Skip to main content

சிறுகதை

சக்யை



ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்  பாடி பள்ளியெழுச்சி கொள்ள அவன் அரங்கத்தில் இல்லை.இன்று தேய்பிறை ஆறாம்நாள்..மூன்றாம்நாள் சந்திவேளையில் மணிவெளிச்சத்தோடு மாதவனும் மறைந்துவிட்டான்.அரங்கனில்லா அரங்கம் .

“மனம்கொள் மாதவனே எழுந்தருள்வாய்

தனம்உறை மார்பனுக்கு மங்களம்”

என மனதினுள் ஒலிக்க வெள்ளையம்மாள், செங்கரையிட்ட வெண்பட்டு புறத்தே ஒலிக்க கரவுவழியின் இருளில் தோழியின் கைவிளக்கு வழிகாட்ட நடந்து அந்த கருங்கல் அரங்ககினுள் நுழைந்தாள்.புலரிமென்னொளி சாளரத்தின் வழி மூங்கில்களென  சரிந்திருந்தன.

விரிக்கப்பட்ட நாணல்பாய்களில் அரங்கத்தின் காவலர்களும் ,அரங்கனுக்கு உரிமையானவர்களும் வந்து அமர்ந்தபடியிருந்தார்கள்.மேற்குநோக்கியிருந்த பாயில் வெள்ளைம்மாள் அமர ,தோழி தூணின் பின்னால் நின்று கொண்டாள்.

தனியள் என்ற எண்ணம் வெள்ளையம்மாளை நிலையழிக்க விழிகளைச் சுழற்றினாள்.கண்ணசைக்கையிலேயே ஓடிவரும் இவன் ...அன்று களித்தோழனான அவனே என அவள் நெஞ்சம் மயங்கியது.

மெல்லியதோள்கள் ,செவிப்புற மென்கன்னத்து இள மயிர்கள்,செப்பு உதடுகள்…என்று அவள் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மடியிலமர்ந்து கொண்டான்.கரங்களை அவன் மார்பின் குறுக்காக வைத்தாள்.ஒருமுறை சிலிர்த்து ஏற்றுக்கொண்டான்.அவன் கண்கள் செல்லும் திசை பார்த்தாள்.

அச்சுதன்.......!!அவள்  மடியிலிரும் மைந்தனை அழைத்த அச்சு, அவளைக்கண்டதும் வேறுபுறம் திரும்பிக்கொண்டான்.

“பெற்றவனைப்போல் பிள்ளை..” என்ற மணிவண்ணனை நோக்கி வழிகளை விரித்த அச்சுதன், “என்னத்துக்கு இந்தவேளையில இங்க நிக்கறோன்னு நெஞ்சில இருக்கா?” என்றான்.

“சிறுபிள்ள இங்க என்னதுக்கு?” 

“காலப்பிடிச்சுண்டு கத்தினா என்னபண்றது?”

“பாடுங்கோ மாமி ..”என்ற இளையஅச்சு வெள்ளயம்மாளின் வளைகளை ஆட்டினான்.தென்றலின் தொடுகை பாடவைத்தது.

“தருதுயர் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை”...என்று அவள்பாட அங்கிருந்த கண்களெல்லாம் பனித்துக் கொண்டிருக்கையில் உள்ளேநுழைந்த சுதர்சனபட்டர் ,

“இப்ப நிலையும் இதானே...கால்லவிழக்கூட ரெங்கன் இங்கில்ல”என்றவுடன் அவ்வரங்கம் விம்மியது.

“போரும்..கண்ணகசக்கினதெல்லாம்.... உலூக்கான் போயென்ன தளபதி சீவிட்டேயிருக்கான்.அரங்கம் சுடுகாடா போவுதே ..என்ன பண்ண” அமைதியை கலைக்கவில்லை அவை.ஆள் துலங்கும் வெளிச்சம் வந்தது.

பட்டர், “ஒன்னும் பிடியில்ல...என்னமாச்சும் துலக்கிட்டு வாங்கோ..நேக்கு பத்தாம்நிலவறை காரியமிருக்கு..இருந்தா சாயரச்ச பாப்பம்,”உரைத்தபடியே நடந்து பின்புறம் வெளியேறினார்.

