ஜீவா:சிறுகதை

   தமிழினி 2022 பிப்ரவரி இதழில் வெளியான கதை   


                          ஜீவா

ஆகஸ்ட் மாத வெயில் சூடேறத் தொடங்கும் காலை வேலை.  ஓரறை ஓட்டுவில்லை வீடு அது. கதவுக்கருகில் படுத்திருந்த அப்பாயி தலையைத் தூக்கிப் பார்த்தது. அவள் வடித்து வைத்திருந்த சோற்றை தட்டில் போட்டு புகையடுப்பில் சுண்டிக்கிடந்த தக்காளிக்குழம்பை ஊற்றிக்கொண்டு ஜீவா திண்ணையில் அமர்ந்தான். 




“பாப்பாவை எழுப்பிவுடுய்யா…”

“இன்னிக்கி பள்ளிக்கூடம் இல்லப்பாயி…வேலைக்குப் போறேன்…”

“இதுகள படிக்கவச்சி கரையேத்தலான்னு பாத்தா மாசக்கணக்கா பள்ளிக்கூடத்த மூடி போட்டுட்டானுங்க…நோவுநோவுன்னு ஊரே பதறிக்கெடக்கு. எட்டடியானுக்கு ஒரு பொங்க பூச வச்சி, ஊர்க்கெடா வெட்டி ஊருக்கு சோறு போட்டா எல்லாம் சரியா போயிரும். அத ஒருபயலும் நெனக்க மாட்டிக்கிறான்…”

“நம்ம ஊர்ல மட்டுமில்ல எல்லா நாட்டுலயும் தான் கொரானா…”

“ஆமாண்டா…அவுகவுக சாமிக்குண்டானத செய்யனும்…இப்பிடியே பள்ளிக்கூடம், பஸ்ஸூன்னு எல்லாத்தையும் நிறுத்திப்போட்டா எப்படி பொழைக்கறது…”என்றபடி எழுந்து கதவில் சாய்ந்து அமர்ந்தது. மூன்றாவது வீட்டில் இருந்து செந்தில்சித்தப்பா குரல் கொடுத்தார்.

“டேய்…ஜீவா….”

“என்னப்பா…”

“முன்னாடியே போய் கலவைக்கு வேணுங்குற மணலு, தண்ணில்லாம் ரெடி பண்ணி வையி…”

“சரிப்பா…”

வாசலில் கிடந்த கல்தொட்டியில் தட்டை கழுவி அதன் மேலேயே வைத்துவிட்டு ஈரக்கையை முழங்காலை மறைத்த நீண்ட  கால்சட்டையில் துடைத்துக் கொண்டான்.

வாசல் படலை திறந்தவனிடம் அப்பாயி, “சாமி கும்பிட்டுட்டு போடா…”என்றது. தலையாட்டிக்கொண்டான்.

முடக்குத் திரும்பியதும் ஆலமரம் எது அரசமரம் எது என்று தெரியாது பிணைந்து வளர்ந்திருந்த மரங்களின் அடியில் இரண்டு வேல்கள் நின்றன. வேல்கள் நின்ற கல்கட்டு தளத்தின் மீது இரண்டு ஆட்கள்  நிற்கவும் அவன் கீழே நின்று கொண்டான்.

“ரெண்டு உசுருல எதோ ஒன்னுக்கு துவட்டம்…வாதுகளப் பாருய்யா மாணிக்கம்…”என்ற  சன்னாசி பாட்டா கண்களை சுருக்கி சுருக்கி மரத்தை உற்றுஉற்று பார்த்து சுற்றி வந்தார். மணிக்கம் அய்யா ஒரே இடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.

“எத்தனைக்கு நெருக்கிப் புடிச்சு சூரியனுக்கு வழிவிடமாட்டேன்னு நின்ன மரம் இப்ப ஆறு மாசமா பச்சை விட்டுப் போவுதுய்யா…”

 சூரிய ஔி மரத்தின் கிளையிடுக்குகளில் ஊருவி அந்தப்பக்கம் பலவடிவங்களாக தரையில் வீழ்ந்திருந்தது. அங்கு மாணிக்கம்அய்யா நின்றார்.

