஒலித்தன. பேரரசர் அலாவுதீன் கில்ஜீயின் படைகளுடன் அவருக்கு கீழ்ஆட்சிசெய்த முகலாய மன்னர்கள், மாலிக்கபூர் போன்ற படைத்தளபதிகளுடன் சென்று தென்னகத்து கோயில்களை கொள்ளைகொண்டு பெருஞ்செல்வத்துடன் திரும்பியிருந்தனர்.

படையெடுப்பில் கலந்துகொண்டதற்காக மாமன்னர் அளித்த அன்பளிப்பு செல்வத்துடன் கசன்பீ பாதுஷா திரும்பியிருந்தார். அடுத்தவந்த நாட்களில் அவரின் தனிப்பட்ட பரிசளிப்புகள் முடிந்தன. அதற்குப்பின் கொள்ளை கொண்டு வந்த பேழைகள் ஹரம்சாராவின் பெண்களுக்காக அந்த அகன்ற நடனமண்டபத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்தன. காற்று நுழைந்து வெளியேறி சுற்றிலும் இருந்த திரைசீலைகளை அசைத்துக்கொண்டிருக்க அரியணையில் பாதுஷா புன்னகையுடன் அமர்ந்திருந்தார். 

பேகங்கள் அழகிய ஆடைகளுடன்,அவர் பரிசளித்த அணிகளுடனும், வந்திருந்து தங்களுக்கானவற்றை தேர்ந்து பணிப்பெண்களிடம் அளித்துக்கொண்டிருந்தார்கள். பாதுஷா ஒவ்வொரு பேகத்தின் முகத்தையும் பார்த்து புன்னகைத்தார்.

இளவரசிகளுக்கான பொழுது நெருங்கிக்கொண்டிருந்தது. தோட்டத்தில் அமர்ந்திருந்த சுரதானியின் முன் ஜவந்தா கைகளை பிசைந்தபடி நின்றாள். இதுவரை பத்துமுறைக்கு மேல் நினைவு படுத்தியிருந்தாள். இந்தப்பெண்ணிற்கு என்ன ஆனது என்று அவள் வயதை ஒத்தவர்கள் வியப்புடன் நோக்கிய போது அவளை முதலில் உணர்ந்து கொண்டவள் ஜவந்தா. அண்மையில் தனக்குநேர்ந்த அதேதான். விளையாட்டில் சுவை குறைந்திருந்ததும், ஓடியாடாமல் ஓரிடத்தில் அமர்வதில் சுகம் கண்டதுமான பொழுதுகள். மண்டபத்தை நோக்கி இளவரசிகள் செல்லும் சலசலப்பில் தன்னை உசுப்பிக்கொண்ட ஜவந்தா மீண்டும்,

“இளவரசி…பாதுஷாவின் ஆணை…அவர் அரங்கில் அமர்ந்திருக்கிறார்…அனைவரும் செல்கிறார்கள்,”என்றாள்.

சுரதானி சலிப்புடன் எழுந்தாள். வான்நீலநிற நீளபாவாடையும், மேலாடையும்,முக்காடும் அணிந்து சென்றாள். நேர்த்தியின்மைக்குரிய அரியஅழகு அந்த மேகங்களைப் போல என்று நினைத்தவளாக ஜவந்தா சுரதானியை பார்த்துக்கொண்டிருந்தாள். பனியில் வானின் மென்நீலத்தைக் கொண்டு வரைந்ததைப் போன்ற ஆடை. ஓவியம் போல ஒவ்வொரு பேழையாக கடந்து சென்றாள். இறுதிப்பேழையில் புன்னகைத்த இதழ்களுடன், அரங்கத்தின் அழகியமணவாளன் செப்பு மேனியனாக அலங்கார குறுவாள்களின் மீது படுத்திருந்தான்.

அவனை எடுத்துக்கொண்ட சுரதானி பாதுஷாவை வணங்கினாள்.

“இந்த பொம்மை போதுமா சுரதானி. பொம்மை கனக்கிறதா…”என்று சிரித்தார். 

அவள், “சற்று எடைகொண்டதுதான் தந்தையே,”என்று வணங்கி வெளியேறினாள்.

