அகத்தின் ஆரக்கால்கள்
[ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...]
தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது.
மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ஆற்றுப்படுத்தும் வார்ப்பட்டையாகவும் இருக்கிறது. தீட்டும் போது உண்டாகும் சூடும், சில சந்தர்ப்பங்களின் நெருப்பு பொறிகளும் கதையில் கலையாகின்றன. மனிதர்களின் மனம் உணரக்கூடிய நிலைகொள்ளாத தருணங்களை மயிலனின் கதைகளின் கலைத்தன்மையாக இருக்கின்றன.
கதாப்பாத்திரங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இயக்கும் மனசாட்சியின் நியாயங்களும், தர்க்கங்களும், நிலை மாற்றங்களும், சமாதானங்களுமாக இந்தக் கதைகள் உணர்த்த முற்படுவது என்ன? என்று கேட்டால் தனி மனித மனவாதைகள் என்று சொல்லலாம். அந்த வாதைகள் அந்த மனிதர்களின் மொத்த ஆளுமையிலும், வாழ்க்கையிலும் செலுத்தக்கூடிய செல்வாக்கின் கதைகள் இவை. கவனமாகவே பாதிப்பு என்ற சொல்லை இங்கு வைக்கவில்லை. இதை செல்வாக்கு என்றே சொல்ல முடியும்.
ஏனெனில் இந்தக்கதைகள் அந்த சின்னஞ்சிறு விலகலை நோக்கியே செல்வதாக தெரிகிறது. பாதிப்பை நோக்கி கைகாட்டிவிட்டு நகர்ந்துவிடுகிறது. புரண்டுகிடக்கும் ரயிலின் சித்திரம் என்பது ஒரு மின்னல்வெட்டாக உள்ளது. மின்னல்வெட்டு மழையை கண்ணிற்கு புலப்படுத்துகிறது. நசநச வென்று பெய்யும் மழையாக அகம் கசிந்து கொண்டிருக்கும் உலகம் அது. அந்த அகம் பெய்துமுடித்து தானாக ஓய வேண்டியது. ஆனால் அந்த ஓய்தலிற்கு முன்பே கதைகள் நின்றுவிடுகின்றன. எனவே இந்த கதையுலகம் எத்தனிப்பது எது? அந்த அலைபாய்தலிற்கு காரணமாக இருப்பவைகள் நோக்கி வெளிச்சம் பாய்ச்ச விழையும் கதையுலகம் இது.
உடலில் சீல் கொண்ட சிறிய இடத்தை நோக்கியே உடலின் பிரக்ஞை கூர் கொண்டிருக்கும். அதை சுற்றியே உள்ளுக்குள் போராட்டம் நடக்கும். காயம் கொள்ளும் போதே அது சீல் கொள்ளாமலிருப்பதற்கான ஆயத்தத்தை உடல் தொடங்கிவிடும். அதைப்போல காயம் கொண்ட அகம் ஏற்படுத்தும் தடுப்பு முயற்சியும் ,வலிகளும், பரபரப்பும் கதைகளாகியிருக்கின்றன. இன்னுமொரு பக்கம் சீல் கொண்டப்பின் அது மொத்த அகத்திலும் செலுத்தும் செல்வாக்கு...அகம் தனக்கே செய்து கொள்ளும் சமாதானங்களுமாக கதாப்பத்திரங்களின் அலைவுகள் கதைகளில் உள்ளன. [மயிலன் மருத்துவர் என்பதால் இந்த மாதிரியான ஒரு உவமை மனதில் தோன்றியிருக்கலாம்.]
