நதிப்பயணம்:ஜானகிராமம்
எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டை ஒட்டி காலச்சுவடு பதிப்பகம் கொண்டு வந்த 'ஜானகிராமம்' என்ற நூலிற்காக நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் . தி.ஜா நண்பர் சிட்டியுடன் இணைந்து எழுதிய பயணநூலான 'நடந்தாய் வாழி காவேரி ' என்ற நூல் குறித்த கட்டுரை.
ஜானகிராமம் நூலை தொகுத்தவர் பேராசிரியர் கல்யாணராமன். கொரானா பெருந்தொற்று கால ஊரங்கு நாட்களில் வெளியிடப்பட்டதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அவரது இல்லத்தில் வெளியிடப்பட்டது. இந்த நூலில் நூற்றி இரண்டு கட்டுரைகள் உள்ளன.
தி.ஜா வின் நூற்றாண்டு மலருக்காக கட்டுரை எழுதியது என்பது எனக்கு மனநிறைவைத் தருகிறது.
நதிப்பயணம்
கதைசொல்லுதல் வழி உலகம் கண்களுக்கு தெரியாத வலையால் வரலாற்றுடனும், வரலாற்றுக்கு முந்தைய புராணகாலத்துடனும், அதன்மனிதருடனும், அந்த வாழ்வுடனும், நிகழ்காலத்தில் இணைந்திருக்கிறோம்.கதைகள் காலத்தை கோர்த்துக்கட்டும் பூஞ்சரடு.நேற்றும் இன்றும் நாளைகளுக்குமான சரடு.
அவ்வகையில் பயணஇலக்கியம் ஒரு கதைசொல்லல் வகை.மேற்கொண்ட பயணத்தில் எதிர்பார்த்தது, நிகழ்ந்தது, நிகழசாத்தியமிருந்தது என அனைத்தையும் இணைத்தது.நாம் ஒன்றை சொல்லும் பொழுது இம்முன்றையும் தெரிந்தா தெரியாமலோ இணைத்து சொல்கிறோம்.
அதுவும் ரசனை மிகுந்த தி.ஜா என்ற எழுத்தாளமனம், தன் பயணத்தை மொழியாக்கும் பொழுது மேலும் பல வண்ணங்கள் இணைகின்றன.அதோடு இணையாக சிட்டி என்கிற மனமும் சேர்ந்து எழுதிய நடந்தாய் வாழி காவேரி என்ற பயணநூல் எழுதியவர்களை பிரித்தரியமுடியாத இரண்டிலியாக சிவசக்தியின் அழகை, ஆகிருதியை பெற்றிருக்கிறது.இணை ஆறும், துணை ஆறும் இணைந்த நதியாகி நம் மனதில் கலக்கும் அழகிய அனுபவம்.
பயணங்கள் இலகுவாகிவிட்ட, உலகம் செல்பேசியில் நுண்வடிவாய் கைகளில் நின்றிருக்கும் இந்தகாலகட்டத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எழுதிய பயணஎழுத்தி்ன் இலக்கிய மற்றும் வாசக பெறுமதி என்ன?
எழுத்தாளர் ஜெயமோகன் இன்று பயணஇலக்கியத்தின் முக்கியத்துவம் என்பது ‘மொழியனுபவம்’ என்கிறார்.ஆமாம்.மொழி அனைத்தையும் அழகாக்கி தன்னுள் நிறைத்துக்கொள்வது.மேலும் படிமங்களால் உருவான நம் மனதின் ஊடுவழிகளை பிடிப்பதில் மொழி அளவிற்கு வேறெதற்கும் அத்தனை நுண்மையில்லை.காட்சிஊடகங்களின் ஆதிக்கம் நிறைந்த காலகட்டத்தில் நின்றும் இதை உறுதியாக சொல்லமுடியும்.
அந்தவகையில் எழுத்தாளர் தி.ஜானகிராமன் மற்றும் எழுத்தாளர் சிட்டி என்கிற பெ.கோ.சுந்தரராஜன் ஆகிய இருவரும் இணைந்து எழுதிய மொழியில் ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற பயணநூல் இன்றும் நல்லவாசிப்பனுபவத்தை தரக்கூடிய நூலாக உள்ளது.
உண்மையில் இந்தக்கட்டுரைக்காகவே இந்த நூலை வாசித்தேன்.என் எழுத்தாளர் என்று சொல்லக்கூடிய மனதின் பட்டியலில் முன்நிற்பவர்களில் ஒருவர் தி.ஜா.கல்லூரி காலகட்டத்தில் தி.ஜா வைப் பற்றி தோழிகளிடம் பேசிக்கொண்டேயிருந்த குறிப்பிட்ட காலகட்டம் அது.அவரை தொடர்ந்து வாசித்த இளம்நிலை மூன்றாம் ஆண்டு.ஆனால் பயணநூல் என்பதால் இந்தநூலை நூலகத்தில் கண்டும் காணாமல் இருந்துவிட்டேன்.ஆனால் அந்தவயதில் வாசித்திருந்தால் இன்னும் பசுமையான அனுபவமாக இருந்திருக்கக்கூடும்.
நாவல்களிலும் சிறுகதைகளிலும் உருவாகி மனதில் நின்றிருக்கும் எழுத்தாளர் தி.ஜா வை மிக நெருங்கி அறியும் ஒருதருணமாக இந்தநூலின் வாசிப்பனுபவம் அமைகிறது .எப்படியும் வாசகர்களுக்கு ,எழுத்தாளர்கள் மிகவும் அந்தரங்க உறவானவர்கள்.அவ்வகையில் பயணஎழுத்து போன்ற சுயசரிதைவடிவ எழுத்தானது எழுத்தாளர்களின் அருகில் இருக்கும்,பேசும்,சிரிக்கும்,உடன் செல்லும் நிகர்வாழ்வியல் தருணங்களை தரவல்லது.தி.ஜா மறைந்த பின் பிறந்த என் போன்ற வாசகர்கள் இந்த வாசிப்பனுபவம் மூலம் காலத்தை நோக்கி புன்னகைக்கும் தருணம் அமைகிறது.பயணஎழுத்தின் முக்கியத்துவமாக இதையும் சொல்லலாம்.காலம் கடந்து இணைந்து பயணித்தல்.
