நெடுஞ்சாலை பறவை: சிறுகதை
2018 ஏப்ரல் பதாகை இதழில் வெளியான கதை
நெடுஞ்சாலைபறவை
மே வெயிலின் தாக்கம் காலையிலேயே தொடுகையென உறைத்தது. மெத்தையிலிருந்து எழுந்து சேலையை சரிசெய்து விடுதியின் முதல்தளத்தின் நடைபாதையில் வந்து நின்றேன். தொடுதிரையில் மாறும் நிறமென வானம் சட்டென்று ஔிக்கு மாறியது.
கிழக்கே பள்ளி மைதானத்தில் நாலைந்து ஆட்கள் பந்தலைப் பிரித்து பின்னிய தென்னங்கீற்றுகளை ஒன்றின் மேலொன்றாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். தன்வசமில்லாத வேகத்தில் ஒருபயல் ஔியிலிருந்து ஏறுபவன் போல ஒருதூணில் ஏறினான். கீழே ஔி ஒருகுளமென நின்றது. கையிலிருந்த கண்ணாடியை சேலைத்தலைப்பால் துடைத்து கண்ணில் மாட்டிக் கொண்டேன். பயலுக்கு கரியமின்னும் முகம். அடர்ந்து படியாமல் தலைமுடி தலையைவிட தனியாகத் தெரிகிறது.
எனக்கான விழாவிற்கான பந்தல். இது போலொரு பந்தலை என் இருபத்தைந்து வயதில் வீட்டில் எனக்காக போட அப்பா ஆசைப்பட்டார். இன்று அறுபதை நெருங்கும் இந்தத் தருணத்தில் அன்று அறுபதிலிருந்த அப்பாவைப் புரிகிறது. இன்னேரம் எங்கோ சேலையை வரிந்து கொண்டு என் பேரப்பிள்ளைகளுக்காக அலைந்து கொண்டிருக்கலாம். எங்கு? என்று நினைத்ததும்…அப்பா பார்த்த வரன்கள் சில பெயர்களாக நினைவிற்கு வந்தன.
கல்லூரிக்கு கிளம்புகையில் திருச்சிபெல் குடியிருப்பின் வெளித்தாழ்வாரத்தில் நாற்காலியில் அமர்ந்தபடி அடிக்கடி மாமா சொல்வார், “இந்த வயசில பசங்க யாரையாவது பிடிக்கலாம் ஜென்ஸி..அவனை ஏன் பிடிக்குதுன்னு யோசிக்கனும்?”
“இல்ல மாமா,” என்று சொல்லிவிட்டு திரும்பி சிறிய சுவர்கண்ணாடியில் முகத்தில் பவுடர் அதிகமாக இருக்கிறதா? என்று பார்த்துக் கொள்வேன்.
“ கோபம் வருதில்ல? அதோட என்னோட கேள்வி புரியல தானே?”
“ஆமாம் மாமா.புரியல…என் மேல நம்பிக்கயில்லைன்னு எரிச்சலா வருது”
“எரிச்சல் வந்தா பரவாயில்ல. ஒன்ன நெனச்சுபாரு…ஒன்னோட ஒடன்பிறந்த ஐஞ்சுபேருக்கு கிடைக்காத படிப்பு உனக்கு வாச்சிருக்கு. அதவச்சி எதாவது செய்யனுன்னு தோணனும்,”வடிவான நாசியை தேய்த்தபடி ஆறடியில் குனிந்து அமர்ந்திருப்பார்.
“வேலைக்கு போறேன் மாமா”
“நான் சொல்றது அதில்ல ஜென்ஸி. நேரமாச்சு கெளம்பு,” என்பார். காலை வேளைகளில் வெளியில் செல்கையில் தான் இப்படியான பேச்சுகளைத் தொடங்குவார்.
வீட்டுக்கு வருகிறவர்கள் போகிறவர்கள் அந்தக் கண்ணாடியை பார்க்காமல் செல்வதில்லை. அத்தை, “யாரு வீட்லவாவது செருப்புகழட்ற எடத்துல கண்ணாடி உண்டா?,”என்று சலித்துக் கொண்டால் மாமா, “வீட்டுக்குள்ள நிழலாடுது..இல்லன்னா லைட்டு பளீர்ங்குது..இங்க பாத்தா நம்மமுகம் சரியா தெரியுதில்ல,”என்பார்.
