கடுவழித்துணை சிறுகதை தொகுப்பை முன்வைத்து எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன்

 

தமிழ்வெளி இலக்கிய காலண்டிதழில் ஜீலை மாதம் என்னுடைய கடுவழித்துணை தொகுப்பை பற்றிய கட்டுரை வெளிவந்துள்ளது. எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன் மற்றும் தமிழ்வெளி இதழிற்கு நன்றி.



மனக்கேணியின் பாதாளக்கரண்டி:

கமலதேவியின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு கடுவழித்துணை. திருச்சியை முக்கியமாக துறையூர் வட்டாரத்தை கொல்லிமலையை, பச்சைமலையை, துறையூர் திருச்சி சாலையை சார்ந்த நிலப்பரப்புகளை அதிகமும் பேசும் கதைகள் கமலதேவியுடையது. இவர் கதைகளில் வரும் கொல்லிமலையும் பெருமாள் மலையும் எங்கள் முன்னோர்களும் குலதெய்வமும் குடிகொண்ட இடம். அதே நிலத்தை சார்ந்தவள் என்ற முறையில் இந்தக் கதைகள் எனக்கு மனதுக்கு நெருக்கமாகின்றன.  மனதின் தனிமை சிடுக்கங்களில் சிக்கிக் கொண்டிருக்கும் ஏராளமான நினைவுகளை கிளற ஏதேனும் ஒரு காரணம் வேண்டும், மரணம் அவ்வாறான பாதாளக் கரண்டிகளாக இவரது பலக்கதைகளில் வருகின்றது. இந்தத் தொகுப்பில் பதினைந்து கதைகள் உள்ளன. 


எழுத்தாளர்    லாவண்யா சுந்தரராஜன்

பதினைந்தில் ஒன்பது கதைகளில் மரணத்தில் சாயல் ஏதாவது ஒருவிதத்தில் இருக்கின்றது. அம்மாவின் மரணத்தால் பழைய நினைவுகளால் அலைக்கழியும் இரண்டு பெண்களின் கதை ஜீவனம் மற்றும் மழைத்திரை. மகனை இழந்த தந்தையின் கதை, மழைக்கு பின். பிற ஆறு கதைகளில் மரணம் ஒரு கூறுபொருளாக, காட்சியாக, சடங்காக வந்து செல்கிறது. இரண்டு அல்லது மூன்று கதைகளில் இளம்வயதிலேயே தீராத வலியும் நோய்க்கூறும் கொண்ட கதை மாந்தர்கள் வருகின்றனர் அதுவும் அவர்களில் மனக்கேணியை பழைய நினைவுகளால் துழாவுகிறது. அதே போல் இன்னொரு முக்கியமான பாத்திரமாக மழை இவரது கதைகளில் வந்து போகிறது. பெரும்பாலான கதைகளில் மழையும் இன்னும் சில நீர்நிலைகளும் வந்து போகிறது. பாதாளகரண்டி, ஊற்றுகள் இரண்டும் கிணற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. 