இந்தநூலில், காவிரியின் பிறப்பு முதல் அது கடலுடன் கலக்கும் வரையான காவிரியின் சித்தரிப்பு நிரம்பியுள்ளது. மேலும் காவிரியின் உபநதிகள், கரையின் காடுகள், ஊர்கள், அவற்றின்வரலாறு, தென்னாட்டு அரசர்கள், இங்கு வந்தமுகலாயர்களும் ஆங்கிலேயர்களும், பொதுமக்கள், தெய்வங்கள் பற்றிய பல்வேறு சேதிகள் ,துணை ,இணையாறுகளாக பெருகி பயணநூலை நிறைக்கின்றன.
நூலில் தி.ஜாவின் அகமனம் தேடும் அழகியல் வெளிப்படும் இடங்கள் நிறைய இருக்கின்றன.தி.ஜா வின் புனைவுகளை வாசித்தப்பின் இந்தநூலை வாசிப்பதில் உள்ள வசதி, நாம் சிட்டியையும் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளமுடியும் என்பது.
இந்த நூலை வாசிக்கும் அனுபவத்தை மொழியால் ஆன ஒருகனவு பயணம் என்று சொல்லலாம்.
ஐம்பதுஆண்டுகளுக்கு முன்பு பயணம் செய்வதற்கான முன்ஏற்பாடுகள், வாகனவசதி, உணவுசார்ந்த விஷயங்கள் என்று, நூலில் உள்ள அன்றைய அன்றாடம் சார்ந்த விஷயங்கள் ஒரு புனைவின் அளவிற்கு உற்சாகமானவை.மேலும் அதை சொல்லும் தி.ஜாவின் இனிப்பான மொழிநடை.
முக்கியமாக பயணத்தில் குடிநீருக்காக காரில் ஒரு குடத்தை வைத்தபடி அங்கங்கே காவிரியில் நீர் எடுத்துக்கொண்டு பயணித்திருப்பதை வாசிக்கும் பொழுது எத்தனை பொறாமையாக இருக்கிறது.நீர் சுமையற்ற பயணம்.
இருட்டுப்பாதையில் தலைகாவிரி காண குடகு மலையின் அபாயகரமான பாதையில் பதட்டமான பயணத்தில் மலைஏறும் இருட்டிய பொழுதில், சிட்டி வீட்டிலிருந்து அழைத்திருந்தால் என்னவாகியிருந்திருக்கும்.மூங்கிலால் டயர் கிழிந்த நேரத்திலோ,ஆடுதாண்டும் பாறைகாண செங்குத்து கற்களில் ஏறிநடக்கையிலோ ‘ஒரு மணியடித்தால்..’ என்று தி.ஜா வின் அலைபேசி அடித்திருந்தால் என்னவாகியிருக்கும்? அவர் பாஷையில் சொல்வதானால் மனுஷர் குலைநடுங்கியிருப்பார்.
அலைபேசியின் மொய்ப்பற்ற பயணம்.இன்றைக்கு எங்கிருந்தாலும் அலைபேசி வழி வீட்டில்தான் இருப்போம்.முற்றிலுமாக வீட்டிலிருந்து துண்டித்த பயணம் என்பதே உற்சாகமானதாக இருக்கிறது.அன்றில், அப்போதைய இடத்தில், அங்கிருக்கும் மனிதருடன் முற்றிலுமாக இருக்க இயன்ற ஒருபயணம் என்ற எண்ணம் வாசிப்பு முழுவதும் உடனிருந்தது.
இசை ஓடும் மனது அவர்களுடையது.பயணத்தில் காவேரி சார்ந்த பாடல்களை நினைவுகூர்ந்தபடியே இருக்கிறார்கள்.காவிரி கரை மைந்தர்கள் என்பதால் இளமை நினைவுகளும் ஊறிப்பெருகுகின்றன.தங்கள் ஊரின் சிறுபிராயத்தில் தான் விளையாடிய ,நண்பர்களுடனிருந்த,பால்யத்தை அழகாக்கிய தன் ஊரின் நதி என்ற இயல்பான ஒன்றுதல் மற்றும் நெகிழ்ச்சி.
இதிலென்ன…வெறும் நினைவேக்கம் என்று எளிதாக கடக்க முடியாது என நினைக்கிறேன்.அந்த லயிப்பு இல்லாத மனங்கள் வெறுமையை சந்திப்பதாக தோன்றுகிறது.பால்யத்தில்,இளமையில் தன்இடம் தம்மனிதர்கள் என நனையாத மனங்களிடம் பின் எப்போதும் ஈரம் கூடுவதில்லை.அது இன்றைய சிக்கல்களில் ஒன்று.
முக்கியமாக அன்றைய போக்குவரத்து நெரிசலில்லாத பயணம்,வாசிக்கும் நமக்கு ஆசுவாசமாக இருக்கிறது.நீண்டபயணங்களில் வண்டிஓட்டியை கிண்டலடிக்கும் பயணிகளும்,பயணிகளை மறைமுகமாக சலித்துக்கொள்ளும் வண்டிஓட்டிகளும் பயணத்தை ரசமாக்குகிறார்கள்.இங்கும் காரோட்டியை மொழியால் ஆங்காங்கே ஒரு கிள்ளுகிள்ளாமல் இவர்களும்,இவர்களை சலித்துக்கொள்ளாமல் காரோட்டியும் நகரவில்லை.
