Skip to main content

அரிதாரம்

 ஊரில் ஒரு மாதமாக பொன்னர் சங்கர் கூத்து நடக்கிறது. சாயுங்காலமானால் ஒலிப்பெருக்கியின் ஆதிக்கம் துவங்கிவிடும். இன்னொரு பக்கம் பள்ளிகளில் ஆண்டுவிழாக்கள். நான் எங்கள் ஊர் பள்ளியில் தற்காலிக ஆசியராக பணி செய்த போது பணியில் சேர்ந்த ஆண்டின் ஆண்டுவிழாவி்ன் போது விழித்துக்கொண்டு நின்றேன். அது வரையான தன்னம்பிக்கை மிக்க ஆசிரியர் தலைகுனியும் நேரம்.

நடனமாட தெரியாது..ஒப்பனை செய்யதெரியாது . 'புது டீச்சருக்கு லிப்ஸ்டிக் கூட போட்டுவிட தெரியல," என்று வாயில் கை வைத்து பிள்ளைகள் என்று சிரித்தன. உண்மையிலேயே பெண்ணாய் கொஞ்சம் அவமானமாகத்தான் இருந்தது.

" ஏம்மா...இந்த புடவைங்களையாவது பிள்ளைகளுக்கு கட்டி விடேன்..." என்று சகஆசிரியைகள் சலித்துக்கொண்டார்கள்.

கல்வியியல் கல்லூரி படிக்கும் போது இருபத்துநான்கு வயதில் முதன்முதலாக சேலை கட்டிப்பழகினேன். இன்று வரை எனக்கு புடவை வசதியான உடை இல்லை. நான் தவிர்க்கும் உடையாகவே இருக்கிறது. 'புடவை ஒரு கன்வீனியன்ட்டான டிரஸ் இல்லை' என்பது என் கருத்து. கவுன், மிடி, பாண்ட் டீசர்ட் ,தாவணி,சுடிதார் என்று கடந்து வந்ததில் இன்றுள்ள அனார்கலிகுர்தா தான் எனக்கு மிகவும் பிடித்த உடை என்று சொல்வேன். அடுத்ததாக தாவணியும் சேர்க்கலாம். அதற்கு பெயரே சிற்றாடை. பதின் வயதில் வசதியான ஆடை. ஆடிகுதிப்பது என்றாலும் அமைதியாக 'சிவனே' என்று இருப்பதற்கும் ஒத்துபோகும் தாவணிபாவாடை. அனார்கலி குர்தா நம்மை சிறுமியாக்குவது. சிறு வயதில் பாவாடையை சுற்றி பூப்போலாக்கும் தருணத்தை பல ஆண்டுகள் கழித்து அனார்க்கலி குர்தா மீண்டும் தருகிறது . இந்த ஆடையில் ஆடை பற்றிய எந்த கவனமும் தேவை இல்லாமல் நம் இயல்பில் நாம் இருக்கலாம்...பையன்கள் இருப்பது போல. 

கல்லூரி விடுதியில் சேலை கட்டி பழகுவது என்பது ஒரு வித்தை மாதிரி தான். கல்வியியல் கல்லூரி விடுதி வித்தியாசமானது. இருபது பேர் கொண்ட அறையில் இடப்பாற்றாகுறை காரணமாக அவரவர் படுக்கை மீது ஏறி நின்று தான் புடவை கட்டமுடியும். உண்மையில் கல்வியியல் கல்லூரிகளின் விதிமுறைகள் நாங்கள் படிக்கும் போது மிகவும் கெடுபிடியானது. உடுத்துவதில், நேரம் கடைபிடிப்பதில், பேசுவதில் என்று அனைத்திலும் மிடுக்காக, கட்டுப்பாடாக மாறிவிடும் காலம் அது. பெரும்பாலும்  கிராமத்து நடுத்தர குடும்பத்து இளம்பெண்கள் நிமிர்ந்து பார்த்து நடக்கதொடங்கியதே ஆசிரியப்பயிற்சிக்கு சென்ற போதுதான். அது ஒரு பொன்னான காலம் என்று சித்திகள் அம்மாக்கள் காலத்து மூத்தவர்கள் சொல்வதுண்டு.

முந்தானையை செருகி கையில் புத்தகத்தை எடுத்தாலே மிலிட்ரி தோரணை வந்துவிடும் என்ற கிண்டல் செய்வார்கள்.  அவசரமான காலைகளில் நாசுக்காக புடவை உடுத்துவது என்பதற்கு ஜகஜால கில்லாடித்தனம் வேண்டும். அதற்கு நாம் வழக்கமாக புடவை உடுத்தும் விதம் ஒத்து வராது. ஒரு சாகசவீரனின் லாவகத்துடன் சட்டென்று உடுத்தும் பழக்கம் எங்களில் சிலருக்கு இருந்தது. அது பெரியார் மணியம்மை கல்லூரி 'மரபில்' உருவான முறை. என் தங்கை மணியம்மையில் பயின்றவள் என்பதால் எனக்கு அந்த முறையை சொல்லிக்கொடுத்திருந்தாள்.  