திரும்பி வரும்வழியில் ஜவந்தா சிலையை உற்று பார்த்தவாறு இருந்தாள். மஹாலுக்குள் வந்ததும் புருவங்களை உயர்த்தி கண்களை விரித்து இவன்தான் இளவரசி..கிருஷ்ணா…கிருஷ்ணா…நான் கதைகளில் கூறிய கிருஷ்ணா  என்றாள்.

“அப்படியா…நன்றாகத்தெரியுமா?”என்று சிலையை திருப்பிப் திருப்பிப்பார்த்தாள். நீங்காப்புன்னகை, நீள்விழிகள், கோவர்த்தனம் உயர்த்திய கைகள், நர்த்தனமாடிய கால்கள். அவனேதான்.

“எங்கள் கோட்டையில் தசராங்கி இசை ஒலிக்க கிருஷ்ணன் பாடல்கள் எப்போதும் பாடப்படும். இவன் கிருஷ்ணன் தான்…வெண்ணெய் திருடி…பால் திருடி…இவனைப்பற்றிய கதைகளுக்கு முடிவில்லை இளவரசி,”

“ஆம்…அவனேதானோ…”

ஜவந்தா இங்கு வந்த நாளில் இருந்து அவனை பற்றிய கதைகள் மூலம் தகர்ந்த தன்கோட்டையை, தாய்தந்தையரை, தன்னை தனக்கே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டாள். கிருஷ்ணன் தனக்கான ஔியை ஏந்திவரும் நாளுக்கான கனவை வளர்க்க ஜவந்தாவிற்கு அந்தக்கதைகள் உதவின. அவன் அன்பால் தான் கொடிய படையெடுப்பிலிருந்து தப்பி இங்கு சேர்ந்திருப்பது எங்கோ செல்லத்தான் என்று உள்ளூர நம்பினாள்.

அன்றொருநாள் தென்னகத்து கவிஞன் பாடியபாடல் இன்னும் சுரதானியின் காதுகளில் ஒலிக்கிறது.

சுற்றி  காற்றில் கரைந்து கலந்த நீலம் அவன். புன்னகையென தொட்டு இதழ்களை விரித்து பரவிச்செல்லும் நீலம். மயிற்பீலீ ஒவ்வொருநூலாக அசையும் நித்ய தவிப்பு. தோகை விரிக்கும் மயில். இதழ் விரிக்கும் தாமரை. சிறகு விரிக்கும் பருந்து. பத்தி விரிக்கும் நாகம். கனிந்த கள்ளிக்கனி. பாளைபூத்த தென்னை. பால் பிடித்த நெல்லம்பயிர். மதலை குதப்பும் குதலை. கனவுகளை காற்றில் கட்டி எழுப்பி கலைத்தவன். மாறாத கனவென நின்றவன். பின்னால் வரும் நிழல். மலர்களில் விரியும் இதழ். தழலில் எழும் இளம் மஞ்சள். தளிரின் பசுமை. பாலின் வெண்மை. வான் நீலம். இவையனைத்துமான மால்…இவனே தான். உருவமில்லாதவற்றின் உருவம்.

பல்லக்கு குலுங்கியதும் சுரதானி அசைந்துஅமர்ந்தாள்.

அதே தான். வழக்கம்போல் ஒருநாள் வெண்ணை கலத்தை உடைத்து காணாமல் போனான் என்று அவள் மனம் சொல்லியது.

அதிகாலை வெயில் பல்லக்கின் திரைசீலைகளுக்குள் புகுந்தது. பல்லக்கு அன்றாட தேவைகளுக்காக அந்த சிறுமண்டபத்தில் இறக்கி வைக்கப்பட்டது. வியர்வைத்துளிகள் முகத்தில் அரும்ப சுரதானி கீழிறங்கினாள். எங்கோ சேவல்கூவும் ஒலி காற்றில் ஏறி வந்தது.

சுரதானிக்கு ஆடை சரிசெய்துவிட்ட ஹசன்அலி,

“தேசத்தின் எல்லைக்கு வந்துவிட்டோம் இளவரசி…”என்றாள்.