உதாரணமாக நூறுரூபிள்கள் கதையை எடுத்துக்கொண்டால் ஒரு வசதியான குடும்பத்தில் அகதியாக வந்து சேரும் ஒரு பெண்ணை அந்தக் குடும்பம் நல்லவிதமாகவே நடத்துகிறது. வந்து சேரும் பெண் தன்னை அந்தக்குடும்பத்தில் ஒருத்தியாக நம்பி அவர்களுடைய உறவுக்காரன் ஒருவனை காதலிக்கும் அளவுக்கு அவள் மனதில் அந்த நம்பிக்கை இருக்கிறது. அவன் ராணுவ பயிற்சிக்கு சென்று திரும்பும் வரை தன் கனவுகளுடன் காத்திருக்கிறாள். திரும்ப வரும் அவன் அவளை உடல் அளவில் பயன்படுத்திக்கொண்டு நூறுரூபிள்களை விலையாக கொடுத்துவிட்டு விலகி செல்கிறான். அவன் எந்த சொல்லும் சொல்லுவதில்லை. அவன் பணம் அளிப்பதே அவளை அவன் எந்த இடத்தில் வைத்திருக்கிறான் என்று காட்டுகிறது. அவள் அந்த செய்கையின் முன் ஸ்தம்பித்து நிற்கிறாள். அவள் மனம் நம்ப மறுகிறது. மீண்டும் மீண்டும் அவன் காதல் உண்மை என்றே நம்புகிறாள். அவன் ராணுவத்திற்கு திரும்பும் நாளன்று ரயில் நிலையத்தில் காத்திருக்கிறாள். அவன் ரயில்பெட்டியில் அவன் போக்கில் நண்பர்களுடன் சிரித்து பேசிக்கொண்டிருக்கிறான். ரயில் கடந்து செல்கிறது. அவள் அங்கு நின்றதை அவன் கவனிக்கவில்லை என்றே அவள் நினைக்கிறாள். இந்தக்கதையை குடிக்காமல் தன் அறைக்கு வரும் வாடிக்கையாளரிடம் சொல்கிறாள். அவள் சொல்லும் போதே இடையில் 'இந்த விடுதியை நடத்துபவரிடம் நீங்கள் நூறு ரூபிள்கள் கொடுக்கவில்லையே' என்று கேட்டு பதிலை எதிர்பாராமல் அடுத்த பேச்சிற்கு நகர்கிறாள். அந்த நூறுரூபிள்கள் அவளை தொந்தரவு செய்கிறது. பதின்வயதின் பரிசுத்தமான நாட்களில் அவளில் மலர்ந்த பனிதேங்கிய மலர் போன்ற காதலின் விலை வெறும் நூறு ரூபிள்களா என்ற ஸ்தம்பித்தலில் இருந்து நிகழ்காலம் வரை அவள் மீளவே இல்லை. இப்போது அவள் ஒரு விலைமகள் என்றாலும் அவள் அந்த சிறுமியும் கூட. காயத்தின் தொடக்கமும் அதன் ஆறாத தன்மையுமாக இதை சொல்லலாம். என்றாலும் அவள் நீங்கள் நூறு ரூபிள்கள் தரவில்லையல்லவா? என்று கேட்கும் இடத்தில் அந்த வாடிக்கையாளனால் அவள் தன்னுள் மீண்டும் அந்த பதின் சிறுமியை உணர்கிறாள்.
அதே போல ஸ்படிகம் என்ற கதையில் ஒரு பாலத்தில் அமர்ந்து இரு நண்பர்கள் குடித்துக்கொண்டிருக்கும் போது ஒருவன் தவறி பின்னால் விழுந்துவிடுகிறான். கைகால் செயலிழந்து போகிறது. அவன் மனைவி இவனுக்கு திருமணத்திற்கு முன்பு பிடித்தவளாக இருக்கிறாள். அவள் இவனை 'திவாகரு..' என்று அழைக்கும் மென்மையான வாத்சல்யமான தொனி நிஜத்திலும் நினைவிலும் அவனை தொந்தரவு செய்கிறது. அவள் தன் திருமண பந்தத்தில் வைத்திருக்கும் ஆழமான தூய வைராக்கியத்தை அவன் கணவனின் கீழ்மைகளால் ஒன்றும் செய்யமுடிவதில்லை. படுக்கையில் கிடக்கும் கணவனை ஒரு ஆண்டாக கவனித்துக்கொள்கிறாள். என்றாலும் அவனால் கீழ்மையிலிருந்து விலகமுடிவதில்லை. அவள் தனக்கு செய்யும் உதவிகளை அவளுக்கான தண்டனையாக எக்களிக்கும் குரூரம் அவனிடம் இருக்கிறது. இந்தக்கதையில் ஒரு காதல் வெளிபடுத்தப்படாமல் புதைக்கப்பட்டு அழுத்தி செறிக்கப்படுகிறது. காதலனின் கரிசனத்தால், கணவனின் குரூரத்தால், அவளின் வைரக்கியத்தால் அது மூவருக்குள்ளேயும் ஆழத்தில் கிடக்கிறது. அதுவே அவர்களை ஆட்டிப்படைக்கிறது. அதிலிருந்து தப்பிக்க நினைத்து அதிலேயே மாட்டிக்கொள்கிறார்கள். மயிலனின் கதையுலகில் இது முக்கியமான இடம். தூயது என்று எதையும் சொல்வதில்லை..காட்டுவதில்லை. ஆனால் அதை நாம் எங்கோ உணர்கிறோம். அதன் மீது விழும் அழுக்குகளை சகதியை காட்டுவதன் மூலம் அந்த தூயது வெளிப்படுகிறது.
