https://youtu.be/_YNIG1TKMdk?si=GqsGmIiSuEyU1LU9
இந்தப்பாடல் பதினோரு வயதிலிருந்து வெவ்வேறாக மனதில் நீங்காமல் உள்ளது. பதினோரு வயதில் பாடலில் வரும் காட்சிகள் பிடித்தது. இப்போதும் காட்சிகள் தான் இந்தப்பாடலை திரும்ப பார்க்க வைக்கிறது. ஒரு Break தேவைப்படும் போது இந்தப்பாடலின் காட்சிகள் சலிக்காதவை.
இந்தப்பாடல் நான் ஐந்தாம் வகுப்பு முடித்து புதுப்பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்த போது கேட்டப்பாடல். அப்போது தான் சன் டி.வி கனெக்ஷன் உப்பிலியபுரம் என்ற ஊரிலிருந்து எங்கள் ஊருக்கு கொண்டுவரப்பட்டது. மூன்று வீடுகளில் என்று நினைக்கிறேன். மற்ற வீடுகளில் தூர்தர்ஷன் மட்டும். ட்யூஷன், பள்ளிக்கு செல்லும் போதும், வீட்டிற்கு திரும்பும் போதும் அந்த வீட்டு முற்றங்களில் நின்று கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்ப்போம்.
ஒரு நாள் இரவு ட்யூஷன் முடிந்து அப்போது பிரபலமாக இருந்த பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியில் பார்த்த பாடல் இது.
அய்யா ட்யூஷன் ஹாலை பூட்டிவிட்டு சைக்கிளில் வருவார். வீட்டிற்கு நான்கு தெருக்கள் நடக்க வேண்டும். பாடல் முடிந்ததும் வழியெல்லாம் வானத்தை நிலாவை பார்த்துக்கொண்டு தனியாக நடந்து வந்தேன். எனக்கு முன்பே வீடு சென்ற தங்கை தம்பிகள் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அம்மா என்னை திட்டிக்கொண்டிருந்தார். அய்யா ரகசியகுரலில் 'என்ன பாட்டு பார்த்த?' என்று கேட்டார்..எனக்கு சொல்லத் தெரியவில்லை.
பாடலில் உள்ள அன்பின்சங்கடம் இந்த பாடலுக்கு உணர்வுபூர்வமான பலம். இசையமைப்பாளர் ஏர்.ஆர் ரகுமானின் இசை. என் தலைமுறை ஆட்களுக்கு பெரும்பாலும் ரகுமானின் இசையில் தான் சினிமா பாடல்கள் அறிமுகம். அவர் சினிமாவில் இசையமைக்க தொடங்கிய போது பதின்வயதின் தொடக்கத்தில் பாடல் கேட்கத்தொடங்கிய தலைமுறை நாங்கள்.
திருமணத்திற்காக ஒலிப்பெருக்கியில் பாடல் போடும் வழக்கம் இன்றும் எங்கள் ஊரில் உண்டு. திருமணத்திற்கு முதல் நாள் இரவு பெண் அழைப்பு முடிந்து பெண் விடைபெற்று செல்ல பத்து மணிக்கு மேலாகும். தெருவிற்கு அப்பால் கார் நிற்கும். பெண் விதியில் நடந்து செல்லும் போது அனைவரிடமும் விடைபெற்று செல்வாள். நான் கல்லூரி முடித்து வீட்டிற்கு வந்ததிலிருந்து பல பெண்களுக்கு விடைதந்திருக்கிறேன். தொடக்கத்தில் அழுகை வரும். இங்கு ஐம்பது சதவீதம் ஒரு தெருவில் உள்ள பெண்ணை பக்கத்து தெருவில் அல்லது பக்கத்து ஊர்களில் உள்ள பையனுக்கு திருமணம் செய்து கொடுப்பார்கள். அல்லது மணமக்கள் தாங்களே திருமணம் செய்து கொள்வார்கள்.
தூரத்து ஊர் என்றாலும் இப்போதெல்லாம் பிள்ளைகள் பெரும்பாலும் [யாருமே] அழுவதில்லை. நல்ல மாற்றம்.
ஒரு இரண்டு மூன்று மாதங்களுக்கு பக்கத்து சந்தில் உள்ள வீட்டில் திருமணம். பெண் அழைப்பு முடிந்து திருமணவீட்டார் மண்டபத்திற்கு சென்றுவிட்டார்கள். வழக்கம் போல ஊர் உறவு பையன்கள் பந்தலில் அமர்ந்து சத்தத்தை குறைத்து பாட்டு கேட்டார்கள். அப்போது இந்தப்பாடல் திரும்பத்திரும்ப கேட்டது. தெரு அமைதியாக இருக்கிறது. நான் வம்சவிருட்சம் நாவல் வாசித்துக்கொண்டிருந்தேன். இந்தப்பாடல் இரண்டாம் முறை ஒலிக்கும்போது புத்தகத்தை மூடி வைத்து விட்டு கண்களை மூடினேன். பாடலின் காட்சிகள் மனதில் நகர்ந்தன.
