கங்காபுரம் : நேர்காணல்

 மார்ச் புரவி இதழில் வெளியான எழுத்தாளர் அ.வெண்ணிலா அவர்களின் நேர்காணல். எழுத்தாளர் வெண்ணிலா அவர்களுக்கு அன்பும், நன்றியும்.

ஒரு அரசனின் அகமும் புறமும்

கவிஞரும் எழுத்தாளருமான அ.வெண்ணிலா அவர்கள் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறார். அண்மையில் புனைவிற்கான பொற்கிழி விருது பெற்றுள்ள அவருக்கு நம் மனமார்ந்த  வாழ்த்துகள். கங்காபுரம் இவரின் முதல்நாவல். இது ஒரு வரலாற்று நாவல். ராஜேந்திர சோழன் என்னும் பேரரசரின் அகப்போராட்டங்களின் வழி நகரும் இந்த நாவல் சோழப்பேரரசின் மகத்தான காலகட்டத்தின் பின்புலத்தில் எழுதப்பட்டுள்ளது. தன் அகப்போராட்டங்களில் இருந்து எழுந்து ஆகப்பெரிய செயல்களை நோக்கி நகர்ந்த  பேரரசரின் கதை இது. ஐம்பது வயதிற்கு மேல் கங்கை , இமயம் வரை திக்விஜயம் செய்தல்,புதிய தலைநகரை உருவாக்குதல்,சோழ கங்கம் என்ற மிகப்பெரிய ஏரியை வெட்டுல்,சிவனிற்கு ஆலயம் எடுப்பித்தல் என்று அவரின் செயல் நோக்கிய நகர்வு வியப்பானது. இது  பலதுறைகள் சார்ந்த நுண்தகவல்களை கொண்ட நாவலான காங்காபுரத்தை  மையப்படுத்திய, உரையாடல் வடிவிலான  நேர்காணல்.




1.கவிதையிலிருந்து நாவல் போன்ற விரிந்த உரைநடை வடிவில் எழுத வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது எது?

கவிதையிலிருந்து உரைநடை பெரிய மாற்றம் என்று சொல்ல முடியாது. அதற்குள் நான் எப்படி வந்தேன் என்று சொல்லலாம். நான் இருக்கும் ஊர் வந்தவாசி. இங்கு வந்தவாசிப்போர் நடந்து 250 வருஷங்களாகுது. மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் வந்தவாசிப்போர் பற்றி ஒரு நூல் கொண்டு வரலாம் என்று சொன்னார். அதுக்கான வேலை பார்த்தபோது நிறைய ஆச்சரியங்கள் காத்திருந்தது. நாற்பது வருஷங்களாக தினம் பார்த்த ஊர் ,தினம் நடந்த தெரு வேறு வடிவம் எடுக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு விஷயத்துக்கும் பின்னாடி ஒரு ஆயிரம் வருஷ வரலாறு இருந்தது. அப்போது போர் நடந்த இடத்துல்தான் இப்போது நடக்கறோம்.  இடிந்த கோட்டை முன்னாடிதான் பைக் நிறுத்தறோம். இதைப்பற்றி எதுவுமே தெரியாம இருந்திருக்கோம் என்ற குற்ற உணர்வு கூட வந்தது. இலக்கியம் மொழி வழியாக கட்டமைக்கப்படுகிற விஷயமாக இருந்தாக்கூட வரலாறோடு இணையும் போதுதான் மதிப்பு கூடுதுங்கிற விஷயம் புரிந்தது. உதாரணமாக சங்க காலத்துக்கான ஆதாரம் சங்கப்பாடல்கள் தானே. மன்னர்கள், புலவர்கள், மக்கள், தெய்வம், உணவு, ஐவகை நிலங்கள், இசை, கொண்டாட்டம் எல்லாவற்றையும் இலக்கியம்தான் சொல்லுது. என்ன ஒரு வரலாற்று உணர்வு. இலக்கியமும் வரலாறும் இணைந்து செயல்பட வேண்டிய தேவையை புரிஞ்சுக்கிட்டேன். அதனால நாவல் எழுத முயற்சி பண்ணினேன்.

