2021 நவம்பர் புரவி இதழில் வெளியான சிறுகதை
அலைபேசிகள்
பவித்ரா மடியிலிருந்த கைக்கணினியை இறக்கி மெத்தையில் வைத்தாள். அருகில் ஜெய் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். சன்னலுக்கு வெளியே இருள்அடர்ந்திருந்தது. இன்றுடன் திருமணமாகி அறுபதுநாளாகிறது. அவளுக்கு இது ஒரு கனவாக இருந்திருக்கக்கூடாதா? என்ற எண்ணம் எழுந்தது.
எரிந்தகண்களை உள்ளங்கைகளைக் கொண்டு மூடினாள். நாளை அலுவலகத்தில் ஆடிட்டிங் இருக்கிறது. உறங்கி எழுந்தால் தடுமாறாமல் தாக்குப்பிடிக்கமுடியும். இணையத்தை அணைக்கும் போது சரியாக அலைபேசியில் குறுஞ்செய்தி ‘டப்’ என்றது. நேரம் பதினொன்றை கடந்திருந்தது. யார்? என்று பார்த்தாள். நிவாஸ்… புன்னகையுடன் எடுத்தாள்.
எருமை… கல்யாணத்திற்கு வராமல் இத்தனை நாள் கழித்து, இந்தநேரத்தில் குறுஞ்செய்தி அனுப்புகிறான். ஒரு வேலைக்கு செல்லாதது இவனுக்கு எத்தனை வதையாக மாறிவிட்டது. எப்படி இருந்தவன்? அறிவாளிகளுக்கு எதுவுமே எளிதில்லையா? சராசரியாக பிறந்திருந்தால் இந்த அலைச்சல் இல்லாமல் இருந்திருப்பானோ? என்று நினைத்தபடி வாட்ஸ்ஆப்பை திறந்தாள்.
மேரேஜ்க்கு வரமுடியலக்கா…
நீ வேணுன்னுதாண்டா வரல…அக்கான்னு சொன்னா போதுமா?
இல்ல…அன்னிக்கு
பொய்சொல்லாத…வேலைக்கு போறதுன்னா அதுல குறியா இருக்கனும். மாத்தி மாத்தி எதையாவது பண்ற. கூட்டம் கும்பலுக்கு போகவர உனக்கே கூச்சமா இருக்குல்லடா…
அவன் பதிலை படித்துமுடிப்பதற்குள் ஜெய், “ இந்தநேரத்தில் யார்?” என்று அருகில் நகர்ந்து அலைபேசியை பிடுங்கினான்.
இவள் முகம் சுளித்து மூக்கைத் தேய்த்துக்கொண்டாள். தொடர்பே இல்லாமல் அந்த நேரத்தில் அப்பாவின் வாசம் நினைவிற்கு வந்தது. நிவாஸின் பெயரைமட்டும் பார்த்துவிட்டு அவன் எண்ணிற்கு அழைத்து இந்த நேரத்துல என்னடா? என்று வேகமாக பேசினான்.
அவன் தொடர்பை துண்டித்தான். நிவாஸ் என்ன நினைப்பான் என்ற நினைப்புடன் ஜெய்யின் முகத்தைப் பார்த்தாள். சட்டென்று பார்வையை மாற்றிக்கொண்டாள்.
“ஃபேமிலி ப்ரண்டு…தம்பி மாதிரி…”
“தம்பின்னா… என்ன கூடப்பெறந்தவனா. இந்த நேரத்துலதான் மெசேஜ் பண்ணுவானா…”
மறுபடி ‘டப்’ என்று அழைத்தது.
நீ என்ன அவ்வளவு யோக்கியமா? மெசேஜ் பண்ணினா உடனே ஹஸ்பெண்டுக்கிட்ட குடுத்துருவியா?
பவித்ரா மறுபடி மறுபடி அந்த குறுஞ்செய்தியை வாசித்தாள். குடித்திருக்கிறான் என்று புரிந்ததும் மனம் பதறியது. எப்பொழுதிலிருந்து குடிக்கிறான் என்று தெரியவில்லை. இதை அவன் அம்மாவிடம் நாசுக்காக சொல்ல வேண்டும்.
ஜெய் மறுபடி அலைபேசியை பிடுங்கி அவனை அழைத்து,“நேர்ல வந்தேன்னா தோலை உரிச்சுருவேன்டா…” என்றான்.
……
நீ என்ன பயித்தியமாடா…
பவித்ரா அலைபேசியை வாங்கி அழைப்பை நிறுத்தினாள். உடனே குறுஞ்செய்தி டப் என்றதும் ஜெய் பிடுங்கினான்.
