கடல் சூழ்ந்த கவிஞன்
[செப்டம்பர் 2023 கவிதைகள் இதழில் வெளியான கட்டுரை]
நான் வண்ணத்துப்பூச்சியாகிவிட்டேன்
கடந்தகாலம்
இரண்டு சிறகுகளாக வளர்ந்து
என் தோளில் அசைகிறது
நான் எழுதுகிறேன்
வானம் சிறுகுழந்தையாகி
என்னெதிரே துள்ளித்துள்ளி இறங்குகிறது
நல்ல வேளை
நான் ஒரு வண்ணத்துப் பூச்சியாகியிருக்கிறேன்
நன்றி கடந்த காலமே
இனி என் உண்ணாவிரதம்
ஒரு புன்னகையால் முடியும்
_ஜெ. பிரான்சிஸ் கிருபா
ஆழ்மனதுடன் கொண்ட உறவால் தான் நாம் கவிதையை நெருக்கமாக உணர்கிறோம். காலகாலமாக மானசீகமான ஒரு உணர்வுக்கடத்தல் கவிதை வழியே தொடர்ந்து வருகிறது. கவிதை மனிதஉணர்வுகளின் மொழிவடிவம் என்பதாலேயே கவிதை மற்ற இலக்கியவடிவங்களை விட மனதிற்கு நெருக்கமாகிறது.
நம்முடைய ஆழ்மனம் படிமங்களால் ஆனது. அந்தப்படிமங்கள் நம் மூளையில் அச்சம்,குரோதம்,காமம்,வன்மம் மற்றும் அன்பு போன்ற உணர்வுகளால் உருவானது. அவற்றை சுற்றியுள்ள இயற்கையுடன் இணைத்து மனித மனம் மொழி என்னும் படிமங்களின் தொகுப்பாகிறது.
அந்த தொகுப்பில் உள்ள கூட்டு மனதின் ஆழ்மனப்படிமங்கள் தொடர்ந்து கவிதையில் வேறொன்றாக மாறிக்கொண்டிருக்கும் போது ஒரு கவியின் கவியுலகு விரிந்து கொண்டே செல்கிறது.
கவிஞன் தன்னுடைய ஆழ்மனப்படிமங்களை சோழிகளைப்போல உருட்டி விளையாடுகிறான் அல்லது தன்னை அப்படியே அதற்கு ஒப்புக்கொடுக்கிறான்.
நம் ஆதி ஆழ்மனப்படிமங்களான கடல்,கடவுள்,பறவையின் சிறகு,மழை,ஔி,அலைகள் போன்ற படிமங்கள் மறுபடி மறுபடி வேறுவேறாக கவிஞர் பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளில் வெளிப்படுகின்றன.
பொதுவாக ப்ரான்சிஸ் கிருபாவின் கவிதைகள் உணர்வுபூர்வமானவை. கடலின் ஆக்ரோசமும்,மீண்டும் மீண்டும் கரைக்கு வந்து திரும்பும் தவிப்பும்,ஏமாற் றமும்,ஆழ்ந்த மௌனமும் கொண்ட கவிதைகள் இவை.
கவிஞர் தன் கவிதைகளில் மீண்டும் மீண்டும் ஒரே வகையான படிமங்களை வெவ்வேறு வெளிச்சத்தில் திருப்பிக்காட்டுகிறார். அதன் மூலம் அவரால் தனக்கென தனித்த அழகு கொண்ட உலகை உருவாக்கிவிட முடிகிறது.
‘கடலின் பெரும் கவலைகளை
மேஜை மீதிருந்து மென்குரலில்
காற்றோடு புலம்பியிருந்த வெண்சங்கை
தூவானம் தெறித்திருக்கும் ஜன்னலருகே
இடம் மாற்றி வைத்தேன்…..
…..கிசுகிசுப்பான குரலில்
கதையாடத் தொடங்கியது அது’
என்ற தன் கவிதையில் வரும் சங்கைப்போலவே ப்ரான்ஸில் கிருபா தன் ஆழ்மனம் என்ற சங்கை வாழ்க்கை காற்றுக்கு திறந்து வைத்திருக்கிறார். மொழி அந்த சங்கை ஓயாது மீட்டிக்கொண்டே இருக்க அனுமதித்திருக்கிறார். ‘ப்ரான்சிஸ் கிருபா கவிதைகள்’ என்ற முழுத்தொகுப்பை வாசித்து முடித்ததும் அவர் தன்னிச்சையாக மீட்டப்படும் ஓயாத ஒரு பெரும் சங்கு என்று தோன்றியது. கிட்டத்தட்ட கவிஞர்கள் அனைவருமே அப்படித்தானோ என்னவோ.
