Skip to main content

இற்றைத்திங்கள் அந்நிலவில் : 17

 நீர்த்துறை படியும் பெருங்களிறு

ஔவையார் புறநானூற்றில் சங்க கால மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சியை குறித்து பதினெட்டு பாடல்கள் பாடியுள்ளார். சங்ககாலத்து ஔவை இளம் வயது விறலி என்று ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.

ஔவையும் அதியனும் பாடி பரிசில் பெற்ற புலவரும்,புரவலன் மட்டுமல்ல.  கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்,பாரி கபிலர் போன்று ஆத்ம நண்பர்களும் கூட. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண்ணை நட்பாய் நடத்திய அரசனை குறித்த இலக்கியம் நம்மிடம் உள்ளது.  இதை நம் பண்பாட்டின் பெருமிதம் என்று தயங்காமல் சொல்லலாம். பரத்தை என்று குலம் வகுத்து பெண்களை பயன்படுத்தி கொண்ட நம் சமூகத்தில் ஒரு அரசன் ஒரு பெண் புலவரை தன் நட்பிற்குறியவளாகியிருக்கியிருக்கிறான்.



ஒரு குலத்தை பரத்தையாக வகுத்த சமூகத்தில் ஒரே ஒரு பெண்ணை நட்பிற்கு உதாரணமாக காட்டுவதை பற்றி இன்று நமக்கு மனக்குறை இருக்கலாம். ஆனாலும் சங்ககாலம் என்ற மரத்தில் அந்த ஒரே ஒரு மலர் மலர்ந்து கனிந்திருக்கிறது. அறிவால், புலமையால் ஒரு பெண் ஒரு ஆணுக்கு நட்பாகியிருக்கிறாள்.

சிலபாடல்கள் நமக்கு சிறுவயதில் பள்ளிப்பாடத்தில் அறிமுகப்படுத்தப்படுவதனால் அவற்றின் உணர்வுகள் வளர்வதற்கு பதிலாக எளிமையாகிவிடுகிறது. அதியமான் ஔவைக்கு உயிர்காக்கும் நெல்லிக்கனி வழங்கியதும் அவ்வாறு நமக்கு பழகிப்போன ஒரு நிகழ்வு.

அதியமான் வேட்டைக்காக மலைக்காடுகளில் திரியும் போது மலை உச்சிக்கு செல்கிறான். அங்கு மலைப்பிளவிலுள்ள அரிய மரத்திலிருந்து பறித்தெடுத்த உயிர்காக்கும்  கனியை தான் உண்ணாமல் எடுத்து வருகிறான். தன் மைந்தனுக்கோ, தன் காதல் மனைவிக்கோ அல்லது  தனக்காகக்கூட அதை பயன்படுத்தாமல் ஒரு சிறுவன் தன்னுடைய புத்தகப்பையில் பத்திரப்படுத்தும் சாக்லெட்டை போல அதை மலையுச்சியிலிருந்து  பத்திரப்படுத்தி ஔவைக்கு அளித்து உண்ணச்செய்கிறான். அது உயிர் காக்கும் என்று தெரிந்தால் அவள் நண்பனுக்கே திருப்பி அளித்திருக்கக்கூடும். ஒரு மன்னனாக அவனே போர்க்களத்தில் உயிருக்கான ஆபத்தில் இருப்பவன். எனவே ஔவை,

பால் புரை பிறை நூதற் பொலிந்த சென்னி

நீலமணி மிடற்று ஒருவன் போல

மன்னுக பெரும நீயே

புறம்: 91

என்று அந்த பிறை அணிந்த நீலகண்டனைப்போல மண்ணில் நீ நிலைத்து வாழ்க என்று அதியனை வாழ்த்துகிறார்.

 இவர்களின் நட்பிற்குள் இருக்கும் வாத்சல்ய உணர்வும் அரியது.  ‘நான் ஊர்ஊராக சுற்றி விட்டு வருகிறேன். எண்ணெய் பிசுக்கும் புலால் நாற்றமும் கொண்ட என் தலைமுடியை தன் வலிய கரங்களால் தடவியபடி பரிவுடன் என்னை அமர்த்தி பேசுவான்’ என்று ஔவை சொல்கிறாள்.