பயணத்தில் உடன் ஓவியர் ஒருவர் இருக்கிறார்.கருப்புவெள்ளை கோட்டோவியங்கள் நூல் முழுக்க உள்ளன.கையால் அந்த இடத்திலேயே அமர்ந்து எழுதியவை.எழுத்தாளர் ஒன்றை பற்றி நேரனுபவமாக எழுதி வருகையில், இணையாக அதே இடத்தில் ஓவியரின் மனம் எதை தேர்வு செய்திருக்கிறது என்று அவதானிப்பது இந்நூல் தரும் நல்அனுபவம்.
பயணம் கிளம்பும்பொழுது ஒரு திட்டம் இருந்தாலும் ஒவ்வொரு இடமாக அதுமாறுகிறது.அங்காங்கு உள்ள உதவிகளை பெற்றுக்கொண்டு உள்ளூர்வாசிகளை விசாரித்து பயணிக்கிறார்கள்.இந்தநூலில் வந்துபோகும் உண்மை மனிதர்களை, புனைவின் கதாப்பாத்திரங்கள் அளவுக்கு நம் கற்பனையால் விரித்துக்கொள்ள தேவையான குறிப்புகள் நூலில் உள்ளன.உதாரணத்திற்கு பசவய்யா என்ற பதின்வயது பையன்.
எத்தனை எத்தனை உபநதிகள்.காவிரியே தன்னளவில் இணைத்து இணைத்து உருவான காலாதீத தோற்றம் எழுத்துவழி நம் மனதில் உருபெறுகிறது.மனிதர்கள் நதியோடு புறவயமான வாழ்வை இணைத்துக்கொண்டதைப்போலவே, அவர்களின் அகவயமான பிணைப்பும் வலுவனது.அதை இந்த நூல் முழுவதுமே வெவ்வேறு மாதிரி சொல்கிறார்கள்.அப்படியானால் பயணஇலக்கியத்தில் தத்துவமும் சேர்ந்து கொள்கிறது.
ரங்கநாதர் காவிரியின் போக்கில் மூன்று இடங்களில் பள்ளிகொண்டிருக்கிறார்.இந்தமாதிரியான விவரணைகள் நூலில் வரும்போது காவிரியை ரங்கனின் உருவமாக மாற்றிக்காட்டும் மாயத்தை செய்கிறது.சிரம் உந்தி பாதம் என.கோவில் கொண்ட அந்த மூன்றுஇடங்களும் காவிரி ஏற்படுத்திய தீவுகள்.பாற்கடலில் சயனிக்கும் அனந்தன்.உடன் ஜலகண்டர் இருக்கிறார்.
காவிரி உற்பத்தியாகும் குடகின் தலைகாவிரியிலிருந்து கடலில் கலக்கும் புகார்வரை பயணித்து எழுதிய பயணநூல் ‘நடந்தாய் வாழி காவேரி’. இந்தநூல் பதினெட்டு அத்தியாயங்களாக உள்ளது.
1.ஆவேசம்
பயணம் கிளம்பும் பொழுது உள்ள உற்சாக மனநிலை மற்றும் அதோடு இணைந்த நினைவுகள் எழுதப்பட்டுள்ளன.மாயவரத்தின் கைக்காட்டியிலிருந்து கிழக்கு மேற்காக பிரியும் சாலைகள் உள்ளன.கிழக்கு சாலை உறையூருக்கும் புகருக்குமான வணிகசாலையாக இருக்கிறது.மேற்குசாலை மாயவரத்திலிருந்து சோழ தலைநகரான உறையூருக்கான சாலை.
இந்தசாலை இளமையில் தி.ஜாவிற்குள் சிலப்பதிகாரம் சார்ந்த கனவுகளை விதைத்துள்ளது.அதை கண்ணகி கோவலன் நடந்து சென்ற சாலை என்றும், முன்னூறு கஜ தொலைவில் பழங்காவேரி உண்டு என்றும், ஆதிகாவேரி தன் போக்கை எப்பாழுதோ மாற்றியிருக்கிறது என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து கிளம்பி காவிரி ஓட்டத்திற்கு எதிர்ஓட்டமாக தலைகாவிரிக்கு பயணமாகிறார்கள்.காவேரியின் நீரோட்டத்தில் இருக்கும் சிவசமுத்திரம் என்ற தீவிற்கு செல்கிறார்கள்.தீவைப்பற்றிய விவரணைகள் உள்ளன.கனகசுக்கி மற்றும் பார்சுக்கி நீர் வீழ்ச்சிகளை அடைகிறார்கள்.அது பற்றிய விவரங்கள்.அங்குள்ள ஜெகன் மோகன ரங்கநாதர்,சிவ ஆலயங்களுக்கு செல்கிறார்கள்.
2.அமைதி
விஜயநகர சாம்ராஜ்ய வம்சத்தின் ஆச்சாரியாரால் கட்டப்பட்ட மாதவமந்திரிகட்டே என்ற அணக்கட்டு,மைசூரின் நெற்களஞ்சியமான திருமூக்கூடல்,நர்சிபூர்,தலைக்காடு,மணற்குன்றுகளிடையே பள்ளத்தில் புதைந்த கீர்த்தி நாராயணசாமி கோவில் போன்ற இடங்களுக்கு செல்கிறார்கள்.அந்த இடங்கள் சார்ந்த ஐதீக வரலாற்று விவரிப்புகள் உள்ளன.
திருமுக்கூடல் காவிரி,கபிலை கலக்கும் சங்கமம்.அடியில் ஸ்தபதிகஸரோவர என்ற தடாகமும் கலக்கிறது.கபிலையின் வழித்தடங்களின் விவரிப்பு உள்ளது.காவிரியின் நீள அகலங்கள் நீரின் அளவு சார்ந்த புள்ளிவிவரங்கள் உள்ளன.முக்கூடலில் உள்ள அகதிஸ்வரர் ஆலயம் மற்றும் அதுபற்றிய ஐதீகக்கதை மற்றும் ஸோமநாதபுர சென்னகேசவ ஆலயம் அதன் வரலாற்று பின்னணி பற்றி நுணுக்கமாக எழுதப்பட்டுள்ளது.