‘கடலுக்கு பெயர் வைக்க வேண்டும்
இல்லை கடலே போதுமா’ என்று புறவயமாக கேட்பதில் இருந்து,
‘இரண்டே இரண்டு விழிகளால் அழுது
எப்படி இந்தக் கடலை
கண்ணீராக வெளியேற்ற முடியும்’
என்று தன்னையே கடலாக உணரும் கவிதை வரை இவரின் கவிதைகளில் கடல் வெவ்வேறு வடிவங்களில் வந்து கொண்டிருக்கிறது.
‘ஔிரும் சமுத்திர சிற்பம் நீ’
என்று ஓயாது தழும்பும் ஒன்றை நிலையான சிற்பமாக்குகிறார்.
பரந்து விரிந்த ‘நீர் கொழுத்த கடல்’ ஒரு கவிதையில் ஒரு சொட்டாக வற்றுகிறது.
‘நீரெனினும்
காய்ந்துபோக அஞ்சி
கோடையை வென்று எஞ்சும்
ஒரு சொட்டு வைரம்
உன் அன்பு’
இவர் கவிதையின் அத்தனை பெரிய கடல், கண்கள் காணாத உள்நீரோட்டங்கள் கொண்டு கடினமான வைரமாக ஆகும் போது அதன் ஓயாத அலைகளை ஔியாகி வைக்கிறது.
பின் சட்டென அந்த ஒரு சொட்டு கடல் வானமாகி விரிகிறது. அதே கடலில் ஒரு மரக்கலம் கடவுள் அளித்த பரிசாகிறது. அந்த மரக்கலம் தான் அவரின் படைப்புலகம்.
மனதை கொண்ட ஊழி அழிவிற்குப்பின் தன் மரக்கலத்திலிருந்து தன் உலகை படைக்கிறான் கவிஞன். மனதின் அலையடங்கிய கரையில் அமர்ந்து தன் உலகை முடைகிறான். ஆனால் எப்போதும் அவன் மனதின் ஒரு கால் கடலிலேயே ஊன்றியிருக்கிறது. அது அவ்வப்போது அவனை கடலுக்குள் இழுத்துக் கொள்கிறது.
‘தனக்கென முடைந்திருந்த மரப்படகை
எனக்கென பரிசாகக்கொடுத்தார் கடவுள்’
அங்கிருந்து அவன் ஆணையிடும் போது பயமுறுத்தும் அலைகள் அசையாத கற்பாறைகளாகின்றன.
மிகுந்த நெகிழ்தன்மை மிகுந்த ஒன்று பரான்சிஸ் கிருபாவின் கவிதையில் மிகக்கடினமான கற்பாறையாக மாறி பின் ஔிவிடும் வைரமாகிறது. அதை நோக்கியே சலிக்காமல் கரைகளை நோக்கி வந்து வந்து செல்கின்றன கவிஞரின் ஓயாத அலைகள்.
முழுத்தொகுப்பை வாசித்தப்பின் கடலே அவரின் கவிதா ரூபமாக மனதிற்குள் நிற்கிறது.
ப்ரான்சிஸ் கிருபாவின் கடல் எதை நோக்கி ஓயாது அலையடிக்கிறது. எதை நோக்கி இத்தனை தொலைவு பயணப்படுகிறது. அல்லது எதை தன் கவிதையின் வெளிச்சத்தில் வைத்து சலிக்காமல் மறுபடி மறுபடி பார்க்கிறது.
‘கடலின் மடியில்
ஒரு குஞ்சு புயல்
சிறகென அலைகளை
பூட்டிக்கொண்டு
கரை வரை வந்து
ஏமாந்து திரும்பும்
முகம்
யார் முகம்?’
என்று அவரே கேட்டுக்கொள்ளும் அந்த முகம் என்பது என்ன?
‘நீரில் மேயும் மீன்கள்
நிலத்தில் தியானிக்கும் மலைகள்
ஆழத்தில் தூங்கும் பவளங்கள்
கடலை மயக்கும் ஆறுகள்
கூடி அழைக்கின்றன
காலையில் தவழும் கைக்குழந்தையை
விளையாடக்கூட பழகாத பிள்ளை
சும்மா சும்மா பார்க்கிறது அம்மா முகத்தை
அவள் கண்ணில் சங்கமிக்கின்றன
எல்லாக்கடல்களும்’
என்று இந்த மெசியாவின் காயங்களை ஆற்றும் ஒன்று இந்த புவியிலேயே உள்ள ஒன்றுதான். ஆனால் அது அவனுக்கு ஒரு குச்சியில் கட்டப்பட்டு எட்டி எட்டி காட்டப்படுகிறது. அல்லது இந்த மெசியா தான் தட்டிய இடத்தில் திறக்காத அதை வேறெங்கிருந்தும் பெறாமல் தன் காயங்களையே தன்னை மறைக்க அணிந்து கொண்டு தள்ளித் தள்ளி செல்கிறான்.