ஒத்திசைவின்றி இசைக்கப்படும் யாழிசை போல பேசும் மழலைகளின் பேச்சிற்கு மகிழ்ந்து அன்பை அருளும் தந்தையரைப் போன்று அதியமான் எப்போதும் என் பாடல்களை கேட்டு அருள்பவனாக இருக்கிறான். எத்தனை மதில்களை அழித்து வென்றவன் என்றாலும் அவன்  அன்பும் கருணையும் அவன்  வீரத்தை போன்றே பெரியது என்று ஔவை சொல்கிறாள்.

…தந்தையர்க்கு

அருள் வந்தனவால் புதல்வர்தம் மழழை

என் வாய்ச் சொல்லும் அன்ன

புறம் 92

 ஔவை பல இடங்களில் அதியமானை ‘என்ஐ’ என்று விழிக்கிறார். அரசனாகவும் தந்தையாகவும் தெய்வமாகவும் குணம் காட்டி திகழும் ஒருவன். ஔவையின் பாடல்கள் இந்த நிலைகளின்  கலவையாகவும் ,அவைகளில் ஒரு குணம் வெளிப்பட்டு  நிற்கும் தருணங்களின் பாடல்களாகவும் உள்ளன.

கூற்றத்து அனையை ஆகலின் போற்றார்

இரங்க விளிவதுகொல்லோ வரம்புஅணைந்து

இறங்குகதிர் அலம்வரு கழனிப்

பெரும் புனற் படப்பை அவர் அகன் தலை நாடே

புறம் :98

அதியமான் பகைவர்க்கு கூற்று போன்றவன். அவன் படையெடுத்து செல்லும் நாடு என்னாகுமோ என்று அதியனின் வீரத்தை பாடுகிறார்.

அதியமான் தன் நாட்டு மக்களுடனும், சுற்றத்துடனும் கொண்டுள்ள பரிவை, உறவை பாடும் ஔவை அவன் வீரத்தையும் அதனுடன் இணைத்துக் கொள்கிறார். நாட்டுமக்களுக்கு நீரில் படுத்திருக்கும் களிராகவும், பகைவர்களுக்கு மதம் கொண்ட களிராகவும் இருக்கிறான். பொருளும் வளமும் இருக்கும் போது அனைவருக்கும் அளிப்பனாகவும், இக்கட்டான காலத்தில் அனைவருடனும் சேர்ந்து பகிர்ந்துண்பவாகவும் இருக்கிறான். 

என்றும் உண்டாயின் பதம் கொடுத்து

இல்லாயின் உடன் உண்ணும்

இல்லோர் ஒக்கல் தலைவன்

அண்ணல் எம் கோமான் வை நுதி வேலே

 புறம்: 95

ஔவை அதியமானின் வீரத்தை பாடும் போதும் போரை தவிர்க்கும் எண்ணத்துடனே பாடுகிறாள்.

ஔிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன்

கதிர்விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின்

விழவு மேம்பட்ட நல் போர்

முழவுத் தோள் என்னையைக் காணா ஊங்கே

புறம் 88

முழவு போன்ற தோள்களை உடைய அதியமானை நேரில் காணாதவர்கள் அவன் வலிமையை உணராது இருக்கிறார்கள். அவன் ஊர் போதுவில் வைக்கப்பட்டுள்ள தண்ணுமைபறை காற்றினால் விம்முவதை போர்ப்பறை ஒலி என்று எண்ணி போருக்கு எழக்கூடியவன் .

எறிகோல் அஞ்சா அரவின் அன்ன

சிறு வல் மள்ளரும் உளரே

புறம்: 89

அவன் படைவீரர்களும் தடிக்கு அஞ்சாத பாம்பை போன்று போருக்கு அஞ்சாதவர்கள்.

காந்தள் மலர்ந்து செறிந்த மலைக்காட்டில் புலியின் முன்னால் மான்கூட்டம் நிற்க முடியுமா? சூரியன் வந்த பிறகு எண்திசையிலும் உள்ள இருள் நிற்குமா? விசையுற்ற வலிமையான குதிரை தன் கால்களால் கடக்கமுடியாத பாதை இருக்கிறதா? அதைப்போலவே அதியமான்  நிற்க முடியாத களம் என்று ஒன்றில்லை என்று பாடுகிறார்.