நீங்கள்ல்லாம் அவ்வளவு நல்லவங்களா… நான் என்ன தெரியாத ராங்க்காலா…
எந்த பதிலும் அனுப்பாமல் அலைபேசியின் இணையத்தொடர்பை நிறுத்தினாள். மனதின் ஆழத்தில் இப்படி நினைக்கக்கூடியவனா! நிவாஸிடம் அந்தமாதிரி ஒருஅறிகுறியும் இத்தனை ஆண்டுகளில் தெரிந்ததில்லை. துப்பட்டா அணியும் போது அருகில் இருந்தால், “ அக்கா எதுக்கு இவ்வளவு கவனமா துப்பட்டா போடுறீங்க...சும்மாவிடுங்க…” என்பான்.
“நான் பனியனனோட இருந்தா அழகாயிருக்குன்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க…சின்ன பிள்ளைங்களுக்கு தவறுதலா சிலிப் வெளிய தெரிஞ்சாக் கூட பாக்கறதுக்கு சங்கட்டமா இருக்கு. நம்ம ரொம்ப மாறனும்,”என்பான்.
அலுவலகத்தில் தாமதமாகும் எத்தனை இரவுகளில் உப்பிலியபுரம் வந்து காத்திருந்து வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறான். அவளை இப்படி சொல்லக்கூடியவன் இல்லை.
“தம்பிங்கற …அவன் உன்னயப்பத்தி எனக்குத் தெரியாதாங்கிறான்…அப்ப ஏதோ இருக்குதானே…”
“இங்க பாரு ஜெய்...அன்னிக்கு சொன்னதுதான் இன்னிக்கும். ராகுல் என்னோட காலேஜ் மெட். நல்ல ஃப்ரண்ட்…நிவாஸ் என்னைய விட நாலுவயசு சின்னவன்…இதுவரைக்கும் இவன் இப்படி பேசுவான்னுக்கூட எனக்குத்தெரியாது…எனக்கு ஃப்ரண்ட்ஸ் அதிகம். காலேஜ் முடிச்சு பத்து வருஷமாகி மேரேஜ் பண்ணியிருக்கேன்…ஃப்ரண்ட்ஸ் தான் இதுவரைக்கும் எல்லாமே…புரிஞ்சுக்குங்க,”
“அவன் எதுவுமே இல்லாமையா இப்படி ஒரு வார்த்தை சொல்லுவான்…”
“எல்லாம் உன்னை மாதிரிதான்…டாஸ்மாக் பண்ற வேல…அவன் பேசறத கேட்டாத்தெரியல…”
“கல்யாண காரியத்தில் எல்லாம் உங்க அம்மா என்ன திமிரா பேசினாங்க…”
“அதுக்கு என்ன இப்ப? அதை ஏன் இப்ப பேசற. அவங்க ஒன்னும் திமிரா பேசல. அப்பா பேசமாட்டார். அவரால பேச முடியாது. அந்த இடத்திலருந்து அம்மா ரொம்ப வருஷமா குடும்பத்தை நடத்தறாங்க …உங்கப்பா அப்படித் தானே இருக்காரு…”
“ரெண்டுமாசமா என்னமாதிரில்லாம் ரூல்ஸ் பேசின நீ…உனக்கு இருக்கு…”
அதற்கு மேல் பேச முடியாமல் சுருண்டு படுத்துக்கொண்டான்.
முப்பத்தைந்து வயதுவரை யாரும் இப்படி அவளின் தனிவிஷயங்கள் குறித்து நசநசத்ததில்லை. பள்ளிக்கு மதிவண்டியில் ஊர்த்தாண்டி செல்லும் போது கூட அப்பா, “பாத்துப் போகனும்,” என்று மட்டும் சொல்வார்.
கல்லூரி நாட்களில் அம்மாவிடம் நண்பர்களை தயக்கமில்லாமல் அறிமுகம் செய்யமுடியும். “எம்பொண்ணு எதாயிருந்தாலும் எங்கிட்ட சொல்வாள்,”என்று அடிக்கடி சொல்வாள். இன்றுவரை அம்மா ஒருநாளும் அலைபேசி விஷயங்களை கேட்டதில்லை. அவளுக்காகவே சரியாக இருக்க மனம் நினைத்திருக்கலாம்.