“அடிக்கட்டையில கருப்படிக்குது…ரெண்டுல எதுல பூச்சியடிச்சிருக்கோ தெரியல.  அடித்தண்டு என்னமா இருக்குன்னு பாக்கனும். நானும் ஆறு மாசமா சொல்றேன். ஒருத்தனும் கேக்க மாட்டிக்கிறானுங்க…”

“ஆமாங்கய்யா வுட்டுட்டா  ரெண்டுமரமும் பழாப்போயிரும்…வாதுகள வெட்டி விடனுன்னா உடுக்கைடியடுச்சு சாமி பாத்து ஒப்புதல் வாங்கனும். நீங்க ஒப்புதல் வாங்கிட்டு சொன்னீங்கன்னா நல்லாருக்கும்,”

மீண்டும் மாணிக்கம் அய்யா கல்கட்டில் ஏறி மரத்தை சுற்றி வந்து தொட்டு தொட்டு பார்த்தார். மரத்தை தொட்டுக் கும்பிட்டுவிட்டு இடது கையை மரத்தில் ஊன்றியபடி குத்துகாலிட்டு அமர்ந்தார். பிணைந்து முறுக்கியிருந்த அடித்தண்டை தட்டிப்பார்த்தார். இடுப்பிலிருந்த நீண்ட குத்துக் கத்தியை எடுத்து கருப்படித்த இடத்தில் பாய்ச்சி எடுத்தார். குத்துக்கத்தியின் பளபளப்பில் தெரிந்த ஈரத்தை ஆள்காட்டி விரலால் நீவிப்பார்த்தார்.

“உசிர் புடிக்க நல்லா தெம்பு இருக்கு…பாத்து தேத்தி எடுக்க வழி சொல்றது எம்பொருப்புங்கய்யா,”

இருவரும் பேசியபடி விலகி நடந்தார்கள். 

ஜீவா கல்கட்டின் படிகளில் மெதுவாக ஏறினான். வேல்களின் கீழ் இருந்த கல்லால் ஆன விளக்குமாடத்தினுள் இருந்த தீப்பெட்டியை எடுத்து கல்விளக்கை பொருத்தினான். தீபம் காற்றில் தடுமாறியது. தட்டைக்கல்லால் ஒருபக்கமாக மூடினான். கைஈரத்தை சட்டையில் துடைத்துக் கொண்டான்.

கைக்கூப்பி கண்களைமூடி நின்றான்.  துறையூர் மருத்துவர் சொன்னதை மனப்பாடமாய் மெதுவாக வாய்விட்டு சொன்னான்.

“அம்மா அப்பாவா என்னோட சாமி இருக்கு. இனிமே பயப்பட மாட்டேன். நல்லா படிப்பேன். நல்லா சாப்பிடுவேன். எல்லோரோடையும் பேசுவேன். பாப்பாவ  பாத்துக்குவேன்…”

கண்களை திறந்தான். கல்விளக்கின் ஔி முதலில் விரிந்தது. நிமிர்ந்ததும் தாமரை மொட்டு போன்ற வேல்நுனிகள் தெரிந்தன. இரும்புவட்டிலில் இருந்த திருநீறை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டான்.

“விளக்கு ஏத்திட்டியா…”என்றபடி பார்வதி அக்கா வயலுக்கு எடுத்து செல்லும் சாப்பாட்டு கூடையை இறக்கி வைத்தாள்.

“கெணத்துவீட்டுக்கு சித்தாள் வேலைக்கு போறேக்கா,”

“அங்க என்ன வேல…”

“தெக்கால பக்கமா ஒரு ரூம் போடுறாங்க,”

“பாத்து நெதானமா செய்யி…பயப்படக்கூடாது…இந்த பூவ வேலுக்கு கீழ வையி…”என்று இரண்டு செவ்வந்திப்பூக்களைக் கொடுத்துவிட்டு,கூடையிலிருந்து எடுத்த கிண்ணத்திலிருந்த எண்ணெய்யில் பாதியை  விளக்கில் ஊற்றினாள்.

காரைத்தட்டில் மணலை தூக்கி வீட்டு வாசலில் குவித்தப்பின், பிளாஸ்ட்டிக் பேரலில் தண்ணீர் பிடித்து வைத்தான். அந்த வீட்டு அம்மா வாசல்படியில் வந்து அமர்ந்தாள்.  வெள்ளையும் ஊதாவுமான சேலை. ஜீவாவின் முகத்தின் மீது கண்களுக்கு அருகில் ஊதாநிறம் அலையடித்தது. அவன் மனம் புறத்திலிருந்து நழுவி அவனுக்குள் விழுந்தது.