அச்சொடு தாக்கிப் பார் உற்று இயங்கிய

பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய

வரி மணல் ஞெமரக் கல் பக நடக்கும்

பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?

புறம் 90

ஒரு பாடலில் ‘வாள்நலம்’ உரைத்தல் வருகிறது. ஏன் அதியனின் படைவாட்கள்  சிதைந்து கொல்லன் களத்தில் கிடக்கிறது என்று ஔவை சொல்கிறாள்.

 தோண்டைமானிடம் போரை தவிர்ப்பதற்காக தூது செல்லும் ஔவை இங்கே உன் போர்க்கருவிகள் நெய்பூசப்பட்டு அழகாக அடுக்கப்பட்டுள்ளன. அங்கே அனைத்தும் சீர்கெட்டு கொல்லன் பட்டறையில்  கிடக்கின்றன என்று சொல்கிறாள்.

பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து

கொல் துறைக் குற்றிலமாதோ புறம்: 95

 ‘வாள்நலம் உரைத்தல்’ என்பது அரசனின் வீரத்தை பாடினாலும் மற்றொரு பார்வையில் போர் வன்முறையை பாடுவதும் கூட. அதியனின் வீரத்தை, போர் வெற்றியை, படை நலத்தை பாடும் போது ஔவை தனக்காக ஒருவரியை வைப்பாள். அது அதியமானின் அவைப்புலவர், நண்பர் என்பதற்கெல்லாம் மேலே செல்லக்கூடியது. உண்மையில் அதியமான் அவ்வாறான மன்னனா அல்லது ஔவை விழைந்த அரசனை பற்றிய மதிப்பீடுகளா என்பதை நாம் அறியோம். ஔவை ‘பெருங்களிறு’ என்ற அழகான உவமையை கைக்கொள்கிறாள். 

அதியமான் பெருங்களிறு போன்றவன் என்று அதியமானுக்கும், அவன் பகைவர்களுக்கும் சொல்கிறாள். ஊரில் உள்ள நீர்நிலையில் படுத்துள்ள யானையின் மீது குழந்தைகள் ஏறி விளையாடும் அது போல தன்மக்கள் மீது அருள் கொண்டவன். ஆனால்  பகைவர்களுக்கு மதம் கொண்ட களிறு. தன் பாதையில் உள்ள அனைத்தையும் அழிக்கும் வலிமை கொண்டது. இந்த உவமை மூலம் வீரத்துடன் இணைந்த அன்பும் அருளும் ஆள்பவனின் பண்புகளாக ஔவை சொல்கிறாள். மகன் பிறந்த போது முதன்முதலாக மைந்தனை காண்பதற்காக வரும் அதியனை ஔவை வருணிக்கும் பாடலில் அன்றைய போர் சூழலை உணரமுடிகிறது.

கையது வேலே காலன புனை கழல்

மெய்யது வியரே மிடற்றது பசும் புண் 

புறம்: 100



போர்க்களத்திலிருந்து அதியமான் தன் இல்லம் புகும் காட்சி. ஈற்றறையில் அவன் அரசன் அல்ல. அது மனை மட்டும் தான். அங்கு அவனுடலில் பசும் புண்ணுடன் போரினால் உண்டான குருதிமணத்துடன் வருகிறான். அங்குள்ளது மற்றொரு குருதிமணம். 

செறுவர் நோக்கிய கண் தன்

சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே 

செம்மை மாறாத கண்களுடன் தன் மைந்தனை காண்கிறான். மைந்தனின் கைகளும் கால்களுக்கும் இளம்செம்மை கொண்டவை. அந்த அகத்தளமும் அதே செம்மை சூடியதும் கூட. இந்தப்பாடல் நம் மனதை தொட்டு நெகிழ்த்துவது. ஒரு கவிஞர் வெறும் பொன்னுக்கும் பொருளுக்கும் புகழ்துதிகளை பாடுவர் மட்டும் தானா? 

