ராதேயன்: சிறுகதை

    சொல்வனம்  2018 ஜனவரி இதழில் வெளியான கதை. இந்தக் கதை குறித்து வாசிப்பவர்களிடம் ஒன்றை பகிர்ந்து கொள்ள விழைகிறேன். எழுத்தாளர் ஜெயமோகன் தினமும் ஒரு அத்தியாயமாக வெண்முரசை வெளியிட்டு அதை தினமும் வாசித்துக்கொண்டிருக்கும் போது எழுதியது. வெண்முரசின் தாக்கம் அப்படியே நேரடியாக அப்பட்டமாக இந்தக்கதையில் உண்டு. என்னுடைய இரண்டாவது சிறுகதை தொகுப்பான 'குருதியுறவு' தொகுதியில் இந்தக்கதையை சேர்க்க வேண்டுமா? என்று ஒருபகலும் ஒரு இரவும் யோசித்தேன். இதை எழுதி முடித்ததும் எனக்குள் இருந்த நிறைவு நினைவிற்கு வந்தது. அப்பட்டமான 'காப்பி அடித்தல்' என்று பின்னால் எப்போதைக்குமான கேலிகள் இருக்கும் என்று தெரிந்தேதான் தொகுப்பில் சேர்த்தேன். இப்போதும் எந்தத்தயக்கமும் இல்லாமல் ஒரு வார்த்தையும் திருத்தாமல் பதிவிடுகிறேன். எழுதத்தொடங்கி ஓராண்டிற்குப்பின் எழுதிய கதை. ஒரு மூத்தஎழுத்தாளர் இளம் எழுத்தாளரின் எழுத்தை எந்த வகையில் முழுமையாக பாதித்தார் என்பதற்கான அடையாளம். இதற்கு பெயர் 'காப்பியடித்தல்' என்றால் அப்படியாகவே இருக்கட்டும். இந்தக்கதையின் உணர்வு நிலை முழுமுற்றாக என்னுடையது. 

மாடியில் நின்று கொண்டிந்தேன். எங்கிருந்தோ பாடல் ஒன்று காற்றில் மிதந்து வந்தது. கொல்லி மலைத்தொடரை பார்த்தபடி அந்த வரியை முதன்முதலாகக் கேட்டேன். என்னப்படம் யார் நடித்தது என்று எதுவும் தெரியாது.  நீதானே...நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம்...அடுத்தவரியை கேட்காமல் இதே வரி மனதில் ஓட கர்ணனின் தாய் ராதை மனதில் வந்து நின்றாள். அடுத்ததாக கண்ணன் வந்தான்.

கைப்பிடி சுவரில் வைத்திருந்த அலைபேசியில் அங்கேயே அமர்ந்து எழுதி முடித்தக் கதை.


                    ♦♦♦♦♦♦♦




                         ராதேயன்

அவனை தன் இல்லவாயிலில் கண்டும் ராதை அசையாமல் அவனையே கண்டு நின்றாள். தன் செந்நிறப் பருத்தியாடையை வலது கையால் போர்த்தியவாறு கூனிட்ட முதுகை நிலையில் சாய்த்திருந்தாள்.  ‘வயோதிகத்தால் பழுத்த கண்களின் பிழையா?’ என்றும் மறுகணம் எண்ணினாள்.

தனியாள் ரதத்திலிருந்து இறங்கி,  குதிரையின் கழுத்தைத் தடவிவிட்டு அது தலையை இருபுறமும் அசைக்க,  புன்னகைத்தபடி நிமிர்ந்து சுற்றும் ஒருநோக்கை வீசி நின்றான். அவன் வரவுக்கென இத்தனை நாள் காத்திருந்ததா இந்தவாயில்? என்று அந்தகணம் அவளுக்குத் தோன்றியது.



