Skip to main content

அரும்பு

 


சாயுங்கால வெயில் தணிந்திருந்தது. எங்கள் சுற்றுக்குள் உள்ள நான்கு வீடுகளிலும் மதியஉறக்கம் முடித்த அம்மாக்களின் நடமாட்டம் தொடங்கியது. நான்கு வீடுகள் சுற்றியிருக்க வீடுகளுக்கு நடுவில் உள்ள சிமெண்ட் தளம் இறகுபந்து விளையாட்டு பயிற்சிக்களம் அளவுக்கு மேல் இருக்கும். தெற்கு ஓரத்தில் பழைய கிணறு ஒன்று. அதன் முடிவில் கிழக்கு பார்த்த சுற்றுசுவரில் பெரிய இரும்பு கதவுகளின் முன்னே வண்டி வந்து நின்றது.

சனிக்கிழமை என்பதால் வங்கியிலிருந்து சீக்கிரமே அப்பா வந்துவிட்டார். நான் அவருக்கு கைக்காட்டிவிட்டு ஓடிப்போய் கதவுகளைத் திறந்துவிட்டேன். திரும்பி வந்து துவைக்கும் கல்லில் அமர்ந்து கொண்டேன். அவர் ஹீரோ ஹோண்டாவை உள்ளே தகரதாழ்வாரத்தின் அடியில்  நிறுத்தி விட்டு கருப்பு தோள்பையை கையில் பிடித்தபடி என் அருகில் வந்து நின்றார்.

“எப்பப்பாத்தாலும் இந்த ஹெட்ஃபோனை மாட்டிக்கிட்டே திரியற. யாரு பேசறதையும் கேக்கறதில்ல,”

“பாட்டு கேக்கறது ஒரு தப்பாப்பா,”

 “பொழுதன்னைக்கும் பாட்டா..லீவ்ல கம்ப்யூட்டர் க்ளாஸ் போகனுன்னியே..என்னாச்சு..இப்படிஒக்காந்து ஒக்காந்தே துவைக்கற கல்லை தேய்க்கப்போறியா,”

“இல்லப்பா..விசு ஸ்டார் கம்ப்யூட்டர்ஸ்ல  கேட்டுட்டு வந்திருக்கான்..மன்டே வர சொன்னாங்க,”

“என்னவோ பண்ணுங்க..லீவை வேஸ்ட் பண்ணாதீங்க. படிக்கப்பிடிக்கலேன்னா  ட்ரைவிங் க்ளாஸாச்சும் போங்க..வரவழியில கண்ணனூர் ரோட்ல பிள்ளைங்க கார் பழகுது. துறையூர்டவுன்ல இருந்துக்கிட்டு எதாவது க்ளாஸ் போகனுன்னு தோணுதா உனக்கு,” என்றபடி வடக்குபக்கமிருந்த  வீட்டிற்குள் நுழைந்தார். ஒலிவாங்கியை அலைபேசியில் இருந்து எடுத்தேன் . விசு கையாட்டியபடி வந்தான். பாடல் வெளியே கேட்டது.

புள்ளிமான்கள் புன்னகை செய்து வேடனை வீழ்த்தும்…

“கேட் ஓப்பன்ல இருந்தா மூடிவைன்னு சொன்னா கேக்கறியா நீ,” என்றவாறு உள்ளே வந்து கதவை சாத்தினான்.

“டேய்..இந்தப்பாட்டு நல்ல மெலடி பீட்…சூப்பரா இருக்கு,” என்று தலையை ஆட்டி ஆட்டி காண்பித்தேன்..

“குளிச்சிட்டு வந்து நான் ஒரு பாட்டு வைக்கிறேன் பாரு,”

எப்பொழுதும் முடிவெட்ட சென்றால் கொடூரமாக திரும்பிவருவான். இன்று முகத்தை சுருக்கும் போதும் அழகாக இருந்தான். 

“அப்பா கோவமா இருக்காரு..நாளைக்கு க்ளாஸ்க்கு கேட்டுட்டு வரலாம்,”

“ம்..போலாம். எங்கூடவே வரக்கூடாது. தனியா உன் சைக்கிள்ல்ல முன்னாடிப் போ. பின்னாடிதான் வருவேன். ஒன்னாவே போனா பசங்க கிண்டல் பண்றானுங்க,”

“அப்பா ட்ரைவிங் கிளாஸ் போறீங்களான்னாரு..போலாமா?”