புறப்பாடல்களை பொருத்த வரையில் தான் சார்ந்த அரசனை துதி பாடுவதற்கு அப்பால் சென்று ஒரு புலவர் என்ன சொல்கிறார் என்பதை தொட்டு எடுக்க முடியுமா என்பது ‘இற்றை திங்கள் அந்நிலவில்’ என்ற இந்தக்கட்டுரை தொடரின் தேடல்களில் ஒன்று.

கையகத்தது பொய்யாகாதே 

புறம் 101

என்று அதியனின் கொடை தன்மை பற்றி ஔவை சொல்கிறாள். இந்த வரியின் மீது எனக்கு மையல் உண்டு. ஒரு மந்திரம் போன்று மாறாத ஒரு தன்மை. யானை தன் துதிக்கையில் எடுத்த உணவை தந்தத்தால் தாங்கி பிடித்திருக்கிறது. அதியமான் கொடை அளிப்பதில் சிறு தாமதம் ஏற்படுகிறது. அதை இத்தனை நாசூக்காக சொல்கிறாள். யானை கையில் உள்ள கவளம் அதன் வயிற்றுக்கு பொய்யாவதில்லை. அது போல அதியனின் வாசலில் வந்து நின்றவர் வெறும் கையுடன் திரும்பிச்செல்வதில்லை என்கிறாள். ஒரு நாள், இரு நாள் இல்லை பலநாள் பலருடன் சென்றாலும் அந்த வாசல்  அனைவருக்காகவும் முதல் நாள் சென்ற போது இருந்த அதே ஆதுரத்துடன் திறந்திருக்குமாம். ஆள்பவனின் மாறாத கருணையை பாடும் பாடல் இது.

ஒருநாள் செல்லலம்;இரு நாள் செல்லலம்

பல நாள் பயின்று பலரொடு செல்லினும்

தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ

புறம்: 101

சங்கப்பாடல்களை அந்த காலகட்டத்துடன் இணைத்து  வாசிப்பது பிழையான புரிதல்களை தவிர்க்க உதவும். 

சுவைமிக்க கள் என்றால் எனக்கு அளித்த பின்பே அவன் உண்பான் என்கிறாள் ஔவை. சிறந்தவற்றை தனக்காக அல்லாமல் தன்னை சார்ந்தவருக்கு அளிப்பது பற்றிய குறிப்பு அது. நெல்லிக்கனியை ஔவைக்கு அளித்ததும் அவ்வாறானதே. இன்னுமொரு பாடலில் பொருள் இருந்தால் வருவோர்க்கு கொடுப்பான், இல்லாவிடில் சேர்ந்துண்ணுவான் என்கிறாள்.

அதியமானின் முன்னோர்கள் தேவர்களுக்கு அவி அளித்தும், வேள்விகள் செய்தும் ஆட்சி செய்த நிலம்  புலால் நாற்றம் கொண்ட பெருவேலால் காக்கப்பட்டது. அதை பெற்ற அதியமானும் தானும் ஏழு அரசர்களை வென்று அரியணை அமர்ந்தாலும் அவன் போர் முரசின் ஓசைக்கு ஓய்வில்லை. 

எழு பொறி நாட்டத்துஎழாஅத் தாயம்

வழு இன்று எய்தியும் அமையாய்

புறம் 99

போருக்காக உறையில் இருந்து எடுத்த வாள் பகைவர்களின் உடல்ஊனில் முழுகி உருவம் சிதைந்து போயின என்று தொடங்கும் பாடல் இது.

