நிச்சலனமாய் ஏந்திக்கொள்ளும் நீண்ட மடி: கவிஞர் ஆனந்த்குமார் கவிதைகள்
கவிஞர் ஆனந்த்குமார் இந்த ஆண்டிற்கான விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது பெறுகிறார். அவருக்கு வாழ்த்துகளும் அன்பும். கையில் ஔித்து வைத்துக் கொண்டு சுவைக்கும் இனிப்பை மற்றவர்களுக்கும் காட்டலாம் என்ற பெருந்தன்மையை இது போன்ற விருது அறிவிப்புகள் அளிக்கின்றன என்று நினைக்கிறேன்.
'நிச்சலனமாய்
ஏந்திக்கொள்கிறது
நீ்ண்ட மடி....
பெருந்துயரென
வழிவிட்டு வழிவிட்டு
வருகிறது
கரைதட்டி எழவியலா
அலைகள்'
இந்த கவிதைத்தொகுப்பை இரண்டாம் முறை வாசிக்கும் போது இந்தவரியையே ஆனந்த் குமார் வெவ்வேறு காட்சிகளாக எழுதியிருக்கிறாரோ என்று தோன்றியது. வயது கடந்து சென்று கொண்டிந்தாலும் வெகுளித்தனம் என்ற நீண்டமடியில் அமர்ந்து அலைகளில் நம்மை நாமே காண்பது. அவ்வப்போது அதிக உயரம் எழும் அலைகளின் அழகை, அதைக்கண்ட அனுபவத்தை,அது கொடுத்த அனுபவத்தை எழுதி பின்னால் அந்த வெகுளித்தனத்தை கவிதையாக்குகிறார்.
அந்த மடியில் அமரும் போது மட்டுமே.... சைத்தானின் தலையில் விண்மீன் ஔிரும்,பழைய பாசி படிந்த வீடு சிறகு கொள்ளும்,அம்மாவின் தலைவலி மருந்து வீட்டை மலை மேல் ஏற்றும்,மூன்று வளையல்களை முடிவில்லாமல் எண்ணமுடியும்,சோகையான குழந்தைக்காக விளையாட்டு தன் சுவாரஸ்யத்தை குறைத்துக்கொள்ளும்.
இந்த ஜனவரியில் வாங்கிய புத்தகங்களில் மிகக்குட்டியானது டிப் டிப் டிப். அணில் போன்ற சிறுவடிவம். அணில் போன்று பதட்டத்தையே தன் அழகாக்கி சரசரவென்று ஓடும் கவிதைகள். பதட்டங்கள் அழகாவது முதலில் சிட்டுக்குருவியில். அடுத்ததாக அணிலில் என்று எனக்குத் தோன்றும்.
'நேற்று
பிறந்த குழந்தையைப் போன்ற
ஒருகாதலை
மண்ணில் வைத்துவிட்டு
திரும்பிப்பார்க்காமல்
வந்த போதுதான் பார்த்தேன்
ஆற்றின் கரைவரை போய்நின்று
ஒரு கொத்து பறவையை அள்ளி
விண்ணில் வீசியெறிந்த
மரத்தை'
'நாவை
நீவி நீவி விடுகிறது
வெண்மணலில்
தன்னை சுவைத்து
தானெனக்கிடந்த
அதற்கு
அத்தனை உவப்பு'
இந்த இரு கவிதைகளில் தரையில் நின்று வேடிக்கை பார்க்கும் அணில் திடீரென பதைத்து தென்னை மரத்தின் மேல் சரசரவென்று ஏறும் காட்சி மனதில் வந்து போனது. கவிதை புத்தகத்தின் அட்டைப்படம் கவிதை வாசிப்பை தீர்மானிப்பதை முதன் முதலாக உணர்கிறேன்.