“எங்கம்மாக்கிட்ட சொல்றேன். அப்பா என்ன சொல்வாறுன்னு தெரியலையே,”

“கார் ஸ்டேண்ட் கணேஷ் அண்ணாக்கிட்ட ட்ரைவிங் கிளாஸ் எங்க போலான்னு விசாரிக்கலாம்,”

இவனிடம் சொல்லியாச்சு என்ற திருப்தியுடன் பாடலை விட்ட இடத்திலிருந்து கேட்கத்தொடங்கினேன்.

“டேய்..விசு..மீசையெல்லாம் வச்சு அழகா மாறிட்டியே..காலேஜ் வேற போகப்போற,”என்று மாமி வேகமாக சொல்லியபடி வாளியில் இருந்த துணிகளை கொடியில் விரித்தாள். விசு குனிந்து முகத்தில் கைவைத்துக் கொண்டான். துண்டை காயப்போட வந்த அப்பா, விசுவைப் பார்த்து சிரித்துவிட்டு சென்றார். சத்ததைக்குறைத்து அவர்களின் பேச்சை கேட்டுவிட்டு அவன் முகத்தைப்பார்த்தேன். தெரிந்தும் தெரியாமலும் பென்சில் ட்ராயிங் போல மெல்லிய மீசை. பார்க்க ஒருமாதிரி இருந்தது. கம்பி வலையிட்டு மூடியிருந்த கிணற்றின் பக்கமாக திரும்பினேன்.

விசுவின் அம்மா அவனையே பார்த்துக்கொண்டு வீட்டு வாசல்படியில் அமர்ந்திருந்தார். சில நேரங்களில் அம்மாக்களின் கண்கள் நிலையாக நின்று விடும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளமுடியாது.

நான்குநாட்களுக்கு முன் காசிவிஸ்நாதர் கோவிலுக்கு போகலாம் என்று மாமி அழைத்தார். நான்கு அம்மாக்களும் விசுவும் நானும் சேர்ந்து சென்றோம். ஊரிலிருக்கும் தாய்மாமா எடுத்துக்கொடுத்த ஒரு தாவணிப்பாவாடை புதிதாகவே இருந்தது. அதை எடுத்து உடுத்தும்போது அம்மா இப்படித்தான் பார்த்தாள். நான் அவளைப் பார்ப்பதை உணர்ந்து  கண்களை ஜன்னல் பக்கமாகத் திருப்பிக் கொண்டாள். 

அம்மாக்கள் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து புதிதாக வந்திருந்த க்ரேப் சில்க் புடவை  பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். “பழைய மாடல் தான். மறுபடி வந்திருக்கு,” என்ற மாமியிடம் அம்மா, “பிள்ளைங்கள யூனிஃபார்ம்லயே பாத்துக்கிட்டே இருக்கறதால வளர்றது தெரியல மாமி. காயத்ரி ஹாஃப் சாரியில பெரியவளா தெரியறா,” என்று  மாமியிடம் சொன்னாள்.

உடனே விசு,” இந்த ட்ரஸ் காயாவுக்கு ஸூட் ஆகல ஆன்ட்டீ..இவளால நடக்கவே முடியல,” என்றான்.

“ஹேண்டில் பண்ணத்தெரியலன்னு சொல்லனுண்டா. இந்த ட்ரஸ்ல அழகா இருக்கா,” என்று விசு அம்மா அவன் தோளில் கைப்போட்டு சிரித்தாள். அம்மா அவனை இழுத்து இழுத்து அருகில் வைத்திருந்தாள். எங்காவது ஓடிவிடுவான் என்பதைப் போல இருந்தான். 

“இவதான் சடசடன்னு முருங்கமரமாட்டம் வளந்துட்டாளே...எங்க கீதாக்கூட இப்படிதான் இருந்தா. கல்யாணம் முடிவு பண்ற வரைக்கும் அவ புடவை கட்டினா எனக்கு பக்கு பக்கு இருக்கும்..இவ வளந்தாலும் வெட வெடன்னு இருக்கா பாரு,”

அன்றிலிருந்து அம்மா  பத்துநாட்களுக்குள் மூன்று முறை மீன், கறி கடைகளுக்கு அப்பாவை  அனுப்பிவிட்டாள். பீரோவை அடுக்கி வைத்து என் ஆடைகளை, உள்ளாடைகளை சரிபார்த்து பலவற்றை பழையத்துணியில்  போட்டாள்.

