கடல்_ பற்றி ஒரு வாசிப்பனுவம்
எழுத்தாளர் சாரோ லாமா விற்கு நன்றி.
இந்தப் புத்தகக் காட்சியில் வாங்கிய குறைவான நூல்களில் கமலதேவியின் ‘கடல்’ சிறுகதைத் தொகுப்பும் ஒன்று. இதற்கு முன் சில கதைகளை இணைய இதழ்களில் படித்திருந்தாலும் தொகுப்பாகப் படிப்பது வேறு ஒரு அனுபவத்தை எனக்குத் தந்தது.
கமலதேவியின் கதை சொல்லல் முறை நிதானமான நடையைக் கொண்டது. உணர்ச்சித் தீவிரங்களோ உறவு மோதல்களின் பெருவெடிப்புகளோ இல்லாதது. மனம் ஆழ்ந்து கனத்துக் கிடக்கும்போழ்தில் திடீரென வானில் வெளிப்படும் கீற்று நிலவைப் போல கமலதேவியின் சொற்கள் மேலெழுந்து ஒரு சித்திரத்தை உருவாக்குகின்றன. அந்தச் சித்திரம் வாழ்வின் மாயாஜாலச் சித்திரமாக தோற்றம் கொள்கிறது. மனித மனம் கொள்ளும் விசித்திரங்கள், இயலாமைகள், இயலாமையை மீற விரும்பும் மனித இருப்பு, குறிப்பாக பெண் இருப்பு இந்தக் கதைகளை முக்கியானதொன்றாக்குகின்றன. ‘அவரவர் மனத்தின் இயலாமைகளை மீறவே சக மனிதர்களிடம் நாம் நடித்துக்கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணம்’ கமலதேவியின் கதைகளைப் படிக்கையில் எனக்குள் உறுதிபெற்று நின்றது.
கச்சிதமான சொற்களால், கச்சிதமான உணர்வெழுச்சியைப் பின்னல் போல நெய்து இத்தொகுப்பில் சில பிரமாதமான கதைகளை அவரால் எழுத முடிந்திருக்கிறது. குறிப்பாக தொகுப்பின், ‘தையல்’ கதையைச் சொல்லலாம். அறுபதைக் கடந்த பின் மனிதர்களுக்குள் எழும் மூர்க்கம் குறிப்பாகத் தன் அடுத்த தலைமுறை மாந்தர்கள் மீது எழும் மூர்க்கத்தைப் பின்னணியாக வைத்து சிறப்பாகச் சொல்லப்பட்ட கதை இது. வாழ்வின் நடைமுறை சாத்தியங்கள் மனிதர்களைப் பிரித்து வைக்கும்போது அவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திக் கொள்ளும் அன்பும், வன்மத்தை நிதானமாக வெளிப்படுத்தும் கோபமும் அழகாக வெளிப்படுகிறது இந்தக் கதையில். கீரை விற்பவரின் மயில் குரலை எழுத்தில் அதே வாசனையோடும் வாஞ்சையோடும் கமலதேவியால் சொல்ல முடிந்திருக்கிறது. பசுங்கீரை இலைகள் மூங்கில் முறத்தில் நிறைய நிறைய அந்த வாழ்ந்து செறிந்த மனிதர்களின் வார்த்தைகள் அதன் பின்னாலிருக்கும் காயங்கள், முன் முடிவுகள், ஏமாற்றங்கள், இயாலாமைகள் என எல்லாமும் நம் முன்னே குவியத் தொடங்குகின்றன. ”புளிச்சக்கீரையில் கிடக்கிற வெங்காயம் அமுதமில்ல”, ”சும்மா பழுத்த பலாப்பழத்தை இல்லைங்காதே”, ”பாம்போட ரோஷம்தான் அதனோட விஷம் தெரியுமா? அதனாலதான் சிவனே கழுத்தில் போட்டிருக்கான் ” – செறிவும் அர்த்த அழகுணர்ச்சியும் நிரம்பிய உரையாடல்கள். அதன் வழி வெளிப்படும் அவரவர் கோணங்கள், குணச்சித்திர வாழ்வனுபவங்கள் நிச்சயம் வாசகனைப் புதியதொரு வாசிப்பு அனுபவத்தால் நிரப்பும் என்று நான் நம்புகிறேன். ‘பாம்பின் கால் பாம்பறியும்’ என்றொரு சொல்வழக்கு உண்டு ஊரில். மனிதர்களை மனிதர்களே அறிய