இந்த வாசிப்பனுபவ பதிவிற்காக ஆனந்த்குமாரின் படத்தை இணையத்தில் தேடிய போது மேலே உள்ளப்படம் முதலில் கிடைத்தது. எத்தனை பொருத்தமான படம். இந்தக் கவிதைத்தொகுப்பை ஒரு படமாக மாற்றியதைப்போல அல்லது அந்தபடத்தை அப்படியே கவிதைகளாக மாற்றியதைப்போல மாயம் காட்டும் படம்.
இருத்தல் பற்றிய எத்தனையோ கனமான கவிதைகள், எண்ணங்கள் ஊறித்திளைக்கும் மனதின் மேல் வந்து படியும் மென்சுவை கவிதைகள். இருத்தல் என்பது கண்களுக்குத் தெரியாத பாறாங்கல்லை நித்தமும் தலைமேலேயே வைத்துக்கொண்டு எப்போதும் திரிவதைப்போல. அதைப்போலவே இருத்தல் என்பது காற்றில் மிதக்கும் சின்னஞ்சிறு கோழிஇறகை போன்றதும் தான் என்று இந்தக்கவிதைகள் காட்டுகின்றன.
குறுஇறகுகளிலேயே கோழியின் இறகுதான் மிக அழகானது...மென்மையானது. பிறந்த குழந்தையின் உள்ளங்கையை தொட்டுப் பார்ப்பதற்கு நிகரான மென்மையை, கோழியின் குறுஇறகை கையில் ஏந்தும் போது உணர்கிறேன்.
குறுஇறகின் மென்மையை குழந்தையில் உணர்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் உணர்ந்தது கோழிஇறகின் மென்மையை தான். அதற்குபின் தான் குழந்தை என்ற அனுபவமெல்லாம் வருகிறது. இந்தக்கவிதைகளை வாசிக்கும் உணர்வு நிலையை இப்படி குழப்பமாக்கி சொல்ல வேண்டுமா என்று தெரியவில்லை. வாசிப்பனுபவம் எழுதுவதே இதையெல்லாம் சொல்வதற்காகவும் தானே.
கோகுலத்து கிருஷ்ணன் கோகுலத்தை பார்த்ததைப் போன்ற பார்வை ஆனந்த்குமாருக்கு வாய்த்திருப்பது அவருக்கு ஏதோ ஒரு அருள் அளித்தக் கொடை. அவை அவரிடமிருந்து கிளம்பி நாம் இருக்கும் இடத்தை கோகுலமாக ஆக்குகின்றன.
நந்தகோபன் கிருஷ்ணனாகும் தருணங்கள் என்றும் சொல்லலாம். நந்தகோபனும் கிருஷ்ணனே. வாசிப்பனுபவத்தின் சரியான இடத்திற்கு வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.
ஆனந்த் குமார் கவிதைகளை வாசித்தப்பின் கவிஞர் தேவதேவன் கவிதைகளின் பெருந்தொகுப்பை குறுக்கும் நெடுக்கும் முன்னும் பின்னுமாக வாசிக்கிறேன்.
கண்களுக்கு தெரிந்த ஒரு துளி நீரை நுண்ணோக்கிக்கு அடியில் வைத்து ஒரு பெரிய உலகத்தை முதன்முதலாக பார்ப்பதை போன்று உள்ளது.
நம் அனைவருக்குமே இப்படியான மனநிலைகள் குறைத்தோ கூட்டியோ உண்டு..அதை இன்னும் சற்று நீட்டித்து கூர்மையாக்கி அன்றாடத்தின் மீதான பார்வையை pleasure ஆக்கும் கவிதைகள் இவை.
ஸ்வீட் சாப்பிடுங்க என்று சொல்லி அதிரசத்தை கொடுத்தால் மிக ஏமாற்றமாக இருக்கும். பாதி சுவை குறைந்ததைப் போல. அதிரசம் சாப்பிடுங்க என்று சொல்வதே ஆதாரசுவையை மனதில் கொண்டுவந்துவிடும்.