பின் ஆதிரங்கமான ஸ்ரீரங்கப்பட்டணம்.கோட்டை வாயில் உள்ள ஊர் அது.ஐதீகவழியில் ரங்கநாதர், வரலாற்றுவழியில் திப்புசுல்தான் மற்றும் அங்குள்ள தொற்றுநோய் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீரங்கப்பட்டிணத்தின் மீதான நீண்ட அந்நிய முற்றுகைகளின் வரலாறு உள்ளது.பின் கிருஷ்ணராஜசாகரம்,கண்ணம்பாடி அணை மற்றும் பிருந்தாவனத்திற்கு பயணமாகிறார்கள்.
3.அடக்கம்:
கிருஷ்ணராஜசாகரம் சென்ற அனுபவம் மற்றும் அதன் வரலாறு,உலகின் இரண்டாவது பிரமாண்டமான செயற்கை நீர்தேக்க ஏரி போன்ற சாகரம் நிறைய குறிப்புகள் மற்றும் அணையின் பரப்பு மற்றும் நீரின் அளவுகள் பற்றி எழுதியிருக்கிறார்கள்.அந்த இடத்தில் காவேரி பற்றிய எழுத்தாளரின் மனஓட்டம் விரிவாக சொல்லப்படுகிறது.
சிறுவயதில் தஞ்சை மாவட்டத்தில் மெர்க்காரா மெர்காரா என்று ஜெபம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது.அதன் காரணத்தை தி.ஜா குடகில் கண்டடைகிறார்.குடகின் தலைநகர் அது.அங்கு மழை பெய்தால் காவிரி நிறையும் என்பதால் ஏற்பட்ட பழக்கமானது,மூலகாரணம் தெரியாமல் வெறும்சடங்காக தொடர்ந்திருக்கிறது.
சித்தாப்பூர் என்ற ஊருக்கு செல்லும் திகில் அனுபவத்தை சுவாரசியமாக எழுதியிருக்கிறார்.மூங்கில் அடர்ந்த பகுதி அது .அடுத்ததாக பாகமண்டலம் என்ற காட்டுச்சோலை நகரத்திற்கு செல்கிறார்கள்.பாகமண்டலத்தில் காவேரியோடு முதல் உபநதி கலக்கிறது.அடுத்ததாக அப்போதைய அபாயகரமான பாதையில் இருட்டு நேரத்தில் குடகு மலையேற்றம் பற்றி எழுதப்பட்டுள்ளது.
4.அழகு
குடகு மலைப்பாதையின் ஆபத்தான பயணம்.இந்த அத்தியாயத்தில் தி.ஜாவின் அகமனம் வெளிப்படும் இடங்கள் உள்ளன.அலாதியான வர்ணனைகளால் எழுதப்பட்டள்ளது. சிறுகுண்டத்தில் காவிரி பிறக்கிறது.எழுச்சி கொள்ளும் எழுத்தாளரின் மனம் இந்த அத்தியாயத்தை ஆக்கிரமிக்கிறது .சஹ்யாத்திரி மலை,பிரும்மகிரி என்று அந்த இடத்தை கூறுகிறார்கள்.
காவேரி சார்ந்த அகத்திய புராண ஐதீகக்கதைகள் மற்றும் உபநதிகள் பற்றிய விவரங்கள் வருகின்றன.காவேரி பற்றிய கன்னட கவிதை ஒன்றை எழுத்தாளரின் மனம் அசைபோடுகிறது .அங்கிருந்து சற்று தொலைவில் அந்தர்வாஹினியாக காவிரி கண்களிலிருந்து மறைந்துஅடர்ந்த காட்டிற்குள் மறைகிறது.
காலநிலை,விழாக்கள்,மகாபாரத கதைகளை இணைத்துக்கொண்டு இடவிவரணைகள் எழுதப்பட்டுள்ளன.பிரம்மகிரி உச்சியிலிருந்து மேற்குதொடர்ச்சிமலையை பார்க்கிறார்கள் .பாகண்டேஸ்வரர் ஆலயம் செல்கிறார்கள்.நதியோர விவசாய வாழ்வில் ஆலயத்தை சார்ந்த ஐதீகநம்பிக்கைகள் பற்றிய விளக்கங்கள் உள்ளன .காவிரியோடு இணைந்த குடகியர்களை வாழ்வியல் தருணங்களை கண்டு எழுதியிருக்கிறார்கள் .குடகின் வரலாறு சொல்லப்படுகிறது .பாலூரின் காவிரி வடக்காக ஓடுவதால் உத்தரவாகினியாக ஓடும் இடங்கள் பிதுர் காரியங்களுக்காரியங்களுக்காக சிறப்பு பெறுகிறது.
5.அணிநடை
காஸர்கோடு அணைக்கட்டு.இந்த அணை ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன் ஜங்கம சன்யாசிகளால் கட்டப்பட்டது.அது பல்லாயிரம் கற்களை அடுக்கிய அமைப்பு.கற்களின் இடைவெளியில் சலசலவென பாயும் காவிரி.சாமராஜ அணைக்கட்டு,ராமசமுத்திர அணைக்கட்டுகளை காண்கிறார்கள்.சஞ்சன் கட்டேவில் உள்ள தனுஷ்கோடி அருவிக்கு செல்கிறார்கள்.சீதை ராமர் சார்ந்த ஐதீகக்கதைகள்.கன்னடகவிஞர் ஸ்ரீ குண்டப்பாவின் கவிரி பற்றிய கவிதையை நினைவுகூர்கிறார்கள்
6.ஆடுதாண்டும்
அர்க்காவதி என்ற உபநதி இணைகிறது.காவிரியின் இரைச்சலுடன் இணையாக நடந்து ஹன்னடு சக்ர என்ற பன்னிருசுழல் பகுதிக்கு செல்கிறார்கள்.இங்கு பாறைமேட்டில் தன்னை தானே சுற்றி சுழல்கிறது காவிரி.மேகதாட்டு எனப்படும் ஆடுதாண்டும் பாறைக்கு செல்கிறார்கள்.இந்த அத்தியாயத்தில் அர்காவதி சங்கமத்தின் பேரழகை சொல்லி மாய்கிறார்கள்.