சங்கப்பாடல்களின் உள்ள காட்சி போல இந்தப்பாடலில் காட்சிகள், பாடலின் உணர்வு நிலைக்கு சரியாக பொருந்துபவை. தமிழ் சினிமாவில் இப்படி காட்சிகளும் வரிகளும் இசையும் ஒத்து போகும் பாடல்களில் இதுவும் ஒன்று. திரையில் இயற்கை அத்தனை அழகாக உணர்வு நிலையுடன் இயைந்து வரும்.
முக்கோண அன்பு கோபமாகவோ, வெறுப்பாகவோ மாறாமல் சங்கடமாக இருக்கும் சூழல். ஓர் வெண்ணிலா இருவானிலா என்று பாடகர் உன்னி கிருஷ்ணன் குரல் கேட்கும் போது எனக்கு சட்டென்று குந்தி மனதில் தோன்றினார். எந்த உணர்வு நிலை என்றாலும் மகாபாரதத்துடன் இணைக்க முடியும்.
இந்தப்பாடலில் நண்பர்களின் காதல். மகாபாரதத்தில் தாயும் மகனும். கர்ணன் குந்தியுடன் இந்தப்பாடலை இணைக்க முடியும். என் மகனை கொல்லாதே என்று தன் மகனிடமே கேட்கும் போது குந்திக்கு இந்த அலைமோதல் இருந்திருக்கலாம்.
இந்தப்பாடல் நண்பர்கள் நேருக்கு நேராக உரையாட தயக்கும் தருணம். 'உரையாடல்பாடல்' என்று சொல்லலாம்.
இந்தப்பாடலின் அலைமோதும் நீர். பாயும் நீர். நடக்கும் வெள்ளம். மூழ்கடிக்கும் அருவி. மேகமாய் திரளும் நீர். நீலமாய் மாறும் நீர். விசையாய் மோதும் நீர் என்று மனநிலையின் போராட்டம் நீரின் வடிவில்...காட்டின் நிறத்தில்..அந்தியின் தயக்கங்களில் என்று காட்சிகளில் உணர்வுகளாக விரிகிறது. பசுங்காட்டின் காய்ந்த சுள்ளி. காடு என்று அனைத்தும் படிமங்களாக மாறும் பாடல் இது. அடம்பிடிக்கும் மனம் அபிநயமாக வருகிறது. சென்னையின் தார்சாலையில் தேங்கிய மழை நீர் இந்த பாடலின் உச்சமானது. தவிர்க்க முடியாதவாறு சாலை நீர் முழுவதுமாக அள்ளி அடித்து வினித்தை நனைக்கிறது. தவிர்க்கவே முடியாத இந்த வாழ்க்கை மீது மோதும் காலம் போல.
மிக எளிமையான வார்த்தைகள் கூட சில சமயம் புரியவதற்கும் உணர்வதற்கும் ரொம்ப காலமாகும். இந்தப்பாடலில் வரும் 'இரத்தல்' என்ற வார்த்தையை 'இறத்தல்' என்று கல்லூரி படிக்கும் வரைக்கூட நினைத்தேன். ஒரு முறை கல்லூரிபேருந்தில் கேட்கும் போது தான் 'இரத்தல்' என்று புரிந்தது.
ஔிப்பதிவாளர் கே.வி ஆனந்தின் அறிமுகப்படம் இது.
இந்தப்பாடலில் இருந்து திருக்குறளின் அன்புடைமை அதிகாரத்தை வாசித்தேன். இன்று இந்தக்குறள் தற்போது வாசிக்கும் காந்தியின் கடைசி 200 நாட்கள் என்ற நூலுடன் சேர்ந்து கொண்டது. அந்த காலகட்டத்தில் காந்தியின் மனநிலை போராட்டமாக இருந்திருக்கிறது. ஒரு பக்கம் விடுதலை..மறுபக்கம் தனி நாடு கோரிக்கைகள்,சமஸ்தானங்களின் அழுத்தம்,தேசபிரிவினை என்று அல்லாட்டம். ஒரு கூட்டுக்குடும்பம் உடைந்தால் கூட அதன் தலைவர் அல்லது மையமாக பொதுவாக இருக்கும் பெரியவர்கள் சந்திக்கும் மனஅவசங்களை பார்க்க நமக்கு துன்புறுத்தலாக இருக்கும். தெரிந்த வரலாற்றின் சங்கடமான பக்கங்கள்..இந்து முஸ்லீம், நாடு உலகம், இந்தியர் பிரிட்டீஸார், நான் நீ என்ற இருமுனைகளுக்குள் அரசியல் அன்றாடத்தில் போராடியவர் காந்தி.
கடைசி 200 நாட்கள் என்ற புத்தகம் தந்த அழுத்தத்தால் தான் எனக்கு break தேவைப்பட்டது. அதிலிருந்து தப்பித்து இந்தப்பாடல் கேட்க வந்தேன்.
