Skip to main content

மரணமும் ஆசிரியர்களும்

மனதிற்கு ஆசிரியரின் துணை எவ்வகையிலேனும் அவசியம். அதுவும் இழப்பின் காலத்தில் ஆசிரியருடன் எவ்வகையிலேனும் அருகில் இருக்க வேண்டும். அதை நான் மீண்டும் மீண்டும் நடைமுறையில் உணர்கிறேன். 

ஜூன் மாதம் சின்னய்யாவிற்கு [சித்தப்பா] உடல் நிலை மோசமானது. ஜூலை துவக்கத்தில் இறந்தார். மிக மெதுவாக படிப்படியான புற்றுநோய் மரணம். 

மாடியில் அவரை பார்த்துவிட்டு கீழிறங்கும் ஒவ்வொரு முறையும் வாழ்க்கை பற்றிய விசாரணையை தொடங்கி மனம் தொந்தரவு செய்துகொண்டிருந்தது. நீலி கட்டுரைக்காக அம்பையின் 'காட்டில் ஒரு மான்' தொகுப்பை வாசித்து முடித்துவிட்டு மாடியேறுவது தான் கடைசியாக உயிருடன் சின்னய்யாவை பார்ப்பது என்று நினைக்கவில்லை. அன்று இரவு அவர் இறந்தார். ஏற்கனவே நீலிக்காக எழுதிய கட்டுரைகளை அவரிடம் சொல்லும் போது புன்னகைப்பார். வலி இருந்தாலும் நான் சொல்லும் கதைகளையும், கட்டுரைகளையும் கேட்டு தலையாட்டிக்கொள்வார்.  அவருக்கு எழுத்தாளர்கள் ஜெயகாந்தன்,கல்கி,வாசந்தி,சுஜாதாவை பிடிக்கும். 

அம்பை சொல்கிற அளவுக்கா நாங்கள் இருக்கிறோம் என்று ஒரு முறை கேட்டார். அப்போது அவருக்கு புற்றுநோய் வயிற்றில் பரவத்தொடங்கி நுரையீரலில் கைவைத்திருந்தது. மற்றவர்கள் அவரிடம் அன்றாட விஷயங்களை பேசிக்கொண்டிருக்கும்போது நான் நான்கு ஆண்டுகளாக இலக்கியம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். இறுதியாக கடந்த சில மாதங்களாக வலிக்காக பெயின் கில்லர் ஸ்ட்ரிப் ஒட்டிய தோள்பட்டையை தடவியபடி என்னையே பார்த்துக்கொண்டிருப்பார். மெதுவாக கைநீட்டி கன்னத்தை தடவி 'செத்துப்போன எங்கக்காக்கு இப்படித்தான் கன்னம் கொலுக்கட்டை மாதிரி இருக்குன்னு தாத்தா சொல்லுவாரு' என்று சொல்லி புன்னகைப்பார். சிறு வயதில் சொரசொரப்பான அவர் கன்னத்தை எங்கள் கன்னத்தில் [நானும் தங்கையும்] தேய்ப்பதை வழக்கமாக செய்வார். நாங்கள் அய்யே என்று தள்ளிவிட்டு ஓடிவிடுவோம். சித்தி சிரிப்பார். அவருக்கு பெண்மக்கள் இல்லை. நாங்கள் இருவரும் தான்.

 இடையில் சிறு சிறு மனசங்கடங்களின் போதும் மாடிக்கு சென்று நாங்கள் அவரை பார்க்காமல் பேசாமல் இருந்ததில்லை. அவரும் எங்களுக்காக கீழே வந்து விடுவார்.

ஒருக்கட்டத்தில் இனிமேல் கதைப்பேசி அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்ற நிலை வந்ததும் பேசாமல் அருகில் அமர்ந்திருப்பேன். வலியில் குனிந்தே அமர்ந்திருப்பவரின் அருகில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகம் போல இருந்தது.

ஜூன் மாதம் ரத்தக்கசிவால் ஐ.சி.யூவில் இருந்தவரை பார்வையாளர் நேரத்தில் பார்க்க சென்ற போது அருகிலிருந்த செவிலியிடம் எங்க பாப்பா..எழுத்தாளர் என்று சொல்லி புன்னகைத்தார். அவரை முழுக்க லௌகீகவாதி என்று நினைத்திருந்தேன். 