பவித்ராவிற்கு உறக்கம் வரவில்லை. இடதுகாலில் உளைச்சல். விரல்களை மடக்கி நீட்டி, கால்கள் மடித்து வைத்து உள்ளங்கால்களை அழுத்தினாள். வியர்வையில் உடல் கசகசத்தது. கால்நடுவிரல் மட்டும் மடிந்து கொண்டு வலி மண்டைக்கு ஏறியது. வயிற்றுவலியுடன் அலுவலகத்தில் நீண்டநேரம் நின்றதால் வந்த வினை. பாதத்தை பிடித்துக்கொண்டாள். மெதுவாக வலிகுறைந்து விரல் நிமிர்ந்து இயல்பு நிலைக்கு வந்தது. சுவர் ஓரமாக சாய்ந்துப்படுத்தாள்.
அவள் அலைபேசியின் அலாரம் சத்தமிட்டது. அவன் சட்டென்று எழுந்து அலைபேசியை எடுத்து வைத்துக்கொண்டான்.
“மொபைலை குடுங்க. இன்னிக்கி ஆடிட்டிங்…”
“முடியாது…”
அவனிடருந்து அலைபேசியை வாங்க வலுவில்லாத கைகளை, பால் நுரைக்கும் அடுப்பின் அருகில் கொண்டு சென்றவள் சட்டென்று இழுத்துக்கொண்டாள்.
குளித்துவிட்டு துணிகளை மாடிக் கொடியில் உலர்த்தும் போது அந்தநேரத்திலேயே கோவிலில் இருந்து ஆட்கள் திரும்பிக்கொண்டிருந்தார்கள். அது வீடுகள் நெருங்கி அமைந்தத் தெரு. தினமும் திருவிழாவுக்குரிய ஏதோ ஒரு சடங்கு ரங்கனுக்கு நடக்கும் ஊர். சாதாரண நாளில் கேட்டாலும் ரங்கனுக்கு படிசேவை, விளைச்சல் காட்டும் சேவை,கருவூலம் காட்டும் சேவை என்று எதையாவது சொல்வார்கள்.
வீட்டில் அப்பா எந்தநேரமும் பித்தா பிறைசூடா… நற்றுணையாவது நமச்சிவாயமே…என்று சிவதுதிகளைப் பாடிக்கொண்டேயிருப்பார்.
இந்த ஊரில் எந்த நேரமும் சயனித்திருப்பவனை, “ ஸ்ரீரங்கநாதா…” என்று அழைத்து எதோ சொல்வதைப்போல பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கிறன. அதுதான் இந்த ஊரை நெருக்கமாக்குகிறது. இந்தப்பாடல்களைக் கேட்கும் போது, இந்த ஊர் எந்த நேரமும் ரங்கனுடன் ஓயாது பேசிக்கெண்டிருப்பதைப்போல தோன்றும். ஆலகால மெத்தையில் படுத்துக்கொண்டு ஊர்க்கதை கேட்கும் சண்டாளன்…அதிலும் பெண்கள் கதைகள் தான் முக்கால்வாசி. அதனால் தான் அவனுக்கு அந்த நித்யபுன்னகை. என்னடாப்பா ரங்கா…என்பதுடன் ஆண்கள் முடித்துக்கொள்கிறார்கள்.
எதிர்வாசலில் நின்ற மாமா எதுவும் செய்யாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். கௌரிமாமி உள்ளுக்கும், வெளியேயும் மாறிமாறி நடந்து மாமா மறந்த கைப்பொருட்களை கொண்டு வந்து தந்தாள். தினமும் இவர் என்னத்தைதான் ஞாபகமாக எடுப்பார் என்று தெரியவில்லை.
“கோலத்தை மிதிச்சுண்டு…நகருங்கோ…”என்று மாமி பற்களைக் கடித்தாள்.
“சாரிடீ…”
“ஏண்ணா…பதட்டத்துல அவன்ட்ட சொல்லிக்காம கெளம்பறேளே…”
பவித்ரா புன்னகைத்தபடி காயவைத்த துண்டை பற்றிக்கொண்டு அவர்களை பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ரங்கா… கெளம்பறேன்டா…வரட்டுமா,”என்ற மாமா நிமிர்ந்து கண்ணில் தெரிந்த கோபுரத்தை கும்பிட்டு நகர்ந்தார். மாமியை இங்குவந்த இரண்டாம் நாளே பவித்ராவிற்கு மிகவும் பிடித்துவிட்டது.
“ரங்கன் ஒருக்களிச்சு படுத்துண்டே நம்மக்கதையெல்லாம் இந்தக்காதில் வாங்கி, அந்தக்காதில் விட்டுட்றான். அதாலதான் நம்ம துக்கமெல்லாம் ஆலகாலமா திரண்டுடுத்து. ஆதிசேசன் உருவாகறச்சே இத்தன விஷமில்லடீ. அது சாது. இவன்தான் லோக துக்கத்தையெல்லாம் அந்தக் கொழந்த மேல ஏத்திப்பிட்டான்…” என்று ரங்கனை திட்டும் கௌரி மாமியை பார்த்து பவித்ரா சிரித்தாள்.