7.புகைதரும் புனல்:
ஹோசூர் கோட்டை பற்றிய செய்திகள் மற்றும் அது நினைவுபடுத்தும் வால்ட்டர் ஸ்காட் நாவல் பற்றிய எண்ணம் சூழ்கிறது.
காவேரியுடன் கலக்கும் முன் அர்காவதி நந்திதுர்க்கத்தில் கிணற்றில் உற்பத்தியாவதாக ஐதீகம்.உபநதியான குமுதவதியுடன் இணைந்து அடர் காடுகளின் வழி பாய்கிறது.விருஷபாவதி என்றழைக்கப்படுகிறது.
காவிரியின் துணையாறுகள்:
கனகா,சுஜோதி,ஹேமவதி,லஷ்மணதீர்த்தம்,கபினி,ஸிம்ஸா,லோகபாவனி,ஸ்வர்ணவதி பற்றிய விவரங்கள் உள்ளன.
பெண்ணாகர சந்தைக்கு செல்லும் உளஎழுச்சியை பதிவுசெய்கிறார்கள்.
8.பொன்னிவளம்
காவிரியின் படுகைப்பரப்பளவு:33,000 சதுரமைல்.
பாரநாட்டில் பாயும்நதிகளில் பாயும் படுகை பரப்பளவில் எட்டாவது இடத்தில் உள்ளது என்பன போன்ற புள்ளிவிவரங்களாக இந்த அத்தியாயம் நீள்கிறது.
குடகுமலை பிரம்மகிரியில் உற்பத்தியாகும் காவிரி சித்தபூர் வரை கிழக்கில் பாய்கிறது.இங்கு கனகா, குகண்டகி ஹோலி,சிக்கோலி ஹோலி என்ற சிற்றாறுகள் கலக்கின்றன.
பின் வடக்கில் குஷால்நகருக்கு அருகில் மைசூரை தொட்டவண்ணம் ஓடுகிறது.மைசூர் பீடபூமியில் பெரிய மலைப்பிளவு வழி ஓடி சஞ்சன்கட்டே என்ற இடத்தில் நீர்வீழ்ச்சியாகிறது.
அதன்பின் ஹேமவதி காவிரியுடன் கலக்கிறது.பின் லஷ்மணதீர்த்தம் என்ற உபநதி.
லஷ்மணதீர்த்தத்தின் அணையிலிருந்து பாய்ந்து கிருஷ்ணராஜசாகரத்தில் சேர்கிறது.பின் லோகபவானி என்ற உபநதி வந்து கலக்கிறது.பின் திருமுக கூடலுக்கு அருகே கபிலாவுடன் இணைகிறது.அதன் பின் சிவசமுத்திர நீர்வீழ்ச்சியாகி அர்காவதியுடன் இணைந்து தமிழகத்திற்குள் நுழைகிறது.
சேர்வராயன் மலைகளில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு நாமக்கலில் காவேரியுடன் கலக்கிறது.தொப்பூர்,தொப்பையாறு,வேப்படியாறு போன்ற உபநதிகள் இணைகின்றன.
தமிழகத்தில் முதல் உபநதி சேலத்தில் இணையும் தொட்டஹள்ளி.இன்னொன்று சின்னாறு என்ற சனத் குமார நதி.பெரியாறு அல்லது சரபங்கநதி இணைகிறது.திருச்செங்கோடு மலையை பற்றிய எண்ணங்களை பகிர்கிறார்.
இதோடு பயணத்தின் முதல்பகுதி முடிக்கிறது.
9.புதுப்புகார்
மீண்டும் பூம்புகாரிலிருந்து கண்ணகி கோவலன் நடந்த வழியில் பயணம் துவங்குகிறது.அசாவேரி என்ற ராகத்தில் காவேரி பற்றி தியாகராஜர் இயற்றிய பாடல்.அந்த ராகம் தளர்வும், அன்பும் ,நெருக்கமான உணர்வும்,பெருமித உணர்வும் கொண்டதாம்.காவிரிக்கான பாடலை அந்தராகத்தில் இணைக்க முடிந்த மேதைமை பற்றிய விவாதங்கள் இடம்பெறுகின்றன. திருவையாறின் பால்யத்தில் காவரிகரைகளில் நிகழும் இசைக்கச்சேரிகளுக்கு செல்லும் நினைவை கூறுகிறார்.
பூம்பூகார் பயணம் முழுவதும் இளங்கோவும், கண்ணகியும், கோவலனும், மணிமேகலையும், அங்காடிகளையும், நினைவுகூர்ந்து அது இல்லாத கடலும், குப்பமும், வெறிச்சோடிய கடற்கரையுமாக இருக்கும் நவீன பூம்புகாரை பார்த்து ஏக்கத்துடனும் ,இனம்புரியா சோகத்துடனும் காவிரி கடலில் கலக்கும் இடத்தை காண்கிறார்கள்.
காவிரி பூம்பட்டினம் தொடங்கி கல்லணைவரை தமிழககலாச்சார வரலாற்றின் முக்கியநிலப்பகுபகுதி என்றும் காவேரி கரையின் கோவில்கள், ஞானிகள்,கவிகள்,இசைக்கலைஞர்கள், தத்துவ ஞானிகள், கலைஞர்கள் என்று பெரிய தொகுப்பை இந்தநூலின் ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.திருச்சியின், தஞ்சையின் அகபுற வரலாற காவிரியின் வரலாறு என்கிறார்கள்.