“சுடும் நிலம்…”

“ஆம் இளவரசி…”

“கதைகளில் கேட்ட நம் முன்னவர்களின் தேசங்களைப் போன்றது…”

“அல்ல இளவரசி. இது ஆறு இளவரசி…நீர் இல்லாததால் மணலாய் விரிந்திருக்கிறது…”

“நம் முன்னவர்களின் நிலத்தில் நாம் தேடியது இங்கே நமக்கு அருளப்படும்…”

“ஆம் இளவரசி…”

***

காவிரியின் மணலில் படைகள் நகர்ந்தன. சுரதானி ஆவல் பொங்க கண்களே உடலாக அமர்ந்திருந்தாள். கலம் நிறைத்த நீர் என. நுண் அசைவிலும் வழிந்துவிடும் முழுநிறைவு.

மினுங்கும் வெண்ணிற ஆடையை விரும்பி அணிந்திருந்தாள். நிலையில்லா விழிகளுடன் காவிரியின் சுடுமணலை கடந்து கொண்டிருந்தாள். அவளுக்கு முன்பே படைகள் அரங்கத்தினுள் நுழைந்திருந்தன. 

தெருவில் வந்து நின்ற சுதர்சன பட்டர்,பெருமாள்பிள்ளை போன்ற நிர்வாகிகள் மக்களை எச்சரிக்க ஆட்களை அனுப்பினார்கள்.

“அந்த பாலைநிலத்து கொள்ளைக்கூட்டம் மீண்டும் வந்துவிட்டது,”

“கொற்றவை மைந்தர்கள்…அவர்களின் கண்களில்படாமல் மறைவாக இருங்கள்…”

முன்பு நடந்த கொள்ளையிலேயே பாதி சிதிலமடைந்திருந்த அரங்கமெங்கும் கூச்சல்கள். வந்தவர்கள் எந்த அமரிக்கைகளும் செய்யாமல் நேராக கோவில்முன் சென்றார்கள். மக்கள் மெதுவாக உப்பரிகை மாடங்கள், மச்சுகளின் மறைவிடங்களில் நின்றார்கள்.

சுரதானி அரங்கத்தின் தெருக்களை வியப்புடன் பார்த்துமுடியாது பார்த்துக்கொண்டிருந்தாள். கிழக்குகோபுர வாயிலில் பல்லக்கிலிருந்து இறங்கினாள். அங்கிருந்த மக்கள் அச்சிறுமியை வைத்த விழி எடுக்காது நோக்கினர்.

பசும்பாலில் செய்தெடுத்த பதுமை என அவள் நின்றாள். அரங்கனைத்தேடி தூரதேசத்திலிருந்து ஒரு பெண் வருகிறாள் என்றார்கள். இத்தனை சிறியவளா என்று மனம் பதைத்தார்கள். அன்றும் ஒருத்தி இவ்வாறு வந்து நின்றாள். முழு அலங்காரத்துடன். இன்று  இவள் ஒரு பூத்தமல்லிகை மலரென நிற்பதைக்கண்டு அரங்கம் மனம் பதைத்தது.

உருவிய வாட்களுடன், “எங்கே…எங்கே..”என்று படைத்தளபதி ஓங்கியக்குரலில் மிரட்டினான். கோவில் காப்பவர்கள், “ நாங்கள் அறியோம். அவர்கள் இன்னும் சிலையுடன் வந்து சேரவில்லை,” என்றார்கள்.

சுரதானி அவர்களிடமிருந்து விலகி உள்ளே ஓடினாள். எட்டுத்திக்கிலும் அவள் கால்கள் பதறி அலைந்தன. முடிவிலா திசைகளில் கண்கள் பறிதவித்து சுழன்றன. கால்களை உயர்த்தி எட்டி எட்டி ஒவ்வொரு இடமாகப்பார்த்தாள்.  கலத்திலிருந்து நழுவிய நீராய் திசைஅறியாது வழித்தெரியாது அரங்கனின் ஆலயம் முழுக்க பரவினாள். சுற்றிசுற்றி வந்தவள் கால்கள் இடற படிக்கட்டு வரிசை ஒன்றில் வந்து நின்றாள். அவளுடன் வந்தவர்கள் சிதறி ஓடிவந்தனர்.

