அணையா தீபம்
ஊரில் வழக்கம் போல கார்த்திகை மாத பயிர்ப்பொங்கல். வரிசையாக சிறுதெய்வங்களுக்கும், வயல்தெய்வங்களுக்கும் வழிபாடுகளும் பலிகொடுத்தலும் நடந்து கொண்டிருக்கிறது. நாளை கோட்டைப்பிள்ளையாருக்கும்,ஊமைப்பிடாரிக்கும் பொங்கல் என்று நேற்று ராஜேந்திரன் அண்ணா தண்டோரோ போட்டுவிட்டு சென்றார். சின்னய்யாவின் பள்ளித்தோழர்.
சின்னய்யாவின் இறப்பால் ஒரு ஆண்டுக்கு கோவில்கள் வழிபாடுகள் வீட்டில் விழாக்கள் வழிபாடுகள் என்று எதுவும் கிடையாது. எங்கள் தலைமுறையில் சின்னய்யா வீட்டில் முதல் இழப்பு. அய்யாவின் திருமணத்திற்கு முன்பு தாத்தா இறந்தார்.
காரியத்தன்று புரோகிதர் அண்ணா 'இந்த வருஷம் உங்களுக்கு அமாவாசை விரதம் தவிர எதுமில்லை..மனசை காத்துண்டிருக்கனும்' என்று சொல்லிவிட்டு சென்றார். அப்போது சாதாரணமாக இருந்தது.
[ஆனால் இந்த நான்கு மாதங்களில் இரண்டு முறை 'வீட்ல எல்லாவளும் எப்படி இருக்கேள்...'என்றபடி வந்துவிட்டார். இவரும் ,இவர் அப்பா கண்ணன் அய்யாவும், பாட்டனார் சப்தரிஷிதாத்தாவும் மிகவும் உற்சாகமானவர்கள். வரும் போதே உற்சாகத்தை அங்கவஸ்திரத்தில் முடிந்து கொண்டு வருபவர்கள்]
ஆனால் இந்த நான்கு மாதங்களில் 'மனசை காத்திண்டிருக்கனும்' என்பதற்கான பொருள் விளங்குகிறது. அம்மாச்சி, தாத்தா ,மாமா, தேவி என்று முக்கியமான இழப்புகள் இருந்தாலும் வீட்டிற்குள் இழப்பு முற்றிலும் வேறான ஒன்று. அன்றாடம் உடன் இருந்த ஒருவர் இல்லாமல் ஆவது.
வீட்டில் அனைத்து விரதங்களும் விழாக்களும் விடாமல் நடக்கும். இது வரை நான் மட்டும் ஒரு நாளும், ஒரு பொழுதும், உணவு உண்ணாத விரதம் இருந்ததில்லை. விழாக்களும் பெரிதாக என்னை மகிழ்வித்தது இல்லை. இளம் வயதில் கொண்டாட முடியாத பண்டிகைகள் பின் எந்த வயதிலும் சுவைபடுவதில்லை.
அதுவுமில்லாமல் கூட்டுக்குடும்பத்தின் அன்றாடம் மகிழ்ச்சியானது. விழாநாட்களில் விரதநாட்களில் என்னவோ பிசகிவிடும். அதை சரி செய்யவே முடியாது. சகித்துக்கொண்டு அந்த நாளை மௌனமாக கடந்தால் அடுத்த நாள் இயல்பாகிவிடும். கவலை இல்லாத மனுஷர் என்று சொல்லப்பட்ட அய்யா மட்டும் யானையை கட்டி இழுப்பதை போல சிரித்து கலகலப்பாக பேசி சூழலை சரிகட்ட முயல்வார்.
சின்னய்யா இந்த மாதிரி நாட்களில் மதியம் போல கிளம்பி தன் குடும்பத்துடன் வெளிஊர்களுக்கு, சினிமாவிற்கு, ஷாப்பிங் என்று எங்காவது சென்றுவிட்டு அவ்வாவின் குரல் ஓய்ந்த முன்இரவில் வருவார். இது சரிதான் என்று தோன்றுகிறது. அய்யாவிடம் அம்மாவிடம் சொல்லிவிட்டு செல்வதற்காக அறைவாசலில் வந்து நின்று தலையை மட்டும் நீட்டி புன்னகைக்கும் சின்னய்யாவின் சித்திரம் மனதில் பதிந்துள்ளது. மெதுவாக தலையசைத்துவிட்டு செல்வார். வீட்டின் அந்த இயல்பல்லாத சூழலில் நாங்களும் மற்ற நாட்களை விட சத்தமில்லாமல் மெதுவாகவே பேசிவிளையாடுவோம்.
