கதை
சிதை
சிறுமேட்டிலிருந்த நாதமாளிகையின் பின்புறம் அந்திச்சிவப்பில் எரிந்துகொண்டிருந்தது இலங்கை.கருங்கல்மாளிகையை சுற்றியோடிய சிற்றோடையில் கால்களை நனைக்கையில் ரணங்கள் எரிந்தன.இருகரைமேட்டிலிருந்த செடிகளில் புலரிமலர்கள் குவிந்தும் அந்திமலர்கள் மென்முகைகள் பிரித்துமிழ்ந்த மணத்தை காற்று தன்னுள் நிறைத்துக் கொண்டது. முகட்டிலிருந்து விழிதாழ்த்தி மென்நூலாடையை தோளில்வீசியபடி மளிகையின் படிகளிளேறிய வேந்தன் காத்திருந்த தாதியிடம் மைய அகலை கைக்காட்டினான்.படிகளை கடக்கையில் மாளிகை பார்வைபுலத்தை சூழ்ந்து மெல்லிருள் கவிந்தது.படிகள் தண்ணென பாதங்களை ஒற்றின.நாளை என்ற ஒன்று எதற்கு? இன்றோடு நிறைவடைய வேண்டியது....எண்ணியபடி வாயிலில் சற்றுநின்று பின் நடந்தான்.
உள்ளே தாமரைத்தூண்கடந்து,செங்காந்தள் தூணருகே நின்றான்.விரிந்த ஒற்றைமண்டபத்தைச் சுற்றி நோக்கினான்.ஆம்பல்,பலாசம்,தோன்றி....புன்னகைத்துக்கொண்டான்.கல்லாகவும்....பின்னே மலராகவும்....”நாளை வா” என்றவன் அளித்த வெகுமதி.கைகளை விரித்துமூடி எண்ணங்ககளைத் தடுத்தான்.
அல்லித்தூணருகே மேடையில் சுடரொளியில் ஔிர்ந்தது பொன்வீணை.சுடரசைகையில் மாறிமாறி அமைந்து...ஆம் அழைப்பு.மடியிலேற்றி கரங்களுக்குள் அணைத்து அமர்ந்து விழிகளை மூடினான்.மீள நாளை பற்றிய கேள்வி ...
உண்டபடி புன்னகைக்கும் முகம்..,மீசை வருடி நகைக்கும் முகம்.,சிவந்தபுள்ளிகளோடு மீசையரும்பிய பொன்முகம்.,புருவங்கள் செரிந்து கருத்த ஔிமுகம்.,கழல்கள் அணிந்த உலக்கை கால்கள்.,கதையை அது வந்ததிசையிலேயே அனுப்பும் வன்மார்புகள்,அம்புராத்தூணி தோள்கள்...தந்தையே...வேந்தே...குரல்கள்...கண்களுக்குள் கடந்துகொண்டேயிருக்க அதிர்ந்தது வீணை.ஒவ்வொரு முகமாய்.,புன்னகையாய் ஒலிகளாகி காற்றில் கரைய மீட்டியபடியிருந்தன விரல்கள்.
இருப்புணர்ந்து விழிதிறந்தான்.பகன்றைத் தூணருகே மண்டோதரியின் இருப்பை மெய்யுணர்ந்தது.இடதுமார்பின் நரம்பு இருமுறை இழுத்தமைந்தது. “அனைத்திற்கும் மேலென அமர்ந்திருப்பது எது?...நான் அரக்கனல்லவா?”
விழிகளை மூடிக்கொண்டான்.பானங்களின்றி பொன்னிலங்கை பருப்பொருளென எழுந்து வந்த அண்மை நாட்கள்....அந்திவேளைகளில் மரகதமரங்கள்,மஞ்சள் மின்னும் முகடுகள்..,பொன்னொளிர் குன்றுகள், பொன்னுருகி அலையடித்த கடல்.
“விழையாதவளின் கரம் தொட வேந்தன் தலை சிதற”எனப் பாடிய பாணனி்ன் குறுயாழைப் பறித்து செவிபற்றி மேகநாதன் அவையில் நின்றிருக்கையில்”இனி அவ்வண்ணமே ஆகுக”என்ற வேந்தன் முன் பாணன் யாழுடன் கட்டியெழுப்பினான் தன் மாளிகையை.