2.நாவலில் பல துறைகள் சார்ந்த நுண்தகவல்களுக்காக செய்த மெனக்கெடல்கள் குறித்து…

எழுத்தாளர் அந்த இடத்துலதான் வெற்றி பெறுகிறார் என்று நினைக்கிறேன். கதைக்கு தேவையான எல்லாவற்றின் மீதும் அக்கறை கொள்வது. கூடு விட்டு கூடு பாய்கிற தன்மை, அர்பணிப்புன்னு எல்லாமே தேவைப்படுது. பத்தாம் நூற்றாண்டு கதையை சொல்லும் போது முதல்ல வாசிக்கறவங்க மனதிற்குள் காலத்தைக் கொண்டு வரனும். அன்றைக்குள்ள சாலைகள், மக்களின் ஆடைகள், நகைகள், இன்றைக்கு பூக்கற மாதிரிதான் மல்லிகை அன்றைக்கும் பூத்ததா என்பது மாதிரி தகவல்களை சொல்லனும். வாகனங்கள் பற்றி பெண்களின் அணிகலன்கள் குறிப்பாக நாட்டியப் பெண்களுடைய அணிகள். வேளாண்மை செய்யற பெண் வெறும் குதம்பையை எடுத்து காதில் மாட்டிக்கொண்டு தேர் பார்க்க ஓடி வருவா. மொழியை அப்படியே கொண்டு வர முடியவில்லை என்றாலும்  வார்த்தைகளின் பயன்பாடுகள் மூலமாக காலத்தை கொண்டு வர முடியும். அதற்காக கல்வெட்டுகள், செப்பேடுகளை வாசிச்சேன். நேரடியாக அந்த மொழியை கொண்டு வர முடியாது. வாசிக்கறவங்களுக்கும்  புரியாது…ஆனாலும் அந்த காலத்தைய வார்த்தைகளை பயன்படுத்துகிறேன். உதாரணமாக பொக்கனம் என்ற வார்த்தை. இப்படி காலத்தை உருவாக்கிட்டா கதைக்குள் போயிடலாம். ஆயிரம் வருஷங்களுக்கு முந்தின கதையை உணர்வு பூர்வமாக கொண்டு வருவது தான் நாவலாசிரியருக்கு முன்னாடி உள்ள சவாலே.  அரசனாக, சிற்பியாக, ஓவியனாக, குதிரை ஓட்டியாக, நாட்டிய பெண்ணாக, அரசியாக மாற வேண்டியிருக்கு. காலத்தை கொண்டு வருவது என்பது கூத்து மாதிரியான கலைகளில் பின்புறம் கட்டுகிற திரைசீலை மாதிரி. பின்னணி திரைசீலையால் தான் அர்ஜீனன் தபசா, கர்ணவதமாங்கற உணர்வு நமக்கு வரும்.அப்படியான அரிதாரம் பூசறதும், திரைசீலை கட்றதுமான வேலைதான் இந்தப்பின்னணியை உருவாக்கறதும். அதற்காக முயன்றுதான் ஆகனும்.

3.தகவல்களுக்கான தரவுகள்…

சோழர்காலத்தரவுகள் நம்மக்கிட்ட நிறைய இருக்கு. செப்பேடுகள் ,கல்வெட்டுகள் மாதிரி. நீலகண்டசாஸ்த்திரி முதல் சமகாலத்தில் ராஜேந்திரன்சார் வரை ஒழுங்குபடுத்தி கொடுத்திருக்காங்க. ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் சோழர்கால ஆட்சிப்பகுதிக்குள் குறுக்கும் நெடுக்குமாக பயணம் பண்ணியிருக்கேன்.  நிலவியலை புரிந்து கொள்வதற்காக பயணங்கள் செய்தேன். இப்போது விகடனில் எழுதுகிற நீரதிகாரத்துக்கு தகவல்கள் ரொம்ப குறைவாகதான் கிடைக்குது.  ஆங்கிலேயர் காலத்து ஆவணங்கள் முறையானவை என்ற பொதுவான நம்பிக்கை இருக்கு. அதிலிருந்தே தேடிக் கண்டுபிடிக்கறது சவாலாதான் இருக்கு.

4.ஒரு படைப்பில் எழுதியவரின் மனம் இயல்பாகவே சென்று படியும் ஒரு பாத்திரப்படைப்பு இருக்கும்…வியாசருக்கு கர்ணன் மீதிருக்கும் தந்தையின் கரம் போன்ற ஒன்று. கங்காபுரத்தில் அது மாதிரி நீங்கள் உணர்ந்த பாத்திரம்..