புத்தவிகாரம்,கீழையூர் துறைமுக எச்சங்கள் உள்ள அகல்வாராய்ச்சி இடங்களை காண்கிறார்கள்.
வழியெல்லாம் நிறைந்து இணையாறுகளாக பிரிந்து சிறுத்த காவேரிஆறு கடலுடன் கலக்கும் இடத்தை காண்கிறார்கள்.
இடையில் உ.வே.சா, கோபாலகிஷ்ணபாரதி ஆகியவர்கள் குறித்த தகவல்கள் இடம்பெறுகின்றன.தலபுரணாங்களின் மாயத்தன்மை பற்றியும் இன்றைய அதிசினிமா பற்றிய விசாரணைகள் அவர்களுக்குள் நடக்கிறது.
மீனவப்பெண் ஒருத்தி அவர்களுக்கு கடலுக்குள் இருக்கும் இடிபாடுகள் பற்றி சொல்கிறாள்.சிலப்பதிகார பூம்புகாரின் பகுதிகளோ என்று தங்களுடன் வந்த வரலாற்றாசிரியருடன் இரவுமுழுதும் விவாதிக்கிறார்கள்.
கிரேக்க புவியியல் ஆசிரியர் டாலமி, சபரிஸ் எம்போரியம் என்ற இடம் முதல்நூற்றாண்டின் காவிரிப்பூம்பட்டினமாக இருக்கலாம் என்கிறார்.
அதே காலகட்டத்தில் மிலிந்தா அரசனின் கேள்விகள் என்ற பௌத்த நூலிலும் காவிரிபூம்பட்டினம் ‘கோலப்பட்டண’ என்றும் குறிப்பிடப்படுகிறது.
புகார்நகரத்திற்கு சம்பாபதி என்ற பெயர் உண்டு என்று மணிமகலை சொல்கிறது.
சம்பாபதி அம்மன் கோவிலை காண செல்கிறார்கள்.காவேரி கடலுடன் கலக்கும் பகுதியை மீண்டும் காண்கிறார்கள். இப்பொழுது கழுதகாரன் துறை என்று அழைக்கப்படுகிறது.அன்று அதன்பெயர் கழாஅர்முன்துறை.
10.கொள்ளிடம்தாண்டி
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பயணமாகிறார்கள்.
இன்றளவுக்கு பேணப்படாத ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய கங்கை கொண்ட சோழபுரம்.அதற்கும் முந்தைய நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர் காலத்தில் புதர்மண்டி மண்மூடியிருந்திருக்கிறது.ஆங்கிலேய காலத்தில் அணைகட்டுவதற்காக அழிக்கப்பட்ட கோவிலின் நெடுமதில்,சோழனின் பொன்னேரி,கோவில் சிற்பங்கள் என்று சோழபுரத்தின் சூழல் அவர்களை சோழர்காலத்திற்கு கொண்டுசெல்கிறது.
11.இசை வெள்ளம்
இந்த அத்தியாயம் கஞ்சனூர் சிவாச்சாரியார்,சங்கீத மேதைகள் , எழுத்துமேதைகள், கணித மேதை ராமானுஜர் என்று காவேரி கரையின் மைந்தர்களை நினைவுபடுத்துகிறது.
கும்பகோணத்தில் காவிரியுடன் அரிசொல்லாறு இணைகிறது.கும்பகோணத்தின் அழகு,செழுமை ,கோவில்கள் பற்றிய விவரங்கள் உள்ளன.
கம்பராமாயணத்தில் வரும் காவேரி பற்றிய வர்ணனைகளை பேசிக்கொண்டே தியாகையரின் சமாதிக்கு செல்கிறார்கள்.
12.கழனிநாடு
கல்லணை,கொள்ளிடம் ,வெண்ணாறு, குடமுருட்டி, வீரசோழன், விக்ரமனாறு, அரசலாறு போன்றவை கிளைநதிகள்.
தேவிக்கோட்டை என்னுமிடத்தில் கிளைநதியான கொள்ளிடம் கடலில் கலக்கிறது
டெல்டாப்பகுதிகளில் கிளை நதிகள் அதிகம் அல்லது கிளைநதிகளால் வளம்பெற்று உருவானவை டெல்டா பகுதிகள்.காவிரி பலகிளைநதிகளாகி கடைசியில் சிறுஓடையாக கடலுடன் கலக்கிறது.
13.ஆறிரண்டும்:
திருச்சியின் காவேரிகரையிலும், அது வளப்படுத்திய நிலத்திலும் பயணிக்கிறார்கள்.மலைக்கோட்டைக்கு செல்கிறார்கள்.அதன்வரலாறு எங்கெங்கோ தொட்டுத்தொடங்கி பேச்சில் வளர்கிறது.தாயுமானவர் சந்நிதி மற்றும் அதுசார்ந்து வெள்ளப்பெருக்கு காலத்தில் சிவன் தாயாக வந்து வைத்தியம் பார்த்த கதைகள் வரை பேச்சு வளர்கிறது.மகேந்திரனின் சிற்பங்களை காண்கிறார்கள்.
மலைகோட்டை அடிவாரத்தில் புத்தகக்கடை அச்சகம் வைத்துள்ள நண்பர்கள்,இசைஆர்வலர்களை சந்திக்கிறார்கள்.கரிகாலனின் கல்லணை,உறையூர் பற்றிய வரலாற்று தகவல்கள்,அனுமானங்கள் எழுதப்பட்டுள்ளன.
14.அகண்டம்
திருச்சியிலிருந்து கரூர் சாலையில் அகண்டகாவிரி பாய்கிறது.இடையில் படித்துறை நண்பரை சந்திப்பதால் இறந்தகால நினைவுப்பயணம் தொடங்குகிறது.நண்பர்கள் இணைந்து ரமநவமி உற்சவம் நடத்தி இசைக்கலைஞர்களின் இசையை ஒன்றிணைந்து ரசித்தது முதல், எழுத்தாள நண்பர்கள் அதில் இணைந்து இசையுடன் திளைத்த நிகழ்வுகள் வரை சொல்கிறார்.