அம்மா இது மாதிரி ஒரு சேலை வைத்திருந்தது. ஊர்த்திருவிழாவின் கடைசிநாள். ‘தரங்குத்தலின்’ போது அந்த  சேலையைத்தான் கட்டிக்கொண்டிருந்தது.  கனகாம்பரம் பூவும் மல்லிகைப்பூவும் கலந்து கட்டிய பூவை முதுகு வரை தொங்கவிட்டிருந்தது. தரங்குத்தலில் எத்தனையோ ஈட்டிகள் கூராக ஒரே இடத்தில் மோதும் மடமட சத்தம் கேட்கிறது. நீண்ட மூங்கில் குச்சிகளில் செருகப்பட்ட கூர் ஈட்டி முனைகள்.  ஆட்டின்தலை வானத்தை நோக்கி வீசப்படுகிறது. அத்தனை ஈட்டிகளும் ஒரு இடத்தில் சரசர வென்று சரிகிறது. ஆட்டின் தலை ஈட்டியில் குத்தி நிற்கும் ஒவ்வொரு முறையும் அவன் உடல்கூசி அம்மாவின் முந்தானையை எடுத்து எடுத்து முகத்தை  மூடிக்கொள்கிறான்.

அம்மா சிரித்தபடி, “ நீயே இந்த சேலைய கையோட வச்சிக்க. என்னடா ஆம்பளப்பய நீ…” என்று இழுத்து அணைத்துக் கொண்டாள்.

“ஏ…பயலே…பள்ளிக்கூடம் போறதில்லையான்னு கேக்குறனே ஒன்னுமே சொல்ல மாட்டிக்கிற...”

அந்தம்மாவின் குரலால் பிடரியில் ஒரு கூச்சம் வந்து தள்ளிவிட்டதைப் போல விசுக்கென்று மனதிலிருந்து வெளியே வந்தான்.

“ப்ளஸ் டூ ம்மா…”

“வேலைக்கும் போவியா…”

“கரோனா லீவுலருந்து போறேம்மா…”

“சாப்பிட்டியா…”

தலையாட்டும் போதே சித்தப்பா வண்டியை நிறுத்தி இறங்கினார்.

“ ரெண்டுரெண்டா…செங்கலை எடுத்துட்டு வந்து போடு…”

செங்கற்களை எடுத்து வந்து சுவர் எழுப்பும் இடத்தில் குவித்து வாளியிலிருந்த நீரை ஊற்றினான். செங்கற்கள் சுர் …சூர்ர்… என்ற சத்தத்துடன் தண்ணீரைக் குடித்தன. மீண்டும் ஊற்றினான்.

“தண்ணி ஊத்துனது போதும்…கலவை கலக்கி வச்சிருக்கேன்…தூக்க முடிஞ்ச அளவுக்கு தூக்கிட்டு வந்து அங்கக் கொட்டனும்…எம்பக்கத்துல ஒருவாளி தண்ணி கொண்டாந்து வையி…”

“சரிப்பா…”

“நிக்காம மெதுவா செஞ்சா போதும்…”

“சரிப்பா…”

அவன் மெதுவாக கலவையும், செங்கலும் கொண்டு போய் வைத்துக் கொண்டிருந்தான்.

சித்தப்பா அலைபேசியில் பாட்டை ஒலிக்கவிட்டு கரணைய கும்பிட்டு வேலையை தொடங்கினார். 

சித்தப்பா பெஞ்சில் ஏறியதும் அவருக்கு  கீழ் காரைத்தட்டை கையில் ஏந்திக் கொண்டு நின்றான். முன்பகல் வேளையில் வீதி மெதுவாக அரவம் குறைந்து அமைதியானது. காக்கா குருவிகளின் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. சிட்டுக்குருவிகள் பேரல் தண்ணீரில் விழுந்து எழுந்து உடல் சிலுப்பிக்கொண்டன. மண்ணில் புரண்டு எழுந்து மீண்டும் தண்ணீருக்குள் பாய்ந்து எழுந்தன.