“இப்படியே இருக்கனும். இங்கபாருடீ கொழந்த…புதுசா கல்யாணமாகி வந்திருக்க. ஜீவனத்துல எல்லாத்துக்கும் எடம்உண்டு. சதிபதி சங்கடத்த,துக்கத்தை மட்டும் மத்த மனுசாக்கிட்ட புலம்பாத. நம்ம துக்கம் மத்தவாக்கு புறணி. ரங்கனிட்ட சொல்லிட்டு…அடுத்த வேலயப்பாரு. மத்தபடி கஸ்ட்டம் நஷ்டம்,உதவி என்னன்னாலும் என்னிட்ட சங்கோஜம் வேணாம்…ஒடம்பு சுகமெல்லாம் எப்படின்னு சொல்லனும் சரியோ. ஊறுகா, வத்தல், வடாமெல்லாம் நாந்தர்றேன். ஆத்துல தின்ன ஆளில்ல. ஆனா சித்தரமாச வெயில கண்டா கைநிக்க மாட்டேங்குதுடீ,”
பாடல் ஒன்று காற்றில் ஏறி வந்து காதில் மோதி நினைவை கலைத்தது.
தோம்…தோம்…தோம்…
கமலமுக…
கமல கமலஹித
கமலப்ரியனே
கமலேட்சனா…
வெளிக்கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டது. அவனின் அப்பாவும் அம்மாவும் இந்த நேரத்தில் உய்யகொண்டானிலிருந்து கிளம்பி வந்திருக்கிறார்கள். படிகளில் ஏறிவந்த அப்பா கண்களை திருப்பாமலேயே உள்ளே சென்றார். அம்மா, “ரங்கா…”என்று சொல்லியபடி ஒருபார்வையுடன் நின்று நகர்ந்தாள். இவள் அருகிலிருந்த திண்டில் சாய்ந்துகொண்டாள்.
கமலாசனா ஹித
ஸ்ரீநிவாச….கருடகவன ஸ்ரீ…
கமலநாபனே…பதகமலமே சரணம்…
ஸ்ரீநிவாச பதகமலமே சரணம்…
ஸ்ரீநிவாச பதகமலமே சரணம்…
காதுகளை பொத்திக்கொண்டாள். அவளை அறியாது ‘ச்சை…’ என்ற ஒலி எழுந்தது.
பவித்ரா முதன் முதலில் இந்தப்பாடலை கேட்ட அன்று விஜியிடம் வரிகளைச்சொன்னாள்.
“ரெங்கநாதரோட நெஞ்சுக்குள்ள பூத்திருக்கற நித்ய தாமரை தான் ஸ்ரீதேவியாம்…அதனாலதான் இவன் திருவாழ் மார்பன். அப்படி இருக்கனும் காதல்ன்னா. நெனச்சாவே பூப்பூக்கறது…வீட்ல பாத்து கல்யாணம் பண்ணி வச்சாலும் நீ அப்படி வாழனும் பவி…”
“சும்மா…அடிச்சு விடாத…”
“மொத்தமா பாட்டோட பாவம் என்னன்னு சொன்னேன்…வரிக்கு வரி அர்த்தம் பண்ணல…” என்ற சுஜியின் குரல் மனதில் ஒலித்தது. சுஜி ஒரு பயித்தியக்காரி…பூப்பூக்கனுமாம் பூ…நெனச்சாவே எரியுது என்று நினைத்தபடி வேகமாக உள்ளே சென்றாள். பாடல் வானத்தில் தனியே எங்கோ சென்று தேய்ந்தது.
வரவேற்பறையில் நிற்கும் அவனை பார்க்கவே கூசியது.
“காபி போடலாமா அத்த…”என்றாள்.
ஏற்கனவே ஒருகோப்பை காபி மேசையில் ஆறிஅவிந்திருந்தது.
“இல்லம்மா…இங்க வந்து உக்காரு….”
மாமாதான் அழைத்தார். அத்தை குனிந்து அமர்ந்திருந்தாள்.