கருமையான விரல்கள் கொண்ட நீண்டபாதங்கள். அவன் அடியெடுத்து வைக்கையில்  கணுக்கால்களின் பொன்காப்புகளுக்கு அருகினில் அசைந்த வெண்ணிற இடையாடையின் மடிப்புகள் தன்னை அழைப்பதாய் நினைத்தாள். என்றாலும் நிலையில் சாய்ந்தவாறே இருந்தாள். அவன் கால்கள் பூக்களின் மீதென நடந்தன. சாணியிட்ட முற்றத்தரையில் ஏதேனும் அவன்பாதங்களை உறுத்தக் கூடுமா எனத் தரையை நோக்கியபின் நிமிர்ந்தாள்.

இடையில் தூய வெண்கச்சையை இறுக்கிக் கட்டியிருந்தான். முடிச்சிற்கு எஞ்சிய கச்சைத்துணி பின்னோக்கிப் பறந்தது. புல்லாங்குழலை பக்கத்தில் செருகியிருந்தான். தோளின் வெண்நூலாடை மறைத்தும் மறைக்காத உந்தி. கைகளின் நாடியில் மெல்லிய பொன்வளையங்கள். அதன் ஒற்றை வெண்கல் வீசிய ஒளி அவன்கண்களாய் மாறித் தன்னைக் காண்பதாய் எண்ணி நோக்கை உயர்த்தினாள். அவன் தோள்களை மெல்ல இறுக்கிப் பிடித்த ஒற்றைச் சரத் தோள் வளையங்கள் மஞ்சளாய் ஒளிர்ந்தன.

எத்தனை வலிய கரங்களும்,  கண்களும் குறி வைத்த மார்பு. எத்தனை மென்கரங்களும் தான். கழுத்தில் வட்டவெண்கல் தொங்கிய மெல்லிய ஆரம். அவன் நடைத் தாளத்திற்கேற்ப அந்த ஒளியசைந்து ஏதோ பேசியது. அது அவன் வாய்மொழியாக அல்லாமல்,  அவனைக் காணும் அனைத்தும் உணரும் ஒரு அருவஉணர்வாக இருந்தது. ஏதுமற்ற ஒன்று. அவன் வந்த வழியில் தெருவைப் பார்த்தாள்.

 உச்சிப்பொழுது இறங்கும் நேரம். தெருவில் குதிரைகள் நடமாட்டம் இல்லை. தெருவிலிருந்து கண்களை எடுத்து அந்த வெண்கருங்குழலை,  பரந்த நெற்றியை,  காண்பவர்களின் கண்களைவிட்டு அகலாத அந்தக்கண்களை, நாசியை, மாறா இதழ்களை, வெண்ணொளி வீசிய காதுகளை என்று அவள் கண்கள் வண்டென இடம் மாறிக் கொண்டிருந்தன.

அந்த ராதையின் சிறுமாளிகையின் கருங்கற்படிகளில் ஏறுகிறான். அவன் கண்களையே பார்த்துக் கொண்டு அவள் அசையாமல் நின்றாள்.

“அன்னையே…”

மணிக்குரல் கேட்கிறது. அவ்வாறே அழைத்துக் கொண்டிருக்கட்டும் என்று அசையாமல் நின்றாள்.

“அன்னையே…தாங்கள் என்னை அடையாளம் காணவில்லையா என்ன?”  என்று அவள் தோளைத் தொட்டு உலுக்கிப் புன்னகைத்தான். குதிரைக் கொட்டிலின் அருகேயிருந்த இல்லச்சிறுகுளத்தின் வழிவந்த மென்ஈரக்காற்று அவளை வருடிச்சென்றது. அவள் மனம் விழித்துக் கொண்டது.

“வா கண்ணா.!..பொறுத்தருள்க அரசே.. வாருங்கள்.”

“மைந்தனிடம் மாற்றார் மொழிகள் எதற்காக அன்னையே ?! வாருங்கள்..அந்த அரச மரத்தினடிக்குச் செல்வோம்,”என்று நடந்தான்.