ஞாயிறு கோவிலுக்கு போகையில், வருகையில் அத்தை, “ஜென்ஸிக்கு கிளாரா பையனை பாக்கலாமா?” என்று ஒவ்வொரு தடவையும் கேட்கையில் மாமா முகத்தை சுருக்கி, “படிக்கட்டும்…”என்பார்.
“படிச்ச பின்ன தான்…நம்ம பக்கத்திலயே வச்சிக்கலாமில்ல?”என்று அத்தை திரும்பி மாமாவின் முகத்தைப் பார்த்து வாயைமூடிக் கொள்வார்.
படித்து முடித்து வேலைக்கு இங்கு வந்து சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் வீட்டிலிருந்து திருமண பேச்செழுகையில் நான், “வேணாம்..” என்றதும் “ஒன்னூ கன்னியாஸ்திரியா போனும்..இல்ல கல்யாணம்,”என்ற வாதம் வருகையில், “நான் எதையும் துறக்க முடியாது. தள்ளி வைக்கதான் முடியும்,”என்று சொல்லுகையில் மாமா புன்னகைத்தார்.
அப்படியே ஆண்டுகள் உடன்பிறந்தாரின் திருமணத்தோடு ஓடிக்கடந்தது. கடைசி படுக்கையில் மாமா, “கிளாரா பையனை வேணான்னு மறைமுகமா சொன்னது எதுக்குன்னா..அவன் உன் ஒசரத்துக்கு, பாந்தத்துக்கு நிக்க மாட்டான்னுதான்…யாரோ உண்டுல்ல?” என்றார்.
“அதுக்கு இப்ப என்ன மாமா?
“நீ என்னம்மா நெனச்சுக்கிட்டிருக்க?”
“சரியா தெரியல மாமா..நீங்க தானே சொன்னீங்க? ஏதாவது செய்யனுன்னு…”
“அதனால…”
“முழுசா செய்யனுன்னா தனியாதான் இருக்கனும்”
“யாரு அப்படி சொன்னாம்மா?”
“மனசு சொல்லுது மாமா,”
“குடும்பத்துல சுயநலவாதின்னு பேர் வாங்கப்போற,”
“பரவாயில்ல. என்னை உணர்த்தின நீங்க புரிஞ்சிக்கிட்டா போதும்,”என்றதும் மாமா மேலே எதுவும் பேசவில்லை. தலையில் கை வைத்து “எந்த வயசிலயும் இந்தமுடிவு துயரம் தராததா இருக்க கர்த்தர் கூட இருக்கட்டும்,”என்றார்.
கீழே ஜெனிட்டா சிஸ்டர், “டீச்சர்….நாங்க கோயிலுக்கு போயிட்டு வரோம். குளிச்சிட்டு சாப்பிட்டு இருங்க . நாங்க வந்திடறோம்,”என்றார். ஜெனிட்டாவுக்கு முப்பத்தைந்து வயதிருக்கலாம். காவிப் புடவை அத்தனை சரியாக பொருந்துகிறது. அவரின் பழக்கமில்லாத பழுப்புக்கண்கள் யாரும் சொல்லாத எதையோ எதிர்நிற்பவரிடம் பேசுகையில் சொல்லும். சிஸ்டர் அவர்களுடன் நடந்து பள்ளிவாயிலைக்கடந்து இருபுறமும் வயல்கள் சூழ்ந்த பாதையில் நடந்து செல்வது தெரிந்தது. இன்றும் ஊருக்குள் நடந்து செல்ல வேண்டியிருக்கும் இடம்.
கல்லூரி முடித்ததும் வேலை என்று இங்கு அழைத்துவந்த அன்று, ஆளில்லாகாடு என்று இருந்தது. நீண்ட ஒற்றைக் கட்டடம். கொஞ்சம் தள்ளி தங்குவதற்கு இரண்டு சிறிய தகரம் வேய்ந்த கட்டங்கள். பல ஆண்டுகளுக்கு எங்கோ பெரிய கங்குக்கு பக்கத்தில் இருப்பதைப் போன்றே இருந்தது.