“விடிஞ்சும் விடியாம பேசினான்…என்னன்னு நீ சொல்லு…”
“நான் இப்பவே அவங்க வீட்ல அம்மாவுக்கு கால்பண்ணி தர்றேன் மாமா…நீங்க பேசுங்க. அவங்க சின்ன வயசிலேருந்தே பழக்கம். அவன் குடிப்பான்னே நேத்துதான் தெரியும். எப்பவும் போல மெசேஜ் பாத்தது தப்பா போச்சு. அவன் தான் அனுப்பினான்னு இன்னுமும் நம்பமுடியல. இனிமே இவர் தானே மாமா புரிஞ்சுக்கனும்…” என்பதற்கு மேல் சொல்ல நினைத்ததை சொல்ல குரல் அனுமதிக்கவில்லை.
அத்தை எழுந்து உள்ளே சென்று காபி கிண்ணத்தை எடுத்தாள். அவர்கள் கிளம்பும்வரை இவன் வாயைத் திறக்கவில்லை.
“நீங்க பாத்த பொண்ணு மார்டனா இல்லன்னு புலம்பின. அவ சரியா தான் இருக்கா. உனக்கு முப்பத்தெட்டு வயசுலதான் பொண்ணு அமைஞ்சிருக்கு. இனிமேயாச்சும் வாழப்பாரு…உன் வயசுல எனக்கு வளந்த பிள்ளைங்களே இருந்தீங்க…”என்றபடி மாமா படியிறங்கினார்.
“கல்யாணமாகி ரெண்டு மூணு மாசத்துல ரெண்டுபேராட சுயரூபமும் தெரிய ஆரம்பிக்கும். கல்யாணம் பண்ணின எல்லாருக்கும் அப்படித்தான்…உங்கள எப்பிடி ஹேண்டில் பண்றதுன்னு நீங்கதான் கத்துக்கனும் …”என்று அத்தை சொல்லிவிட்டு சென்றாள்.
அலுவலகம் செல்லும் போதும் அவன் அவளின் அலைபேசியை தரவில்லை. அலுவலகத்தில் மேலதிகாரி பிடித்துக்கொண்டார்.
“மேடம்…கால்பண்ணினா எடுக்க மாட்டீங்களா?”
“சார்…மொபைல் கீழ விழுந்திருச்சு. கால் வந்ததே தெரியல…”
“என்னமோ போங்க…இன்னிக்கி ஆடிட்டிங் இல்ல…ரெண்டு நாளாகுன்னு சொல்லத்தான் அத்தனை தடவை கால் பண்ணினேன்…” என்று சலித்துக்கொண்டார்.
தன் இருக்கைக்கு வந்ததும் பக்கத்து இருக்கை பிரபாகரை திரும்பிப்பார்த்தாள். அவர் தலையாட்டியபடி காலைவணக்கம் சொன்னார். மறுபடி தயக்கத்துடன் திரும்பினாள்.
“என்ன மேடம்…எனி ஹெல்ப்…”
“உங்க மொபைல கொஞ்சம் தரமுடியுமா…”
அவர் அலைபேசியை நீட்டினார்.
“கொஞ்சம் தனியா பேசனும் சார்…”
அவர் ரகசியஎண்ணைக் கூறினார்.
அலுவலகத்தின் வெளியே இருந்த நாலுகால் கல்மண்டபத்தில் யாருமில்லை. அங்குவந்து நின்றாள். தொலைவில் ஸ்ரீரங்கத்தின் கிழக்கு கோபுரம் தெரிந்தது.
அம்மாவிடம் பேசினாள். அம்மா பேருந்திலிருந்தாள். பதறி பேசும் அம்மா எரிச்சலூட்டினாள். அவன் முன்பே அம்மாவிடம் பேசியிருந்தான். கால் வலியெடுத்தது. மண்டபத்தூணில் சாய்ந்து கொண்டாள். சற்றுத்தள்ளி ஓய்வூதியக்காரர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அம்மா அழைப்பாள் என்று காத்திருந்தாள்.
ஒருவாரத்திற்கு முன்பு சாயுங்காலம் வீட்டின் மொட்டைமாடியில் இருந்து தோழிகள் குழுவின், வாட்ஸ்ஆப் குழுவிற்கு அழைப்பைவிடுத்தாள். கண்முன்னால் காவிரியின் ஈரம் மினுங்கிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு தோழியாக காத்திருந்தார்கள். அந்திப்பறவைகள் திரும்பிக்கொண்டிருந்தன. யாரிடம் பேசுவது என்று குழம்பி தோழிகளை அழைத்திருந்தாள்.
ஒவ்வொருத்தியாக இயல்பான விசாரணைகளுடன் பேசத்தொடங்கினார்கள். கைக்குழந்தையுடன் ஹாய் சொன்ன வித்யா, “பாப்பா அழ ஆரம்பிக்கும்… என்னத்துக்கு கூப்ட்ட பவி. முக்கியமா எதாச்சுமா? இல்ல சும்மாதானா…”என்றாள்.
