Skip to main content

காலம் சிதறி கிடக்கும் வெளி

வரலாற்றுப் புத்தகங்களை ‘காலம் சிதறிக்கிடக்கும் வெளி’ என்று சொல்லலாம். ஒரு வரலாற்று புத்தகத்திற்குள் நுழைவது என்பது காலத்திற்குள் நுழைவது. ஒரு வரலாற்று ஆய்வாளரோ ,வரலாற்று ஆசிரியரோ எவ்வளவு தான் வகுத்து தொகுத்து எழுதினாலும், ஒரு வரலாற்று நூல் தன்னை வாசிப்பவர்களை திசையழிந்த பறவை போல காலத்தில் பறக்க வைக்கிறது. நம் மனதிற்கு உகந்த அல்லது நெருக்கமான வரலாறு என்றால் அந்த வாசிப்பனுபவத்தை தேன் குடித்த வண்டின் திசையழிதல் என்று சொல்லலாம்.


                [  முனைவர் வெ. வேதாசலம் ]

முனைவர் வெ.வேதாசலம் அவர்களின் முதல் நூலான திருவெள்ளறை என்ற அவரின் முனைவர் பட்ட ஆய்வு நூலை வாசித்த அனுபவத்தை ‘காலத்துக்குள் திசையழிந்த அனுபவம்’ என்று சொல்வேன். ஆசிரியர் சங்ககாலத்திலிருந்து நம் காலம் வரை [1977], பல்லவர், சோழர் ,பாண்டியர் நாயக்கர் ,காலனியதிக்க காலகட்டம் வரை காலவாரியாக திருவெள்ளறையின் வரலாறு, அதன் சமூகஅமைப்பு,கோயில்கள்,கலை,மக்கள் என்று தொகுத்து ஆதாரபூர்வமான தரவுகளுடன், ஆண்டுகளுடன், கல்வெட்டு சான்றுகளுடன், அச்சு தரவுகளுடன் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு இலக்கியவாசகராக இந்த வரலாற்று ஆய்வு நூல் எனக்கு கொடுக்கும் வாசிப்பு அனுபவத்தை ‘திசையழிதல்’ என்று சொல்வேன்.

அந்த திசையழிதல் என்பதை ‘கனவுகளில் திரிதல்’ என்று சொல்லலாம். தகவல்களை, தரவுகளை, காலத்தை நம் கற்பனைக்குள் உடைத்துப்போட்டு அதன் அழகிய சாத்தியங்களை காணும் கலெடாஸ்கோப் அனுபவம்.




கொல்லிமலையை ஆண்ட சங்ககால வள்ளல் வல்வில் ஓரியிலிருந்து மழநாடு பற்றிய தரவுகளுடன் இந்த நூல் தொடங்குகிறது.



[  திருவெள்ளறை தாமரைகண்ணன் ஆலய உத்ராயண தாட்சிணாயன வாயில்கள்]

திருவெள்ளறை என்ற இந்த நூல் திருவெள்ளறை என்ற ஊரை பற்றி மட்டுமல்லாது கொல்லிமலை வரை உள்ள நிலபரப்பின் வரலாற்றை சங்ககாலத்திலிருந்து விரிக்கிறது. கொல்லிமலை தொடரின் ஒரு சிறு குன்றின் அடிவாரத்தில் உள்ள எனக்கு நான் பிறந்து வாழும் நிலம் காலத்தில்[இரண்டாயிரம் ஆண்டுகள்] விரியும் பெரிய சித்திரத்தை இந்த நூலின் மூலம் அடைய முடிந்தது. ஒரு மாயக் கம்பளத்தில் பறப்பதை போல. பல நிறங்களை உடைய பனையோலை மடிப்பு விசறியை விரிப்பதை போல. மேலும் திருவெள்ளறை பற்றிய அகாலமான புராணவரலாறும் இந்த நூலில் உள்ளது.

குறிப்பாக திருவெள்ளறையில் உள்ள தாமரைக்கண்ணன் கோவில், சிவன் கோவில் மற்றும் சப்தகன்னியர் கோவில்களை மையமாக கொண்டு இந்த நூல்  ஊர்வரலாறாகி,பின் அரசியல் மத வரலாறாக விரிந்து, அங்கு ஆட்சி செய்த மன்னர்களின் வரலாறாகி, ஆழ்வார்களின் இலக்கியங்களை தரவுகளாக்கி,கோவில்கள் கலை பற்றியும்,மக்களின் வழிபாட்டு முறைகள் பற்றிய தகவல்களுடன் விரிகிறது. 