ஒன்பதாவது படிக்கையில் இருந்தே அம்மா தொடுவது குறைந்து போயிருக்கிறது. அதற்கு முன் கட்டிப்பிடித்துக்கொண்டே இருப்பாள். முடியை துவட்டிவிடும் போதும் தள்ளி நின்றுதான் துவட்டுகிறாள். மற்றதிலெல்லாம் சரியாகத்தான் இருக்கிறாள். எப்போதும் அதட்டிக்கொண்டே இருப்பதால் அம்மாமீது எரிச்சலாக வருகிறது. என்றாலும் எனக்குமே அம்மாவிடமிருந்து தள்ளிப்படுத்தால்தான் உறங்கமுடிகிறது. எப்போதாவது அம்மாவின் கைப்பட்டால் நான் விழித்துக்கொண்டு தள்ளிப்படுப்பதெல்லாம் அம்மாவிற்கு எப்படியோ தெரிந்துவிடுகிறது.

“ஏன்டீ என்னைய டென்சனாக்கற,” என்றுதான் அடிக்கடி சொல்கிறாள். விடுமுறை என்பதால் நாள்முழுவதும் அம்மாவுடன் இருக்கமுடியவில்லை. நான் செய்யும் எதையுமே அவள் சரியாக செய்யவில்லை என்று தான் சொல்கிறாள். அதனால் தான் இப்படி தனியே வந்து நிற்க வேண்டியிருக்கிறது. சற்றுமுன் சம்மணம் போட்டு அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன்.“சும்மா பாக்கமுடியாதா..மடக்கிவச்சும் காலைஆட்டிக்கிட்டே இருக்க. பாக்கறதுக்கு நல்லாவா இருக்கு,” என்று கத்தினாள்.

பள்ளிக்கூடம், சிறப்பு வகுப்பு என்று அலைந்து திரிந்து வீட்டிற்கு வந்தால் எப்போது தூங்கலாம் என்றிருக்கும். காலையிலேயே திட்டித்திட்டி எழுப்புவாள். அம்மாவின் குரலை  அலாரம் போல கேட்டுக்கேட்டு எரிச்சலாக வரும். அன்று பிரதோசம் என்பதால் கோவிலில் கூட்டத்தில் அம்மா அருகில் நெருங்கி நின்று கொண்டேன். கோவிலுக்குள் மெல்லிய இருள். மல்லிகைப்பூவும் அம்மாவின் பான்ஸ்பவுடர் மணமும் வியர்வை வாசமுமாக என்அம்மாவை  நீண்ட நாள் கழித்து உணர்ந்தேன். அதோடு இணைந்து கோவிலின் பத்தி, சாம்பிராணி, கதம்ப வாசனைகள். பின்னாலிருந்து அனிச்சையாக அம்மாவை கட்டிப்பிடித்துக்கொண்டேன். அம்மா என் கழுத்துக்குதான் இருந்தாள். தலையை உயர்த்தி அன்னாந்து என் முகத்தைப் பார்த்தாள். சின்னஞ்சிறிய ஒற்றை வைரக்கல் மூக்குத்தி மைக்ரோஸ்கோப்பிற்கு அடியில் இருக்கும் ட்ராப்லெட்டை போல அசையாமல் அழகாக மின்னியது. கண்களும் அது போலவே இருந்தன. மை தீட்டிய கண்கள் அழகான பெரிய ட்ராப்லெட். நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். அம்மா சிரித்தபடி மெல்ல கைகளை எடுத்துவிட்டாள். 

கோவிலை சுற்றிவிட்டு வெளியே வந்தால் வெளிச்சம் கண்களை சொடுக்கியது. மின்னல் போல ஒரு வலி வந்து மறைந்தது. மருத்துவர் இருளில் அலைபேசியை பார்க்கக்கூடாது என்று கண்டித்தது நினைவில் வந்தது. கண்ணாடியை கழட்டி அம்மாவின் பருத்திப்புடவை முந்தானையை இழுத்து துடைத்தேன். அம்மா சிரித்தபடி“நம்மள்லாம் இவளுகளுக்கு துடைக்கிற துணி மாதிரி மாமி,” என்றாள்.