முயலும் இந்தத் தொடர் ஓட்டத்தில் வெளிப்படும் அன்பும், அன்பு அதிகமாகிக் கசிந்துருகும் விஷமும். ஐம்பது பேர்கள் சூழ்ந்திருக்க அவர்களின் வலிமை முன்பு ஒன்றுமில்லாமல் போகக்கூடிய ஒரு நல்ல பாம்பு, துளி பயமில்லாமல் அந்த மனிதர் கூட்டத்தை [தன் விஷத்தை இறுகப் பற்றிக்கொண்டு] கடந்துபோகும் சித்திரத்தை கமலதேவியின், ‘தையல்’ என்ற கதை எனக்களித்தது என்றே சொல்ல வேண்டும். யாருமில்லாத நிலவெளியில் ஊர்ந்து திரியும் பாம்புகளென மனித மனங்கள் அசைகின்றன. கமலதேவியின் கதைகளின் ஆதார உணர்ச்சி பொங்கிப் பெருக்கெடுக்கும் நதியல்ல. மாறாக ஆழத்து நீரோட்டம் போல சலனத் தொடர்ச்சியுடன் முழுக்கப் பரவும் குளிர்ச்சி. எளிமையான வாக்கியங்கள், இடையிடையே ஒளிரும் அதன் அர்த்த சேர்மங்கள், அந்த அர்த்த சேர்மானங்கள் ஒருங்கிணைந்து உருவாக்கும் தோற்ற வெளி [LANDSCAPE] – ஒரே நேரத்தில் மனித மனங்களின் தோற்றப் பரப்பாகவும் மனித வாழ்வின் தோற்றப் பரப்பாகவும் விரிகிறது. வாழ்வின் பெருநிலப்பரப்பில் மனிதர்கள் வெறும் பகடைக்காய்தானோ? நானறியேன்.
தொகுப்பின் பெரும்பாலான கதைகள் தீர்மானமாக ஒரு முடிவை நோக்கி நகரும் கதைகள் அல்ல. வாழ்வின் சலனங்களை ஒரு எளிமையான மொழியில் எளிமையான விரிப்பில் சொல்லிப்போகும் கதைகள். பெண் மனத்தைச் சூழும் மாயக்கரங்களை விலக்கி விலக்கி தன் மென் இருப்பை இறுகப் பற்றிக்கொள்ளப் போராடும் பெண்களின் கதைகளாக இவை முடிவில் தோற்றம் கொள்கின்றன. ‘மயில்தோகை’ கதையில் படிக்காத, காதலித்து திருமணம் செய்த கணவனை விலக்கி காதலனுடன் மனதால் நெருங்க விழையும் பெண்ணின் மனப்போராட்டங்கள்தான் கதைக்களன். அதனூடே இளைய மகளை எந்தச் சலனமுமின்றி தத்துக்கொடுக்கும் பெண்ணாகவும் அவள் இருக்கிறாள். நாற்பத்தைக் கடந்த பின் ஆண்/பெண் உறவில் எழும் சிக்கல்கள், மனதை நிறைக்கும் பனிப்படலங்கள், நிறைவைத் தேடும் காமம் என பெண் மனதின் ஏற்ற இரக்கங்களோடு கதை பின்னப்பட்டிருக்கிறது. சரி தப்புக்கு அப்பால் ஆண் பெண் உறவின் சூட்சுமம் இருக்கிறது என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. ஆனால் மனதை இயக்கும் மாய நூல் எப்போது எந்தப் பக்கம் சரியும் என்று யாரால்தான் சொல்ல முடியும்? உடன் போக்கு, கடல், பனிப்பொழிவு, மயில்தோகை எனப் பெரும்பாலான கதைகளில் சொல்லப்பட்டிருக்கும் பெண் மனதின் ஆழங்கள், விசித்திரங்கள், கடவுள் தன்மை கொண்ட பிசாசு ரூபம், இயலாமை என இவர் உருவாக்கும் பின்னல்கள் இந்தக் கதைகளை கவனமாக வாசிக்கக் கோருபவை. கொடார்ட் படங்கள் மட்டுமல்ல, கமலதேவியின் கதைகளும் கூட பெண் மனதின் அசலான ரூபங்களை அதன் அசலான கவிச்சியை நமக்குப் புரிய வைக்கும் என்பது இந்தத் தொகுப்பை நான் வாசித்த பின் உணர்ந்துகொண்டேன். கமலதேவியின் இன்னபிற சிறுகதைத் தொகுப்புகளையும் வாசிக்க ஆவல் கூடுகிறது.
- எழுத்தாளர் சரோ லாமா( Saro Lama )
Comments
Post a Comment