உதாரணத்திற்கு முப்போகம் குறுநாவலில் வரும் பரிமளம் கதாப்பாத்திரம். யாருக்கும் தெரியாமல் காதலனுடன் செல்லும் பரிமளம் திரும்ப வீட்டிற்கே வரவைக்கப்படுகிறாள். இருபது வயது வித்தியாசத்தில் திருமணம் நடக்கிறது. முரட்டு கணவன் கொலை செய்யப்படுகிறான். இந்த கதையை சுற்றி சமூகமும், ஜாதியும் ,உறவுகளும், மனித சூழ்ச்சிகளும் ஆடும் ஆட்டம் இந்த குறுநாவலில் உள்ளது. கிராமத்தின் ஆழம் என்று ஒன்றுண்டு. ஒவ்வொரு கிராமத்திற்கும் அது வேறுபடும். அது ஜாதியால் ஆன அகஆழம். அது ஜாதியை பெரும்பான்மைக்கான கருவியாக்குகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை ஜாதி உள்ளது. அதில் எத்தனை குடும்பம் உள்ளது. அதில் எத்தனை ஆட்கள் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள். எத்தனை பேர் அதிகாரத்தில் உள்ளவர்கள் என்ற அனைத்தும் சேர்ந்து அந்த ஆழத்தை தீர்மானிக்கிறது. அந்த ஆழம் பெண்ணை முக்கியமான கருவியாக கொண்டதும் கூட. கிராமம் என்பது பயிர் பச்சைகளுடன் எட்டிகாயும், ஊமத்தையும், சந்தனமும் சேர்ந்தது தானே. அந்த எட்டிக்காயின் ஊமத்தையின் கசப்பை பெண்களின் வழியே சென்று தொடும் குறுநாவல் இது.
மயிலன் கதைகளில் எதார்த்தத்தை வெட்டிச்செல்லும் அதீதம் உண்டு. அந்த அதீதம் உணர்வுகளாலும் நிகழ்வுகளாலும் ஆனது. உதாரணத்திற்கு சன்னதம் மற்றும் வீச்சம் கதைகளை சொல்லலாம். சன்னதத்தில் ஒரு பெண், தெய்வத்தை உணரும் இடம் வாசிப்பவருக்கு அதிர்வை ஏற்படுத்துவது. மனம் அதிர்ந்தாலும் கூட நாம் வனைந்து வைத்திருக்கும் இடத்திற்குள் தான் இறை வர வேண்டும் என்ற அவசியம் உண்டா என்று நம்மை எள்ளுவதாகவும் என் மனதில் பட்டது. சன்னதம் கதையின் எதார்த்தமும் அது சென்று தொடும் இடமும் மண்ணையும் விண்ணையும் இணைக்கும் ஒன்று. மழை போன்ற, சூரிய கதிர் போன்ற ஒன்று.