[நிறைவு பெறாத ஹொய்சாலர் பாணி கோபுரம் : திருவெள்ளறை தாமரை கண்ணன் கோவில்]



       [ மார்கண்டேயர் குடைவறை:  தாமரைகண்ணன் கோவில்]

குறிப்பாக இந்த நூலில் உள்ள முத்தரையர்கள் என்ற சமூகம் பற்றிய தரவுகள் சட்டென்று என்னை சூழ்ந்திருக்கும் சமூகத்தை ஒரு பளிச்சென்ற மின்னல் வெட்டில் காட்டியது. நான் பிறந்ததிலிருந்து இன்று வரை இந்த குறிப்பிட்ட சமூகத்தின்  பழக்கவழக்கங்கள், வாழ்க்கை, வழிபாடு, சமூக ஒருங்கிணைப்பு, இருள், வெளிச்சம் என்று அந்த வாழ்க்கையை அனுதினமும் பார்க்கிறேன். ஆனால் வரலாற்று இடம் பற்றி இந்த நூலை வாசிக்கும் வரை தெரியவில்லை. 

மேலும் நமக்கு நாம் வாழும் நிலத்தில் உள்ள ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில் என்பது ஒரு ஆணி வேர் போல. அந்த வேர் மூலம் அதன் பக்ககிளைகள் மூலம்  அந்த நிலத்தின் சமூக பண்பாடு வரலாறு என்று எல்லா பக்கங்களில் இருந்தும் காலமும் வாழ்வும் விரிகிறது. 

திருவெள்ளறை என்ற இந்தநூல் தாமரைகண்ணனின் ஆலயத்தின் மூலம், இந்த நிலத்தை வாழ்வை சமூகத்தை பற்றிய தரவுகளை தருகிறது. அதை வாசிக்கும் அந்த நிலத்தின் ஒருஆளாக அடையும் பரவசம் இந்த நூலின் மூலம் எனக்கு கிடைத்தது. இது போன்ற வாசிப்பனுபவம்  இதுவே முதல் முறை. வரலாற்றுடன் நம் வாழ்வை இணைக்கும் ஒரு புள்ளியை உணரும் பரவசம் இது. 



இந்தக் கோயிலில் தான் முதன் முதலாக அந்தி சந்தியில் நாதஸ்வரம் கேட்டேன். அன்று அது பத்து ஏக்கர் பரப்பிலான அமைதியான கோவில். கூட்டம் கும்பல் இல்லை. எந்த சத்தமும் இல்லை. மேற்கில் மஞ்சளும் சிவப்புமாக வானம். சூழ்ந்து நின்ற பெரிய மதிலை பார்த்துக் கொண்டு கோயில் அமைந்திருக்கும் சிறுகுன்று மீது நிற்கிறேன். மயில்களும் கிளிகளும் கண் முன்னே அலைகின்றன.  கீழே எதிரே வசந்த மண்டபம். கால்களுக்கு அடியில் குடைவறை. இலைகள் காய்ந்த கோடை. ஆவாரம் மட்டும் நல்ல பச்சையும் மஞ்சளுமாக பூத்திருக்கிறது. ஒரு அசரீரி போல கோவிலிலிருந்து கம்பீரமான நாதஸ்வர இசை நான் நிற்கும் இடம் வரை கேட்கிறது. கடவுளின் குரல் இப்படிதான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

இந்த வரலாற்று நூலை வாசிக்கும் போது திருவெள்ளறையின் பல்வேறு சித்திரங்கள் மனதிற்குள் முட்டி மோதின. அங்குள்ள ஸ்வஸ்திக் கிணற்றை பற்றி ஆசிரியர் வரலாறு, சிற்பகலை சார்ந்த தகவல்கள் மூலம் பல இடங்களில் வியந்து எழுதியிருக்கிறார். உண்மையில் தனித்தனியாக நான்கு பேர் அந்த கிணற்றின் நான்கு வழிகளில் இறங்கினால் காணாமல் போனது போன்ற உணர்வை அடைவோம். கிணற்றின் அமைப்பும் அழகும் அப்படி. இந்த நூலை வாசிக்கும் போது வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டமும் ஸ்வஸ்திக் கிணறு போன்ற அமைப்பு உடையது என்ற எண்ணம் ஏற்பட்டது.

