உச்சிப்பொழுதின் வெயிலில்
வாய்க்கால் தண்ணீரின் பளபளப்பு.
அம்மாச்சியின் ஊதாப்பூ சேலைக்கு
சோப்பு போட்டுக்கொண்டிருந்தேன்...
கண்கள் கூசிக்கொண்டே இருந்தது.
மூன்று நாட்களாக எந்தநிமிஷத்திலும்
விட்டு போய்விடுவாள் என்று தெரியும்.
வாய்க்காலிற்கு மேலே
களத்திலிருந்து குரல்கள்..
சேலையை அலசி கல்லில் வைத்துவிட்டு
பெருமூச்சுடன் நின்றேன்.
கால்களை தழுவி நீர் ஓடியது.
உன்னிப்பூ கொத்து காற்றிலாடி உசுப்பியது...
இருட்டிலும் வெளிச்சத்திலும் பளபளக்கும்
அம்மாச்சியின் பத்துக்கல் மூக்குத்தி போல.
Comments
Post a Comment