மேற்கே தேவாலய கோபுரமும் ,அதன் பின்னால் கொல்லிமலையும் ,வீட்டின் பொருளாதாரமும் பிடித்து வைத்திருந்தன.தேவாலய மைதானத்திலிருக்கும் கெபியில் மத்தலேனாளின் எதையோ இறைஞ்சும் கரங்களும், கண்களும், பாதிமண்டியிட்டும் மீதி பின்னால் செல்லத்துடிக்கும் கால்களையும், விரிந்தகூந்தலையும் பார்த்துக் கொண்டேயிருந்த ஒரு கோடைவிடுமுறை நாளில் தனித்தேயிருப்பது என்று உறுதியாக மனதிற்கு சொல்லிக் கொண்டேன். சிலையென்றாலும் மத்தலேனாலுக்கு கேட்டிருக்கக் கூடும் என்று அடிக்கடித் தோன்றும்.
முதலாண்டிலேயே படிக்க வந்த பெண்பிள்ளைகளின் திடுக்கிடும் விழிகளும், நீர்மை கொண்ட கண்களும்,அவர்களின் தகப்பன்மார்களும் தாய்மார்களும்,அவர்களின் சுபாவமும் மனதை தொந்தரவு செய்து கொண்டேயிருந்தன. பிள்ளைகள் பத்தாவதுதேறி வெளியேறி ஆசிரியப் பயிற்சிக்கும், சேவா வேலைக்கும், சத்துணவு பணிக்கும் செல்லத் தொடங்கியதும் எனக்கு தனிமை மறந்து ஒட்டிக்கொண்ட மகிழ்ச்சியும் துள்ளலும், வீட்டையும் ஊரையும் மறக்கச்செய்தது.
இத்தனை ஆண்டுகளில் துள்ளல் மாறி ஒரு அமைதி வந்திருப்பதன்றி வேறு ஒன்றும் பெரிதாக மாறவில்லை. நேற்றோடு இங்குள்ள அனைத்திற்கும் நிறைவு விழா..! எங்கு சென்றும் மீண்டுவர இங்கு என்று ஒன்று இருந்தது. இங்கிருந்து எங்கு செல்ல?. இங்குவர அங்கு விட்டுவந்த எதுவும் இன்று அங்கில்லை. அங்கு நான் ஒரு விருந்தாளி மட்டுமே என்று நன்றாகத் தெரியும். நீண்ட நேரம் நின்றதால் கால்கள் நடுங்குவதை உணர்ந்ததும் மெதுவாக படிகளில் இறங்கி கழிவறைக்கு சென்றேன்.
உணவுஅறைக்கு சென்றதும் அமலி, “ டீச்சர்..இன்னக்கி எழுந்திருக்க லேட்டாயிடுச்சோ?” என்றபடி டீ கொண்டுவந்தாள். நீள் மூக்குக்கும்,அவள் நிறத்திற்கும் சிறிய பொட்டு வைத்தால் மறுமுறை பார்க்க வைக்கும் அழகி. எத்தனை முறை சொன்னாலும் சரி என்பாள். வைக்கமாட்டாள். டீயைக் குடித்து விட்டு மைதானத்து எல்லையோரமாக நடக்கத் தொடங்கினேன்.
கையிலிருந்த அலைபேசியில் ஐெயராக்கினி அழைத்தாள்.
“கோயமுத்தூருக்கு எப்பக்கா வர்ற? அழச்சிட்டு போக மாமாவோட எப்ப வரட்டும்?”
“புதுசா என்ன ஜெயா? நான் வர மாட்டனா?”
“நீ எங்ககூட வந்திருக்கா…பிள்ளைங்க ஆளுக்கொரு திசையில நிக்குது. நிம்மதியில்ல…அவரும் ரிடையர்டு ஆகி வீட்ல இருக்காரு. கடைசி காலத்திலயாவது சேந்திருக்கலாம். மாமாட்ட பேசு…”
“ஜென்ஸிமா..எப்ப வரட்டும்?”