கிராமிய சித்திரங்கள் அழகியல் ததும்ப ததும்ப குடும்பத்தில் உழலும் பெண்களின் பாடுகளையே பெரும்பாலும் பேசும் இவரது கதைகள். இந்த தொகுப்பில் அதிலிருந்து சற்றே வேறுபட்டு தொன்மக்கதையாக உள்ள கதை உயிராயுதம். சிறுவயதில் எல்லோரும் மின்னலை, இடியை சார்ந்த தொன்மக்கதைகளை கேட்டிருப்போம், இடிக்கும் போது "அர்சுனா அர்சுனா" என்று பயத்தில் சொல்லாத பால்யப் பருவத்தை கடந்தவர் நம்மில் மிகச் சொற்பமானவர்களே இருக்கக் கூடும். கமலதேவியின் கதையில் "அர்ச்சுனாவை" அழைக்கச் சொல்லும் அம்மாவும், "இந்திரன அழைக்காமல் அர்ச்சுனை கூப்பிட சொல்ற" என்று கேட்கும் புத்திசாலி மழலையும் உண்டு. அந்த தொன்ம கதையின் நீட்சியே உயிராயுதம், தன் எதிரியை அழிக்க தனது தந்தையின் உயிரை கேட்கும் உத்தம தேவேந்திரன். அவர் அசுரரை விட எங்ஙனம் சிறந்தவன் என்ற பூடக கேள்வியும் இந்தக் கதை வழி நமக்கு கடத்தப்படுகிறது. தொன்ம புராண கதைகளை கிராம மக்கள் தங்களது தினசரி வாய்வழக்கிலேயே புழங்குவார்கள். ஊற்றுகள் கதையில் மரணபடுக்கையில் பீஷ்மாச்சாரியாரின் தாகம் தணிக்க  அர்சுனன் அம்புக்கு ஊற்றெடுத்த கங்கையை பற்றிய சித்தரிப்பும், அலைவு என்றக்கதையில் சக்கரவியூகத்தில் சிக்கி தவிக்கும் அபிமன்யூவின் கூத்துகாட்சிகளும் பல சிறு சிறு தீற்றல்களாக  இவர் கதை மாந்தர்கள் கையாளுகின்றார்கள். அதன் நீட்சியாக மாயை கதையின் மையப்பாத்திரம் பாரிஜாதம். பாரிஜாதம் என்ற மலரின் பெயரே குறியீடு, பாரிஜாதம் சத்தியபாமாவின் வீட்டில் வேர் ஊன்றி, ருக்மணியின் முற்றத்தில் மலரை சொரியும். தொகுப்பின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று மாயை. மழைத்திரை கதையிலும் நல்ல தங்காள் பற்றிய கூத்து காட்சிகள் வருகின்றன.


கமலதேவியின் கதைகளில் கவித்துவ வர்ணனைகள் காட்சிகள் சித்திரங்கள் நிறைந்து கிடக்கிறன. 'சிட்டுகுருவிகளின் குளம், காலூன்றி நின்று இறைப்பதற்கான பள்ளங்கள், அதில் தேங்கிய தண்ணீர். சிட்டுகள் மூழ்கி தலையுதறி பறக்கும்" இந்த சித்திரம் எவ்வளவு அழகாக இருக்கிறது. கிணற்றடிகள் எப்போதும் நீர் இறைந்து கிடக்கும் போது இலகுவாக வழுக்குவதற்கு வாய்ப்புண்டு, அதனைத் தவிர்க்க இப்படி ஏற்பாடு இருக்கலாம், அந்த கிராமத்தில் மனித உயிர்களுக்கு சக உயிரிகள் மீதான அக்கறை புரிகிறது. ஆனால் அந்தப் பள்ளம் அதில் தேங்கிய நீரையும் அதில் தலைகுளியல் செய்யும் சிட்டுகுருவியையும் கவனிக்க மிக ஆழமான படைப்பு மனம் வேண்டும். இதே போல வேறு சில காட்சிகள் கதைசொல்லியின் உணர்வை கடத்த உதவுகின்றன. 'மைதானத்தில் மழைப்பெய்து ஏற்படுத்திய சிறுசிறு பள்ளங்களில் நிறைந்த கண்கள் என நீர் தேங்கியிருந்தது' புத்திர சோகத்தில் இருப்பவனுக்கு மழை பெய்த இடம் வேறு என்ன உணர்வை தந்துவிட முடியும். அதே போல எம் ஆர் ஐ எடுக்க கிளம்பும் கதைசொல்லிக்கு அது எடுக்கும் முன் இருக்கும் பதட்டத்தை உக்கிர விநாயகரை விளக்குவதில், எம் ஆர் ஐ எடுத்து வெளியே வரும் போது சாந்தமான பிள்ளையாரின் எட்டுவயது பிள்ளை கண்கள் நினைவுக்கு வருவதும் அதே போலொரு நிகழ்வுகள்.