மாவே பரந்து ஒருங்கு மலைந்த மறவர்

பொலம் பைந் தார்  கெடப் பரிதலின்

களன் உழந்து அசைஇய மறுக் குளம்பினவே

புறம்: 97 

வாள்,வேல்,களிறு,குதிரை,சேனை என்று வரிசையாக குருதியில் திளைப்பதை இந்தப்பாடல் சொல்கிறது. போரிலிருந்து போருக்கு என்பதே வாழ்க்கையாக இருந்திருக்கிறது. அகப்பாடல்கள் காதல் செறிவுடன் இருப்பதற்கு இது போன்ற சமூக சூழலும் ஒரு காரணம். எவ்வளவு பெரிய படை, எவ்வளவு பெரிய நாடு என்பதை விட, போர் என்ற பெயரில் ஓயாத வன்முறை. பாதுகாப்பு இல்லாத வாழ்க்கை. ஓயாத இளம்வயது மரணங்கள் நிகழும் சூழல். அதனால் தான் புலவர்கள் இந்த சிறிய நிலப்பகுதியை பாடும் போது அகன் தலை நாடு என்பது போன்ற ‘மாபெரும்’ என்ற பொருளில் சொற்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். காதலானாலும் வன்முறையானாலும் அவர்கள் சொல்வது quantity அல்ல quality என்பது பாடல்களை வாசிக்கும் போது உணரமுடிகிறது. போர் அன்றாடமாக இருந்திருக்கலாம்.

இந்தப்பாடல்களை வாசித்துக்கொண்டிருக்கும் போது எழுத்தாளர் ஜெயமோகனின் காணொளி ஒன்றை பார்த்தேன். ‘தீர்த்தங்காரர்களின் கருணை’ என்ற தலைப்பில் பேசியிருந்தார். அதில் இனக்குழுக்களாக இருந்த ஆப்ரிக்கா இப்போதும் அவ்வாறே சிதறி இருக்கும் போது, அதே போல பல்வேறு இனக்குழுக்களாக இருந்த இந்தியா இன்றுள்ள நாடாக இணைய முடிந்ததன் அடிப்படை அல்லது தொடக்கப்புள்ளியை முன்வைத்தார். இனக்குழுக்களுக்குள் இருந்த வன்முறையை தீர்த்தங்காரர்கள் கையாண்ட விதம் பற்றி கூறினார். எப்போதோ தன் சகோதரனை அழி்க்க ஓங்கிய இளையவனின் வலிய கரம், அருளும் கரமாக மாறிய தருணத்தில் ஆதிநாதரால் உணரப்பட்டு நமக்கு  அருளப்பட்டது அகிம்சை. ‘அஞ்சினான் புகழிடம்’ என்று ஒரு இடத்தை குறித்து போரை தவிர்ப்பவர்களுக்கு சமணர்கள் அடைக்கலம் தந்தார்கள். அந்த இடத்தில் உள்ளவர்களை யாரும் தாக்கக்கூடாது. அப்படி தாக்கினால் தாக்கியவர் இல்லத்தின் முன்போ, அரண்மனையின் முன்போ சமணர் உண்ணாநோன்பிருந்து உயிர்விடுவார். அது நம் சமூகத்தை, தனிமனிதனை, படைவீரனை தொந்தரவு செய்திருக்கிறது. 

இந்தப்பாடல்களில் வரும் பெருங்களிறு என்ற படிமத்தையும், தீர்த்தங்காரர்களின் கருணை மற் றும் அகிம்சையை என்மனம் இணைத்துக் கொண்டது . தன் குழுவிற்கான பாதுகாப்பு, வீரம் என்றிருந்து பின் வன்முறையாகி, எடுத்த வாளை வைக்கவிடாது மதம் கொண்ட களிறாக மாறிய இனக்குழுக்கள் தங்களை தாங்களே  அழித்துக்கொண்டிருந்த காலத்தில் தீர்த்தங்காரர்கள் தங்கள் கருணையால் அந்த களிரை மெல்ல மெல்ல படிய வைத்திருக்கிறார்கள். இந்த பெருநிலம் நீரில் படுத்திருக்கும் பெரும்களிறு போல ஒரு காட்சி மனதில் வந்து போனது. [நம் நிலத்தின் இயற்கை அமைப்பும் அவ்வாறானதே]

நாளும் பொழுதும் பகைவர் மேல் நெடியவேல் வீசி, புலால் நாற்றத்துடனே இருந்த வேல் கொண்ட ஒரு நிலம் எவ்வாறு போர் ஓய்ந்து அமைந்திருக்கும்? இதை யோசிக்கும் போது புறப்பாடல்களில் புலவர்கள் தங்களுக்காக கையிலெடுக்கும் சில வரிகள் மனதில் வந்தது. குறிப்பாக வாசித்துக் கொண்டிருந்த ஔவையின் வரிகள்.