“ஒன்னு கேக்கனும்…”என்ற அவள் குரலின் உள்வாங்கலால் அனைவரும் அமைதியானார்கள்.
“எதுன்னாலும் தயங்காம சொல்லுடீ…நீயே குழம்பி மனச தொந்தரவு பண்ணிக்காத,”என்ற ஹபியின் கண்கள் கூர்மையாகின.
பவித்ரா தயங்கி தயங்கி விழித்தாள். அவர்கள் அவளிற்காக காத்திருந்தார்கள்.
“ஜெய்க்கு எதோ பிரச்சனை இருக்கும் போல…”
மீண்டும் அமைதி நிலவியது.
“பிஸிக்கலா எதோ…இது உங்களுக்கு தெரியாதான்னு கேட்டேன்…எனக்கு மட்டும் எப்படி தெரியுங்கறாரு…”
“ஆமா…நமக்கு எதாச்சும் பிரச்சனைன்னு கல்யாணத்துக்கு முன்னாடி தெரியுமா என்ன? அதுமாதிரி தான்…”என்ற வித்யாவுடன் அனைவரும் சிரித்தார்கள்.
“பிரச்சனை என்னன்னு கேக்காம…எதுன்னாலும் ஹாஸ்பிடல் போகனும்…”என்று சுஜீ வேகமாக சொன்னாள்.
“சுஜீ….நீ எதுக்கு வந்த… வெளிய போடீ…ஏழு கழுதவயசாகியும் சிங்கிலாவே இருந்துக்கிட்டு…இவள குரூப்ல வச்சுக்கிட்டு எதாச்சும் பேச முடியுதா…”
“அவள ஏண்டீ திட்ற…எல்லாரும் டிஸ்கசனுக்கு வாங்கன்னா வரத்தானே செய்வா…நீ கட் பண்ணுடா…”
இவள்களைவிட சுஜியுடன்தான் இரண்டுமாதம் முன்பு வரை பவித்ரா நெருக்கமாக இருந்தாள். இந்தத் திருமணம் அனைத்தையும் மாற்றி வைக்கிறது. அம்மா மறுமுறை அழைக்காததால் அலுவலகத்திற்குள் சென்றாள். இயல்பான பாவத்துடன் பிரபாகர் அலைபேசியை வாங்கிக்கொண்டார்.
சாயுங்காலம் வீடுதிரும்பும் போது வாசல்படியில் இவளின் அம்மா அமர்ந்திருந்தாள். இருவரும் உள்ளே சென்றதும் ஜெய், “தம்பின்னு ஒருத்தன் பேசுனானே…அவங்க வீட்டுக்கு போகனும்…”என்றான்.
“அவன் ஏதோ தெரியாம பேசிட்டான். பலவருஷத்துப்பழக்கம். இந்த ஒருதடவை விட்ருங்க. அவங்க அம்மாட்ட நானும் பேசிட்டேன்…நீங்களுந்தானே அவங்கக்கிட்ட பேசுனீங்க…” என்ற அம்மா இருக்கைகளையும் இறுக்கிக் கோர்த்துக்கொண்டாள்.
“அந்தம்மாவும் இதேமாதிரிதான் பேசுது…சொல்லி வச்சுக்கிட்டு பேசறீங்களா…”
“இங்கபாருங்க தம்பி….ஒன்னுமில்லாத விஷயத்த பெருசாக்காதீங்க…இது எம்பிள்ளை கேரக்டர் விஷயம்…சொந்தக்காரங்க ஒன்னுக்கு நாலா பேசுவாங்கன்னுதான் பேசாம இருக்கேன்…”
“மேரேஜ்க்கு முன்னாடி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசற ஆளுன்னு சொன்னீங்க. இப்பமட்டும் என்ன?” என்றபடி குளியலறைக்கு சென்றான்.
அம்மாவின் அலைபேசியுடன் பவித்ரா அறைக்குள் சென்றாள். இவள் சொல்லியபடி வித்யா சரியாக குழுஅரட்டையை தொடங்கியிருந்தாள்.
“நான் இருக்கட்டா…கட் பண்ணட்டா…”
“இன்னிக்கு இருடா சுஜி…சாரி. அன்னிக்கு வேகமா பேசிட்டேன்…”
“விடு…விடு…”
“என்னாச்சு பவி…”
“ரொம்ப அசிங்கப்படுத்த நினைக்கிறான். ரெண்டுநாளா தூங்க முடியல. பகல்ல ஒன்னும் பிரச்சனை இல்ல. நைட் ஆனா குடிச்சுட்டு வந்து நீ என்ன யோக்கியமான்னு அவன் சொன்னானே…எதாவது இல்லாமலா சொல்லுவாங்கறான்…எங்க வீட்ல, அவங்க வீட்லன்னு எல்லாருக்கிட்டயும் சொல்லிட்டான்…”
வித்யாவின் முகம் கடுகடுத்திருந்தது.