“பிள்ளைக நம்ம முந்தானைய பிடிக்கறதே ஒரு சொகம்..நீ வேறே…கீதா இப்படிதான் முந்தானைய இழுத்து இழுத்து முகத்தை துடைப்பா…ஏண்டின்னு கேட்டா..இதவிட நல்ல காட்டன் துணி கிடைக்குமாம்பா,”

“ஸ்கூல் பஸ்ஸிலயே போயிட்டு வந்து பழகிட்ட..எங்கப்பாத்தாலும் கும்பலா தாண்டீ இருக்கும். தள்ளி நின்னு பழகிக்கனும்,” என்றாள். மாமி தலையாட்டி சிரித்தாள். கூசி சுருங்கும் கண்களால் பார்ப்பதற்கு அம்மா ஆயில் பெயிண்டிங் மாதிரி இருந்தாள். கண்களை துடைத்துக்கொண்டேன். அம்மா இப்படியே இருந்தால் என்ன?

இப்போது விசுவின் அம்மாவும் அப்படிதான் விசுவை பார்த்துக்கொண்டே அசையாமல் இருக்கிறாள். அப்படியே விசுவை அனகோண்டா மாதிரி தன் கண்களை திறந்து விழுங்கப்போவதைப் போல.

விசுஅம்மாவின் குரலால் சட்டென்று தலையை உலுக்கிக்கொண்டேன். “போய்குளிச்சுட்டு வாடா..மீன் வறுக்க சொன்ன. அப்படியே கிடக்கு,” என்றபடி எழுந்து சென்றார்.. நான்கு வீடுகளுக்கும் வெளியே பொதுவான ஒரு குளியலறை உண்டு. இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வரும் போதும், அப்பாக்கள் பசங்கள் முடிவெட்டிவிட்டு வரும் போதும் அங்கேதான் குளிப்பார்கள். விசுஅம்மா துண்டும் சோப்பும் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தார்.

அவன் குளியலறைக்குள் சென்றப்பின் விசுஅப்பாவின் புல்லட்டின் சத்தம் கேட்டது. வட்டிக்கடையில் இருந்து வந்து விட்டார். இந்த வீடுகள் அனைத்தும் அவர்களுடையது தான். அனைவரிடமும் நன்றாகத்தான் பேசுவார். என்றாலும் அவர் வீட்டில் இருக்கும் போது அத்தனை கலகலப்பிருக்காது. ‘இந்த மனுஷன் எப்ப கிளம்புவாறுன்னு மனசுக்குள்ள ஒரு கண்ணு இருந்துண்டே இருக்கு. இவரைப்பாத்துதான் மாமா தேவலைன்னு ஆயிடுது’ என்று மாமி அடிக்கடி சொல்வாள். உடனே விசுஅம்மா ‘பிறந்த விதியை செத்துதான் மாத்தனும்’ என்பார்.  புல்லட்டிற்கு ஏற்ற உடல் அவருக்கு. கார் இருந்தாலும் புல்லட்டை தான் பயன்படுத்துவார். 

அவர் வண்டி சத்தம் கேட்டு  தயா மாமா வெளியே வந்தார்.

“சார்…இந்த லீவ்ல ஒருவாட்டி வீட்டுக்கெல்லாம் பெயிண்ட் பண்ணிறலான்னு தோண்றது,”

அவர் தலையாட்டினார். அப்பாவும் பேசத்தொடங்கினார். ஊருக்கு சென்றிருந்த பெருமாள்மாமாவும் கலைஅத்தையும் ஆட்டோவிலிருந்து இறங்கினார்கள். விசுஅம்மா சற்றுத்தள்ளி நின்று கொண்டிருந்தார்

“ஊர்ல எல்லாம் சௌக்கியமாங்க,” என்ற விசுஅப்பாவின் குரல் கணீரென்று ஒலித்தது. அனைவரும் இருந்ததால் வீடுகளுக்கு என்னென்ன செய்யலாம் என்று பேச்சு மாறியது. குளியலறை கம்பி  முதல் சமையலறை கழுவுதொட்டி வரை மாற்ற வேண்டியவைகளை சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