என்னோட கதாநாயகரே அப்படியானவர் தானே. தாய்க்குரிய அன்புடன், தந்தைக் குரிய கருணையுடன்,காதலிக்குரிய பரிதாபத்துடனும் ராஜேந்திரசோழனை படைச்சிருப்பேன். ஒரு வரலாற்று தளத்திலிருந்து அகப்போராட்டம் சார்ந்த கதாப்பாத்திரத்தை எடுத்து எழுதறதே  அவங்க நம்ம இரக்கத்திற்கு உரியவங்களாக இருக்கறதால தான். எனக்கு அப்படியான பாத்திரம் ராஜேந்திரன் தான்.


5.ஆண்டாள் தன்னுடைய ஒவ்வொரு வரியிலும் அன்பை இறக்கி வச்சிருப்பாங்க…இந்த நாவலில் நீங்க அழகி…ஆதித்யன் கதையை எழுதும் போது நாவலின் மற்ற இடங்களை விட இங்கு உங்கள் கவிதை மனம் இருந்ததாக வாசிக்கும் போது தோணுச்சு

அழகி அதித்யனை எழுதுகிற இடத்தில்… ‘ஆம்பல் இதழ்களை மூடிக்கொள்ளும் போது அல்லி மலரத் தொடங்கும்’ என்ற வரி எழுதியிருப்பேன். இது ஒரு அறிவியல் உண்மை. ஆனாலும் கவிதையும் கூட. கோவில்களில் உள்ள ஏராளமான சிற்பங்களுக்கு ஒரு நாட்டியப்பெண்ணோ, தேவடியார் பெண்ணோ தான் மாதிரியாக  இருந்திருப்பாங்க. இந்த மாதிரியான கலை செயல்பாட்டில் இருக்கும் போது நிச்சயமாக அந்தப்பெண்ணிற்கும், சிற்பிக்கும் இடையில் அற்புதமான காதல் உருவாகறதுக்கு வாய்ப்பிருக்கு. அவங்க இரண்டு பேருமே அந்தக்கலையுடைய அங்கமாக மாறிடறாங்க. இவளுடைய பாவனைகளை அவன் உளி ஏற்றுக்கொள்வதும்,இவனோட உளிக்காக அவள் பாவங்கள் மாறுகிறதுமாக இருக்கும் போது கலையுடைய பரிமாற்றம் காதலுடைய பரிமாற்றமாக மாறியிருக்கும். அப்படிப்பட்ட ஏராளமான காதல்களுடைய உதாரணமாக அழகி, ஆதித்யனை நாவலில் கொண்டு வந்தேன்.

6.நாவல் ஏற்படுத்தற காட்சியனுபவங்களில் எனக்கு மனதில் நிறைந்திருப்பது கலைமகள் மடியில் கிடக்கும் உளிதான். இசைக்கு வீணை மாதிரியே, சிற்பத்துக்கு உளி. அந்த காட்சியனுபவம் மறக்க முடியாதது.

ம்…


7.ராஜராஜன் பேரரசர்..இயல்பாவே ராஜேந்திரனுக்கும் அந்த இயல்பு இருக்கும் தானே…

தந்தையைப்போல இருக்கனும் என்பது ஒருவகையான முயற்சி. இருவருக்குமான ஒப்பீடுகள் மகனின் அடிப்படை திறமையை புறக்கணிக்கும் போது அப்பா மாதிரி நான் இல்லை. நான் தனி என்கிற குரலும் உள்ளே இருக்கும். தனித்தனியான உணர்வுகள் இருக்கு. திறமைகள் இருக்கு. இதைத்தான் ராஜேந்திரனுடைய அடிப்படையாக நான் பார்க்கிறேன்.