“நீ பயப்படாத பவி…அட்ஜஸ் பண்ணிக்க. சரியாயிடும்…”
“நீ வாயமூடுடீ சுஜீ…இந்த விஷயத்துல உனக்கு என்னத் தெரியும்?”
“முதல்ல இந்த சுஜியை கொஞ்சநாள் கட் பண்ணு. பறக்கறத விட்டுட்டு கீழ எறங்கி வா பவித்ரா…”
“சுஜீ… கல்யாணம் பண்ணாத ஆளுக தாட் ப்ராசஸ் வேறன்னுதான் சொல்றோம்…”
“சரி…இனிமே பவிக்கூட பேசல…அவதான் பாட்டுக்கு அர்த்தம் சொல்லுன்னு அடிக்கடி பேசுவா…”
“சாரி…”
“பரவாயில்ல…சிக்கல் எல்லாம் முடியட்டும். அதுவரைக்கும் பாட்டுக்கு அர்த்தம் கேட்டா அவள கொன்னுருவேன்…குட் மானிங் மட்டும்தான்…எனக்குன்னு இருந்த ஒரு விக்கெட்டும் போச்சு,”
பவித்ரா உட்பட அனைவரும் சிரித்தார்கள்.
“சுஜிய பாரு பவி...இப்பெல்லாம் சிரிச்சுக்கிட்டே சிக்ஸர் அடிக்கிறா…”
“ஆமா…காலேஜ் டேஸ்ல அவ எவ்வளவு சென்சிடிவ்…”
“வடிவேலு மாதிரி …என்னா அடிங்கற லெவலுக்கு வந்துட்டா…”
“என்னைய டேமேஜ் பண்றத விட்டுட்டு அவளுக்கு எதாச்சும் சொல்லுங்க ,”
“புரியாதவளே அதத்தாண்டி பேசிக்கிட்டுக்கோம்...மேரேஜ் நம்மள நேருக்குமாறா தலைகீழா புரட்டி போடும்…முதல்ல சிரி. உர்ர்ன்னு எல்லாத்தையும் சீரியாஸா எடுக்காத…”
“ம்…”
“ஜெய் சீக்கிரம் புரிஞ்சிப்பாரு… புரியவைக்க முடியல்லன்னா பாத்துக்கலாம்…சரியா…”
ஒவ்வொருத்தியும் ஒவ்வொன்று சொன்னார்கள். பவித்ராவின் மனதிலும் தீர்மானமாக ஒன்று ஓடியது.
குளித்துவிட்டு உள்ளே வந்த ஜெய் அவள் கைகளின் அலைபேசியை பார்த்தான்.
அவள் வரவேற்பறைக்கு வந்து அலைபேசியை அம்மாவிடம் தந்துவிட்டு வேகமாக, “ நீ ஊருக்கு கிளம்பும்மா…”என்றாள். அம்மா பேசாமல் கிளம்பினாள்.
மொபைல் கீழே விழுந்து விட்டதாக அவள் சொன்னதால் பிரபாகர் பேசுவதற்கான வசதி மட்டும் கொண்ட லாவா அலைபேசியை தந்திருந்தார்.
அடுத்து வந்த இரண்டு நாட்கள் அவள் சமைக்கவில்லை. மெஸ்ஸில் அவளுக்கு மட்டும் சொல்லியிருந்தாள். முதல்நாள் இரவு பூஜையறை வாசலில் வெகுநேரம் அமர்ந்திருந்தாள். இரண்டாம் நாள் அங்கேயே படுத்து உறங்கினாள். அவன் மேலும் மேலும் நகத்தைக்கடித்துக் கொண்டு நடந்து கொண்டேயிருந்தான். வீட்டிலிருந்து செய்யும் வேலை என்பதால் கணினி முன் அமர்ந்தே இருந்தான்.
மூன்றாம் நாள் காலையில் அலுவலகத்திற்கு கிளம்பியவள், “என்னோட மொபைலைக்குடு…”என்றாள்.