 நான்குகரவுவழிகளிலும் பெருமூச்சொலிகள் ஒலித்து வெளியேறிக்கொண்டிருந்தன.தோழி இவளின் அணிகளை ஒழுங்குபடுத்தினாள்.

“காவிரியோட கடவுளே போன என்ன?கழுத்தில சரப்பொளி சங்கீதம் பாடனுமில்ல ..”என்றபடி மேகலையிடையை கட்டிக்கொண்டிருந்த மைந்தனை இழுத்துக்கொண்டான் அச்சுதன்.

“கூரிய சொற்கள்,”என்ற தோழியிடம் வெள்ளயம்மாள்,  “அமுதஆலமடி...”என்று புன்னகைத்தாள்.

வாயிலைநோக்கிசெல்லஎத்தனித்தவள் திரும்பி தோழியிடம் “இப்பணி உனக்கு விதிக்கப்பட்டதல்ல. இவ்வழி சென்று உன் இல்லம் சேர்.உனக்குரியது வந்து சேரும்”என்றவளைத் தோழி ஈரவிழிகளுடன் கடந்து சென்றாள்.

வெள்ளயம்மாளை நோக்கி,“எங்கு செல்கிறாய்...”  என்றான் அச்சுதன்.

“எந்த அதிகாரத்தில் கேட்கிறாய்”

“......” அரவமில்லா அரங்கத்தில் மௌனம் எடையென அழுந்தியது.

“உன் வாய்மொழி கேட்கவும் அருகதையில்லாதவள் நான் என சொன்னவன் நீயல்லவா?...அரங்கமே சிலிர்க்கும் கதைகள் கேட்க என் செவிகளுக்கு அருளில்லை..”

“தசைக்கீரீ எடுத்த முத்தை தரையில் வீசியவள் சிப்பியின் வலியை அறிந்திருக்க நியாயமில்லை”

“பருவாய் காண்பவை மாயமென உன்வேதம் சொல்லவில்லையா?”

“வாயைக்கிழிப்பேன்...இன்னொரு சொல்லெடுத்தாயானால்”

அனைத்திலும் ஔிரும் ஔி ஒன்றே...சேற்றில்விழும்ஔியையும் சேறென்பவனா நீ?...மனம்கடந்தவளல்ல நான்” 

“.......”

“எங்கு செல்கிறீர் மாமி...”

“விதிக்கப்பட்ட இடத்திற்கு.இளைய அச்சு..என் தோழமையை மட்டும் நாடியவன்,”என்று அவன் கன்னத்தை தடவி புன்னகைத்து நடந்தாள்.அவள் அணியொலிகள் மெல்லிய இசையென ஒலித்தது.

அங்கிருந்த மூர்த்திக்கு முறைமைகள் எதுவுமின்றி .,

“......அந்தரம் சேர் வெங்கதிரோற் கல்லால் அலராவால்...”பாடிக்கொண்டேயிருந்தார் அன்பன் ஒருவர்.அச்சுதன் ஒலிகள் தேய்ந்து மறையும் வரை அங்கேயே நின்றிருந்தான்.அணைப்பிலிருந்து நழுவிய மைந்தனின் அசைவால் அரங்கினுள் மீண்டான்.

தெருக்கலெங்கும் தாழ்திறவா கதவங்கள்,அரவமில்லா திண்ணைகள்,சுண்ணமும் செங்குழம்பும் எழுதாவாசல்கள்.இவள் சிலம்போசை விரைந்தும்,தயங்கியும்,நின்றும்,தேய்ந்தும் ஓரங்கநாடகம் நடத்தியது.எருமைகள் கலக்கியனவாய் நிலைகுலைந்திருந்தன அல்லித் தாமரைக் குளங்கள்.

புள்ளரையன் கோயிலின் காலைமணியோசை நகர்நிறைக்கும் பொழுதில்...இத்தனைதெருக்கள் கடந்தும் ஒற்றை மகவோசை கேட்க அருளில்லையைன நெஞ்சில்கைவைத்து மதில்களின்வாயிலைக் கடந்து அரங்கனின் முதல் சுற்றினுள் நுழைந்தாள்.