எங்களின் அந்த சிறிய படுக்கைஅறைக்குள் அய்யா உற்சாகமாக கதைகள் சொல்வார். ஜிம்மி வாலை ஆட்டி ஆட்டி நிலைகொள்ளாமல் எங்களுடன் இருக்கும். ஜிம்மியின் தலையை வருடியபடி அய்யா உற்சாகமாக கயிற்றுகட்டிலில் அமர்ந்து பேசும் சித்திரம் மனதில் இருக்கிறது. நாங்கள் எங்களுக்கான மெத்தையில் அமர்ந்திருப்போம். எங்கள் மூவருக்கும் குவிஸ் கூட வைப்பார். அம்மா முகமெல்லாம் புன்னகையுடன் நாங்கள் பதில் சொல்வதை பார்த்தபடி இன்னொரு கயிற்று கட்டிலில் படுத்திருப்பார். 'ப' வரிசையில் இருக்கும் மூன்று படுக்கைக்கும் நடுவில் ஒருஆள் பக்கவாட்டில் நடக்கலாம். வளர்ந்ததும் விசேச நாட்களில் பிடித்த புத்தகங்கள் வாங்கித்தரத் தொடங்கினார். விசேசநாட்களில் நாங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்பது அய்யாவின் கட்டளை.
வீட்டில் எங்கள் ஐந்து பேருக்கும் விசேசங்கள், விழாக்கள் மீது அத்தனை ஈடுபாடு இல்லாத மனநிலையின் அடிப்படை இதுதான். நடக்கும் இந்த ஆண்டில் விழாக்கள் விரதம் என்று எதுவும் இல்லாதது அப்படி ஒன்றும் வித்தியாசமாக தெரியாததற்கு காரணம் இதுதான்.
மனதில் ஒரு துணுக்குறல் இருப்பதும் உண்மை தான். சின்னய்யா இல்லை என்பதை ஒவ்வொரு விழா நாளும் உரக்க நினைவுபடுத்துகிறது.
ஆனால் அனைத்திற்கும் விதிவிலக்கு உண்டே...சாதாரண இயல்பான நாட்களில் நாங்கள் சோர்வாக இருப்பதில்லை. அன்றாடம் எப்போதுமே பெரும்பாலும் நல்ல நாட்களே. இதெல்லாம் இறைவன் படைப்பில் என்ன 'டிசைனோ'.
எனக்கு கார்த்திகை தீபம் இயல்பாகவே மிகவும் பிடிக்கும். அய்யாவால் சரஸ்வதி பூஜை எப்போதும் மகிழ்ச்சியான நாளாக ஆக்கப்பட்டது. அவர் அந்த நாளை எப்படியாவது உற்சாகமாக மாற்றிவிடுவார். அந்த உற்சாகம் விரதங்களை அனுஷ்டிக்காத இந்த ஆண்டும் சரஸ்வதி பூஜை அன்று மனதிற்குள் இருந்தது. அதே போல கல்லூரி முடித்து வீட்டிற்கு வந்த ஆண்டிலிருந்து கிருஷ்ணர் ஜெயந்தியை நான் மகிழ்ச்சியான நாளாக வீட்டில் உருவாக்கினேன். இந்த ஆண்டு தங்கையின் இரண்டு வாண்டுகளின் வரவு இயல்பாகவே உண்மையான கிருஷ்ண ஜெயந்தியை கொண்டுவந்து விட்டது.
கார்த்திகை மாதம் முழுவதும் ஊர் ஆட்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வெடி கிடையாது. பூஜைக்கான முன் அறிவிப்பான நாட்டு வெடி மட்டும் தான். எதிலும் அவசரம் கிடையாது. பெரும்பாலும் சண்டை சச்சரவுகள் இல்லாது மக்கள் சாவகாசமாக தங்கள் வயல்களுக்கு அருகில் உள்ள சிறு தெய்வங்களின் முற்றத்தில் பொங்கலிட்டு ஆடு,கோழி பலிகொடுத்து, நன்றாக சாப்பிட்டு நிம்மதியாக இருப்பார்கள். ஒன்றிரண்டு வீட்டுக்காரர்கள் சர்க்கரை பொங்கலும் வைப்பார்கள். மிகவும் நெகிழ்வு தன்மை உடைய வழிபாடுகள். வெறும் வெண்பொங்கல்,பத்தி சூடம் வாழைப்பழம் என்று எதுவென்றாலும் கோட்டைப்பிள்ளையருக்கும், எட்டடியானுக்கும்,ஊமைபிடாரிக்கும்,வெள்ளாட்டுக்கருப்புக்கும்,சங்கிலி கருப்பனுக்கும்,எதுமலையானுக்கும்,பெரியண்ணசாமிக்கும் போதுமானது.