எப்போதும் அன்பை இரந்து பெறுவது ஒவ்வாமை அளிக்கக்கூடியது...இயல்பாக பூப்பதே அன்பு . அது காதலோ பாசமோ கருணையோ எதுவாக இருந்தாலும் காற்று மலரை திறப்பதை போல என்று சங்க இலக்கியம் சொல்கிறது. அந்த இயல்பே என்றும் அன்பை நித்தியமாக்குகிறது. அன்பின் இந்த இயல்பை வெவ்வேறு மனிதர்களிடம் வெவ்வேறு நிறங்களுடன் பார்க்கிறோம். ஒரு காந்தத்துண்டு உடைந்த பின் மாறும் விதம் போல. அதுவே என்னை எழுத செய்கிறது என்று நினைக்கிறேன். எனக்கு ஒரு பக்கமாக நிற்க முடியாத சங்கடம் உண்டு. ஒருவர் நமக்கு பிடித்தவர் என்பதால் அவருக்கு ஒத்துவராத இன்னொருவரிடம் பேசாமல் இதுவரை இருந்ததே இல்லை. இது எனக்கு தந்த நெருக்கடிகள் அதிகம்.
எங்கள் உறவுக்காரரை ஈட்டியால் குத்திய [ தண்டனை சட்ட பூர்வமாக கிடைத்துவிட்டது] எங்கள் தெருக்காரரை அதுவரை அய்யா என்று அழைத்து வந்தேன். நான் அய்யா என்று அழைப்பவர்களில் மிக இளையவர். அனேகமாக நான் தான் அவரை முதன் முதலாக அய்யா என்று அழைத்திருப்பேன். என்னை விட பத்து ஆண்டுகள் மூத்தவராக இருப்பார். இருபத்து மூன்று வயதுள்ளவரை பதிமூன்று வயதுள்ள நான் அய்யா என்று அழைத்திருக்கிறேன். எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்தே அவர் வெள்ளை வேட்டி உடுத்தி பார்த்ததால் அப்படி அழைத்திருக்கலாம். இந்த மனப்பழக்கம் தான் இன்று வரை எனக்கு சற்று மூத்தவர்களை கூட மனஅடுக்கில், அய்யா அடுக்கில் சேர்த்து விடுகிறது.
அவர் சிறையிலிருந்து விடுமுறையிலோ,ஜாமீனிலோ ஊருக்கு வந்திருந்த ஒரு நாள் அவரை தெருவில் பார்த்தவுடன் வீட்டிற்குள் ஓடி வந்துவிட்டேன். அதைப்பார்த்த அய்யா என்னிடம், "அய்யா பேசினா பேசனும். நீ பேசலேன்னா அவருக்கு கஸ்ட்டமா இருக்கும்," என்று சொன்னார். அய்யா சொல்லியதைப்போல அந்த அய்யாவும் என்னிடம் அவராகவே பேசினார். அப்போது எட்டாம் வகுப்பு படித்தேன். அதிலிருந்து தான் தொடங்கியது எனக்குள் ஒரு அலைமோதல்..யாரையும் மிக நெருக்கமாகவோ, யாரோ ஒருவர் என்றோ நினைக்க முடியாத ஒரு தொல்லை. இதை எழுதும் போது மிக எளிமையாக இருக்கிறது. ஆனால் இது ஒரு வாழ்நாள் சிரமம். லௌகீக கப்பலின் பெரிய ஓட்டை.
அது ஒரு சிக்கலான வழக்கு. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் தண்டனை காலம் முடிந்தது. இப்போது இயல்பான வாழ்க்கைக்குள் வந்துவிட்டார். அவருடைய பிரியத்தை ம்மா..சாமீ..என்று அழைப்பதில் காட்டுவார். ஆனால் உறவுக்காரர்கள் பார்த்தால் 'நாலு புஸ்தகம் படிச்சா சொந்தபந்தத்துமேல ஒட்டுதல் இல்லாம ஆயிருது'என்பார்கள்.
அந்த உணர்வு உயிர்களின் அடிப்படை இயங்குவிசை. படித்துறைகள் தோறும் வேறு பெயர்கள் கொண்டது நதி என்று சொல்வார்கள். அது போல அது ஒவ்வொரு பெயரில் சொல்லப்படுகிறது. இழக்கும் போது துயர்..விலக்கும் போது வெறுப்பு...அதிகரிக்கும் போது உடைமை...என்ற பெயர்கள். அன்பை அன்பாகவே வைத்துக்கொள்வதில் நமக்கு சிரமம் இருக்கிறது..புத்தருக்கு..யேசுவிற்கு காந்திக்கு அதை அப்படியே வைத்துக்கொள்ள சாத்தியப்பட்டிருக்கிறது. அதனால் அவர்களிடம் அது ஒரு வாளின் கூர்மை கொண்டதாகவும் உள்ளது.
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
_ திருக்குறள்
Comments
Post a Comment