சத்தங்கள் குறைந்து அமைதியாக ஆக படிப்படியாக அவன் நெஞ்சு துடிப்பது அதிகமானது. கையை கீழே இறக்கி தொடையில் முட்டுக்கொடுத்தான். மீண்டும் தூக்கினான்.

“கொஞ்சம் நேரம் ஒக்காரு…”

அருகே கிடந்த கருங்கல்லில் அமர்ந்தான். இந்த மாதிரி இருந்தால் கொஞ்சதூரம் நடந்து போயிட்டு வா. பாட்டு கேளு. பக்கத்துல இருக்கவங்கக்கிட்ட பேசு என்று மருத்துவர் சொல்லியது அவன் நினைவிற்கு வந்தது. சித்தப்பாவின் அலைபேசி பாடலை கவனித்துக் கேட்டான்.

“இப்பெல்லாம் பாட்டு கேக்கறியோ…உங்க வூட்டு டீ.வியில பாட்டு சத்தம் கேக்குதே,”

தலையை குனிந்து கொண்டான்.

அவனைப் பார்த்து புன்னகைத்தபடி, “செல்லை எடுத்து அடுத்த பாட்டை மாத்து…”என்றார்.

வெற்றி வேலடா இது வீரவேலடா என்று பாடல் துவங்கியது. 

“இந்தப்படம் அப்ப அப்பிடி ஓடுச்சு. நானெல்லாம் ஒரு பத்துவாட்டியாச்சும் பாத்திருப்பேன். கோட்டப்பாளையத்துல சினிமா கொட்டாயி இருந்துச்சு தெரியுமா?”

“தெரியாதுப்பா,”

“இப்ப நெல்லு குடோனா இருக்கே அதுதான்..”

“அதுவா…”

“கொட்டாய் முன்னாடி எம்புட்டு எடம்.  பள்ளிக்கூட மைதானம் மாதிரி…சந்தனக்கலர்ல்ல அந்த சினிமாக்கொட்டாயி ஜம்முன்னு இருக்கும்…”

மிதிபடும் நிலமென பொறுப்பது காதல் என்று அலைபேசி தான் போக்கில் பாடியது.

“இந்த வரியெல்லாம் சினிமா கொட்டாயில கேக்கறப்ப அப்படி இருக்கும். ஒவ்வொரு தவண பேசறப்பவும் உங்க சித்திக்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பேன்…”

ஜீவா நிமிர்ந்து பார்த்தான்.

“தண்ணியெடு,”

தண்ணீர் குவளையுடன் நின்றான்.

“அப்ப என்ன வயசுங்கற. உன்னவிட ஒரு நாலுவருஷம் கூட இருக்கும்,”

மீண்டும் பாடல் வரி. சிரித்தான் பகையே அவன் கேலி சுடவில்லையா?

“இத கேட்கறப்பெல்லாம் சக்திமச்சான் கன்னத்துல ஒரு அரை விடனுன்னு தோணும்,”

“சக்தி மாமாவையா?”

“அது கல்யாணத்துக்கு முன்னாலடா…இப்ப மலையேறுனாலும் எம்மச்சான் வேணுல்ல…”

அவனே காரைத்தட்டில் கலவையை எடுத்து வந்து தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு நின்றான்.

“ஒருநாளு உங்க சித்தியும், நானும் நம்ம வேல் கோயில் மரத்துக்குப் பின்னாடி பேசிக்கிட்டிருந்தத பாத்துட்டாங்க. உங்க சித்தி வூட்டுக்கும் நமக்கும் சரியான சண்டை. அன்னிக்கு ராத்திரி ஒருமணிக்கு அதே கோயில் முன்னாடி தாலி கட்டிட்டேன்,”

ஜீவா நிமிர்ந்து விழிகளை விரித்தான். 

“ஆமாண்டா…சக்திமச்சான் என்னைய அங்கியே வச்சு விளாசுனாம்பாரு. நாலு நாள் எந்திரிக்க முடியல,”

துளிதான் நெருப்பே அது காட்டை சுடவில்லையா என்று பாடல் முடிந்தது.

“இப்பெல்லாம்  உங்க சித்தி போடற போடுல இந்தப் பாட்டெல்லாம் கேட்டிருக்க வேணாம்ன்னு தோணுது…”

ஜீவா முகம் மலர்ந்தது.