குன்றில் உள்ள குடைவறையும் கிணறும் ஒரு சமூகத்தின் பாணி. அதற்கு மேல் குன்றில் எழுப்பப்பட்ட ஒரு பெரிய கோவில் ஒரு காலகட்டத்தின் பாணி..வெளியில் உள்ள கோபுரம் இன்னொரு காலகட்டம். எல்லாவற்றிற்கும் மேலாக தொன்மையான தாய் தெய்வ வழிபாட்டிற்கு அடையாளமாக அருகருகே வெவ்வேறு ஐந்து சப்தகன்னியர் கோவில்கள். இத்தனை சப்தகன்னியர் கோவில்கள் அருகருகே இருப்பது அரிது என்று ஆசிரியர் சொல்கிறார். அந்த செய்தி ஏற்படுத்தும் மனஎழுச்சி புனைவு எழுத்தாளராக, ஒரு பெண்ணாக எனக்கு முக்கியமானது. சப்தகன்னியரிலிருந்து தாமரை கண்ணனின் நாச்சியாருக்கும், அருகே உள்ள என் குலதெய்வமான சாமுண்டீஸ்வரிக்கும் ஒரு கோடு இழுக்க முடிகிறது. மேலும் இந்த கோயிலின்  புராணமும், ஆதி சப்த கன்னியர் வழிபாடும் மிகச்சரியாக பொருந்துகிறது.

நாம் கோயிலில் நுழைந்தில் இருந்து வெளிவரும் வரை நம் காதுகளில் கேட்கும் ஒரு வரி..’இது நாச்சியா ஆட்சி செய்ற இடம்..அவனுக்கு அதிகாரம் அரங்கத்துல ..இங்க நாச்சியாவுக்கு தான் அதிகாரம்’ என்பார்கள். நாழி கேட்டான் வாசல் என்ற இடத்தில் உற்சவமூர்த்தி தான் கிளம்பும் நேரத்தையும், திரும்பிவரும் நேரத்தையும் நாச்சியாவிற்கு  சொல்ல வேண்டும் என்ற வழக்கம் இங்குண்டு.

ஒரு வாசகியான என் மனம் சென்று படியும் இடத்திற்கான தகவல்கள் இந்த நூலில் உள்ளன. இங்குள்ள ஆழ்வார்களின் சிலைகள்..பாசுரங்கள் பற்றி ஆசிரியர் தெளிவான தரவுகளை தருகிறார். 

இங்குள்ள குடைவறையான மார்கண்டேயர் குடைவறை பற்றிய தகவல்களை ஆசிரியர் தரும் போது தொன்மத்திலிருந்து சட்டென்று மனம் நெகிழும் அனுபம் கிடைக்கிறது. திருகடையூரில் மார்கண்டேயர் மீது பாசக்கயிற்றை வீச வரும் தர்மராஜன் சிவனால் எட்டி தள்ளப்பட்டுகிறார்.. என்பதுடன் நமக்கு சொல்லப்படும் கதை முடிகிறது. இந்த நூலில் திருபைஞ்சலி கோயில் புராணம் பற்றி கூறும் தகவல்களை மீண்டும் தேடும் போது தர்மராஜன் இங்கே மீண்டும் பிறக்கிறார் என்று சொல்லப்படுகிறது. தர்மராஜனை குழந்தையாய் கற்பனை செய்வதில் உள்ள புன்னகை சில நாட்களாக மனதில் இருக்கிறது. [ பழக்கதோசத்தில் கர்ஜித்தாலோ…கண்களை உருட்டி முறைத்தாலோ…சும்மா இருடா தம்பி என்று சின்னஞ்சிறு தொடையில் இரண்டு தட்டு தட்டலாம்.]

ஆசிரியர் சொல்லும் மார்கண்டேயர் குகையின் வரலாறு தகவல்களை வாசிக்கும் போது மேலும் ஆழமான மனஉணர்வை அடைய முடிகிறது. இங்கு தர்மராஜன் பிறக்கிறார்..சாகவரம் பெற்ற மார்கண்டேயர் குகையில் சமாதியாகிறார்.

வரலாறு புராணங்கள் வழி அடையும் இது போன்ற அனுபவங்கள் வரலாற்று நூல்கள் நமக்கு அளிக்கும் கொடை.

கோவில் முன் உள்ள முற்று பெறாத ஹொய்சாள கோபுரத்தின் கம்பீரம் பற்றி ஆசிரியர் சொல்கிறார். 

அது சார்ந்து எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் உண்டு. அந்த கோபுரத்தின் படிக்கட்டுகளின் கோணம் வித்தியாசமானது. அதை நூலாசிரியர் போல அறிவுதளத்தில் கண்டடையவில்லை. திடுக்கிடும் அனுபவம் மூலமாக கிடைத்தது. 