எழுத்தாளர்கள் கசிச்சான் குஞ்சு,அப்புலிங்கம்,சக்திசரவணன் போன்றவர்களை தி.ஜா குறிப்பிடுகிறார்.மணிஐயர் என்பவரின் இசை நிகழ்ச்சிகள்,வயலின், வாய்ப்பாட்டு ,பிடில் என்று நீளும் அத்தியாயம் இது.
இசையுடன் பாடலுடன் காவிரியின் அழகை உணரும் தருணங்கள் வருகின்றன.
அய்யர் மலை என்ற ரத்னகிரி செல்கிறார்கள்.இடையில் அகல்வாராய்ச்சி இடங்களை பார்க்கிறார்கள்.இங்கு கடைசி உபநதியான அமராவதி சங்கமம் உள்ளது.
15.காணிக்கை
உய்யகுண்டான்வாய்க்கால்,தலைமதகு பகுதியான பெட்டவாய்த்தலை,கரூர் அமராவதி போன்ற பகுதிகளுக்கு பயணிக்கிறார்கள்.சதாசிவ பிரம்மேந்திரர் சாமாதிக்கு சல்கிறார்கள்.உபநிடதங்களின் ஞானத்துடன் சித்திகள் பல பெற்று வாழ்ந்தவர் அவர்.சர்க்கரை அலைகள்,நொய்யல் படுகை,கொடுமுடி காவேரிவரை சென்று திரும்புகிறார்கள்.
16.நிறைவு:
காவிரியுடன் பவானி கலக்கிறது. அங்கு அமுதா என்னும் நதி அந்தர்வாஹினியாக அரூபமாக காவிரியில் கலக்கிற இடத்தில் சங்கமேஸ்வரர் ஆலயம் உள்ளது.மேட்டூர் அணைக்கு செல்கிறார்கள்.
17.ஆலாபனை
வடக்குரை வழியாக திரும்புகிறார்கள்.ஜோடர்பாளைய தடுப்பை காண்கிறார்கள்.இதுமாதிரியான தடுப்புகளில் இருந்து பாசனத்திற்காக பலகிளைகளாக காவேரி பிரிக்கிறது.இரத்தக்குழாய்கள் போல. பின் காவிரியை ஓட்டிய சாலையிலேயே பயணம் தொடர்கிறார்கள்.
திருஈங்கோய்மலையிலிருந்து காவரியை நெடுந்தூரம் காணலாம்.இந்த இடத்திலிருந்து காவிரியை காணவேண்டும் என்று நமக்கு அழுத்தி சொல்கிறார்கள்.
அளகரை அகல்வாராய்ச்சி இடம் மற்றும் முசிரி காவிரி வரை செல்கிறார்கள்.
18.பல்லவி
முக்கொம்பு மேலணைக்கு செல்கிறார்கள்.காவிரிக்கரையில் சிறுகுடியிருப்புதிட்டம் எழுத்தாளர்களுக்காக அமைக்க வேண்டும் என்ற கனவெல்லாம் அந்தகாலத்து உள்ளங்களுக்கு இருந்திருக்கிறது.டாக்டர் சாஸ்திரி என்ற எழுத்தாளர் நினைவுகூரப்படுகிறார்.
எழுத்தாளர்கள் கூடி பேசி மகிழ திருச்சி அன்று மையமாக இருந்திருக்கிறது.காவேரி கரையில் இருந்த பலதுறை அறிஞர்களுடன் அவர்களுக்கு நல்லநட்பும் நெருக்கமும் இருந்திருக்கிறது.
தாராஸ்வரம், கம்பஹரேசர் என்று மீண்டும் ஒருபயணம்.காவேரியின் முழுஓட்டத்தையும் பெண்கள் பாட்டாக பாடும் ஒருவழக்கம் இருந்திருக்கிறது.அது தெரிந்த ஒருபாட்டியை எதேச்சையாக சந்தித்தித்தும் அதை பதிவு செய்திருக்கிறார்கள்.உண்மையில் இதுபோன்ற அழகிய பரவசங்களால் அவர்களின் பயணம் நிறைந்திருப்பதை இந்தநூலை வாசித்துதான் உணர்ந்து கொள்ள வேண்டும்.இந்தக்கட்டுரை ஒரு சிறு தொட்டுக்காட்டல் மட்டுமே.
1..பயணநூலை முடித்தப்பின் சென்னை குடிநீருக்காக ,வீராணம் ஏரிக்கு காவிரியிலிருந்து தண்ணீர் கொண்டுவர, அன்றைக்கு ஏற்பாட்டிலிருந்த திட்டத்தை பற்றி எழுதியிருக்கிறார்கள்.1972 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றப்படயிருப்பதாக எழுதியிருக்கிறார்கள்.
2.காவேரி நீர்ப்பங்கீடு என்ற உபதலைப்பில் 1924 ஆம்ஆண்டின் ஒப்பந்தம் பற்றிய தகவல்கள் உள்ளன.
காவிரியின் பல்வேறு உபநதிகளை காணமுடியாத வருத்தத்தை ,ஆதங்கத்தை அழுத்தமாக இறுதியில் பதிவுசெய்திருக்கிறார்கள்.
அந்தவகையில் பெரும்பாலும் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லாத எங்கள் பகுதியின் ஐயாறு ஒரு உபநதி.கொல்லிமலையின் ஆகாசகங்கை என்று எங்களால் அழைக்கப்படும் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியிலிருந்து உருவாகும் ஐயாறு, அடர்வனத்தின் பலஊற்றுகளை, நீரோட்டங்களை இணைத்துக்கொண்டு புளியஞ்சோலையில் ஆறாக வெளிவந்து ,மலையடிவாரத்தின் மூன்றுமைல் தூரத்தை கடந்து மேட்டூர் என்ற எங்கள்ஊரில் முதலில் நுழைகிறது.பின் பலகிராமங்களை வளப்படுத்தி முசிறியில் காவிரியுடன் கலக்கிறது.தனியாக இதன் வரலாறும் சங்ககாலத்தொடர்பும் இங்கு குடிகொண்டுள்ள தெய்வங்களும், மக்களும், சித்தர்களும், விலங்குகளும், பறவைகளும், மரங்களும், செடிகளும், மூலிகைகளும் என தனக்கே உரிய தனித்துவ வண்ணங்களை கொண்டது.
