ஒன்றெக்கலத்தல்

       காலச்சுவடு ஜீன் இதழில் வெளியான கதை. ஓவியம் :காலச்சுவடு.

                                                      ஒன்றெனக்கலத்தல்



குருவாயி கோவிலின் முன்னால் கிளைபிரிந்த அய்யாற்றில் தண்ணீர் சுழித்துக்கொண்டு பாய்ந்தது. ஆற்றின் சீறல் ஓசை தொலைவு வரை கேட்டது. எங்கும் புங்கைகள் கிளைநீட்டி தடித்து வளர்ந்திருந்தன. மழை கழுவிய கரும்பச்சை இலைகள் சூரிய ஔியில் மினுமினுத்து அசைந்தன. 

ஆற்றின் அக்கரையில் சிவப்பு நிறத்துணி அசையும் மங்கலாய் குருவாயி தெரிகிறாள். இக்கரையில் புளியம், மா, பலா பெருமரங்கள் நின்ற அடிவாரப்பகுதியை அடுத்து அய்யாற்றின் அடுத்தக்கிளை. அதைஅடுத்த காட்டிலிருந்து கொல்லிமலை ஏற்றம்.

சற்று நேரம் நின்ற காளங்கன் நான்கு ஆட்கள் சேர்ந்தாலும் கட்டிப்பிடிக்க முடியாத புளியமரத்தின் மழைஈர வேர்ப்புடைப்பில் அமர்ந்தார். அவர் முன்பு விரிந்த இடத்தில் முன்பு இருந்த அதே அளவுள்ள மாமரங்களை, புளியமரங்களை வெட்டி தோண்டி எடுத்தப்பள்ளங்களை நிரப்பியிருந்தார்கள்.

எப்போதும் அரையிருள் சூழ்ந்திருக்கும் அந்தஇடம் இன்று பார்க்க பளிச்சென்று கண்களை கூசியது. ‘ஆ’ வென்று வாயைப்பிளந்த பெருமிருகத்தின் வாய் என அந்த இடம் மட்டும் வானத்தைப் பார்த்திருந்தது. கோயிலை ஓட்டியிருந்த ஓரறைவீட்டிலிருந்து பூசாரி தங்கவேலு சிவப்புவேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பாலத்தைக்கடந்து அருகில் வந்தார். 

“வாங்கய்யா…வெயிலும் மழையும் முறுக்கிக்கிட்டு நானா நீயான்னு நிக்கிது.  ஆத்துல தண்ணியப்பாத்தீங்கல்ல…தனியாவா வந்தீங்க?”

“தனியாதான் வந்தேன்…மலையக்கொடஞ்சு அணைக்கட்டுறானுங்களாமே முடிச்சுட்டானுங்களா?”

“வேல நடந்துட்டே இருக்கு,”

“போற வழியெல்லாம் இந்த நாசந்தானா?” என்றபடி வெறிச்சோடிய இடத்தைப்பார்த்தார்.

“என்னய்யா பண்றது…தடுப்பணை கட்டுனா நமக்கு நல்லதுதானுங்களே…”

“மடப்பயலே…இங்க எதுக்குடா? நானூறு வயசு மரத்தையெல்லாம் சாச்சு தள்ளிப்புட்டு…இதெல்லாம் குருவாயிக்குன்னு உண்டான மரங்களாக்கும். நீயெல்லாம் எதுக்கு பூசாரின்னு இருக்க. வாங்கித்திங்கவா?”

“ஆயுசுக்கும் விவசாயம் பாத்தவங்க நீங்க... சித்திரமாசத்துல காஞ்சு தீஞ்சு போகுதுல்ல…” 

“ஆமா…அப்பவும் நட்டு வளத்து வித்து காசாக்கனுமா? மண்ணு ஒரு மூணுமாசத்துக்கு செவனேன்னு படுத்து எந்திரிக்கப்படாதா… ஒட்ட கரந்து எடுத்துப்புடனும். நீயும் பொட்டப் பிள்ளைய பெத்தவன் தானடா. கைத்தொட்டு, கிண்டி, கொத்தி, கோதி பண்டுவம் பாத்தெடுக்கற மண்ணு…”

இனிமேல் இவரிடம் பேச முடியாது என்று நினைத்த தங்கவேலு அமைதியானார்.