சிறுவயதில் தீபத்திற்காக சிறிய மண் அகல்கள் வாங்குவதற்காக குயவர் வீட்டிற்கு செல்வோம். எங்கள் தெருவின் தென்கிழக்கு மூலையில் வயல் ஓரமாக இரண்டு மூன்று வீடுகள் இருக்கின்றன. பானைகள், சட்டிகள் ,அகல்கள் ,அடுப்புகள் செய்யும் வீடுகள். இப்போது இந்த தலைமுறையில் அந்த சக்கரம் சுழல்வதா? வேண்டாமா? என்று அந்திமத்தில் இருக்கிறது. பெரிய முற்றம் வைத்த மண்வீடாக அப்போது இருந்தது. முற்றத்திற்கு வடக்குபக்கம் மட்டும் பெரிய மண்சுவர். நடுவே கரை கட்டப்பட்டு நீரில் ஊறும் உழை. ஒரு பெரிய சக்கரம். முற்றத்து சுவர் ஓரமாக அடுக்கப்பட்ட மண்பானைகள்,உலை மூடிகள்,அடுப்புகள்,கோவில் வேண்டுதலுக்கான நாய் ,குதிரை, பொம்மை உருவாரங்கள் கூட இருந்ததாக நினைவு.
அகல்களை தீபத்தன்று காலையில் தண்ணீரில் முக்கி எடுத்து வைக்க வேண்டும். அந்தியில் கிழக்கே நிலா உதித்ததும் ஊரெங்கும் அகல்கள் ஏற்றப்படும். மழை அல்லது பனிக்குளிரில் மஞ்சளும் செம்மையுமான நிறத்தில் ஒரு பூ போல சுடர்கள் நிற்கும்.
ஏன் இந்த அந்தி முடிகிறது என்று ஏக்கத்தை தூண்டுவதாக ஒவ்வொரு அகலாக அணைந்து கொண்டிருக்கும் வரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். பாதி அகல் வெளிச்சம் இருக்கும் போதே உள்ளே ஓடிவந்துவிடுவேன். இரவு சாப்பாட்டிற்கு பிறகு முற்றிலுமாக அகல்கள் அணைந்தபின் பெரிதாக வானத்தில் நிலா நிற்பதை பார்ப்பது நல்ல அனுபவம். அதுவும் மாடிவீடு வந்ததும் இன்னும் அழகான அனுபவமாக இருக்கிறது.
இரவு மாரியம்மன் கோவிலில் சுடலை கோளுத்தியதும் ரதி மன்மதன் கதை நடக்கும். மன்மதன் எரிப்பு முடிந்ததும் நடுநிசியில் தெருவில் ரதியின் புலம்பல்கள் கேட்கும். எங்கள் வீட்டிற்கு பின் சந்தில் உள்ள பாலன் அண்ணா ரதி வேசம் கட்டுவார். உருக்கமான புலம்பல்களும்...சிவனாருக்கான வசைகளும் அதிகமாக இருக்கும்.
பௌர்ணமி நாள் என்றாலும் அத்தனை அகல்கள் இருந்தாலும் இருள் கரையாது இல்லையா? அதைப்போலவே முழு நிலாவின் ஔியும் கரையாதது.
இருளின் மீது ஏற்றி வைக்கப்பட்ட அந்த வானத்து அகலை போன்ற ஒன்றை அய்யா மனதில் ஏற்றி வைத்துள்ளதை இந்த விழாக்கள் இல்லாத ஆண்டில் உணர்கிறேன். அது அணைவதில்லை. அது அழகானது. தண்மையானது. எங்கோ இருந்து கொண்டே இருப்பது. சமயத்தில் கீழ் இறங்கி எண்ணற்ற அகல்களில் ஔிர்வது. இந்த வாழ்க்கைக்கு போதுமானது.
Comments
Post a Comment