“வேணாம் மாமா.நானே வர்றேன்”. வைப்பதற்குள் தம்பிகள் அழைத்தார்கள். அவர்களும் கிட்டத்தட்ட அதையே பேசி வைத்தார்கள். அப்பா எனக்கு எழுதி வைத்த தென்னந்தோப்பை தம்பிகளுக்கு மாற்ற வேண்டும் .
காலை வெயில் உறைத்தது. முந்தானையை செருகிக் கொண்டு முடியை அவிழ்த்து கொண்டையிட்ட படி நடந்தேன். தெற்குபக்க கம்பிவேலியை பிடித்தபடி நின்றேன்.
தினமும் பார்க்கும் ராசு தான். என் வயதிருக்கலாம். இங்கு வந்த காலத்தில் அனைத்திற்கும் பயந்திருந்த நாட்களில் இவருக்கும் பயந்திருந்தேன். இவரின் மகள் என்னிடம் படித்த போதுதான் எத்தனைக்கு வாஞ்சையான மனுசன் என்று தெரிந்தது. அவர் மண்வெட்டியை போட்டுவிட்டு வந்தார். தலைப்பாகட்டை அவிழ்த்து தோளில் போட்டுக்கொண்டார்.
“வாங்கம்மா. நேத்தோட வேலையிலருந்து விடுவிச்சுட்டாங்களாமே? ஊருக்குள்ள போஸ்டரு ஒட்டியிருந்தாங்க. பள்ளிக்கூடத்தில விருந்துன்னு சொன்னாங்க,”என்றார். வியர்வை முகத்தில் வழிய கைகள் இரண்டையும் அவர் சேர்த்து பிடித்துக் கொண்டு பேசினார்.
“ஆமாங்க,”என்ற என் இயல்பான தன்மை அவரை பேசத் தூண்டியிருக்க வேண்டும்.
“கட்டாத மயிரும்,உங்க நெறமும் பாத்து மலையாளத்தாளுகன்னு நெனச்சிருந்தேனுங்க”
நான் வழக்கத்துக்கு மாறாக புன்னகைத்தபடி, “நகர்கோயில் பக்கத்தில ஒரு ஊரு,” என்றேன்.
“செத்த இருங்க…” என்று அருகிலிருந்த வேம்படியில் வைத்திருந்த சிறு பையிலிருந்த வெள்ளைத்துண்டை எடுத்தார். இருக்கைகளிலும் ஏந்தி, “எடுத்துக்கங்கம்மா…இங்கன எப்பவும் வருவீங்கங்கன்னு பாத்திருந்தேன்,” என்றார். எடுத்துக் கொண்டபடி அவர் முகத்தைப் பார்த்து புன்னகைத்தேன்.
“பெத்தவங்க உண்டா?” என்றார்.
“இல்ல”
“ மிச்சசொச்ச நாளுக்கு எங்கனு போலாமிருக்கீங்க? காலம் கெடக்கற கெடப்பில காச வச்சிக்கிட்டு, நோய வச்சிகிட்டு தனியா கெடக்கறது நல்லதில்ல”
“ம்..தம்பியோ,தங்கச்சியோ?”
“சரிதானுங்க..எனக்குத் தெரிஞ்சி பொறந்தவக் கூட இருந்துக்கறது நல்லக்கூறு”
மெதுவாக சிந்தனையில் தலையாட்டியபடி , “போயிட்டு வரேங்க.பாத்து இருங்க,”என்றேன்.
“சரிங்கம்மா.எங்கன்னாலும் நல்லாயிருப்பீங்க..எத்தன பிள்ளைங்கள கரையேத்தி விட்டுருக்கீங்க..”அவர் மேலும் எதும் சொல்வதற்குள் தலையாட்டிவிட்டு நடந்தேன். மூச்சு வாங்குவதை உணர்ந்தவுடன் மரத்தடியில் நின்றேன். புங்கையில் பழுத்த இலைகள் தவிப்பதைப் பார்த்தபடி கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தேன்.
சுற்றிவந்து குழந்தையேசு சிலையருகேயிருந்த பன்னீர் மரத்தடி பெஞ்சில் உட்காருகையில் நன்றாக வியர்த்து நனைத்திருப்பதை உணர்ந்தேன்.