“இப்பெல்லாம் அப்பார்ட்மெண்டா தான் கட்டி வாடகைக்கு விடறாங்க…இந்த வீட்டுக்கு ரொம்ப சீர் பண்ணி செலவு பண்ண முடியாதுங்க. எழுபத்தி ஒன்னுல கட்டின வீடு இது. முப்பத்தேழு வருஷமாச்சு. இன்னும் நாலஞ்சு வருசத்துல இடிச்சுட்டு சின்னதா ஒரு அப்பார்ட்மெண்ட் கட்டலான்னு யோசனை,” 

விசு வெளியே வந்து ஓரமாக நீண்ட கொடிகளில் ஒன்றில் துண்டை விரித்தான். தலைமுடியை தட்டிக்கொண்டான். டீசர்ட்டை இழுத்துவிட்டபடி கிணற்றின் பக்கமாக நின்றான். பைகளை வீட்டினுள் வைத்துவிட்டு வந்த கலைஅத்தை விசுவின் கன்னத்தில் கைவைத்து சொடுக்கினாள். அவள் கிராமத்து பழக்கம் அது.

“கலையான முகம் விசுக்கு,” என்று அவள் சிரிக்கும்போது விசுவின் அப்பா சட்டென்று திரும்பி விசுவை பார்த்தார். அவரின் பார்வை மாறியது. கலைஅத்தை சற்று தள்ளி நின்று கொண்டாள். நெற்றியை சுருக்கி, “என்னடா..” என்றார். அமைதியாக கைகளை கட்டிக்கொண்டான்.

“கேக்றனில்ல,”

தலையை குனிந்து கொண்டான்.

“எதுக்கெடுத்தாலும் உங்கம்மா மாதிரியே தலை குனிஞ்சுக்கோ,”

“ஏண்ணே இப்படி வெரட்றீங்க. நீங்க என்ன கேக்கறீங்கன்னு தெரியாம அவன் எப்பிடி பதில் சொல்வான்,” என்று  கலைஅத்தை மெதுவாகக்கேட்டாள்.

“நீ பேசமா இரும்மா. உன்னைய யாரு மீச வைக்க சொன்னா,”

“ஏன் சார்…காலேஜ் போகப்போறான். வச்சா நல்லாருக்குன்னு யாராவது ஃப்ரண்டு சொல்லியிருப்பான்,” என்று கூறிய அப்பா அவரின் பேச்சை மாற்றுவதற்காக மறுபடி வீட்டுபேச்சை இழுத்தார்.

“இல்ல சார்..எங்கக்குடும்பத்துல பழக்கமில்ல..உங்கம்மா எதுவும் சொல்லலியாடா,”

மெதுவாக ஒவ்வொருவராக வீட்டிற்குள் சென்றோம். வெளியே  விசு கைகளை கட்டி குனிந்து நின்றான்.

“வீட்டுக்குள்ள வரக்கூடாது,”

“இருட்டிருச்சுங்க..நாளைக்கு பாத்துக்கலாம்,”

“அப்பநான் சுடுகாட்டுக்கு போறேன்…நீயும் உம்மவனும் வீட்ல இருந்துக்கங்க” என்ற சத்தமும், வெளிக்கதவை வேகமாக திறக்கும் சத்தமும் கேட்டது. அரைமணி நேரம் கழித்து அப்பா சட்டையை போட்டுக்கொண்டு கிளம்பினார். 

விசுஅம்மா வெளியே சிமெண்ட் தரையில் கால்களை ஒருபுறமாக மடக்கி அமர்ந்திருந்தார். எப்போதும் கஞ்சிபோட்ட பருத்திப்புடவைதான் கட்டுவார். நல்ல உயரம். திருச்சி சீதாலட்சுமிராமசாமி கல்லூரியில் படித்தவர். ‘விசுஅம்மா ரொம்ப அழகு. அவங்கப்பாவுக்கு மேட்சே இல்லை’ என்று சொல்லி அம்மாவிடம் ஒருநாள் கன்னத்தில் வாங்கினேன்.

விசு கிணற்றின் சுற்றுசுவரில் அமர்ந்திருந்தான்.

“என்கிட்டாயாச்சும்  சொன்னியாடா,”

“பிரசன்னாவும் நானும் சேந்து சலூனுக்கு போனோம்மா. சலூன்காரர்தான் நல்லாருக்கும் இனிமே பெரிய பசங்கதானேன்னு இப்பிடி சேவ் பண்ணினார். நல்லாதானே இருக்குன்னு வந்துட்டோம்,”

நேரம் ஆக ஆக ஆள் மாற்றி ஆள் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

“நான் போய் தேடி கூட்டிட்டு வரேன்..நீங்க பதறாதீங்க..விசு நீயும் வா,”என்று அப்பா வண்டியை எடுத்தார். இரவு நேரமாகிக்கொண்டிருந்தது. மாமி விசுஅம்மாவின் அருகிலேயே உட்கார்ந்திருந்தார்.

