ஒரு சமூகமாக நம் குழந்தைகளை நாம் என்னவாக மாற்றிக்கொண்டிருக்கிறோம் என்று அதிகாலையில் இருந்து யோசனையாக இருந்தது. அதிகாலை 3.50 திலிருந்து உறக்கம் வரவில்லை. நான் கல்வியியல் கல்லூரி முடித்து வந்ததிலிருந்து சிறுவர்களை கவனித்து வருகிறேன்.
அவர்கள் ஏன் சிறுவர்களாக இல்லை? என்பது என்னை அடிக்கடி தொந்தரவு செய்கிறது. சூட்டிகை,குறும்பு,விஷமத்தனங்களுடன் இருக்கும் சிறுவர்கள் மனதிற்கு நெருக்கமானவர்கள். ஆனால் இன்று சிறுவர்கள் பதின்வயதுடையவர்கள் போலவோ,இளைஞர்கள் போலவோ நடந்து கொள்வதை பார்ப்பது கோபத்தை ஏற்படுத்துகிறது. [பூமர் என்பது சொல்லப்படும் காரணப்பொருளால் நல்ல சொல்] . ஊடகங்களை நாம் காரணம் சொல்கிறோம். அது ஒரு காரணம் தான்.
தனக்கு எதிரே கண்முன்னே காண்பவற்றை தான் அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் கண்முன்னால் பார்க்கும் சகமனிதர்கள் பற்றிய எந்த பிரக்ஞையும் அற்ற இளைஞர்களும் மூத்தவர்களும் அவர்களுக்கு முன் மாதிரிகளாக இருக்கிறார்கள்.
இன்று அதிகாலை மூன்றே முக்காலுக்கு விசில் சத்தமும், பாட்டு கருவியில் பாட்டு சத்தமும் கேட்டு சட்டென்று கண்விழித்தேன். எதிர் வீட்டில் வீடுகட்டுகிறார்கள். கட்டுமான பொருட்கள் வரும் வாகனமாக இருக்கும் என்று நினைத்து அமைதியாக இருந்தேன். விசில் சத்தம் எரிச்சல் அடைய வைக்கவே யார் என்று பார்க்கலாம் என்று இரும்பு கதவின் திரைசீலையை விலக்கிப்பார்த்தால் ஐந்தாறு சிறுவர்கள். தெருவே தூங்கிக்கொண்டிருக்கிறது. நாற்சந்தியில் விசிலடித்துக்கொண்டு சத்தமாக பாடல் வைத்தார்கள்.
பெரும்பாலும் நான் கோபப்படுவதில்லை. அதுவும் சிறுவர்களை கண்டாலே மனம் மலர்ந்துவிடும். அன்பு தான் கோபமாகிறது.
'மணி என்னடா ..இந்நேரத்துக்கு இவ்வளவு சத்தமா பாட்டு ..குழந்தைங்க பெரியவங்கெல்லாம் தூங்கறங்கல்ல...' என்றதும் அவர்களில் பெரியவன் சத்தத்தை குறைத்துவிட்டு குனிந்து கொண்டான்.
பிள்ளையாருக்கு தென்னம் ஒலையில் படல்கோயில் கட்டி அலங்காரம் செய்து வைத்திருந்தார்கள். நல்ல திறமை தான். இரவு ஒரு மணிலிருந்து அலங்காரம் செய்ததாக விடிந்ததும் ஒருவன் சொன்னான். விலைக்கு வாங்கிய பிள்ளையாரை விட அவர்களாகவே களி மண்ணில் செய்த குட்டிப்பிள்ளையார் அவர்களை போலவே க்யூட்டாக இருந்தது.
அவர்களில் இளையவன் 'மணி ஒன்னு' என்று எகத்தாளமாக சொன்னான். கருங்கல்லில் அமர்ந்து கால் நீட்டி அமர்ந்து கொண்டான். அவனை மட்டும் யார் என்று அடையாளம் தெரியவில்லை.
'யார் வீட்டு பயடா நீ' என்றேன். பதில் சொல்லவில்லை. மீண்டும் அதட்டியதும் 'கிழக்கால வீதி' என்று அவன் சொன்னான். பொய் என்று புரிந்துவிட்டது.
'ஹரி...அவன் யார்டா' என்றதற்கு அவன் வாயே திறக்கவில்லை.
'தனுஷ்..அவங்க அப்பா பேரென்ன' என்று கேட்டதற்கு அவனும் வாய் திறக்கவில்லை. யஸ்வந்த்,கிரி இருவரும் தலை நிமிரவே இல்லை.
இந்த இவன் பாட்டு பாடிக்கொண்டிருந்தான். முகச்சாயல் பிடிபட்டு விட்டது.
'ஜானகி தம்பி மவனா நீ...இரு உங்க தாத்தாக்கிட்ட சொல்றேன்,' என்று சொன்னதும் பாட்டை நிறுத்தினான். இந்த மாதிரி குழந்தைகள் ஒரு குழுவை உருவாக்குவார்கள். இன்னும் கொஞ்ச நாளில் தன் மூத்தவர்கள் போல அட்டகாசம் செய்வர்கள்.
எனக்கு மற்ற குழந்தைகள் பற்றி தான் கவலை. எந்த நேரம் என்றாலும் மற்றவர்களை தொந்தரவு செய்யலாம் என்று சமூகம் அவர்களுக்கு காண்பிக்கிறது.
ஒரு நாள் பிள்ளையார் தன் தாய்க்கு காவலாக இருக்கும் போது ஈசன் வந்தார். தந்தை ஈசனே என்றாலும் தாயின் தனிப்பட்ட நேரத்தில் இடையீடு செய்ய அனுமதிக்கவில்லை என்ற கதை எனக்கு சிறுவயதில் சொல்லப்பட்டது. இன்று ஈசனை எதிர்த்தார் என்பது மட்டும் Shorts ல் வருகிறது..முழு கதையும் பார்க்கப்படுகிறதா என்று தெரியவில்லை.
'ஐந்துமணிக்கும் பாட்டு போட்டுக்கலாம் ' என்று சொன்னேன். எதிர்வீட்டு வராண்டாவில் படுத்தவர்கள் ஏழுமணி வரை எழுந்திருக்கவில்லை. அவர்களின் அலங்காரத்தின் சிகரமாக இருந்த ஜோக்கர் ஒரு உருவகம் போல சிரித்துக்கொண்டிருந்தது. அவர்களின் முகங்களை கொஞ்ச நேரம் பார்த்தேன். எழுப்பிவிட தோன்றவில்லை.
அழகு 'பிள்ளை'யார் அமைதியாக அமர்ந்திருக்கிறார்.
Comments
Post a Comment