“அமலி..மோட்டாரைத் தட்டிவிடு,” என்று குரல் கொடுத்தேன். தண்ணீர் குழாயை குழந்தை யேசுவை வட்டமாக சுற்றி நின்றிருந்த பூச்செடிகளின் நடுவில் வைத்தேன். வந்துநின்ற அமலியிடம், “இந்த மொட்ட வெயிலிலும் பூத்திருக்கா பாரு..”என்று கனகாம்பரத்தைக் காட்டிவிட்டு, நிமிர்ந்து மாதா கெபியை,பள்ளிக்கட்டடங்களை ,நடைபாதைகளை, படிகளை மாறிமாறி பார்த்துக் கொண்டிருந்தேன். சட்டென்று எழுந்து குளித்துவிட்டு சந்திராவுக்கு போன் செய்து டாக்ஸி அனுப்பிவைக்க சொன்னேன்.
அய்யாவுவை அழைத்து மேலே நடைபாதையில் வைத்திருந்த பெட்டிகளை கீழே வைக்கச்சொல்லிவிட்டு ,காலைஉணவை முடித்துவிட்டு, அங்கிருந்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுத்துவிட்டு வெளியே வந்தேன்.
சிஸ்டர்கள் கோவிலிலிருந்து வந்திருந்தார்கள். அவர்களிடம் விடைசொல்லிவிட்டு காரில் ஏறுகையில் ரோசி,”டீச்சர் மதியானம் சாப்பிட்டுக்கங்க,”என்று வாழையிலை பொட்டலத்தைக் கொடுத்தாள். இவள் கொஞ்சம் கவனமாக படித்திருந்தால் ஏதாவது ஒரு வேலைக்கு தள்ளிவிட்டிருக்கலாம்.
அய்யாவு,”திருச்சியில ரயிலில் ஏத்திவிட்டுட்டுதான் வரனும்,”என்று ஓட்டுனரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
“நம்ம பையன் தானா! வண்டிய பாத்து ஓட்டனும். கோவில்ல பியானோவ சட்டுன்னு தூக்கறாப்பல செய்யக்கூடாது,”என்றதும் டென்னிஸ் தலையாட்டி சிரித்தான். அய்யாவுவிடம் ஒரு போர்வை பார்சலைக் கொடுத்து, “ வச்சுங்க,” என்றபடி காரில் ஏறினேன்.
ஐெனிட்டா சிஸ்டர், “இறங்கினதும் போன் பண்ணிடுங்க.திருச்சி வரைக்கும் வரலான்னா…வேணாங்கறீங்க,”என்றார்.
“நேத்தே முடிஞ்சிருச்சில்ல சிஸ்டர். உங்க வேலய தொடங்குங்க. மறுபடியும் மனசு தளும்பும். வர்றேன்,” என்று அனைவரையும் பார்த்து புன்னகைத்தேன். கார் கிளம்பி நின்றவர்களைக் கடந்து பன்னிர்மரத்தை, குழந்தயேசுவை, புங்கைமரத்தை, ஆசோகமரத்தைக் கடந்து வாயிலில் வெளியேறிக் கொண்டிருந்தது.
அலைபேசி அழைத்ததும் எடுத்து, “கிளம்பிட்டேன்.சாயங்காலம் வந்திடுவேன்,”என்றேன். மாறி மாறி பேசிய நீண்ட பேச்சில்தான் எனக்கு வழக்கம் போல புரிந்தது அவர்களுக்கு என் மொழி கொஞ்சம் விளங்கவில்லை என்று.
வயல் பாதையிலிருந்து வண்டி ஊருக்குள் நுழந்ததும் தேவாலயத்தின் முன் வண்டியை நிறுத்த சொன்னேன். சந்திராவுடன் உள்ளே சென்று அமர்ந்தேன். சிறிது நேரத்திற்குப் பின் எழுந்து வெளியே வருகையில் பெர்க்மான்ஸ் சிஸ்டர் எதிரே வந்தார்.
“கிளம்பிட்டிங்களா? கடைசியா ஒருதரம் என்கிட்ட செக்கப் பாத்துட்டு போலாமே”
“நல்லாயிருக்கேன் சிஸ்டர்”
“கிளம்பியே ஆகனுன்னு அவசரமில்லையே…”
“உங்கமாதிரி துறந்து வரலயே. வேலைக்காக தானே.. முடிஞ்சதும் கிளம்ப வேண்டியதுதான்,” என்று சிரித்தேன்.