இரவு சாப்பிடும் நேரம் கடந்துகொண்டிருந்தது. வீடுகளில் இருந்து சப்பாத்தி தோசை சாம்பார் வாசனைகள் கலந்து வந்தன. சாப்பிட்டதும் நான் ஷோபாவில் படுத்துக்கொண்டேன். அனைவரும் பத்துமணிவரை வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். விசுஅம்மா எவ்வளவு சொல்லியும் சாப்பிடவில்லை.  இரண்டு வீடுகளில் கதவை திறந்து வைத்து விளக்கு அணைக்கப்பட்டது. இன்னும் அப்பா வரவில்லை. விசுஅம்மா வாசல்கதவிற்கும் வீட்டிற்குமாக நடந்தாள்.

வண்டியின்ஓசை கேட்டதும்  அம்மா அவசரஅவசரமாக ஓடி கதவைத் திறந்தாள் . மூவரின் கால்களிலும் புழுதி படிந்திருந்தது. அப்பாக்கள் இருவரும் முதலில் குளித்துவிட்டு வந்தார்கள். ஏதோ பேசிய அப்பா விசுஅப்பாவின் தோள்களில் தட்டினார். அவர் உள்ளே சென்றதும் அனைவரும் வாசலில் கூடினோம்.

விசுஅம்மாவிற்கு பேசவே முடியவில்லை. முகம் முழுக்க சிவந்திருந்தது. காதுமடல்களும் மூக்கும் இரத்த சிவப்பு நிறத்தில் இருந்தது.

“நிஜமாலுமே சுடுகாட்ல போய் ஒக்காந்திட்டார்,”

விசுஅம்மா முந்தானையை சுருட்டி இறுக்கிப்பிடித்துக்கொண்டார். யாரும் ஒன்றும் சொல்லவில்லை. 

“வரவே மாட்டேனுட்டார். சின்ன பையன் எவ்வளவு நேரமா நின்னான். இவரா வாயே திறக்கல. இழுத்துட்டு வரதுக்குள்ள என் ஜீவன் போயிருச்சு,”

மாமி அவசரமா உள்ளே போய் சிறிய தட்டுடன் வந்து அப்பாவுக்கு திருநீறு வைத்தாள். அம்மாவிடம் ஏதோ சொல்லி இழுத்து சென்றாள். அப்பா வீட்டினுள் சென்று அவருடைய ரேசரை கொண்டுவந்து விசுவிடம் கொடுத்தார். வாங்கிக்கொண்டான். அவன் தோளில்தட்டி பக்கவாட்டில் கட்டிப்பிடித்தபடி,“இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும் மீசை வைக்கலாம். இப்ப வேணாம்,” என்று சொல்லிவிட்டு  திரும்பி வந்தார்.  அப்பாவின் முகத்தைப் பார்த்து மாமியின் முகமும் அழுந்தியது.  எனக்கும் விசுவிடம் ‘கிளாஸ் போலாண்டா’ என்றோ ‘கார் பழகலாண்டா..’ என்றோ சொல்லவேண்டும் போல இருந்தது. அவன் நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

விசு  வெளிக்கதவை பூட்டிவிட்டு இருட்டில் நடந்து சென்றான். அவன் அம்மா முன் போலவே துண்டு ஒன்றை  அவனிடம் தந்தார். உள்ளிருந்து அம்மா, “லைட் ஆஃப் பண்ணுடீ,”  என்று என்னை சத்தமாகக் கூப்பிட்டாள். திரும்பினேன். அவன் நிழல் நீண்டு விழுந்து நடந்து சென்றது. அது கிணற்றின் மேலிருந்து கீழே மடங்கி கொடிகம்பியில் வளைந்து தகரக்கதவில் ஒடிந்து வேறொன்றாக மாறி உள்ளே சென்றது. அது விசுவைவிட மிகப்பெரியது.

♦♦♦♦♦


[2022 டிசம்பர் தமிழினி இதழில் வெளியான சிறகதை]





Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...