“சிரிப்பு வந்தா சிரிடா பயலே…”

“ஆனாலும் இந்தப்பாட்டு எப்பக்கேட்டாலும் புடிக்கும்…உங்க சித்தி என்ன வாங்குவாங்குனாலும் அவளத்தானே புடிக்குது. அது ஒரு பயித்தியக்கார தனம்டா…”என்றபடி செங்கல்சுவரின் மீது கலவையை அடித்து வீசினார்.

“பாட்டு பிடிக்கலையாடா…இந்த காலத்து பயலுகளுக்கு புடிக்குமா,”என்றபடி மட்டப்பலகையை எடுத்து தேய்த்தார். எஞ்சிய சிமெண்ட் உதிரத்தொடங்கியது.

துளிதான் நெருப்பே காட்டை சுடவில்லையா? யாரோ சொல்லியது போல இருந்தது. யார் என்று யோசித்தபடி கலவைத்தட்டை தூக்கிக்கொண்டான். டாக்டரின் குரல் காதுகளில் கேட்டது.

ஜீவா மனசுக்குள்ள பயப்பட மாட்டேன்னு நீயே சொல்லிக்கனும். காலையில எழுந்திருச்சதும்,கடவுள் முன்னாடி நிக்கிறப்ப,படுக்கறதுக்கு முன்னாடின்னு உனக்கு தோணும்போதெல்லாம் நீயே சொல்லிக்கனும். ஒரு வார்த்தை தான். சின்ன தீப்பொறி மாதிரி. கொஞ்சநாள் கழிச்சு மனசு முழுக்க அதுவே மாறிடும். 

பதினோரு மணிக்கு மேல் வீட்டம்மாள் தேநீரும்,போண்டாவும் கொண்டு வந்தாள். அவனால் ஒருக்கையில் டீ டம்ளரையும் மறுகையில் போண்டாவையும் வாங்கமுடியவில்லை.

“அந்தப்படியில ஒக்காருய்யா…டீ சூடா இருக்கு,”என்றாள்.

உட்கார்ந்ததும் படியில் டம்ளரை வைத்துவிட்டு,“எப்படி இம்புட்டு செமைய தூக்குறான்…”என்று சித்தப்பாவை பார்த்தாள்.

“கொஞ்சம் மெரளுவான்…”

“ஒம்பங்காளி மவந்தானே…அப்பனாத்தா ரெண்டும் ஒன்னுக்கொன்னு ஆத்திரப்பட்டு போய் சேந்திருச்சுங்க.  இப்படி பிள்ளைங்களை தனியா வுட்ருச்சுங்களே…”

“ஆமாக்கா…புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் அதுங்க கோவம் தான் பெரிசுன்னு செத்துபோச்சுங்க. இப்ப நம்மளால பிள்ளைங்க படுற சிரமத்த பாக்க முடியல…”என்று அவன் தலையை தடவினார்.

“அவங்கப்பன பாத்தாப்ல இருக்கான்…”

“நம்ம என்ன பணங்காசு வச்சிருக்கமாக்கா…நம்ம வண்டியே இழுத்துப்பிடிச்சு ஓடுது. முடியாததுக்கு ஒன்னு ரெண்டுதான் நம்மளால செய்ய முடியுது…”

“நீ என்ன பண்ணுவ…பயல தனியா வுடாம கூட வச்சிக்க போதும்…”

“நாளைக்கு லீவுக்கா….”

“வேலயை சுருக்க முடிச்சுக் குடுத்துருவேன்னு பாத்தா…”

“இவன துறயூர் பெரிய ஆஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனும்…”

“ஒடம்புக்கு என்ன?”

“டேய்…கட்ட செட்டியார் கடைக்கு போயி நம்ம கணக்குல ரெண்டு பஞ்சு வாங்கிட்டு வா..”

எழுந்து நடந்தான்.