“எதுலேயும் நியாயம் வேணும்ய்யா தங்கம்,”

“காத்தால வயித்துக்கு போட்டீங்களா…”

“அதுக்கென்ன கேடு. குருவாயி கால்ல கெடந்து உசுர மாச்சுக்க வந்திருக்கேன்…”

“வூட்லருந்து கோவமா வந்துருக்கீய போலயே…வாங்க அம்மாவ கும்பிட்டுட்டு அங்க இருக்கலாம்,”

“அவ அங்க எங்கடா இருக்கா? இங்கல்ல இருக்கா…”

“சரிங்கய்யா…” என்ற பூசாரி விழித்தபடி சுற்றும் முற்றும் பார்த்தார். இன்றைக்குப் பார்த்து ஒருஆள் நடமாட்டம் கூட இல்லை.

“ஆத்தாளுக்கு ஆக்கறதுதான் எனக்கும். கொஞ்சூண்டு சோறு திங்கிறீயளா…சும்மா ஒருகை…ஆத்தாசோறு,”

“வேணாண்டா…நான் இப்படியே கெடந்து சாவுறேன்…”

“சும்மா அதையே சொல்லாதீங்கய்யா…தா வந்தறேன்….” என்றுபடி பெரிய பலா மரத்தை சுற்றிக்கொண்டு பெரியவருக்கு காதுகேட்காத தூரத்திற்கு தள்ளி சென்றார். அலைபேசியை கால்சட்டை பையிலிருந்து எடுத்தார்.

காளங்கன் கோவிலைப்பார்த்து பேசத்தொடங்கினார். எந்தங்கப்பிள்ளை…வா தங்கம். இந்த அப்பன தெரியிலையாம்மா. வாடீ எந்தங்க சொப்பு மவளே…

மழை நனைத்த நிலம் நனைந்து ஊறி பதமாகக்கிடந்தது. காய்ந்து, படிந்து, சிதைந்த காட்டின் சருகுகளை ஈரத்துடன் சேர்த்து தனதாக்கிக்கொண்டு குழைந்திருந்தது மண். அடியில் காத்திருந்த விதைகள் அதன் உயிர்சாற்றில் ஊறித் திளைக்கும் காலம். நிலம் விரிந்திருந்தாள். தன்னை கிழிக்கவும், தன்னுள் கால்ஊன்றி நின்று எழவும், தன்னை உறிஞ்சிக்குடிக்கவும், தன்னை உருமாற்றி எடுத்துக்கொள்ளவும் ஈரமாகி குழைவாகி பூரித்துக் கிடந்தாள். தலையை மரத்தில் சாய்த்தபடி நெடுநேரம் நிலத்தையே பார்த்துக்கொண்டிருந்த காளங்கனின் கண்கள் ஈரமாகின. 

நிமிர்ந்து கோவிலைப்பார்த்து வலதுகையை எடுத்து நெஞ்சில் வைத்து இந்த ஒடம்பு, இந்த பேச்சு, இந்த நெனப்பு உன்னாலதானே நீயே எடுத்துக்க. நானறியாத பாட்டன் பூட்டன் காலத்துல பூத்து மணந்து நின்ன நீ. உன்ன… சிதைச்சு சின்னா பின்னமாக்கி கோயில்ல நிறுத்திட்டானுங்க என்றப்பின் அமைதியானார்.

குனிந்து ஈரமண்ணைத்தொட்டார். விரல்களைப்பதித்து கைநிறைய அள்ளினார். இருக்கைகளாலும் பொத்தி வைத்தபடி நான் என்ன செய்வேன் ராசாத்தி… மனுசப்பயலா போயிட்டனே. எனக்கு எதுக்கு ‘காட்சி கொடுத்து’ வதைச்சு எடுக்கற. என்னைய உன்னோட சேத்துரு. இந்த நெஞ்சு பாறைத்தட்டி நிக்குதுத்தா. உன்னோட குழச்சு சேத்து பிசைஞ்சு இல்லாம ஆக்கிட்டா இந்த வேதனை இல்ல. வா சீக்கிரம்.

பாட்டா ஒருவாரமாக புலம்பிக்கொண்டிருந்தார். உறக்கத்தில் இருந்திருந்தாற் போல “ம்மா…” என்று விதிர்த்து எழுந்தார். இன்றைக்கு அதிகாலையில் அனைவரும் கண்அசந்த நேரத்தில் எங்கேயோ கிளம்பிவிட்டார்.