“உங்களுக்கு வெண்மேகமென ஒளிரும் பஞ்சுக் கூந்தல். அன்னையே..உங்கள் நோக்கில் கோகுலத்தின் முகங்களைக் கண்முன் காண்கிறேன். இந்த நோக்குகளாலேயே என்றும் கோகுலத்தில் வாழ்வதாய் நீள்கின்றன பொழுதுகள்,” என்று முகம்நோக்கி புன்னகைத்தான்.

இவனின் ஒவ்வொரு சொல்லிற்கும் மயங்கும் அந்தப் பித்தியல்ல நான். அவன் தன் இடதுகரத்தை இடதுதொடையில் ஊன்றி அரசுநிழலில் கருங்கல்லில் நிமிர்ந்து அமர்ந்தான். அவனைச் சுற்றி அரசஞ்சருகுகள் சலசலத்தன.இவனுக்கு பெயரன் இருக்கிறான் என்கிறார்கள். இவனே இளையவன் என்று கண்கள் மாயம் காட்டுகின்றன. ஊரும்,  நாடும் உரைக்கும் மாயன்.

“அமருங்கள் அன்னையே..உங்களிடம் நான் உரைக்க வேண்டியதையும், நீங்கள் உங்கள் மைந்தரிடம் உரைத்தேயாக வேண்டிய ஒருசொல்லையும் நினைவுறுத்த வந்தேன்.”

அமர்ந்தேன். அவன் உரைத்த சொற்கள் என்செவிகளில் குதிரைக்கு கால்கவசம் அணிவிக்கும் ஒலிகளென மொய்த்தன. ஆமாம்…அரக்கன் இவன். கம்சனின் மருமகன் பிறிதெவ்வாறு பேசுவான்?  இரக்கமே இல்லாத வஞ்சகன். இப்போதும் அதே புன்னகை. கொலைக்களத்திலும் இவ்வாறுதானிருப்பானாக இருக்கும். சிறிதுநேர அமைதிக்குப் பின் எழுந்து சென்றேன்.

அவனுக்கு சுக்கிட்டு வெதுவெதுப்பாக்கிய மோர் எடுத்து வந்து கொடுத்தேன். வாங்கி அருந்தியவன் சிறுவன் என இருந்தான். எழுந்து ஆடையில் ஒட்டிய சருகுகளைத் தட்டினான்.

“வருகிறேன் அன்னையே..பிறிதொரு பொழுதில் இவ்வில்லம் வர ஊழிருந்தால் உங்கள் கையால் அமுதுண்ண வருகிறேன்,” என்று வணங்கி எழுந்துசென்று ரதத்திலேறியவன்,  வாயிலில் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். என் சுருங்கிய கண்களில் காட்சிகள் மிதந்தன.

அவன் எதிரே என்ஆதவன். குதிரையில் அமர்ந்திருக்கும் கர்ணனின் உயரம்கண்டு,  அவன் ஒளி கண்டு,  கண்கள் கூச  நின்றேன். அவன் யாரென மறைக்குமளவுக்கு ஒளி. கண்ணனை கர்ணன் தலையசைத்து வணங்குகிறான். வழிவிட்டு வெளியே நிற்கிறான். இருவரும் ஏதோ சொல்லாடுவது தெரிகிறது.வந்தவன் சென்றுவிட்டிருந்தான். நேற்று இருவரும் நகருக்கு வெளியே  சென்றதாகத் தெருமன்றில் உற்றார் உரைத்தது உண்மையாக இருக்கக்கூடும்.

மூடுவெயிலேறி என்தோள்களில் உறைத்தது. இல்லச் சிறுகுளநீரின் ஒளி கண்களைக் கூசச் செய்தது. கண்களை மூடித்திறக்கையில்,  அவை வெயில்கண்டு நீர்மை கொண்டன.