அது போல.. Pleasure ஐ தமிழ் வார்த்தையாக எழுதலாம். pleasure என்ற சொல்லின் மீது எனக்கு தீராத காதல் உண்டு. அந்த வார்த்தையை அப்படியே வைத்துக்கொள்ள ஒரு எழுத்தாளராக மிகவும் சிரமப்படுகிறேன். [எழுதுவதன் பக்க விளைவுகளில் ஒன்று] pleasure என்ற உணர்வை எழுதும் போது மகிழ்ச்சி,மிதத்தல்,பறத்தல் என்று எழுதுகிறேன்..இந்த கவிதைகளுக்காக pleasure ரை மாற்றாமல் அப்படியே வைத்துக்கொள்ளலாம்.
கவிதைக்கான நியாயங்களில் ஒன்று.. வாழ்வை மேலும் அழகாகவும் ஆழமாகவும் ஆக்குவது. இந்தத்தொகுப்பு அதைச்செய்கிறது.
இந்தத்தொகுப்பிற்காக தனிப்பட்ட முறையிலும் நான் கடன்பட்டிருக்கிறேன். வாழ்வின் இக்கட்டான காலகட்டங்களில் வாசிக்கும் புத்தகங்கள் நமக்கு முக்கியம்.
நமக்கு அன்றாடமே இக்கட்டுகளில் தான் உள்ளது. சிறிய சத்தங்களில் இருந்து தக்காளி கிடைக்காதது முதல் வெங்காயம் சிறியதாக இருப்பது வரை. வேடிக்கைக்காக சொல்லவில்லை. உண்மையான சிக்கல். நம் ஊரில் விளையும் காய்கறிகள் கிழங்குகள் பழங்கள் எங்கெங்கோ பெரிய இடங்களுக்கு தரமாக சென்று சேர்கிறது. நமக்கு எஞ்சிய மிச்ச சொச்சம் என்பது எத்தனை பெரிய இக்கட்டு.
ஆனால் இங்கு சொல்ல விழைவது... மனதின் அடித்தளமான சில விஷயங்கள் உறுதி இழக்கும் போது நாம் நம்மை அறியாமலேயே தொடர்ந்து அதிர்ந்து நிலைக்குலைவிற்கு உள்ளாகக்கூடிய இக்கட்டான நிலை பற்றி . எல்லோருக்கும் அடித்தளம் என்பது ஒன்றே ஒன்றாக அடித்து நிற்கும் என்று நினைப்பதற்கில்லை. சிலரின் அடித்தளங்கள் துண்டு துண்டானவை. அவை உறுதி இழக்கும் போது தான் துண்டு துண்டானவை என்பதே நமக்குத் தெரியும்.
அவற்றின் இடைவெளிகளை நிரப்பவே மூச்சுபோகும் தருணங்களில், ஒவ்வொன்றாக அடுத்தடுத்து ஆட்டம் காணும். இந்த காலகட்டம் நமக்கு முப்பது வயதிற்கு பின் தொடங்குகிறது. இந்த மாதிரியான நிலையழியும் ஒரு தருணத்தில் டிப் டிப் டிப் தொகுதி என்னை மலர வைத்தது.
கவிதைதான் இதை எப்போதும் செய்கிறது. எப்போதும் கவிதைதான் வாழ்வை வாழ்வாக்குகிறது. கவிதைதான் களிம்பாகி சிவந்தகாயத்தை சிவந்த மலராக்குகிறது. கவிஞன் ஒரு காலத்தின் நிகழ்வு. கவிஞன் காலத்தின் நிகழ்வாவதாலேயே காலமும் ஆகிறான். காலம் என்றாவதால் அதை ஆக்கும் ஒன்றின் பிரதியாகிறான். [எழுதும் போது மட்டும்]
'எல்லாவற்றையும் அல்ல
நண்பர்களே...
இனிய ஒன்றை பலவாய் பெருக்கும்
இனிய ஒன்றை ஒன்றையே
பெருக்குகிறேன்...'
என்று சொல்லும் கவிஞருக்கு பேரன்பும் வணக்கங்களும்.