இந்தகாலத்திலிருந்து பின்னோக்கி பார்க்கிறேன். ராஜராஜனுக்கும் தஞ்சாவூருக்கும் இருக்கிற முக்கியத்துவம், ராஜேந்திரனுக்கும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கும் இல்லை. கங்கை கொண்ட சோழபுரம் 230 ஆண்டுகள் தலைநகராக இருந்திருக்கு. தஞ்சையை விட அதிக காலம். அதே போல மிகப்பெரிய பேரரசின் அரசன் ராஜேந்திரன் தான். பெரும்பாலும் இந்தியா முழுக்க..கிழக்கு ஆசியா வரை அவனுடைய ஆளுகையில் இருந்தது. புகழ் பெற்ற ஒரு அரசன் ஆயிரம் வருஷங்களில் இரண்டாமிடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறதாக தோணுது. ஐம்பது வயதிற்கு மேல் இளவரசுப்பட்டம் பெறுகிறான். தஞ்சை புகழின் உச்சியில் இருக்கும் போது தலைநகரை மாற்றுகிறான். தலைநகர் மாற்றத்தை அவ்வளவு எளிதாக செய்யமாட்டார்கள். இதற்கு மனரீதியான காரணங்கள் இருக்கலாம். அதை மையமாக கொண்டு இந்த நாவலை உருவாக்கினேன்.

10.இந்த நாவல் ராஜேந்திரனுடைய அகத்துக்குள்ள பயணிக்கிறது என்பதால் இயல்பாகவே மானுடர்க்குள்ள சிக்கல்கள் ராஜனுக்கும் இருக்கும். எண்ணங்களில் சுழலக்கூடிய அவரோட இயல்பும், தடுமாற்றங்களும்  வளர்ச்சியை நோக்கிய தனிப்பாதைக்கான எத்தனிப்பே தவிர உளநொய்மை கிடையாது…இதை மாற்றி புரிந்து கொள்கிற வாய்ப்பு இருக்கே…

இருக்கு. இது சார்ந்த விமர்சனங்கள் வந்திருக்கு. இவ்வளவு அகத் தடுமாற்றங்களுடைய அரசனின் அத்தனை பெரிய பேரரசின் ஆட்சி எப்படி சிறப்பானதாக  இருக்கும் என்ற கேள்வி இருக்கு. அவ்வளவு பெரிய பேரரசனான ராஜேந்திரனுக்கு இந்த பிம்பம் இழுக்கை தருகிறது என்கிற புரிதலும் இருக்கு. முளைக்கிற விதை மண்ணை தள்ளுகிற எத்தனிப்பு அது. இந்த மனத்தடுமாற்றங்களால் அவன் எதையும் குறைத்து செய்யவில்லை.  அப்போது தான் கங்கை வரை படையெடுத்து செல்கிறான்.  நீர்வளமில்லாத பகுதியில் வளத்தை ஏற்படுத்தி தலைநகரை உருவாக்குகிறான்.  வரிகளால் மக்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என்று யோசிக்கிறான். அந்த அகப்போராட்டத்துக்காகதான்  வீரமாதேவி என்ற ஒரு கதாப்பாத்திரம் வடிகாலாக இருக்கு. அவளோடையே அவனின் அந்தத்தடுமாற்றங்கள் முடிந்து போகுது. வெளியே தெரியறதில்லை. அதனால் வாசிக்கிறவங்க வீரமாதேவியா, பரவை நங்கையா, தங்கை குந்தவியா, சர்சிவ பண்டிதரா பக்கத்தில் இருந்து ராஜேந்திரனை பார்க்கனும். அங்க இருந்துதான் கதை சொல்றோம்.பலகீனமாக எடுத்துக்க  வேண்டியதில்லை.

11.இந்த மாதிரி அகப்போராட்டங்கள் இல்லாமல் இருந்திருந்தால் தனிப்பட்ட இவ்வளவு விசயங்களை ராஜேந்திரர் செய்திருக்க முடியாதில்லையா?

பாதிப்பு வரும் போது முடங்கிப் போவது  ஒரு வகை. நான் மீண்டு வருவேன்னு சொல்றது இன்னொரு வகை. நான் இரண்டாவது வகையில் ராஜேந்திரனை வைக்கிறேன்.

12.இன்று வரை இந்த சிக்கல் இருக்கு. ஆளுமையான  தந்தை முன் எதிர்புறமாக செல்கிற பிள்ளைகள் இருக்காங்க. தந்தையின் இறப்பிற்குப் பின் ஐம்பது வயதிற்கு மேல் பெரிய… பெரிய… விஷயங்களை நோக்கி நேர்மறையாக திமிறி எழுகிற ராஜேந்திரரை வாசிக்கும் போது இம்ப்ரஸ் ஆயிட்டேன்…

நடைமுறை வாழ்க்கை சிக்கல்கள் காலப்போக்கில் மாறிப்போகும். ஆனால் உணர்வு நிலை சார்ந்த சிக்கல்கள் என்றைக்குமானது. ஏனென்றால்…மனிதர்கள் காலந்தோரும் அகத்தில் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். உணர்வுகள் சார்ந்த சிக்கலை காலத்தை வைத்து பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். 