சுரேஷ் ஹீரோஹோண்டா ஸ்ப்லண்டரில் தயங்கி தயங்கி நின்று ஒவ்வொரு மரத்தடியாக, வயல்களமாக, வாய்க்கால், வரப்பாக பார்த்துக்கொண்டே வந்தான். கடந்து சென்ற காளியை கைக்காட்டி நிறுத்தினான்.

“இந்தப்பக்கம் நம்மபாட்டனார பாத்தீங்களா?”

“இல்லய்யா…இந்த வழியா போயிருந்தாலும் நேராவா போவாரு. அவரு வய வரப்பு ஓடையில தடம் வச்சவராச்சே…”

“ஆமாங்கய்யா…பாக்கறேன்…”

“உங்க வூட்ல ஒரே சச்சரவாக் கெடக்காமே? பள்ளத்துக்கு இழுத்தா மேட்டுக்கும், மேட்டுக்கிழுத்தா பள்ளத்துக்கும் இழுக்கற ஆளு உங்கய்யன். நீ பாத்து சரிக்கட்டு. வூட்டு சச்சரவு ஓடம்புக்கு கேடு,”

தலையாட்டியபடி வண்டியை முறுக்கினான்.

பாட்டாவின் இரத்தக்கொதிப்பிற்கான மாத்திரை இருக்கிறதா? என சட்டைப்பையை தொட்டுப் பார்த்துக்கொண்டான். குனிந்து வேட்டி முனையை இழுத்து, வியர்த்து கசகசத்த கழுத்துப்பகுதியை ஒருக்கையால் துடைத்தான். மீண்டும் சட்டைக்குள் வியர்வை பொங்கி நனைத்தது.

அவனுடைய அலைபேசி அழைத்து அழைத்து ஓய்ந்துகொண்டிருந்தது. அதை எடுத்து நெல்லங்காட்டில் வீசிவிட வேண்டும் என்று ஆத்திரமாக வந்தது. இது கையில் இருப்பதால் தான் இந்தப்பிள்ளை எந்தநேரமும் அதிகாரம் பண்ணுது என்று அலைபேசியை நிறுத்தி வண்டியின் முன் பையில் வைத்து மூடினான்.

ராசுவயலின் பெரிய மாமரம் கவிழ்ந்து தரைத்தொட்டு இருட்டை தேக்கியிருந்தது. ஏதோ சலனம் தெரிய வண்டியை நிறுத்தி இறங்கினான். அருகில் சென்றதும் சக்தியும் ராமுவும் அமர்ந்திருப்பது புலப்பட்டது.  

“என்னடா இந்தப்பக்கம்..வாடா…” என்றார்கள்.

“அவரு வரமாட்டாரு…காளங்கருக்கு பேரனாக்கும்,”

“காளங்கன்னா என்ன? களங்கமில்லாதவரா…” என்று ராமு குரலை இறக்கி கிண்டலாக கூறினான்.

“நீ வேற…கலங்கல்ல தெளிஞ்சது…இந்தமாதிரி…”என்று கைகளில் இருந்த டம்ளரை காட்டி சக்தி சிரித்தான்.

“போதுண்டா…அவன் போனப்புறம் பேசிக்கலாம்…”

“ஏண்டா நீங்க வேற. அவரை காணும்ன்னு தேடிட்டிருக்கேன். மனசு பதைக்குது. எங்கப்போனாறோ…நீங்க யாரும் பாத்தீங்களா…”

“எந்த வரப்புல ஓடையில இறங்கியிருக்காரோ…”

சுரேஷ் கீழே பார்த்து காலைஎடுத்து வைத்து வண்டியை நோக்கி நடந்தான்.

“பாட்டிலை ஒடச்சு போட்டுருக்கீங்க. குத்தப்போகுது…”என்றவாறு வண்டியை முடுக்கினான்.

“போ…போ எங்களுக்குத்தெரியும். குத்துனா செத்தாபூடுவாங்க…”என்று ராமு சக்தியின் தோள்களில் அடித்தான்.

வழியெங்கும் ஆளரவம் குறைவான இடங்களில் எல்லாம் கண்ணாடி சில்லுகள் சிறு சிறுகத்திகள் போல ஔிர்ந்து கிடக்கின்றன. பாட்டா எங்கேயாவது தடுமாறி கண்ணாடிகள் கால்களின் கிழித்திருந்தால்? என்று மனசு பறந்தது. எல்லாம் அப்பாவால்தான். எதையும் நிதானித்து செய்கிறாரா? பாட்டாவை தொலைஞ்சுப்போகட்டும் என்று சொல்கிறாரே என்ன மனுசன்!