“இனிமே என்னோட மொபைலை தொடக்கூடாது. அவன் தெரியாம பேசிட்டான். நீ அதையே திரும்ப திரும்ப பேசி என்னைய தொந்தரவு பண்ணலான்னு நினைக்காத. உன்னைய நான் கேள்வி கேட்கக்கூடாதுங்கற நோக்கத்தோட இப்படியே பேசிட்டே இருந்தீன்னா விவாகரத்து பத்தி எனக்கு கவலையில்லை. யார் என்ன சொன்னா என்னன்னு முப்பத்தஞ்சு வயசில கல்யாணம் பண்ணின எனக்கு தனியா இருக்கவும் முடியும்…”என்றபடி நடந்தாள். இடதுகாலை எடுத்து வைக்க சிரமமாக இருந்தது. புடவையே சற்று தூக்கிப்பிடித்துக் கொண்டாள். சற்று நேரத்தில் அவள் பின்னால் அவன் வண்டி வந்து நின்றது.
“சிட்டி பஸ்லயே போறேன். சாயுங்காலமும் எனக்கு வரத்தெரியும்… பிடிக்கலன்னா நீ உங்கவீட்டுக்கு கெளம்பு…”
அலைபேசி குறுஞ்செய்தி அழைத்தது. அதை எடுத்தபடி நடந்தாள்.
நிவாஸ் அனுப்பியிருந்தான். அலைபேசியை கைப்பையில் வைத்தபடி நிறுத்தம் நோக்கி நடந்தாள். நிவாஸின் நினைவு வந்தது.
“க்கா…முப்பது வயசுக்கு மேலாச்சு. வர்ற மாப்பிள்ளையெல்லாம் வேணாம்ன்னா எப்படிக்கா…” என்றபடி நிவாஸ் ஸ்ப்ளண்டரை வேகப்படுத்தினான்.
“பிடிக்கல…ஜாதகம் ஒத்து வரலன்னே போவுது. நான் என்ன பண்ணட்டும்,”
“ எல்லாப்பொண்ணுங்களும் சொல்ற மாதிரி அப்பா மாதிரி மாப்பிள்ளை வேணுமோ,”
“அப்பா நடைமுறைக்கு ஒத்துவராதவர். அம்மா ரொம்ப சிரமப்பட்டுட்டாங்கடா…”
“ஆமாங்க்கா…”
“நேத்து உப்பிலியபுரம் பஸ்ஸ்டாண்ட்ல உன்னப்பாத்தேன்…யாருடா அந்தப்பொண்ணு…”
“காலேஜ் படிகறப்ப இருந்தே தெரியும்…”
“எப்பவும் போல குரூப்எக்ஜாம்ஸ் பத்தி பேசினோம். உங்களுக்கு பஸ் வந்திருச்சு…”என்றபடி புன்னகைத்தான்.
பவித்ரா ஸ்ரீரங்க நகரப்பேருந்தில் ஏறி அமர்ந்தாள். அலைபேசியை எடுத்து நிவாஸின் குறுஞ்செய்தியை பார்த்தாள்.
“க்கா..என்னோட நம்பர பிளாக் பண்ணுங்க…இல்ல டெலிட் பண்ணிடுங்க…”
“என்னாச்சுடா உனக்கு…”
“நான் உங்களை அந்த மாதிரி சொல்லலக்கா…”
“தெரியும்…”
“நீங்க என் நம்பர டெலிட் பண்ணுங்க…நானும் உங்க நம்பர டெலிட் பண்ணப்போறேன்…அதான் உங்களுக்கு நல்லது…அம்மா எங்கிட்ட பேசினாங்க,”
அவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். அவனுடைய வாட்ஸ்ஆப் முகப்புப்படத்தை பார்த்தாள். விரிந்த விழிகள். அவள் கண்கள் மங்கலாகிக்கொண்டே வந்தது. பின் காட்சிகள் மறைந்து போனது. சற்று நேரம் பேருந்தின் சன்னல்வழியே நகரும் அரங்கத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். நிறுத்தத்தில் இறங்கி நின்றாள். ஓரமாக சென்று திணறியபடி ஒவ்வொரு மிடறாக தண்ணீரை குடித்துமுடித்தாள்.
‘அழகனின் அருள்விழி பார்வை அமுதம்…தரணியில் தெரியுது ஸ்ரீவைகுண்டம் ….’ என்ற பாடல் ராஜகோபுரத்தின் வாசலில் ஒலித்துக்கொண்டிருந்தது. தண்ணீர் பாட்டிலை பைக்குள் வைத்துவிட்டு கோபுரத்தைப் பார்த்து கும்பிட்டுவிட்டு எதிர்திசையில் நடந்தாள். நடக்கநடக்க கால்கள் இலகுவாயின.
Comments
Post a Comment