அதே போல வீச்சம் கதையில் ஏரி தூர்வார கொடை கொடுக்காமல் அதை முன்னெடுப்பவனையும் அவமதிக்கும் கதாபாத்திரம் தன் தொழில்முயற்சி மற்றும் கனவை அந்த ஏரியில் தொலைப்பது என்பதை வினை தன்னை சுடும் என்ற அடைப்பில் வைக்கமுடியாது. இந்த கதையில் வருவதை நிகழ்வின் அதீதம் எனலாம். அதை அறம் என்றோ, இயற்கை நியதி என்றோ,செயல் விளைவு என்றோ சொல்லலாம். ஏரி தூர்வார முயற்சிப்பவனை அவமதிப்பவரின் ஆடுகள் ஏரியில் வளர்ந்திருக்கும் ஒவ்வாத செடிகளை தின்றுவிடுகின்றன. ஆடுகள் மரித்துக்கொண்டிருக்க இருவரும் பார்த்துக்கொள்ளும் கூரிய இடத்தில் கதை நின்றுவிடுகிறது.
ஏதேன் காட்டின் துர்கந்தம்,வழிச்சேறல் போன்ற கதைளில் இன்றைய வாழ்க்கை முறையில் ஆண் பெண் உறவின் மாற்றங்களும் திரிபுகளும் உள்ளன. புதிய சாத்தியங்களின் வழி நகரும் வாழ்வில் ஒரு விலகல் தருணத்தில் அவர்கள் உணரும் மனித மனதின் 'என்றுமுள்ள இயல்பு' அவர்களை துணுக்குற செய்கிறது. ஆண் பெண் உறவில் பொறுப்புகளையும், உரிமையாடலையும் கழித்துவிட்டால் மிஞ்சுவது உடல் மட்டும் தான். எஞ்சுவது சார்ந்த கசப்புகள் என்ற அப்பட்டத்தை கதைமாந்தர்கள் உணர்வதுடன் கதை நின்று கொள்கிறது.
திருமணத்தை உதறி அதுசார்ந்த பொறுப்புகள் ,குழந்தைகளை உதறி சேர்ந்து வாழ்தல் என்ற தன்னிச்சையான வாழ்க்கை முறையில் அந்த தன்னிச்சை தன்மையே அந்த உறவின் உண்மை முகத்தையும் கட்டுகிறது. அப்படி ஒன்றும் எதுவும் மாறவில்லை என்பதை பெண்ணோ ஆணோ உணர்கிறார்கள். முற்போக்கான சிந்தனை, பெண்ணியம்,தனிமனித சுதந்திரம் போன்றவற்றின் அடிப்படைகளை உணராமல் மேலோட்டமாக நிலைப்பாடு எடுப்பதில் உள்ள சுயநலத்தை முன் வைக்கும் கதை 'ஏதேன் காட்டின் துர்கந்தம்' . ஆதாமின் ஏதேன் காட்டிலிருந்து வெளியேறி சமூக அமைப்பிற்குள் பலதலைமுறைகள் வாழ்ந்து சமூக நெறிகளின் மீதுள்ள விலகலால் மீண்டும் அதே ஏதேன் காட்டில் நுழைவதை பொன்றது இந்த சேர்ந்து வாழ்தல். ஆனால் இருபத்தோராம் நூற்றாண்டின் இந்த ஏதேன் தோட்டத்தின் வெற்று துர்கந்தம் அந்த பெண்ணை குழைக்கிறது. ஏனெனில் இவள் அந்த ஏவாள் இல்லை. இவள் அவனை இந்த நூற்றாண்டின் மிகவிரிவான பின்புலத்தில் வைத்து நம்பியவள். ஆனால் அந்த விரிந்த பின்புலம் என்பது கையடக்க திரை மட்டுமே. இந்த துர்கந்தத்தை சுகந்தமாக மாற்றக்கூடிய காதலின் இழப்பை சுட்டும் கதை. இதில் உள்ள உளவியல் முக்கியமானது. மயிலனின் முக்கியமான கதைகளில் ஒன்று. பெண்ணுணர்வு சார்ந்த கதை. என்றாலும் இந்தக்கதையில் பெண்ணின் பக்கம் உள்ள அபத்தமும் முக்கியமானது. இருபக்கமும் உள்ள சிக்கலை விவாதிக்கும் கதை. இந்தக்கதையின் நாயகியும் நூறு ரூபிள்கள் கதை நாயகியும் உணரும் ஒரு நுண்தருணம் இருவரையும் ஒரு புள்ளியில் இணைக்கிறது.