இவனுக்கு உள்ளங்காலில் தைத்த ஒரு முத்தம் உடைமரமென வளர்கிறது உடலெங்கும். அந்த உடை மரத்தை முறித்து அவன் ஒரு வேய்ங்குழல் செய்கிறான். அவனுடைய ராகம் அவனிடமில்லாததால் அவன் மூச்சுகாற்றில் அந்த குழல் தானே பற்றி எரிந்து கரிகிறது.
‘முழுநிலவில்
வெயிலடிக்கும் இரவில்
நான் மட்டும் விழித்திருக்கிறேன்
தன் சிறகில் நிற்கும் பறவை
அந்தரத்தில் உறைகிறது
என்னருகே
ஒரு ராகத்தில் தூங்குகிறாள் மீரா
உச்சி முதல் பாதம் வரை
அந்தப்பாடலை பார்க்கிறேன்
கேட்க முடியவில்லை
கண்ணனில்லையோ நான்’
கவிஞரின் இந்த தாபமே இறுதி முத்தத்திற்கு ஊழியென்று பெயர் வைக்கிறது.
காட்டுத்தீ தின்று அழிக்கும் ஒரு அடர்ந்த காடு இந்தக்கவிதைகளில் உள்ளது. தீயின் வெம்மையில் வெடித்து சிதறுகின்றன மொழியின் கிளைகள். பச்சை மரங்கள் தீப்பிடித்து எரியும் காட்டை இதில் காண முடிகிறது. தீ தீயை உண்டு பெருந்தீயாகும் அழகை கொண்டவை இந்தக்கவிதைகள். எரிவது வரை எரிந்து முடித்தப்பின் அது,
‘ஒரு துண்டு பூமி
இரண்டு துண்டு வானம்
சிறு கீற்று நிலவு
சில துளிகள் சூரியன்
ஒரு பிடி நட்சத்திரம்
ஒரு கிண்ணம் பகல்
ஒரு கிண்ணிப்பெட்டி இருள்
மரக்கூந்தல் காற்றே
நூலளவு பசும் ஓடை
குடையளவு மேகம்
ஒரு கொத்து மழை
குட்டியாய் ஒரு சாத்தான்
உடல் நிறைய உயிர்
மனம் புதைய காதல்
குருதி நனைய உள்ளொளி
இறவாத முத்தம்
என் உலகளவு எனக்கன்பு’
என்று மெல்லத்தணிகிறது. ஆனால் அந்தக்காட்டு தீயின் ஆதிதுளி பொறிகள் அவருக்கு கிடைக்காத இந்த சின்னஞ்சிறியவைகளே.
பசியும்,காதலும்,தனிமையும்,தனிமையின் மன தத்தளிப்பும்,தன்னில் உறையும் யாவற்றின் மீதான அன்புமே கிருபாவை கொளுத்தி எரிந்து தீய்க்கும் பொறிகள். கவிதைகளில் அந்தத்தீப்பொறிகள் கொளுந்துவிடுகின்றன. பொறியாகி நிற்பதும் பேருருவாகி நிற்பதும் ஒன்றே. தானே எரித்து முடித்தப்பின் தன்னில் புதைத்து வைத்த விதைகளால் மீண்டும் வேறொரு காடு துளிர்க்கிறது. உயிர்த்தெழும் காட்டிற்கு ஈரமாய் இருப்பது இந்த மெசியாவின் நினைவு என்னும் குருதி.
‘உளி விலகும் தருணம்தான்
நெருக்கத்தை இரண்டாகப்பிளக்க
தூரம் பாரம் அழுத்துகிறது.
மேலும் இது…..
நான் விரும்பி ஏற்கும் காயம்’
மறக்க முடியாதவற்றின் கவிதைகள். இவை தழும்பை கீறிப்பார்க்கும் தருணங்கள்.
காயங்களும் ஒரு மெசியாவின் காயங்களாக இருப்பதால் ஏற்ற சிலுவையின் பாரத்தை காலத்தால் எளிதில் கடந்து செல்ல முடியாது என்று தோன்றுகிறது. விரும்பி ஏற்கும் காயத்தின் ஈரம் காய்வதில்லை.
Comments
Post a Comment