வீட்டில் இருப்பவர்கள்  மனதிற்கு ஒத்துக்கொள்ளாமல் அதுவும் பாட்டாவிற்கு இவ்வளவு மனசங்கடங்கள் இருக்கும் போது சாலையோரத்து வயலை விற்க வேண்டும் என்கிறார்.

வயல்கரை வேப்பமரம் ,குட்டிஆலமரம், ஊமைப்பிடாரி ஆலமர நிழல் என்று நின்று நின்று வண்டி நகர்ந்தது. இவ்வளவு தூரத்திற்கு மேல் பாட்டாவால் நடந்திருக்க முடியுமா என்று யோசனையாக இருந்தது.

பெருமூச்சுடன் வண்டியை நிறுத்தினான். அலைபேசியை எடுத்து இயக்கினான். இடதுபுறம் வயலை உழுது, தழை வெட்டிப்போட்டு மிதித்து தண்ணீர் தேக்கியிருந்தார்கள். தண்ணீர் படலம் அங்கங்கே நுறைத்தும் தெளிந்தும் நின்றது. தன்பக்கத்து வயல்காரரான மணியை அழைத்தான்.

“மணி…பாட்டா கோவிச்சுக்கிட்டு கெளம்பிட்டாரு. விடியவே இருந்து நாலு திசையிலையும் தேடிக்கிட்டு இருக்கேன்… நம்ம வயலுக்கு தண்ணிதேக்கி விடறீயா? செவலைய அவுத்து தண்ணிகாட்டனும். களத்தோரமா நெழலா பாத்துக்கட்டு. பசித்தாங்காது. அதுபாட்டுக்கு மேயும். வந்துருவேன்,”

“செஞ்சுறலாம்…நீ பாத்துட்டு வாடா,”

வயல் நீரில் சிவப்பு  நிற வரைதல்கள் நீண்டு குழைந்திருந்தன. சுழித்தும்,நீள்கோடுகளாகவும், காற்றில் கலைந்து சிவந்தநிறமாகவும் மிதந்தன. ‘மண்ணு ருதுவாயிருச்சுடா…வயவேலைக்கு ஆளக்கூப்புடு ’ என்ற பாட்டாவின் பரவசக்குரல் காதுகளில் கேட்டது. தானாகக் கலங்கும் கண்களை ‘சை…அடங்கியிரு’ என்று மிரட்டியப்பின் வண்டியிலிருந்து இறங்கினான். 

பாதைஓரமாக வரப்பில் கையை ஊன்றி சேற்றில் தெளிந்தநீரை அள்ளினான். வயலில் இருந்து எழுந்த மெல்லிய வெம்மை முகத்தில் பரவியது. சிவப்பு கலங்கி இல்லாமலானது. கண்களை துடைத்தபடி வாய்த்திறந்து ‘ரைசோபியம்!’என்றபடி முகர்ந்துப் பார்த்தான். ‘பிங்க் கலர் ட்யூ டு த ப்ரசன்ஸ் ஆஃப் லெக்ஹீமோகுளோபின்’ என்று மனதிற்குள் ஓடியது. வாய்க்காலில் கைகளை கழுவிவிட்டு வண்டியில் ஏறினான்.

சங்கீதா நிறையமுறை அழைத்திருந்ததை அப்போதுதான் கவனித்தான். எதுக்கு இந்தப்பிள்ளை இத்தனை தடவை… என்று நினைக்கும்போதே நெஞ்சின் சத்தம் எகிறியது.

“எதுக்கு இந்தநேரத்துல செல்லை ஸ்விச் ஆஃப் பண்ணியிருக்கீங்க,”

“சரி…சரி…என்ன?”