கைநிற்காது... ஒரே ஒரு முழுக்கவிதையை மட்டும், கவிஞர் கைகளால் எழுதியதை என் கையாலும் எழுதிவிட நினைக்கிறேன்.
பதில்
தாத்தா இறந்து வெகுகாலம்
ஆச்சி
கோவிலுக்குச் செல்லவில்லை
சந்தன மாரியம்மனுடன் பிணக்கு
இப்போதெல்லாம் அவள்
அடிக்கடி போகிறாள்
எனினும்
வினாயகரை மட்டும் தொழுதுவிட்டு
அம்மனை பார்க்காமல்
திரும்பிவிடுவாள்.
வெள்ளிக்கிழமை மாலைகளில்
தாயாருக்கு முதுகுகாட்டி
கோவில் வாசலில்
நின்றிருப்பாள்.
உள்ளேசெல்லும் யாரிடமாவது
கொடுத்துவிட்டு நகரவென
அப்போதவள் கையில் வைத்திருக்கும்
அந்தச்சரம்...
அவள் நாளெல்லாம் உட்கார்ந்து
எண்ணியெண்ணி தொடுத்தது
இந்தக்கவிதை நீண்டகாலம் என்னுடனே இருக்கும்.
நான் புத்தகங்களை அடுக்குவதில் எந்த ஒழுங்கும் இருக்காது. சிறுவயதிலிருந்தே பள்ளிப்புத்தகங்களையும் தமிழ், ஆங்கிலம், கணிதம்,அறிவியல் சமூகஅறிவியல் என்று வரிசையாக அடுக்க மாட்டேன்.
பிடித்த வரிசையில் தான் புத்தகங்கள் இருக்கும். அதுவும் நிலையில்லை. ஆங்கிலத்தில் ஒரு poem பிடித்தால் ஆங்கிலம் முன்னால் வந்துவிடும். அறிவியலில் ஒருபாடம் பிடிக்கும் என்றால் அன்றைக்கு அறிவியல் முன்னால் வந்துவிடும். அதனால் எப்போதும் வகுப்பு தொடங்கும் போது சட்டென்று புத்தகத்தை எடுக்கமுடியாமல் ஆசிரியர்களிடம் திட்டுவாங்குவேன்.
வாசித்தப் பிறகு டிப் டிப் டிப் பிற்கு பக்கத்தில் டெடி பொம்மையை வைக்க வேண்டும் என்று தோன்றியது. புத்தகத்தின் பக்கத்தில் பிடித்த பொம்மையையும் வைக்கலாம் என்று டிப் டிப் டிப் சொல்லித் தந்திருக்கிறது.
பெயர் அமைந்தால் இப்படி அமைய வேண்டும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தாளர் திருச்செந்தாழையின் பெயரை ஒரு முறை குறிப்பிட்டதாக நினைவு. ஆனந்த் குமாரின் பெயரும்கூட அவருடைய கவிதையுடன் இணைத்துப்பார்த்தால் அப்படித்தான் தோன்றும்.
கவிஞர்கள் தான் எழுத்தாளர்களையும் எழுத வைப்பவர்கள் என்பதில் இப்போது எனக்கு எந்த ஐயமுமில்லை.
♦♦♦♦
பின்குறிப்பு: இந்த வாசிப்பனுபவத்தை எழுதி மறுபடி வாசிக்கும் போது நான் எழுதியதா? என்று அதிர்ச்சியாக இருந்தது. டிப் டிப் டிப் கவிதைகளை மீட்டியதன் விளைவு என்றும் மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
திளைத்தல் என்று கூட சொல்லலாம். இந்த விமர்சனங்களை எல்லாம் படிக்கும்போது புத்தகத்தை படிக்கும் ஆர்வம் தளைக்கிறது..அருமையான பார்வை..புத்தக அலமாரியில் டிப் டிப் - பை அவ்வளவு உயரத்தில் வைத்த்தது கூட படிமம் போன்றே எனக்கு படுகிறது.
ReplyDeleteபின்னூட்டத்திற்கு நன்றிங்க சார்
ReplyDelete