ஒரு முறை அந்த கோபுரத்திற்கு வெளியே படிகளுக்கு கீழே தள்ளி நின்றுகொண்டிருந்தேன். சட்டென்று ஒரு வைதிகர் வெள்ளை துண்டு போர்த்தி பஞ்சகச்சத்தில் மேலிருந்து இறங்கினார். காற்றில் ஆடைகள் லேசாக பறந்து கொண்டிருந்தன. அவருக்கு என் வயது இருக்கும். ஆனால் சுதாரிப்பாக பார்வையை எடுக்க முடியவில்லை. தரைக்கு வந்ததும் தான் சுதாரிப்பு வந்தது. அவர் சிரித்துக்கொண்டே கையிலிருந்த துளிசிவிள்ளலை கொடுத்தார்.

“சட்டுன்னு எதேச்சையா கண்ணுல பட்டுட்டேனா,” என்று கேட்டார். தலையாட்டினேன்.

“அது அப்படித்தான்..படிகளோட கணக்கு வழக்கு அப்படி…கீழ நிக்கறவாளுக்கு மேலேந்து வரவா வைகுந்ததுலேந்து இறங்கி வர மாதிரி ஒரு கோணம் இந்த படிகளுக்கு உண்டு..அதுக்கு நீங்க பாத்த மாதிரி சுதாரிப்பு இல்லாம இருக்கனும்..ஈவ்னிங் [ அந்தி] லைட்ல இன்னும் வேற மாதிரி இருக்கும்,” என்று சொல்லிவிட்டு சென்றார். அந்த ஊர்க்காரர் சொல்லாவிட்டால் எனக்கு அது புரிந்திருக்காது. இந்த மாதிரி அமைப்புகள் மூலம் மாயங்களை கொண்டவை நம் கோவில்கள் என்று இந்தக்கோவிலிலிருந்து தான் முதன்முதலாக எனக்கு தெரிந்தது.


வரலாற்று நூல்கள் பற்றிய வாசிப்பனுபவத்தை முழுமையாக சொல்லிவிட முடியாது. வரலாறு எனக்கு எப்போதுமே மூளையில் பலவாறாக சிதறிக்கிடக்கும். இது போன்ற வரலாற்று நூல்களை வாசிக்கும் போது எழுதியவர்களின் உழைப்பு மீது மரியாதை ஏற்படுகிறது.

 வரலாற்று ஆய்வு நூல்களை வாசிக்கும் அனுபவத்தை இன்று நடந்த ஒரு நிகழ்வு மூலம் சரியாக சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. காலையில் தங்கையின் குழந்தைகளை கண்ணனை போல அலங்காரம் செய்தோம். கிருஷ்ண ஜெயந்திக்காக அவர்களின் பள்ளியில் கண்ணன் அலங்காரம் செய்து அனுப்புமாறு சொல்லியிருந்தார்கள். இந்த இரண்டு கண்ணன்களும் பள்ளி வாகனத்திற்காக முடக்கிற்கு செல்லும் போது தூயவெள்ளை சரிகை அலங்காரத்தில் இன்னொரு கண்ணன். வாகனத்தின் முதல் இருக்கையில் காலர் வைத்து ஆரஞ்ச் நிற சட்டை போட்ட கண்ணன். வாகனத்தில் இன்னும் சில கண்ணன்கள். ஒரு நிமிடம் கண்களை மூடினால் பள்ளி மைதானத்தில் வந்து நிற்கும் வாகனங்களிலெல்லாம் கண்ணன்கள். மைதானத்தல் வகுப்பறையில் நடைபாதையில் கழிவறை வரிசையில் உணவுகூடத்தில் என்று எல்லா இடங்களிலும் கண்ணன். 

வரலாறும், வரலாற்று நூல்களும், ஆய்வாளர்களும் தரவுகள் ஆய்வுகள் மூலம் நமக்கு மூலமான ஒன்றை [கண்ணனை] அளிக்கிறார்கள். அந்த மூலத்தை நம் கற்பனை,உள்ளுணர்வு, அனுபவம் மற்றும் தர்க்கங்கள் போன்ற பல வழிகளில் வெவ்வேறாக அணுகி பிரதிபலித்துப் பார்க்கலாம்.

 தமிழ் விக்கி_ தூரன் விருது பெறும் வரலாற்று தொல்லியல் கலை ஆய்வாளர்  வெ.வேதாசலம் அவர்களுக்கு வணக்கங்களும் அன்பும்.








விக்கி தூரன் விருதுடன் முனைவர் வெ.வேதாசலம் அவர்கள்.






Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...