 இவன் குதிரையிலிருந்து இறங்கி அதை நீருக்கு விடும் ஓசை கேட்கிறது. என்னை நோக்கி வருகிறான். முகத்தை உயர்த்திப் பார்க்கிறேன்.வெண்பச்சை நிற இடையாடையும்,  இடதுதோளில் இட்ட வெண்ணாடையைக் குறுக்காக வலதுஇடையிலும் முடிந்திருக்கிறான். எந்த ஆடையும் என்றைக்கும் இவனுக்கு நிறைந்திருந்ததில்லை. விஞ்சி நிற்கும் உடல்.  இந்த சூதன்மகளின் கரங்களால் பொத்தி வைக்க இயலாதது. கழுத்தை ஒட்டி ஒரேயொரு பொன்சங்கிலி. குனித்த நோக்கில் அகன்ற கண்களை மூடித்திறந்து நோக்குகிறான். 

“அன்னையே….அவர் எதற்காக வந்தார்?”

“ஒன்றுமில்லை மைந்தா.”

“இந்த நெருக்கடியான சூழலில் அவரின் ஒவ்வொரு செயலும், சொல்லும் அலையடிக்கும் நீரில் விழும் கதிரை ஒத்தது.”

“இந்த சூதர் இல்லத்தில் எந்த அரசியலுக்கும் இடமில்லை. உனக்கும் கூடத்தான்,” என்று நடந்து மண்குடத்தை எடுத்து நீர்முகர்ந்து, கல்தொட்டிகளை நிறைக்கத் தொடங்கினேன்.

மகனென இவன் வந்த அன்றே என்மடியை மீறியிருந்தன இவனின் கைகளும்,  கால்களும். நான் நோக்கியது நோக்கியபடியிருக்க  என் சூதன்,“என்ன ராதை… குழந்தைக்கு என்ன செய்வதென்று அறியமாட்டாயா நீ?” என்றார். அவ்வாறு எந்தஇனத்திலும் ஒருபெண்ணுண்டா?! அன்றில் நிலைத்திருந்த மனதால், கைகளில் இருந்த மண்குடம் இன்று தவறப் பார்க்கிறது. என்னை நிலைப்படுத்த முயல்கிறேன்.

“ஆட்கள் இருக்கையில் நீங்கள் ஏன் அன்னையே?”

“இது ஒரு குதிரைசூதனின் மனைவியின் பணி.”

கர்ணன் எதுவும் உரைக்காமல் அரசமரத்தடியில் அமர்ந்தான்.

 அன்றொரு நாள் குதிரைக் கொட்டிலைத் தூய்மை செய்த நேரத்தில்,  “அஅஅன்..அன்..அன்..யே,”  என்று பின்னால் தந்தையின் கரங்களிலிருந்து அழைத்தான். உள்ளே ஏதோ ஒருஅறையின் இரட்டைக்கதவில் ஒன்றுதிறக்கும் ஒலி கேட்டது. இளந்தூரல் காற்றில் பறந்து கொண்டிருக்க மெல்லொளி எழுந்த இளங்காலை அது.

அரசஇலைகளை கைகளால் அளைந்து கொண்டிருந்த அழகனை நோக்கி”வீட்டில் அரசு வளர்க்கலாகாது என்று இது முளைவிடும் காலத்திலேயே இந்த சூதனிடம் உரைத்தேன். கேட்கவில்லை.நான் மட்டுமென்ன..? இதன் இளம்தளிரும் அதன் மென்பசுமையிலும்,  கல்லிடுக்கில் முளைத்தெழுந்து நின்ற கோலத்தையும் கண்டு மனம் பொங்கி விட்டேன்,” என்றேன்.

“அதற்கு இன்று என்ன வந்தது அன்னையே?”

“என்ன வந்ததா? அங்கு பார் அதன் வேர்கள் இல்லத்தைக் கவ்வியும் பெயர்த்தும் ஆடும் ஆட்டத்தை..சருகுகளை அள்ளித்தள்ளி மாளவில்லை.”