இந்தநூலில் தி.ஜா அவர்களும் சிட்டி அவர்களும் ஆதங்கப்படுவதைப் போல எதையும் முழுதாய் காணமுடியாது.ஆனால் அந்தந்த மண்ணில் எழுந்து வரும் கலைஞர்கள் அந்த நீண்டமாலையில் ஒவ்வொரு மணியாக கோர்க்க முடியும் என்று தோன்றுகிறது.ஒரு மாபெரும் காவியத்தின் விதைகள் நிறைந்த நூலாக ‘நடந்தாய் வாழி காவேரி’ யைக் கொள்ளலாம்.இந்தத் தன்மையால் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய வாசிக்க வேண்டிய நூலாக இது உள்ளது.
காவிரி தந்த வளமான வாழ்வு, அந்தவாழ்வால் உருவாகிய ரசம் நிறைந்த மனிதர்கள் ,அவர்களில் எழுந்த இசை, எழுத்து, நடனம் போன்ற கலைகளும் ,சிந்தனைகளும் ,பலதுறை மேதைகளும் என ஒருநதியின் பயணம் ஒரு நாகரிகத்தின் பயணமாக இந்தநூலில் விரிகிறது.மேலும் நதியை சார்ந்து உருவான நகரங்கள், அது சார்ந்த அரசியல்,நடந்த முற்றுகைகள் என்ற நீண்ட மறுபக்கமும் உள்ளது.
மேதைகள் என்றில்லை காவேரி கரையின் அன்றாடவாழ்க்கைப்பாடுகளில் சுழன்ற மனிதர்களுக்குள்ளும் இசையும் பாட்டும் நிறைந்திருக்கின்றன.
மண்ணிற்கு நீரின் மீதும், நீருக்கு கடலின் மீதும், கடலின் மீது விண்ணிற்கும் மாறா ஈர்ப்பு உண்டு.இயற்கையில் அந்த சுழற்சியின் மாறாவிதியே இந்த பூமியில் புல்லை,மரத்தை,விலங்கை,நம்மை உருவாக்கி உலகு சமைத்திருக்கிறது.
நீருக்கான வழிகள் எங்கும் திறந்திருப்பதாலே உயிர்த்திருக்கிறது. நமக்கு நதி என்பது கண்களால் காணும் பிரபஞ்சத்தின் நித்ய இயக்கத்தின் சாயல்.அதை பெண் என்றோ அன்னை என்றோ காதலி என்றோ தோழி என்றோ உருவகப்படுத்திக்கொள்ளலாம்.ஆக்கும் சக்திக்கு என்ன பெயரிருந்தால் என்ன? நீரெல்லாம் அந்த ஒன்றின் வடிவங்களே.
இந்த நூல் முடியும் போது தண்ணீர் குழாயிலும் வருகிறது.ஆற்றில் ஓடும் போதுதான் பாட்டாக,கோவிலாக உயர்ந்து கவிதையாக சிரிக்கும்.கூரறிவாக ஊடுருவும் என்று எழுதியிருக்கிறார்கள்.உண்மை தானே.
கடைசியாக மீண்டும் கடலோடு கூடும் இடத்திற்கு செல்கிறார்கள்.
இது முடிவற்ற காதல்.
தீரா காதல்.
மூப்பும் மறைவும் தெரியாது
முக்காலமும் முயங்கும் காதல்.
ஆதிமந்தி,ஆட்டனத்தி,
மாதவி,கோவலன்
ஆதிரை,மருதி,
கம்பன்,கூத்தன்
சம்பந்தன்,சுந்தரன்
குமிழிகள்,அலைகள் எல்லாம் கடலில் கலந்து முகிலாய் மாறும்.மீண்டும் வாழும் என்று இந்தநூலை நிறைவுசெய்கிறார்.
♦♦♦♦♦♦♦♦
பின்குறிப்பு:
இந்த கட்டுரை எழுதித்தந்ததற்காக காலச்சுவடு எனக்கு சில புத்தகங்களை அன்பளிப்பாக அனுப்பியிருந்தது.
அதில் தி.ஜா வின் மகள் உமாசங்கரி எழுதிய நினைவுகுறிப்புகள் அடங்கிய 'மெச்சியுனை' என்ற நூல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிகமாக புகைப்படங்களை உடைய வாசிப்பிற்கு மிக எளிய நூல்.
தி.ஜா வின் தீவிர வாசகர்கள் பொக்கிஷமாக வைக்கும் அளவிற்கு அரிய புகைப்படங்கள் அடங்கியது. அப்பாவாக அவர் எத்தனை மென்மையான மனிதராக இருந்தார் என்பதை அழகாக எழுதியிருந்தார்.
தி.ஜாவும், ஆர்.கே நாராயணனும் உள்ள இந்தப்புகைப்படம் என் மனதிற்கு நெருக்கமாக மாறிப்போனது. ஆர்.கே நாராயணினன 'மால்குடி டேஸ்' பள்ளிக்கால இனிமைகளில் முக்கியமானது. அதே போல தி.ஜாவை கல்லூரி காலத்தில் வாசிக்கத் தொடங்கினேன். இந்தப்பருவங்களின் நாயகர்களான இருவரையும் சேர்த்து பார்ப்பதும் மனதிற்கு நெருக்கமானதாக ஆகிறது.
Comments
Post a Comment