“உங்களுக்குதான் எதுன்னாலும் மனசு பதறாது…எல்லாரும் அப்படியா…”

“சரிம்மா…என்னன்னு சொல்லு…”

“தாத்தா…குருவாயிகோவில் சந்தையில ஒக்காந்திருக்காங்களாம். கோவில் பூசாரி அண்ணன் கால் பண்ணினாரு. அவருக்கு என்னங்க அவ்வளவு கோவம். எனக்கு இங்க பள்ளிக்கூடத்துல பாடம் நடத்த முடியல தெரியுமா? உங்கம்மா ஊரே தேடிட்டு திண்ணையில கெடக்கறாங்கன்னு மஞ்சு கால் பண்ணி சொல்றா. உங்கப்பா கெளம்பி கொத்தம்பட்டி கோவிலுக்கு நிலத்தை விக்கிறதுக்கு குறிக்கேக்க போயிட்டாரு. காலையில இருந்து நீங்க எங்க இருக்கீங்க? என்ன பண்றீங்க?”

“அம்மாக்கூட மஞ்சு இருக்கா? சரி. பெரும்பாதையிலதான் நிக்கறேன்…பத்துநிமிசத்துல கோவிலுக்கு போயிருவேன். நான் பாத்துக்கறேன். பதறாத…சரியா…”

“ம்,”

“ சாப்டியா?”

“இல்ல…”

“என்ன இது…அப்புறம் எப்படி பாடம் நடத்தமுடியும்…”

“தாத்தா சாப்பிடல்ல…”  என்றவள் குரல் கரகரத்து அமைதியானது.

“சரி…அழாத. பாட்டாவைப் பாத்துட்டு உன்கிட்ட பேசறேன்…” என்று அலைபேசியை வைத்துவிட்டு மூச்சை இழுத்துவிட்டான். வேட்டியை எடுத்துமுகத்தை துடைத்தவன் மீண்டும் அலைபேசியை எடுத்தான். வண்டியை கால்களால் உந்தி வயல்பக்கமாக சென்று உற்றுப்பார்த்தபடி பேசினான்.

“சுப்பு… சுரேஷ் பேசறேன்…கடையில தானே இருக்க,”

“ஆமா...”

“சங்கீதா காலையில சாப்பிடாம ஸ்கூலுக்கு வந்துட்டாங்க. டீயும் பன்னும் போய் குடுத்து சாப்பிட சொல்றியா,”

“சரிண்ணே…”

“கடையப் பாத்துக்க பையன் இருக்கான் தானே…”

“அதுக்கென்ன…கூடவே இருந்து காலி டம்ளர வாங்கியாறேன்…”

“சரிடா..தேங்ஸ்..”

“என்னன்ணே…நீ போனை வையி. அண்ணி பசியா இருப்பாங்க…”

எதிர்வந்த காற்று உடலை குளிர்வித்து கடந்து சென்றது. ஒற்றைக்கையால் சட்டைக் காலரை பின்னால் இழுத்துவிட்டுக்கொண்டான். தலைமுடியை ஒழுங்குபடுத்திக்கொண்டபோது ஆற்றின் ஓசை காதுகளை அறைந்தது.

குருவாயி கோவில் பாலத்திற்கு முன்னால் சந்தை வெறிச்சோடிக்கிடந்தது. கரோனா அனைத்தையும் அமைதியாக்கி திருப்பி அளித்துக்கொண்டிருக்கிறது. சிறுவனாக இருக்கும் போது இந்த இடத்தை இத்தனை அமைதியாகப் பார்த்தது நினைவில் வந்தது. பெரும் ராட்சத மரங்கள் நிறைந்து நின்று எந்நேரமும் குளிரும் இடமாக, ஆட்கள் இல்லாமல் ஆற்றின் ஓசையும், இலைகளின் சலசலப்பும் கேட்கும் இடமாக இருந்தது. 

செவ்வாய்க்கிழமை மட்டும் சந்தைக்கூடும். மலைக்கொய்யா, வாழை பாலாப்பழங்கள், மூங்கில்களில் அடைத்த தேன் என்று அப்பாவி சிரிப்புடன் மலையர்கள் அமர்ந்திருப்பார்கள். இந்த பத்து ஆண்டுகளில் எத்தனை மாற்றம். அவர்களெல்லாம் எங்கோ காணாமல் போய்விட்டார்கள். 

இப்பொழுதெல்லாம் எந்தநாளும் கும்பல்கும்பலாய் இங்கு வந்து தங்களின்விடுமுறை கழிப்பிடமாக இதை மாற்றிவிட்டார்கள். இன்று மீண்டும் அந்தபழைய சோலைக்காடு கண்முன்னே எழுகிறது. பெருமரங்கள் இல்லாமல் தெய்வங்கள் இல்லாத கோயில் போல கிடக்கிறது. சுற்றிலும் மரங்களின் பச்சை அலையடிக்கிறது. செருப்பை கழட்டிவிட வேண்டும் என்று தோன்றியதும் செருப்பை உதறிவிட்டான்.