‘நீ களிறு.. ஆனால் மதக்களிறு மட்டுமல்ல.. சிறுபிள்ளைகள் விளையாட படுத்திருக்கும் பெரும்கருணை கொண்ட பெருங்களிறும் கூட’

‘உன் வாள்மனித உடல்களை ததைத்து கூரிழந்தது… என்றாலும் யானை கோட்டிடை வைத்த கவளம் போல உன் கை பொய்யாவதில்லை’

என்று ஔவை எழுதியது எதன் பொருட்டு? பகை நாட்டு மன்னிடம் தூது சென்று போரை தவிர்க்க நினைத்தது எதனால்?

எண்தேர் செய்யும் தச்சன்

திங்கள் வலித்த கால் அன்னோன் 

புறம்:87

ஒரு நாளில் எட்டுதேர் செய்யும் திறனுள்ள தச்சன் ஒரு மாதம் முயன்று செய்த ஒரே ஒரு  தேர்க்கால் போன்ற வலிமை உடைய மன்னனின் நிழலில் பாதுகாப்பாக வாழும் புலவர் எதற்காக தொண்டைமான் அவையில் தூதுவராக சென்று நிற்க வேண்டும்?

புலவர்கள் ஒரு கரம் எதிரிகளுக்கு, ஒரு கரம் காதலுக்கு என்று சொல்லிக்கொண்டே இருந்தது  எதற்காக?

ஒன்றே

விழவின்றுஆயினும் படு பதம் பிழையாது

மை ஊன் மொசித்த ஒக்கலோடு துறை நீர்க்

கைமான் கொள்ளுமோ? என

உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே

புறம்:96

இந்தப்பாடல் சொல்லும் வன்முறை கட்டடற்றது. மனிதர்கள் அதில் திளைக்கவே செய்வார்கள். தலைவன் வகுத்ததே நெறி. அங்கு ஒரு புலவர் தன் சொல்லுடன் நிற்பது வன்முறைக்கு மாற்றாக. ஏதோ ஒரு வகையில் புலவர்கள் காட்டுக்களிரை, கொம்பனை சொல்லுக்கு பழக்கிக்கொண்டே இருந்ததால் தான் தீர்த்தங்காரர்கள் வரும் போது அகிம்சை இங்கு செல்லுபடியானது என்று தோன்றுகிறது. கவிதை அதன் போருட்டே. 

சொல்லால் ஆகாதெனின் அது எதனாலும் ஆகாது. ஏனெனில் மனிதன் உண்டு பண்ணியவற்றில் சொல்லே அவன் முழு உணர்வுகளாலும் ஆனது. மனித மனத்தின் வெளிப்பாட்டின், பகிர்தலின் வடிவம் அது. எனவே சொல்லால் மனிதனை கையாள இயலும். சொல்லால் ஆவது என்பது கவிதையால் ஆவதும் கூட. எனவே தான் போர்க்களத்தில் முனையில் ஒரு புலவர் சொல்லுடன் நின்றார். அவையில் ஒரு புலவர் தன் சொல்லுடன் அமர்ந்தார். எந்த களத்திலும் வெட்டுபடாதவர் அவரே. காலத்தின் களத்தில் கூட எஞ்சிநிற்பவர்.

பெருங்களிறு மீதமர்ந்து விளையாடுபவர்கள் கவிஞர்கள். அந்த ‘கொம்பனிலிருந்து’ இருந்து அவர்கள்’ பெருங்களிரை’ வெளிக் கொண்டுவருகிறார்கள். புறப்பாடல்களின் காதல் என்று இந்த உணர்வை சொல்லலாம். அந்த கருணை அன்று நெல்லிக்காயில் ஆழத்தில் உறையும் கனியை போன்று மானுடத்தின் ஆழத்தில் உறைந்த ஒன்று.

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்

நீர்த் துறை படியும் பெருங்களிறு போல

இனியை ..

புறம்: 94

போர்த்துறையிலேயே நின்று திளைக்கும் களிரை நீர்த்துறையில் படிய வைக்கும் சொல்லை கொண்டது ஒவையின் புறப்பாடல்கள்.







Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...