“இத்தனை குளிர்நிழல் அது தருவதல்லவா அன்னையே? மேலும் அதன் அத்தனை வேர்களாலும் இல்லத்தைக் கவ்விப்பிடித்துள்ளது. அது வீழ்ந்தாலொழிய இல்லத்தை அசைக்க இயலாது”

“வாயை திறக்காதே.வில்லாளிக்கு நாவல்ல. கண்கள்தான் கூர்மையாக இருக்க வேண்டும்.”

என் இடையைக் கட்டிக்கொண்டிருந்த இளமைந்தன்,  தந்தையுடன் அதிகாலையில் குதிரைகளை ஆற்றுக்கு இட்டுச் செல்வதைக் காணும் பொழுதெல்லாம் எதிரில்லத்துக் கனகை, “சூதன் மகனா இவன்?!” என்பாள். “இந்த தேரோட்டி பிழையில்லாமல் ஒன்றையும் செய்கிறாரில்லை..இதோபார்.” என்று வைதபடி இந்த முற்றத்தைத் தூய்மை செய்வேன்.

முற்றத்தில் நடந்து உள்ளேசென்று ஆட்டிவைத்திருந்த கொள்ளுவிழுதை எடுத்துவந்து தொட்டிகளில் இடத் துவங்கினேன். கட்டிவைக்கும் வயதில்லாத குதிரைக்குட்டி ஓடிவந்து என்னையும் தொட்டிகளையும் முகர்கிறது. கர்ணன் குதிரைகளை நீருக்காக தொட்டிகளில் விடுகிறான்.

“அன்னையிடம் செல். இது உனக்கு ஆகாது,” என்று அந்தக் குதிரைக்குட்டியை விரட்டினேன். அது மீண்டும் என்னிடமே வந்தது.

“ச்ச்…அன்னையில்லாதவன். புதிதாக ஈன்ற கரியவளிடம் இவனை விட்டு பழக்க வேண்டும். இது கரியவளுக்கும் மைந்தன்தானே கர்ணா?” என்ற என் குரலிடரியது.

“ஆம்..அன்னையே,” என்றபடி அமர்ந்தாலும் குறைக்க இயலாத தன்உயரமான தோள்களை வளைத்தபடி அமர்கிறான்.

வளரிளம் பருவத்தில் இவன் கரங்களுக்கும், கால்களுக்கும் நறுநெய் பூசிக் கொண்டிருக்கையில் இவன் தலையை நீட்டி குழலைக் காட்டுவான். 

இவன் தந்தை, “இன்னும் இவன் இளமைந்தனில்லை. நாளையே மணம் கொள்ளும் வயதினன்,” என்று சிரிப்பார். 

“எளிய ஆடைகளில் கர்ணன் இன்னும் அழகன். கர்ணா..நேற்று நீ காட்டில் பாணம் எய்த தொலைவை சாரங்கன் வியந்துகொண்டிருந்தான்,” என்றோ “  கர்ணன்  அந்தக் குண்டோதரனை ஒருகரத்தில் அடக்கிப் பிடித்தான்,” என்றோ கூறிக்கொண்டு இவன் தந்தையின் தோழர் சுதன் இவனைக் காணவென்று வருவார். 

எழுந்து கொண்டிருந்த ஆதவனின் ஒளி கோட்டைச் சுவர்களை, கதவுகளை மீறி அஸ்தினாபுரத்தில் விரிந்து கொண்டிருக்கும் பொழுதுகளில் இவன் என் கரங்களிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கினான்.அப்போதிருந்து இவன் இல்லம் சேரும் பொழுதிற்காகக் காத்திருந்து பழகிவிட்டது இந்த இல்லத்தின் அனைத்தும். சில தினங்களிலேயே மனம் உணர்ந்து கொண்டது… ஒளியை எந்தவகையிலும் மறக்க இயலாதென.