வழிச்சேறல் என்ற கதையில் முறையில்லா உறவில் பெண்ணின் தன்முனைப்பும் பாசாங்கும் உள்ளது. ஒரு குரூரமான விளையாட்டு கதையாகியிருக்கிறது. தான் செய்யும் பிழையை இன்னொருவர் மீது திசைதிருப்பி விட்டு் அதன் மூலமே தனக்கான அனுகூலத்தை அடைய முயற்சிக்கிறது. இதில் குற்றஉணர்வேதும் கொள்ளாமல் அடுத்தவரை குற்றஉணர்வுக்கு உள்ளாக்கும் அந்த பெண்ணின் மனநிலையை கதை உணர்த்துகிறது.
குற்றவுணர்வு எத்தனை சமாதனங்களும் காரணம் கற்றபித்தலிற்கு பிறகும் ஒரு வடுவாக காலம் முழுக்க மனதில் எஞ்சுவதன் கதை நிரபராதம். மருத்துவர் ஒருவர் ஆசுவாசத்திற்காக நண்பர்களுடன் வெளியூர் செல்கிறார். அவரிடம் பத்துஆண்டுகளாக மருத்துவம் பார்த்த குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவம் பார்க்க கொண்டுவரப்படுகிறாள். வேறொரு மருத்துவரை ஏற்பாடு செய்துவிட்டே செல்கிறார். என்றாலும் குழந்தையின் தந்தை அலைபேசியில் அவரை வரச்சொல்லி கேட்பதும் இவர் மறுப்பதுமாக அந்த முரண்பாடு வாக்குவாதமாக முற்றுகிறது. மருத்துவர் வருவதில்லை. தந்தையும் வேறு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துசென்றுவிடுகிறார்.மருத்துவர் ஓய்வு பெற்றப்பின் பயணத்தில் பார்க்கும் ஒரு பெண் அந்தக்குழந்தையை நினைவுபடுத்துகிறாள். அவருக்குள் இருந்த நெருடல் அவரை அந்த பயணத்தில் தொந்தரவு செய்கிறது. அவள் இறந்திருப்பாள் என்று மருதனதுவ அறிவுக்கு தெரிந்தாலும் அவளாக இவள் இருக்கக்கூடாதா என்ற ஏக்கமும், இல்லாவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றமுமாக அவள் தழும்பை பார்க்க நினைத்து பார்க்காமல் தவிர்க்கிறார். இந்த தவிர்த்தல் அவரின் இதுவரையான வாழ்க்கை முழுக்க இருந்திருக்கலாம்.
சாந்தாரம் என்ற கதையில்'குறைகளையும் குற்றங்களையும் கசடுகளையும் மூடி மறைக்க மிக எளிதான புறபிரமாண்டங்களே போதுமாக இருக்கின்றன இல்லையா?' என்று பேராசியர் ஒரு மாணவனிடம் கேட்பது ஒரு வகையில் மயிலன் என்ற எழுத்தாளர் எதிர்கொள்ளும் ஆதார கேள்விகளில் ஒன்றாக இருக்கலாம்.
இத்தனை அகசுற்றுகளை சுற்றும் எழுத்தாளரின் அகம் சார்ந்த நேரடியான கதையாக நியமம் என்ற கதையை சொல்லலாம். ஆண் பெண் நட்பை இன்றைய சூழலில் ஒரு இறகு பறந்து செல்வதை போல சொல்லும் கதை. சகமனிதன் என்ற நிலைக்கு முக்கியத்துவம் தரும் கதை. இன்றைய சூழலில் அந்த நட்பிற்குள் இருக்கும் அகதடுமாற்றங்களையும் மீறிக்கொண்டு அந்த உறவு நட்பாகவே இருக்கிறது.
நேரடியாக அதிகாரத்தையும் அதை ஏற்கும் சமூகத்தையும் கேள்வி கேட்கும் ஒரு குரலும் இந்தக்கதைகளில்உள்ளது. உதாரணத்திற்கு போதம் என்ற கதையை சொல்லலாம்.