இப்படி தலைகீழாக உடுத்தி பழகிய முறையில் புடவையை மற்றவர்களுக்கு உடுத்திவிடுவது சிரமம். அதனால் பள்ளி ஆண்டுவிழாவின் போது பிள்ளைகளுக்கான ஒப்பனை நேரத்தில் தேமே என்று நின்றேன். பின் போட்டுவிடுவது,பூ வைப்பதற்கு பின்களை எடுத்துக்கொடுப்பது,காலடிகளில் அமர்ந்து சேலை மடிப்புகளை சரி செய்வது போன்ற 'அடியாள்' வேலை எனக்கு.

வாராது வந்த மாமணியாய் வந்த எழுத்தே இந்த சூழலில் என்னை காத்து ரட்சித்தது.  சின்ன சின்ன நீதி நாடகங்கள் மீது எனக்கு ஈடுபாடு இருந்தது. அதை மற்ற ஆசிரியர்கள் பெரிதாக அங்கரிக்கவில்லை. பிள்ளைகளுக்கும் வசனங்களை மனப்பாடம் செய்வதை விட நடனமாடுவது பிடித்தது.


பிள்ளைகள் நடனமாடும் முன் அவர்கள் ஆடும் நடனம் பற்றியும், பாடல்கள் குறித்தும் மேடையில் சில வரிகள் பேச வேண்டும். அதை எழுதுவது என் வேலை.  எழுத்துக்கென்ற மாரியாதை கிடைக்கும். ஓரமாக ஒரு மேசை,சில தாள்கள்,ஒரு பேனா. ஆண்டுவிழா என்பது திருமணம் போல ஒரு கூட்டு முயற்சி. ஆளாளுக்கு பரபரத்துக் கொண்டிருப்பார்கள். ஆண்டு விழா நாளில் பெரும்பாலும் என் கைளில் மட்டும் தான் பேனா இருக்கும். ' பேனா குடும்மா...ஏய் பசங்களா டீச்சர்க்கிட்டருந்து அந்த பேனாவ வாங்கு' என்று ஆசிரியர்கள் கேட்ட நாட்களை புன்னகையுடன் நினைத்துக்கொள்கிறேன். 

ஆண்டுவிழா நாட்களில் 'எதாச்சும் மேக்கப் போட கத்துக்கலாமில்லம்மா.. இந்த டீச்சருக்கு ஒன்னும் தெரியலன்னு பிள்ளைங்க நினைப்பாங்க..' என்று என் ஆசிரியர் கவலைப்படுவார். [எனக்கு ஆசிரியராக இருந்தவர்] . நான் பாடல்களுக்கான வசனங்களை எழுதி அவரிடம் தருவேன். கவனமாக வாசித்துக்காட்டி 'சரியாம்மா..' என்று கேட்டப்பின் மேடையில் வாசிப்பார். அவருக்கு புதுபாடல்கள் பற்றி எதுவும் தெரியாது. 'வரியே காதுல விழல' என்பார். 

 மூன்று நாட்களுக்கு முன்பு பக்கத்துஊர் பள்ளியிலிருந்து ஆண்டுவிழாவிற்கு வசனம் எழுதித்தரும்படி வெள்ளி கிழமை சாயுங்காலம் ஒரு தற்காலிக பள்ளிஆசிரியை வந்து கேட்டார். மிகவும் இளம் பெண். இந்த ஆண்டுதான் கல்வியியல் கல்லூரி முடித்ததாக சொன்னார். அன்று இருந்த என்னை பார்த்தது போல இருந்தது. இரண்டுநாட்களாக மேசைமீது அவள் கொடுத்த தாள்கள் இருந்தன. இந்த சிலஆண்டுகளில் என்எழுத்து வெகுவாக மாறியிருக்கிறது. பாடல்களுக்கான குறிப்பு எழுத முடியுமா என்று சந்தேகம். பத்து பாடல்கள். காலையில் எழுந்ததும் கடகட வென்று மருந்து குடிப்பது போல எழுதி வைத்து விட்டேன். 

நாம் ஆதியில் உடை அணிந்ததற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம்.  நம்மில் வெளிப்படும் விலங்கை மறைப்பது அதில் ஒரு காரணமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆடை அத்தியாவசியம் என்ற நிலை மாறி அழகிற்காக பின் அலங்காரத்திற்காக என்று மாறி,இதற்கு அடுத்த நிலையில் மனிதன் தன்னை வேறொன்றாக வெளிப்படுத்திக்கொள்ளும் [தானே வேறொன்றாக மாறும்] கருவியாகும் போது அரிதாரமாகிறது. புறத்தை மாற்றுதல் [அல்து புறத்தை வனைதல்] என்பது உன்னதமாகும் இடம் அரிதாரம். அங்கே அது கலையாகிறது.


                 [ நடிகர் கமல்ஹாசன்]

உத்தமவில்லன் திரைப்படத்தில் கமல் தன் முகஒப்பனையை அழிக்கும் இடம் ஒன்று உண்டு. அதில் கருப்பு மஞ்சள் சிவப்பு வண்ணங்கள் குலைந்து குழம்பி அழியும். அந்த இடம் என்னை பொருத்த அளவில் தமிழ்சினிமாவில் ஒரு உன்னதமான இடம். கண்ணீரில், துயரில், நிலையின்மையில், காலத்தின் முன்பு, அன்பின்முன்பு அழிந்து குலையும் மனித அகம் ஒன்று அங்கே முகம் காட்டும். அந்த காட்சி அந்த திரைப்படத்தின் சூழலுக்குள் காட்டும் அர்த்தத்தை விட அந்த எல்லையை தாண்டி பலமடங்கு விரியக்கூடியது.


Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...