அவன் இங்கில்லை என்பதை அந்த பிஞ்சுமனம் எப்படியோ உணர்ந்து கொண்டது. முகை தொடும் தென்றல் என ஒன்று அறியாது வந்து தொட்டு இல்லை என்றது. மெதுவாக, மிக மெதுவாக காவிரி மணலிற்குள் புகும் நீரென, அவள் தளர்ந்து படிக்கட்டுகளில் அமர்ந்தாள். வரண்ட இதழ்கள் தண்ணீர் தண்ணீர் என்பதற்குள் கண்கள் சரிந்தன. வெயில் எழுந்து கொண்டிருந்தது. பிடித்து வைத்த வெண்ணெய் உருகி வழிந்து படர்வதைப்போல அந்த தூணில் சாய்ந்து அமர்ந்து தரையில் படர்ந்தாள். ஜவந்தா ஓடிவந்து தன்மடியில் தலையை தூக்கி வைத்தாள்.

“இளவரசி…”

“அவனை காணவில்லையடி. நீ சொன்னதைப்போல ஔிந்து கொண்டான்…அந்த மரத்தின் கிளைகளில் இருக்கிறானா பார்,”

“இளவரசி…இளவரசி…”

படைகளின் அரவம் கேட்டு மாமரத்தின் கிளிகள் கிச்கிச் என்று பதறி பறந்தன.

அதே வேளையில் ஏழுமலையுச்சியின் கானகத்தில்,மணிவண்ணன் சருகுப்படுக்கையில் மண்ணுக்கடியில் துயின்றான்.

***

மார்கழி பனி திரையென பரவி நிற்கும் நிலம். கார்த்திகையில் கரைபைுரளும் காவிரியின், இருகரைகளுக்கு நடுவில் அரங்கத்தை ஆள்பவன் திருமஞ்சனத்திற்காக கைலிஆடையுடன் எழுகிறான். அர்சுனமண்டப படிக்கட்டுகளில் படியேற்ற சேவைக்காக காத்திருக்கிறான். ஆலயத்தின் இரண்டாம் சுற்றின் ஈசான மூலையில் எழுதிய ஒவியமாய் சுரதானி விழிவிரித்திருக்கிறாள். அதற்கு எதிரில் கிளிமண்டபத்தில் அத்தனை அத்தனை கிளிகளும் அழைக்கும் குரல் கேட்கிறது. காலங்களை சுருட்டி அதன் மேல் சயனித்தவன் கைலி ஆடையுடன் அவளுக்காக பல்லக்கில் படியேறுகிறான். இன்றும் அரங்கம்  பதறி கொண்டு அந்தப்படிகளில் நின்று, அவனை பல்லக்கில் தூக்கி தூக்கி அவளுக்கு காட்டிக்கொண்டிருக்கிறது.

“காணாய்…சிறுபெண்ணே...காணாய்…

அவன் பெயரை ஆயிரம் முறை உச்சரித்த கிளிப்பெண்ணே…காணாய்…

அச்சுதனை காணவென்று ஆயிரமாயிரம் 

காதங்களை கடந்துவந்த கண்ணுக்கினியவளே காணாய்...

உன் கண்ணுக்கினிய மால், 

வந்து நிற்கும் வேளை இது… காணாய்,

உன் அகத்தில் விழுந்து தித்திக்கும் முதல்இனிமையை 

காணாய்…காணாய்…காணாய்…”

என்றுபாடி ஒவ்வொரு படியாக ஏறிநின்று பல்லக்கை தோள்களில் இருந்து  உயர்த்திக்காட்டினார்கள்.

படிகளுக்கு மேலிருந்த கல்பாவிய மண்டபத்தளத்தில் பட்டுப்பாவாடைகள் அணிந்த பதின்சிறுமிகள் கூடி நின்று மாலே…மாலே….மாலே… என்று அழைத்தார்கள். 

அவள் உள்ளே அமர்ந்து புன்னகைக்கிறாள்.

அவள் கருவறைக்கு வெளியே பக்கவாட்டில் கருப்பு முக்காடிட்ட பதின்பெண் ஒருத்தி கைகளில் மலருடன்,வெண்ணெய் சேர்த்த இனியஅப்பத்தை வைத்துக்கொண்டு தன்மனம் கொண்ட வேண்டுதலுக்காக வரிசையில் நிற்கிறாள். அகிலும் சந்தனமும் மணக்க அப்பப்படையல் கொண்ட அவன் அருள் வேண்டி வடக்கத்தி நாச்சியாரிடம் விண்ணப்பிக்கிறாள். கிளிகள் கிச் கிச் என்று சொல்லும் மொழி என்றுமே மாறுவதில்லை.


***






 










Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்