கோயில்விமானத்தை வணங்கி நீள்துயில்கொண்டோனை நெஞ்சில் நிறுத்தி சந்தனமண்டபத்தைப் பார்த்தாள்.வாட்களுடன் அயல்தேசத்தினர்.அகன்ற தெருக்களில் நெருப்பிட்டு உணவு வாட்டினர்.உள்ளுக்குள் எழுந்த நடுக்கம் உதறி இடைஒசித்தாள் கண்பார்வை மாற்றி தாளநடையொலிக்க மண்டபத்திற்கு நடந்தாள்.தடுப்பவர் இன்றி வெடிச்சிரிப்புகளையும்,புரியா ஊளைகளையும்,சமிக்கைகளையும் கடந்து உள்ளே சென்றாள்.

“இன்னைக்கு பெருமாளை காட்டனும்கறார்..”என்றான் விலைபோனவன்.மையெழுதியவிழிகளை உருட்டியதைக் கண்டு  புறம்நோக்கினான்.நீள்சிகையும்,பழுப்பங்கியமாக வந்தவன் சிலகணங்களில் புருவம் சுருக்கியதும் வணங்கினாள்.ஏதோ உரைத்தவண்ணம் அவள்தோளில் கைவைத்தான்.

அவனுடன் குதிரையில் இரண்டாம் மதிலைக்கடந்து வெளியேறிக்கொண்டிருந்தாள்.குழம்படிகளின் ஓசை முரசொலியாய் அதிர்ந்தது.நிமிர்கையில் பிணந்திண்ணிகள் கார்த்திகைகோபுரமதிலில் சிறகுகுறுக்கி அமர்ந்திருந்தன.காற்றில்  நிணவீச்சம் ஏறியிருந்தது.

மூன்றாம்மதிலின் தவிட்டறையையடுத்த கழுத்துமணியோசையும் ,மூச்சுசெருமலுமில்லா தொழுவைக் கடக்கையில் மூச்சையிழுத்துப் பிடித்துக் கொண்டாள்.

கிழக்குகோபுரத்தினடியில் இறங்கி குதிரையைத்தடவிக் கொடுத்து இடப்புறத்திண்டில் அமர்ந்து அவளை அருகில் அழைத்தான்.அவனின் அணுக்கப்படை கண்பார்க்கும் தொலைவிலிருந்தனர்.பின்காலைமென்காற்று வாயில்புகுந்து நகரத்தெருக்களில் நடந்தது.

கோபுரத்தின் நான்காம்உள்ளடுக்கில் சுழன்றேருகையில் அவளுள்ளே” ரெங்கா ரெங்கா ....”அழைத்துக்கொண்டு பின் நினைத்துக்கொண்டவளாய் .......பல்லக்கில் எந்தவெளியில் எங்கு போகிறானோ எனக் கண்களை இறுக்கிக்கொண்டாள்.கையை பிடித்திழுத்தவனிடமிருந்து  புன்னகைத்து விடுவித்தபடி பாடுவதாய் சைகை செய்தாள்.அந்தி  நெருங்கிக் கொண்டிருந்து.

“புகுந்திலங்கும்  அந்திப்பொழுத்தது அரியாய்

இகழ்ந்த இரணியதாகம்:சுகிர்ந்தெங்கும்

சிந்தப் பிளந்த திருமால்”...கண்கள் சிவக்க சீறீயமூச்சடக்கி பாடி நிறைந்தவேளை இருவரும் கலசஉச்சிக்கு வந்திருந்தார்கள்.

கண்கள் வெறிகொள்ள தலையாட்டி கைவீசி” எங்கே? “என சைகை செய்தான்.

விளிம்பிற்கு சென்று மேற்கே சற்றுதொலைவில் தெரிந்த கோயில்விமான பரவாசுதேவரை சுட்டினாள்.ஆசையில் முன்னர்ந்தவனைக் காண்கையில் ஐந்துதலை நாகமென விரல்கள் விரிந்தெழ பின்னிலிருந்து ஓங்கிய மூச்செழ தள்ளிவிட்டாள்.நினைக்க பொழுதொதுக்கினால் முடியாதென தானும் விழுந்தாள்.உள்ளூர்படை சூழ தளபதியிழந்த அன்னியப்படை சிதறியது.