 'பந்தலின் தென்னங்கீற்றுப் பின்னல் இடைவெளிகள் சூரிய வெளிச்சத்தால் வாசலில் ஒரு விரிப்பை நெய்திருந்தன' என்ற வரிகளில் வெயில் புள்ளிகளைப் பற்றிய விவரணைகளும் வருகிறது.


கமலதேவியின் கதைகளில் கால்நடைகள் வீட்டின் உறுப்பினர்கள் போல வந்து போகின்றன. தொகுப்பின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றான "மூள் தீ" என்ற சிறுகதையில் பசுமாட்டின் பல்வேறு குணங்கள் வருகின்றன. அந்த கதையில் வரும் பசுமாடு தீயில் மாட்டிக் கொண்டு சாக கிடக்கும் போது பெரியசாமி தாத்தாவுக்கும் இழந்த தன் முன்னால் மனைவியே கண்ணுக்கு தெரிகிறாள்.  ஜீவனம் என்ற கதை அம்மாவை இழந்து துயர் கொள்ளும் நித்யாவின் சோகத்துக்கு சற்றும் குறைந்தது அல்ல. அவர் வீட்டு மாடு நித்யாவின் அம்மாவை தேடுவதும். ஊற்றுகள் கதையில் நிலத்தைத் தோண்டும் போர் வண்டிகளுக்கு பயம் கொள்ளும் ஆடுகளும் "நான் இருக்கும் போது என்ன பயம் உனக்கு?" என்று கேட்கும் வெள்ளையம்மாவுக்கு அவள் மனிதர்களோடு கொண்ட உறவுக்கு சற்றும் குறைந்தது அல்ல அந்த கால்நடைகளோடு கொண்ட உறவு.


கமலதேவியின் கதைகளின் சிறப்பம்சம் என்று சொல்ல வேண்டுமென்றால் கதையின் முக்கிய முடிச்சு என்ற சித்திரத்தை முழுதாக வரையாமல் சில கோடுகளை வரைந்து சிலதை வரையாமலும் விடுவது என்று சொல்லலாம். ஜீவனம் கதையில் அம்மாவின் இழப்புக்கு பின்னர் அம்மாவைச் சார்ந்த நினைவுகளில் அலைவுறும் நித்யா தனது அப்பாவின் இறப்பும் அதற்கு பின்னர் இறுக்கமாய் அப்பாவின் நினைவுகளை மறுக்கும் அம்மாவின் நிலைபாடு ஒரு ஊகத்துக்கு விடும்படி சில வரிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக வைத்திருக்கிறார். அப்படி நித்யாவின் பெற்றோரிடையே நிகழ்ந்த பிரச்சனை என்ன என்பதை உடைத்து சொல்லாமல் வாகச கற்பனைக்கு விட்டதே அந்த கதையின் பலம். அதே போலவே அலைவு கதையில் கண்ணன் குடிப்பழக்கத்துக்கு ஏன் ஆளானான் அவன் மேல் கொள்ளை பிரியம் கொண்ட அத்தை அவனை எதற்கு வெறுக்கிறாள் என்பதை சொல்லாமல் விட்டது ஓரு வாசக உரையாடலுக்கு இடம் விட்டு எழுதப்பட்டது என்று சொல்லலாம். சில கதைகளில் சில உண்மைகளை சொல்ல வேண்டுமென்பதற்காக கதைக்கு தேவையில்லாத காட்சிகளும் உண்டு, மாயை கதையில் ரகுராமனின் மகன் “இன்னிக்கி உறவு முறம்பிங்க, நாளைக்கு சின்னதா ஏதாவதுன்ன அவன் யாரும்பிங்க” என்ற இடம் ஜாதியை சுட்டுவதற்காக திணிக்கப்பட்டது போலிருக்கிறது.