மோகமுள் நாவலில்  யமுனா…இதுக்குத்தானா? என்று கேட்ட கேள்வி ஐம்பது வருஷம் கழிச்சும் தினமும் யாரோ யாரையோ பார்த்து கேட்டுக்கொண்டேதான் இருக்காங்க. 



13.திருமுக்கூடல்ல ராஜேந்திரனும் வீரமா தேவியும் தனித்து பேசிக்கொண்டிருக்கும் போது வீரமாதேவி ‘முழுநிலவில்லாத நட்சத்திரங்கள் உள்ள வானம் எனக்கு பிடிக்கும்’ என்று சொல்வாங்க. நாவல் முழுவதுமே இந்த படிமவெளியில் விரிக்க முடியுன்னு தோணுச்சு. கதாப்பாத்திரங்கள் அனைவரையும் வைத்துப்பார்க்கும் எழுத்தாளரோட நுண்ணுணர்வுடன் என்னால் உணர்வுரீதியா தொடர்பு படுத்திக்க முடிஞ்சுது

ரொம்ப சந்தோசம்டா

14..கீர்த்தியுரைத்தலுக்கு மறுபக்கமாக கோவில் நிர்வாக குளறுபடிகள் போன்ற விஷயங்களையும் நாவல் பேசுகிறது. அதைப்பற்றி… 

இன்றைக்கு உள்ள சித்தாந்தங்கள்,ஜனநாயகம் கொடுத்திருக்கிற தெளிவுகளை அன்றைய வாழ்வுடன் பொருத்திப் பார்க்க முடியாது. ஆனாலும் சில மீறல்களை பண்ணியிருக்கேன். பார்ப்பனிய ஆதரவு என்பது சோழர் காலத்தின் மீது வைக்கப்படுகிற மிகப்பெரிய குற்றச்சாட்டு. நிலதானம், கோயில்களில் கொடுக்கப்பட்ட சிறப்பிடங்கள் மூலமாக பார்ப்பனியத்தை வளர்த்ததாக குற்றச்சாட்டு இருந்துக்கிட்டே இருக்கு. அந்த விமர்சனங்களை வைக்காமல் இந்த நாவலை எழுதினால் அதுவே பெரிய விமர்சனமாகுமோ என்கிற முன்யோசனை இருந்தது. அப்படி ஒரு எழுத்தாளர் செய்ய முடியுமா? சரியா? என்று கேட்டால் அது தப்புதான்னு சொல்ல முடியும். அன்றைக்கு மக்களின் புரிதல் என்னவாக இருந்தது. ஒரு முடியரசில் அரசன் சொல்வது தான் விதி.  ஆனால் எழுதுகிற ஆள் இந்த காலத்து விமர்சனங்களை உள்வாங்கி எழுதறது தேவையாக இருக்கு. அதை மக்கள் குரலாக ஒலிக்க வைக்க முடிஞ்சது. குறிப்பா நிலதானத்தை எதிர்த்து பேசுகிற சிவம்,கோவில் நகையை திருடுகிற ஆட்கள் என்று எல்லா விஷயங்களையும் சொல்லியிருக்கோம். 

13.ராஜராஜன் மக்களிடம் அவ்வளவு நெருக்கமானவராக இல்லை. ராஜேந்திரன் மக்களிடம் மிகநெருங்கி பழகுபவராக இருக்கிறார்.  ஆட்சியாளர் என்ற வகையில் இந்தப் பண்பில் ராஜேந்திரன் ராஜராஜனை விட முதன்மையானவர் இல்லையா?

ஆமாம். அது புனைவு இடம் தான். இந்த புனைவிற்கு பின் சில ஊகங்கள் உள்ளன. இவர் ஐம்பது வயது வரை தண்டநாயகமாக எல்லாப்போர்களையும் நடத்துகிறார். ஒருங்கிணைக்கிற பண்பு கொண்ட ஒரு ஆளுமை படைவீரர்கள் மற்றும் மக்களோடு இருக்கும் போது மட்டும் தான் வெற்றிகள் சாத்தியம். இந்த காரணத்தினால் மக்களை நெருங்குகிறவராக அவரை உருவகிக்க முடியுது.