மெல்லியநாதம் முப்பொழுதும் மீட்டியது.இன்முகம் கூடியிருப்பதாக மண்டோதரி உறைந்து உரைத்தகணம் ஆடிநோக்கி முகமுடிகளை தடவிக்கொண்டான்
பயிற்சிக்களத்தில் பிரஹஸ்தன் “நோக்கில் ஸ்வப்னதேவி வாசம்” என்றான்.
இசைகேட்க அனுதினமும் நாதமண்டபத்திலிருந்தாள் சுலோச்சனை...மகளே...தந்திகள் மிரண்டு நின்றன.
வீணையை வருடினான்.நாண்புண்ணின் கூர்வலி மண்டையில் பாய உதறிகொண்டான்.மண்டோதரியை தவிர்க்க பார்வையை மணிச்சிகைக்கு மாற்றினான்.ஈரம் பூத்த கருங்கற்கள்.
அன்று வாலில் தீவைக்கையில் தலையை ஆட்டியும் ,கண்கள்உருள வாலை நீட்டிக்கொண்டிருந்த கேசரிமைந்தனிடம் “களியாட்டங்கள் உன் குலம் உரைக்கின்றன.எரியப்போவதை உணரவில்லையா?” என்றதும் அவன் “கணநேரமேனும் எரியாதது சவமல்லவா?”என்ற சொல் கேட்கையில் கதிரவனின் கதிர்கள் தைக்க மாளிகையினுள் செல்கையில் இலக்கை தீக்குளித்துக்கொண்டிருந்தது.
மென்காற்றில் பொறிபறக்க சீறியெழுந்தது ஒற்றைச்சுடர்.கைகள் தந்திகளில் தாவிக்குதித்தன.பேரலைகளை தடுத்து ஊழியலைகளென மேலேற்றின தூண்கள்.எழுந்து விழுந்து கரைத்தேடின.அறுந்துவிழுந்தது நரம்பொன்று.
அவள் தளர்ந்தமர்ந்திருந்தாள்.விழிகளில் மாறாமென்னீரம்.அவள் சிறப்பென பாடப்படுபவை.கருவரம்பில் செங்கோடுகளில் மிதக்கும் கருமணிகள்.
விரைவுகொண்டன விரல்கள்.வல்லமை கொள்ளுந்தோரும் வென்றெடுத்தவை.ஈரம்..ஈரம்...ஆமெனத் தளர்ந்தன கரங்கள்.நகக்கண்களின் கசிவு கண்டு களம் விரிந்தது உள்ளுள்.என்ன நடக்கும் என்று தெரிந்த நாளையின் சுமை அழுத்தியது.தன்னிடம் தோற்றவர்கள் கடந்த” நாளை...”.தன்னவர்கள் சென்ற ..”நாளை”.
படமடுக்கும் கொம்பேறி மூக்கனென எழுந்தான்.மூச்சொலி கேட்டெழுந்தாள் அரசி.நரம்புகள் இழுவிசைகொள்ள உள்ளே சொல்லியது “வென்று வட்டான்”...வேகம் கண்டு பின்வாங்கினாள் மண்டோதரி.எடைகொண்டகால்களை உணர்ந்தான்.
நாதம் விட்டு வெளியே வந்தான்.ஓடை ஔிகொள்இருளென ஒழுகியது.பொறிபறந்து மேலெழுந்து எரிந்த பந்தங்களுடன் நின்றிருந்தவர்களை நோக்கி நடந்தான்.ஓடையின் இக்கரையில் இருளில் ஔியென வெண்ணிற சுடுகாட்டுமல்லி .. ...இக்கணம் மலர்ந்ததென.நாளையும் இதேநிலைகாட்டி அலர்ந்திருக்கும்.புலரி,நண்பகல்,அந்தி,நள்ளிரவு ...காலமறியாது வாட்டமில்லாது உதிர்ந்த கணமறியாது விரிந்திருக்கும் ...நித்யகல்யாணி...கண்ணெடுக்காமல் நோக்கியபடி தோள்களை ஓங்கி தட்டிக்கொண்டான்.நாளை வியூகமென்ன?கட்கமென்ன? மனதினுள் களம்சுற்றி தேர்ந்தான்.தளபதிக்கு கைவிரல் காட்டினான்.எல்லைவரை எரிந்தபந்தத்தில் நெய்ஊற்றியபடி வந்தான் அவன்.பந்தஓளியில் இளஞ்செந்நிற நித்யகல்யாணி நோக்கிற்கு எழுந்துவந்தது.
***2016 ல் முதல் முதலாக எழுதிப்பார்த்தக்கதை.
Comments
Post a Comment