அடிமரத்தின் பின்பக்கம் பாட்டாவின் துண்டு தெரிந்தது. நல்ல கருத்த மனிதர். உயரம் வேறு. பழுப்பான வெள்ளை வேட்டி சட்டையில் சிலைபோல இருப்பார். அருகில் செல்லச்செல்ல துண்டுமட்டும் அசைவதைக்கண்டு மனம் பதற பாட்டா என்று கத்தி அழைத்தான். கோவிலினுள்ளிருந்து பூசாரி ஓடிவந்தார்.

வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு வேகமாக ஓடினான். துண்டுமட்டும் பிளந்துகிடந்த புளியமரப்பட்டையில் சிக்கி அசைந்து கொண்டிருந்தது.

“என்னங்க தம்பி…அய்யாவைக்காணும்…இப்பதான் பூசைப்பண்ணலான்னு அந்தட்டம் போனேன்…”

இருவரும் சுற்றிசுற்றி அழைத்தபடி ஓடினார்கள். அரைமணி நேரம் கழித்து சுரேஷ் மூச்சுவாங்க அதே மரத்தடியில் வந்து அமர்ந்தான். நேற்று இரவு பாட்டாவிடம் பேசிக்கொண்டிருந்தது நினைவில் வந்தது.

“இத்தன சொன்னப்பிறவும் உங்கப்பன் நெலத்த விக்கனுங்கறானா?”

“ஆமா பாட்டா…”

“வெளயற நெலத்த விக்கற அளவுக்கு வீட்ல என்னா பணமுடை? எனக்கு தெரியாம எதாச்சும் இருந்தா சொல்லிப்புடு. எம்மவ மேல ஆணையா சொல்லனும்,”

“ஒன்னும் இல்ல தாத்தா…”

“வெளையற நெலத்த உசுருக்கும், மானத்துக்கும் பங்கம் வந்தா விக்கலாம் தப்பில்ல…”

“அந்தகாலத்துப்பேச்சையே திரும்பத்திரும்ப பேசாத பாட்டா. நாலு தொழில் இருந்தாத்தான் முன்னேற முடியும்,”

 “இனிமே என்ன பாக்கனும்…எதுக்கு எனக்கு இத்தன ஆயுசு…நா  போறேன்,”

“போய்த்தொலையாம…நச்சு நச்சுன்னு. எதையாச்சும் தொடங்கறப்ப இப்படி பேசுனா வெளங்குமா. பிள்ளைங்க பொழச்சு முன்னுக்கு வரனுன்னு எண்ணமிருக்கா பாரு...”என்றப்பின் அப்பா வார்த்தையை விட்டார்.

“வாயமூடுங்கப்பா. நம்ம வீட்டுக்கு கல்யாணம்பண்ணி வந்த பொண்ணுங்க முன்னாடி என்ன பேசறீங்க நீங்க?”என்றான். அம்மாவும் சங்கீதாவும் உள்ளே சென்றுவிட்டார்கள்.

“ஆமாண்டா பயலே…ஒரு சொல்லு வெல்லும்…ஒரு சொல்லு கொல்லும்டா சாமி. போருக்கு போற ராஜனுக்கு சொல்றது இது. அவனோட ஒரு சொல்லுக்கு படை வெல்லும். மறு சொல் எதிரி வீரனை கொல்லுமாம். சாதாரண மனுசனுக்கு வேற வெளக்கம்ய்யா. போய்ப்படு,”

கட்டிலில்படுத்திருந்த அவர் கால்களுக்கு அடியில் நெடுநேரமாக அமர்ந்திருந்த அவன் தோளைத்தட்டி , “பேத்தி தூங்காம இருக்கும் போடா,” என்றுஅனுப்பினார்.

மரத்தடியிலிருந்து பாட்டாவின் துண்டுடன் எழுந்த சுரேஷ் மலையை பார்த்துக்கொண்டு நின்றான். ஆயிரமாயிரம் ஜீவராசிகளை தன்னுள் பதுக்கி நிற்கும் மலையின் செறிவு பேரமைதியுடன் இருந்தது.










Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்