14.பேரரசிகளாக, தோழிகளாக, காதலிகளாக உள்ள பெண்கள் பேசுவதை கவனிப்பவராக ராஜேந்திரன் இருக்கிறார். ..

புனைவுதான். ஆனால் சோழர்காலத்தில் பெண்கள் முக்கியத்துவம் உள்ளவர்கள்  தான். செம்பியன் மாதேவி ஆறு பேரரசர்களை தன் வாழ்நாளில் கடந்து வருகிறார். அவர் நிறைய கோவில்களை  எடுப்பித்திருக்கிறார்.  ‘ செப்புப் படிமங்கள்’ என்கிற சிற்ப கலையின் தனி வகையை வளர்த்து எடுத்திருக்கிறார். சோழர்கால கல் சிற்பங்கள் அளவுக்கே செப்புபடிம வகை முக்கியத்துவம் வாய்ந்தது. ராஜராஜனின் அக்கா குந்தவை நாச்சியாரும் சைவம் வைணவம் சமணம் சார்ந்த மூன்று கோயில்களை திண்டிவனம் அருகே உள்ள தாதாபுரத்தில் கட்டியிருக்கிறார். எதையெல்லாம் கலையாகவோ, இலக்கியமாகவோ  செய்யமுடியுமோ அதையெல்லாம் பெண்கள் செய்திருக்காங்க. பொது வெளியில் இயங்கக் கூடிய தனித்த அடையாளம் உடைய பெண்களாக அவர்களை இருக்க விட்டிருக்காங்க. அவங்களும் இருந்திருக்காங்க.

15.வெண்முரசு வாசிச்சப் பின்னாடி வாசிப்பில் எனக்கு பலமான தடை விழுந்தது. அதன்  மொழி அத்தனை இனிமையானது . அதற்கு அடுத்தாக கங்காபுரத்தை வாசித்து கடந்தேன்னு சொல்லனும். வாசிக்கறவர்களுக்கே இப்படி என்றால்  இந்தமாதிரி வரலாற்று நாவலை எழுதிய  நீங்கள் எப்படி இதிலிருந்து வெளியே வந்தீங்க…  

ரொம்ப சிரமம்தான். விடுபட பலமாதங்களாகியது. ஒரு மாதிரியான உணர்வெழுச்சி. பல ஆண்டுகளாக அதிலேயே இருந்ததால் திடீரென்று முடிக்கும் போது வருகிற துயரம் தாங்க முடியாதது. இன்னொன்றை ஆரம்பிக்கறது மூலமாகத்தான் மீண்டெழுதல் நடக்க முடியும். அப்படித்தான் சாலாம்புரி எழுத ஆரம்பித்தேன். சாலாம்புரி….நான் பார்த்த என் கண்முன்னாடி வாழ்ந்த, என் ஊரோட அடையாளங்கள் நிரம்பிய நாவல். மொழி சார்ந்தும் பெரிய சிக்கல் இருந்தது. இதில்  ஐம்பதாண்டுக்கு முந்தின வட்டார வழக்கை எழுத வேண்டிய தேவை இருந்தது. அப்படியும் பத்து வரி…ஒரு அத்தியாயம் எழுதுவேன். எழுந்துவிடுவேன். மறுபடி எழுதுவேன். இசை, நாட்டிய கலைஞர்களுக்கு அந்த இசையை கேட்கும் போது உடலும் குரலும் தயாராகிவிடும் என்று தோன்றுகிறது. இது என்னோட புரிதல்.எழுத்தாளர்களுக்கு அப்படி இல்லை. எழுத்து நம்மை வெளியே தள்ளிப் பார்க்கும்.