வெண்பட்டு செம்பட்டாகக் கிடந்தவளை சூழ்திருந்தவர்கள் ,“பெருமாளே உன்னவ ...சுருக்க அழைச்சிக்கப்படாதா”வென கதறினர்.

அண்மையில் வந்த அச்சுதன், “பெருங்குரலெடுத்து அரங்கன் நான்.என்ன வேண்டும்.?” என்ற அவன் உடல் வசமிழந்து நடுங்கியது.

அவள் செருகிய விழிகள் உயர்த்தி..வலிநிறைந்தக் குரலில், “அரங்கனின் சேவகிகள் விண்ணேகினால் மடைப்பள்ளி நெருப்பு,அரங்கனின் துளசிநீர்......ம்ம்...அவன்மாலை,பரிவட்டம் வேண்டும்..”..அமைதிக்குப்பின் “இவன் தோழமை..” என்ற இதழ்கள் மூடின.

“தந்தேன்.அரங்கனின் சொல் அரங்கத்தின் நியதி..”குரல்தளர்த்தி தன்னிலைக்கு வந்தான் அச்சு.வெள்ளையம்மாளின் தலையில் கரங்களை வைத்தான்.தழல் குளிர்ந்தது.செங்குழம்பு படிந்த அவன்கரங்களால் அவளை நிலத்திலிருந்து நிமிர்த்தினான்.அவர்கள் அவளை கோபுரத்தின் அடிமானத்தில் சாய்த்தார்கள்.வான் நோக்கின அவளின் வழிகள்.

குதிரைகள் வெளியேறும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது.மணிவெளிச்ச வெளியைக்காட்டி,”அதோ அங்க..நன்னா பாருடி...கருடன்..ஒருநா பாற்கடலில நம்ம ரெங்கன் ஒறங்கையில இது என்ன பண்ணிதாம் தெரியுமோ...கதைய கேளுடி அசடு......”அச்சுவின் குரல் தேய்ந்து கொண்டிருந்து.


Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

டமருகத்தின் தாளமானவள்

 திரியை மட்டும் திரும்பத்திரும்ப மாற்றி..  ஒவ்வொரு முறையும் எரியும் சுடர் ஒன்றே தானா.. ?  வேறு.. வேறா..                             _  சம்யுக்தா மாயா நம் கவிதை மரபில் காதலுக்கும் பக்திக்கும் இடையில் ஈசலின் சிறகு போன்ற மெல்லிய தடுப்பே உள்ளது. அது இருபக்கமும் ஊடுருவும் சவ்வு. பக்தி அதிகமானால் காதல். காதல் அதிகமானால் பக்தி. இந்த மாற்றம் புதிரானது.  அதே போல நாயகன் நாயகி ஃபாவம். அரங்கனை நோக்கி பாடப்பட்ட பாடல்களில்  நாயகி ஃபாவம் மேலோங்கி உள்ளது. ஈசனுக்கு பித்தா..பிறைசூடா என்று சக்ய ஃபாவம் இயல்பாக வருகிறது.  ஈசனை காதலனாக ஃபாவிப்பது என்பது முன்னால் நின்று அவனை பாடுவது அல்ல. அவன் பாதியாகவே ஆவது. ருத்ரனின் பகுதி என்பது அத்தனை எளிதல்ல என்பதாலோ என்னவோ பெண்களில் திலகவதி மட்டுமே பாடியிருக்கிறார்.  காரைக்காலம்மையால் அவனை விளையாட்டு பிள்ளையாக்கி ஆட வைக்க முடிகிறது. ( பொதுவாகவே ஈசன் மீது பாடப்பட்ட பாடல்களில் நாயக நாயகி ஃபாவம் குறைவு)  பெண்கவிகளில் ருத்ரனுக்கு இணையான காளியை சம்யுக்தாவின...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...