நான் குதிரைகளைக் கொட்டிலுக்கு அனுப்பியவாறு கர்ணனிடம், “என் பெயரனை வரச்சொல்லி அங்கத்துக்கு செய்தி அனுப்புகிறாயா? உன்னின் சிறுவடிவென உன் தந்தை அவனைக் கண்டுவந்ததிலிருந்து பிதற்றிக் கொண்டிருக்கிறார்,” என்றேன். 

“அவ்வாறே அன்னையே.”

வெயில் குறையும் நேரம். அந்த இடத்திலிருந்த சருகுகளை தூய்மை செய்யத் தொடங்கினேன். வாத்திய இசையென ஒழுங்கான ஒழுக்கோடு ஓசை எழுந்தது.

“நிழலில் அமர்ந்து கொள்.”

“வேண்டாம் அன்னையே..”

“அதற்கு உனக்கு உரிமையில்லை. நான் கண்விழித்துக் காத்து,  உணவிட்டு,  பிணிநோக்கி வளர்த்த தேகம்.பெறாவிட்டாலும்……, “என்றவள் நிமிராமல் குனிந்தவாறு பணியை செய்து கொண்டிருந்தாள்.

“ஆம் அன்னையே, ““  என்று எழுந்து நிழலில் அமர்ந்தான். 

கர்ணன் ஏதுமில்லாத நோக்குடன் குதிரைக் கொட்டிலைப் பார்த்துக்கொண்டிருந்தான். கடந்து சென்ற காற்றால் உள்ளே இரட்டை கதவுகளும் திறந்து கொண்டன.உலகைப் பொன்னாக்கும் மாலைப் பொழுதிது.வாழ்வென்பது நீண்ட ஒருநாளா? அவள் மனதில் அந்த மாயனின் மயிற்பீலியின் கண் வந்து நின்றது. ராதை சருகுகளைக் குவித்தாள். 

கர்ணன் நிமிர்ந்து அந்த குதிரைக்குட்டியைப் பிடித்து, “அன்னையிடம் செல், “என்று அத்திசையில்விட்டான். ராதை நிமிர்ந்து பழுத்த கண்களால் அவனைப் பார்த்தாள். 

‘எத்தனை கதைகளை உரைக்கும் கண்கள். நான் என்னவென்று எதை கேட்பேன்?’ என்று எண்ணிய கர்ணன் கண்களைத் திருப்பினானான். நான் எங்கிருப்பினும் என்னையே நோக்கிடும் கண்கள். நான் என்ற ஒன்றாலே நிறையும் உள்ளம்.. என்று அவர் நினைக்கையிலேயே அந்தக்கரம் மோர்க்குவளையை நீட்டியது. ‘மோரினுள் உறைந்த பால்’ என எந்த காவியத்திலோ கேட்ட வரி கர்ணனுக்கு நினைவில் வந்தது.

 அன்னையின் இடதுகரத்தைப் பற்றி அமர்த்தினார். “இந்த நோக்கிலிருந்து எனக்கு என்றைக்கும் விடுதலையில்லை,” என்று புன்னகைத்தபடி மோர்க்குவளையை வாங்கினார்.

“ராதை..எங்கு சென்றாய்?”“  என்ற தந்தையின்குரல் பின்புறவாயிலில் கேட்டது.

“தேடி வரட்டும். நீ அருந்து,” என்று தோள்களில் கைவைத்தாள். சிறுகுளத்தின் குளிர்ந்தகாற்று அவரைத் தொட்டு சென்று கொண்டிருந்தது.மேற்கே கோட்டைக்கு வெளியே வெயிலவன் வெம்மைக் குறைத்திருந்தான். மழைக்காலமாதலால் ஈரம் கசிந்து காற்றிலேறியது. வெம்மையும், தண்மையுமாய் அந்தி எழுந்து கொண்டிருக்கிறது.






      


Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

பசியற்ற வேட்டை

பெருகும் காவிரி