16.என்னுடைய பள்ளிவயதில் கங்கை கொண்ட சோழபுரத்துக் கோவில் சிங்கமுகக்கிணறு பக்கத்தில் என்னுடைய ஆசிரியர் சொல்லி ராஜராஜனிடமிருந்து பிரித்து ராஜேந்திரனை தனியான ராஜாவாக  பார்க்க முடிஞ்சுது. அந்த ஆளுமை இந்த நாவல் முடியறப்ப பெரிய ஆகிருதியாக  மாறியிருக்கார்…நீங்க ராஜேந்திரனை எழுதி எழுதி வளர்த்தெடுத்தீங்களா…

எழுதத்தொடங்கும் முன்னாடியே பெரிய ஆளுமையாக, தென்னிந்திய வரலாற்றின் முக்கிய அரசராக உணர்ந்துதான் எழுத வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

17.தந்தையை கடந்து சென்று பெரிய செயல்களை ஆற்ற வேண்டுமென்றால் ‘தான் என்ன செய்ய வேண்டும்’ என்று ஆலமரத்தடியில் தன் வாழ்வின்,தன் ராஜாங்கத்திற்கான  மிகப்பெரிய திட்டத்தை முடிவுசெய்கிற ராஜேந்திரசோழன் வாசிப்பவர்களின் மனதை ஆட்கொள்ளக் கூடியவர் . இன்று இந்த அகத்தடுமாற்றங்கள், சிக்கல் எல்லாம் பசங்களுக்கு மட்டுமானதில்லை என்று சொல்லலாமில்லையா…

இதில் பால் வேறுபாடு இல்லை. பொது உணர்வுதான். ஆளுமையுடன் எழுந்து வருகிற எல்லோருக்கும் உள்ளதுதான்.

18.ஆண்டுக்கணக்காக நாவலில் இருந்ததால் இடையில் நின்றால் மீண்டும் அதே உத்வேகத்துடன் தொடங்குவதற்கான மனநிலையை எப்படி தயார் செய்தீர்கள்…

ஒருநாள் எழுதவில்லை என்றால்கூட விட்ட இடத்திலிருந்து தொடங்குவது சவாலான விஷயம். முதலில் தரவுகளை தயார் செய்துவிட்டு எழுத உட்கார்ந்தால் முதலில் வாழ்க்கை சூழல்களால் தடை விழும் . விடாப்பிடித்தனமும், அர்ப்பணிப்பும் தவை. அதை அடுத்து உண்மையாக நாம் கடந்து போக வேண்டிய சவாலே நம்முடைய எழுத்தாதான் இருக்கும். நாம் முன்னாடி எழுதியதில் இருந்து இப்போது எழுதறதுக்கான சீரான ஒழுங்கை பிடிப்பது சவாலானது. அதுதான் நம்மளை மிரட்டும். வேண்டாம் விட்ருன்னு சொல்லும். புறச்சூழல்களை விட  அகச்சூழல்கள்தான் நம்மை விரட்டும். இது தாஸ்தாவெஸ்கியில் இருந்து தமிழ்ல தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் ஜெயமோகன் வரை நடந்திருக்கு. அதை  அவங்கவங்க ஆன்மபலத்தால் கடந்து வரவேண்டியிருக்கு.

19. இத்தனை ஆண்டுகள் வரலாற்று பாத்திரங்களுடன் மனம் இருக்கும் போது இடையில் கவிதைகள் ,சிறுகதைகளை தொடர்ந்து எழுதினீர்களா…

தயாரிப்பு காலகட்டத்தில் எழுதினேன். இறுதிவடிவை எழுதிய கடைசி பத்துமாதங்கள் வேறெதுவும் எழுதவில்லை. அடிப்படையில் கவிதை உணர்வு சார்ந்தது என்பதால் கவிதையிலேயே இருப்பதால் சில கவிதைகள் எழுதினேன். அபுனைவுகளும்  எழுதினேன்.

20.எழுத்து வாசிப்பிற்கான நேர நிர்வாகம் பற்றி சொல்லுங்கள்

இதை நம்முடைய விருப்பம் தானே தீர்மானம் செய்யுது. நான்.. எழுத்து.  என்னுடைய வாழ்க்கை முழுவதுமே வேற எந்த விஷயமும் கிடையாது. எழுதுவது  மட்டும்தான். அன்றாட தேவைகளுக்காக வேலைக்கு செல்கிறேன். சமையலை அம்மா பாத்துப்பாங்க. எப்படியும் இன்றைக்கு அவங்கவங்க நேரம் அவங்கவங்க கைகளில் இல்லை. ஒவ்வொரு நாளும் கொஞ்சமாவது எழுதுகிறேன். எழுதறதுக்கு தவிர வேறெதுக்கும் நேரம் செலவு பண்றதில்லை.













Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

பசியற்ற வேட்டை

பெருகும் காவிரி