கமலதேவியின் கதைகளில் பெண்ணியம் மிக அடக்கமாக எழுதப்பட்டிருக்கிறது “அம்மா என்னை நெஞ்சில போட்டு வளத்தாங்க. அது எப்படிங்க உங்களை கட்டினதும் முப்பது நாள் கூட துக்கமில்லைன்னு ஆயிடுமா” என்ற குரல் ஓங்கி ஒலிப்பதில்லை. ஆனால் இந்தக் கேள்வி தந்தைவழி மரபில் வந்த நம் சமூத்தின் கோட்டுபாடுகளை நோக்கி எழுப்பப்பட்ட ஆழமான கேள்வி. தொகுப்பில் மிக சிறந்த கதைகளில் ஒன்றான “மாயை” சிவராசு பெண்ணிய பிரதிநிதியாக இருக்கிறார். மனைவியின் முன்னாள் காதலனிடம் அவளுக்கு இருக்கும் பிரேமையை மதிக்கிறான். கொஞ்சம் மிகையான கற்பனையென்றாலும் படிக்க அவ்வளவு இன்பமாக இருக்கிறது. அதே போல ஏதோ சிட்டுக்குருவி ஒரு கிளையின்று அடுத்த கிளைக்கு கிளையை அசைக்காமல் பறப்பது போல “காதல் தோல்வி நல்ல முதலீடு தானே” என்று அலுங்காமல் கேட்கிறார். சமூகத்தின் மீதான அக்கறை சிறப்பான மாணவர்களை எதிர்கால பிரஜைகளை உருவாக்க வேண்டும் என்ற கருத்தாக்கத்தை வலியுறுத்தும் ஒருகதை “முதல் துளி” ஏட்டு கல்வியை விட அனுபவ கல்வி, தொழில் சார் கல்வியின் தேவையை பூடகமாய் உணர்த்தும் கதை. முதிர்கன்னியின் சிக்கலை இதுவரை சொல்லப்படாத ஒரு கோணத்தில் சித்தரிக்கும் கதை சீதா. இந்த கதையிலும் மைய சிக்கலுக்கான காரணம் வாசக ஊகத்துக்கு விடப்பட்டிருக்கிறது. 


இவர் கதைகளில் ஒட்டு மொத்த கட்டமைப்பும் சகசமூக செயல்களிலிருந்து விலகிய தனிமையை தீராமல் துய்க்கும் கதாபாத்திரங்களாக திகழ்கின்றன. மாயையின் பாரிஜாதம், கடுவழித் துணையின் நந்தினி, சீதாவின் சீதா, மழைத்திரையின் சாந்தி, மழைக்கு பின்னின் வெங்கட்ராமன், அலைவின் கண்ணன் ஏன் இந்த தொகுப்பின் பதினைந்து கதைகளிலிருந்துமே இது போன்ற கதாப் பாத்திரங்களை சுட்டிவிட முடியும். எல்லாமே தனிமையின் பிரதிநிதிகளாக தனக்குள் ஒடுங்கியவர்களாக இருக்கின்றனர். காரணம் எதுவாயினும் இவர் கதைமாந்தர்கள் யாருமே உரத்து பேசுவதில்லை. எல்லோரும் மென்மையான சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். இவரது கதைகள் எதுவும் எதிர்மறை(nagative waves) கருத்துகளை பேசுவதில்லை. ஆயினும் வாழ்க்கைக் கொண்டாட்டதுக்குரியது என்றும் சொல்லாத எதார்த்தவாத பிரதிகளாக திகழ்கின்றன. இவர் கதைமாந்தர் யாருமே கோடூரர்கள் இல்லை. நிஜவாழ்வின் கிராம மண்ணோடு கலந்த தூயக்காற்றை சுவாசிக்கும் நாயகர்கள். யாருமே பொல்லாதவர்கள் இல்லை. இப்படி எழுத மிக நல்லமனம் வேண்டும்.  கமலதேவிக்கு அப்படியான மனம் வாய்த்திருக்கிறது. அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் கடுவழித்துணை.


Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்