“ மறக்கமுடியாத ஒன்ன துறக்கறது எப்படி? முழுசா மறந்தா அது அல்சைமர் மாதிரி ஏதோ ஒன்னு…..எதில இருந்தும் கொஞ்சம் தள்ளி இருக்கத்தான் மனுசங்களால முடியும். முழுமையான வேலையும் அர்பணிப்புதான்னு உணராமையா இத்தன வருஷம் தனியா இங்கயே இருந்த? கர்த்தர் உடனிருக்கட்டும்.. ,”என்று புன்னகைத்து அவரின் ஜெபமாலையைக் கொடுத்துவிட்டு தேவாலயப்படிகளில் ஏறினார். மேல்படியில் சந்திரா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
நடந்தவழிகளில் மல்லிகை அடர்ந்து வெண்சிறு சங்குகளாய் பூப்பித்திருந்தது. மொட்டுகள் நீண்டு திரண்டிருந்தன. காரை நோக்கி நடந்தேன். டென்னிஸ் புன்னகையோடு காரை எடுப்பதாக சைகை காட்டி கதவைத்திறந்தான். வழியில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கத்தில் வண்டி நிற்கையில் வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கவாட்டில் சாலையோரத்து மரத்தின் உச்சிக் கிளையில் ஒருகூடு இருந்தது. எந்தப் பறைவையினுடையது?! இந்த இடம் எந்தவகையில் அதற்கு பாதுகாப்பானது? வண்டி நகரத்தொடங்கியது.கண்களில் அந்தக்கூடு மட்டுமே வியாபித்திருந்தது. மெல்லிய காற்று எதிர்திசையில் கடந்தது.ஔி கடந்தது..நிழல் கடந்தது. கூடு…கூடு. மத்தலேனாள் இறுதியில் மலைகுகையில் காத்திருந்தாள் என்று கதைகள் உண்டு. கண்களை மூடித் திறந்தேன். இந்த வண்டி ஒரு குகையென தோன்றியது. நெடுஞ்சாலையில் நகரும் குகை. முன்னால் கண்ணாடிவழி என்முகம் பார்த்த டென்னிஸ், “எதாவது வேணுமா டீச்சர்?” என்றான். இல்லையென தலையாட்டினேன். பேசிக் கொண்டே வண்டி ஓட்டினான். கண்முன்னால் நெடுஞ்சாலை கடந்து கொண்டிருக்கிறது.
"குடும்பத்துல சுயநலவாதின்னு பேர் வாங்கப்போற" - சில நிமிடங்கள் அவ்வரிகளில் நின்றுகொண்டு இருந்தேன். குடும்பங்கள் அவர்கள் விருப்படி நாம் வாழவில்லை என்றால், நம்மால் அவர்களுக்கு பயன் இல்லை என்றால் சுயநலவாதி என்று முத்திரை குத்தி அதை உரக்கச் சொல்ல ஒரு கணம் தாமதிப்பதில்லை.
ReplyDeleteநான் அறிந்த ஒரு ஆசிரியயை கல்யாணம் செய்துக்கொள்ளவில்லை. அவர்களை அவ்வீட்டு மக்கள் எப்படி கருவேப்பிலையாக கருதினார்கள் என்பதை அறிவேன். அவர்கள் அனுபவதித்த அழுத்தம் அறிவேன். அவர்களை தனியே விடவில்லை. முடிந்தவரை உடன் வைத்துக்கொண்டு அவர்களின் சழக்குகளிலேயே உழலவைத்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களை துறக்க என்ன, மறக்க என்ன, தள்ளி நிற்க கூடவிடவில்லை. ஒரு வித attached கூண்டு.
சக்யை தொகுப்பு ஆரம்பித்துள்ளேன். முதல் கதை நெடுஞ்சாலை பறவை நன்று... நான் சற்று தள்ளி நின்று பார்த்த உலகம் என்பதால் எளிதாக ஒன்றமுடிந்தது.
ReplyDelete