“இந்த வயசு பயலுக்கு துள்ளல் இல்லையே…”

“ஆமாக்கா…இந்த வயசுலயே நெதமும் ராத்திரி மாத்திரை. ஒடம்பு என்னப் பண்ணும்,”

“நெதமும் மாத்திரையா…”

“ஆமாக்கா…ஆயிஅப்பன் செத்து ஒரு மாசத்துல பிள்ளை ராத்திரியானா  திடீர்ன்னு எந்திரிச்சு அழுகவும் மெரளவுமா இருந்தான். பெரியசாமி கோயிலுக்கு போய் கோடங்கி பாத்து துன்னூறு புடிச்சோம். கயிறுகட்டியும் ஒன்னும் ஆகல. பேய் ஓட்டனுன்னு ஆளாளுக்கு ஒன்னு சொன்னாய்ங்க. பிள்ளைக்கு ஒடம்பு காயுது. எவன் பேச்சையும் கேக்காம பைக்குல ஏத்தி டாக்டருக்கிட்ட தூக்கிட்டு போயிட்டேன்…”

“நல்லாருப்ப போ. என்ன ஏதுன்னு புரியாம நம்ம சனங்க பண்ற வேல…”

“அந்த டாக்டரு வைத்தியம் பாத்துட்டு இன்னொரு டாக்டருட்ட அனுப்புனாரு. அந்த மனுசன் ஐயாத்து தண்ணியாட்டமா அப்படி ஒரு மனுசன். அவருதான் பிள்ளைக்கு மனசு அதிர்ச்சி. இப்படியே விடக்கூடாதுன்னு சொன்னாரு. எம்புட்டு மருந்து இந்த வயசுல…வாரத்துல ஒருவாட்டிதான் வருவாரு,”என்றபடி எழுந்து பேரலில் இருந்த நீரால் முகத்தை கழுவிக்கொண்டு செங்கலை எடுத்து வைத்தார்.

சாயங்காலம் வேலை முடியும் நேரத்தில் மணிகொத்தனார் வந்து நின்றார். 

“ தர்மராசு வூட்ல ரெண்டுநாளு வேல இருக்கு. தொணைக்கு பயல அனுப்புறியா…”

“இல்லண்ணே…வெளியில வேலைக்கு இன்னும் அனுப்பல,”

“அதான் நல்லா வேல செய்யறானே…எங்கூடத்தானே…”

“இல்லண்ணே…சித்தாள் தானே வேணும். நாம் பாத்து சொல்றேன்…”

“நீ மட்டும் சின்னப்பயல வேல வாங்கிக்கிடனுன்னு நெனக்கிற…டேய் வேலைக்கு வரியா நீ. சொல்லுடா…”

“சித்தப்பா சொன்னா வரேன்…” என்று சொல்லிவிட்டு மண்வெட்டியை கழுவினான்.

அவர் சென்ற பிறகு அந்தம்மாள், “ஏண்டா மணிக்கூட அனுப்பு…நாலு பேரோட பழகட்டும்,”என்றாள்.

“இல்லக்கா…பிற்பாடு அனுப்பிக்கலாம்…”என்றபடி சித்தப்பா பைக்கை எடுத்தார்.

கரணை,காரைத்தட்டுகளை கழுவி ஓரமாக எடுத்து வைத்து விட்டு வீட்டிற்குள் எட்டிப்பார்த்தான்.

“வேலமுடிஞ்சுருச்சாய்யா…”என்றபடி வீட்டம்மாள் கையில் சிறு பையுடன் வந்தாள்.

“வூட்டுக்கு போயிட்டு வரேம்மா…”

“இந்தா இதுல தீனி இருக்கு. நீயும் பாப்பாவும் தின்னுங்க…”

“வேணாம்…”

“பெரியவங்க குடுத்தா வாங்கிக்கனும்..”

“இல்ல …வேணாம்”

“உங்க சித்தப்பனுக்கிட்ட நாஞ்சொல்லிக்கறேன்..”

வாங்கிக்கொண்டு தெருவில் நடந்தான். 

திண்ணையில் அமர்ந்திருந்த பாப்பா ஓடி வந்து பையை வாங்கினாள். திண்ணையில் உட்கார்ந்து பிரித்தாள்.

சற்றுத்தள்ளி திண்ணையில் கிடந்த பாயில்  படுத்து உடலை முறுக்கினான். உடலெங்கும் வலி. விட்டத்தைப் பார்த்தான். அதுவரை விலகி சென்றிருந்த அம்மா அப்பாவின் முகம் தலைமேல் தெரிந்தது.







Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

பசியற்ற வேட்டை

பெருகும் காவிரி