மீண்டும் வீட்டில் சில நாட்கள் மார்ஃபின் மாத்திரைகளுடன் சிரமப்பட்டார். அவர் இறப்பை பத்து பேரும் நிதானமாகவே எதிர்கொண்டோம். எதிர்பார்த்த மரணம். அன்று இரவு ஆக்ஸிமீட்டர் பொருத்திய அவர் இடது கையை என் கைகளில் வைத்திருந்தேன். அது நின்றதும் அவர் கையை இறுகப்பற்றிக் கொண்டேன். உடல் குளிர்ந்திருந்தது. அவருக்கு ஐம்பத்து ஒன்பது வயது. அவர் தான் வீட்டு மூத்தவர்களில் இளையவர். காலத்தின் கணக்குகள் நம் கணக்குகளை ஒன்றுமில்லாமல் ஆக்குபவை.

தம்பிகள் எங்களை வெளியே செல்லச்சொல்லிவிட்டு ஆக்ஸிஜன் சிலிண்டர் இணைப்பை எடுத்தார்கள். இருவரும் முப்பதுகளின் தொடக்கத்தில் இருப்பவர்கள்.

அய்யாவிற்கு அல்சைமர் என்பதால் சின்னய்யா இறந்தது பற்றி எதுவும் தெரியாது. குளிர்பதனப்பெட்டியில் தம்பி இருக்கும் போது பக்கத்து அறையில் அவர் உறங்கிக்கொண்டிருந்தார். சில நேரங்களில் புனைவை விட வாழ்க்கை மிகச்சிறந்த நாடகத்தருணங்களை உடையது. 

நான் பதறி அழக்கூடிய ஆள் இல்லை. இது ஒரு மாதிரி தற்காப்பு நடத்தை. ஆனால் மனம் அதற்கும் சேர்த்து அலைமோதிக்கொண்டிருந்தது. இரண்டு நாட்கள் சடங்குகள் முடிந்து வாசிக்க முடியுமா என்று பார்த்தேன். வாசிக்க முடிந்தது. ஆனால் கவனத்தில் இடைவெட்டுகள். 



தினமும் ஜெ வின் கட்டுரைகளை வாசித்தேன். இதெல்லாம் ஒரு முயற்சி தான். இன்னும் சில நாட்கள் ஆகும் என்று தெரியும். ஏழாம் நாள் அம்பையின் கட்டுரையை எழுதத்தொடங்கி அடுத்த நாள் முடித்தேன். பின் கவிதை இதழுக்கான ஒரு வாசிப்பனுபவம் எழுதினேன். ரம்யாவும், நவீனும் தான் என் வாட்ஸ் ஆப்பை மீண்டும் முடுக்கியவர்கள்.

நேற்று மணிப்பூர் விவகாரம் மனதை அசைத்து திருப்பியது. இன்று ஜெ வின் தளத்தில் இயக்குனர் வசந்தபாலனின் திரைப்படம் பற்றிய கட்டுரையும்,இரவுப்புயல் என்ற கட்டுரையும் எந்த வகையிலோ மனதை ஆற்றுப்படுத்தியிருக்கின்றன. இன்று மக்தேலானால் ஆலய திருவிழாவின் கொடியேற்றம். தேவனின் பாதங்களுக்கீழே அனைவருக்கும் பாதைகள் விரிக்கின்றன.

நாம் எதையும் கடக்கத்தான் வேண்டும் என்றாலும் கடக்கும் நாட்களில் நமக்கான ஆசிரியரின் துணை அந்தரங்கமான ஒன் று. ஆசிரியர்களும் தந்தைகளும் எப்போதும் நமக்கான சொற்களால் நிறைந்தவர்கள். இருவரும் வேறு வேறானவர்கள் இல்லை. எழுத்தாளர் கலைச்செல்வியின் ஹாரிலால் நாவலில் காந்தியுடன் இருக்கிறேன்.

https://www.jeyamohan.in/185950/

https://www.jeyamohan.in/185987/







Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...