என் சிறுவயதில் பள்ளிக்கூடம் விட்டதும் அந்தியில் பள்ளி மைதானத்தில் விளையாடுவோம். சிறிது நேர விளையாட்டிற்கு பிறகு ஓரமாக சென்று அமர்ந்து கொள்வேன். பள்ளியின் வேலி சீமை கருவேலங்களால் ஆனது. அதன் இடைவெளியில் ஒரு பாட்டி மூங்கில் சிம்புகளால் சிறியதும் பெரியதுமாக கூடைகள் முடைந்து கொண்டிருப்பார். அடித்தளம் மட்டும் பின்னப்பட்டவை,பாதியளவு பின்னப்பட்டவை என கூடைகள் அவளைச்சுற்றி உட்கார்ந்திருக்கும். பாட்டி எப்போதும் வெற்றிலையும் வாயுமாக இருப்பதால் புன்னகை மட்டும் தான். கூடை முடைவதை பார்ப்பது சலிக்காது. மூங்கல்களை பட்டையான சிம்புகளாக்கவும், சிறுசிறு மெல்லிய சிம்புகளாக்கவும் ஒரு சிறிய கத்தியை பயன்படுத்துவார். பச்சை மூங்கிலை பட்டை பட்டையாக சீவுவது ஒரு கலை. முடையும் போதும் நுழையாத சிம்புகளை அந்த கத்தியால் நெம்பி செருகி அந்த கத்தியாலேயே ஒரு தட்டு தட்டுவாள். முடைந்து முடித்ததும் அந்த கத்தியாலேயே நீட்டிக்கொண்டிருப்பவற்றை சரி செய்வாள். அந்த கத்தி அவளின் உள்ளங்கையிலிருந்து ஆள்காட்டி விரல் வரை இருக்கும். மெல்லிய கத்தி. தேய்ந்து தேய்ந்து கூராகும் கத்தி. இறுதியாக கூடையை சுற்றி சுற்றி கத்தியால் தட்டுவாள். ஒரு மாதிரி கூடை வசத்திற்கு வந்துவிடும். அது போன்ற ஒரு கத்தி எழுத்தாளர் மயிலனிடம் உள்ளது. புறத்தை பின்னி உள்ளே அகத்தின் சலனத்தை காட்டுவது. இவர் தொடும் அந்த அகத்தின் மீது செல்வாக்கு செலுத்தும் மீச்சிறு அகவிலகல் பகுதி என்பது மையமா? விளிம்பா? என்று கேட்டால் இரண்டும்தான் என்று சொல்வேன். அது ஆரக்கால் போல ஒரே சமயம் மையமாகவும் விளிம்பாகவும் இருக்கிறது.
மயிலன் அப்பட்டமாக புறத்தை பேசி அகத்தை நோக்கி செல்கிறார். ஆனால் அவர் பேசும் அகம் அப்பட்டமானதில்லை. மிகவும் நாசூக்கானது. ஒரு கீறலைக்கூட அது மறப்பதில்லை. அதன் வாதைகளை தொட்டுக்காட்டுவது இந்த படைப்புலகம்.மயிலன் தன் சிறுகதைகளில் திகழும் தனிமனித அகத்திலிருந்து முப்போகம் என்ற குறுநாவலில் சமூக அகம் நோக்கி நகர்ந்திருக்கிறார்.
கதைகளை பற்றிய கட்டுரையை இப்படி குழப்பமான வார்த்தைகளால் சொல்ல வேண்டுமா? என்று கேட்கலாம். கடலை விட கடல் எழுப்பும் அலைகளும்,காற்றும் ஒரு மீனவனுக்கோ கப்பலோட்டிக்கோ மிகவும் முக்கியமானது. அதைப்போலவே எழுத்தும்.
விஷ்ணுபுரம் இலக்கிய விழாவின் விருந்தினராக செல்லும் எழுத்தாளர் மயிலனுக்கு அன்பும் வாழ்த்துகளும்.
Comments
Post a Comment