நித்யகன்னி
எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் எழுதிய நித்யகன்னி நாவலை வாங்கி புத்தகஅடுக்கில் வைத்து இரண்டு ஆண்டுகளாகிறது. நேற்று மழையை வேடிக்கை பார்த்தபடி நின்ற போது கண்ணில் பட்டதும் எடுத்தேன்.
விஸ்வாமித்திர முனிவரின் சீடரான காலவர் கல்வி நிறைவு பெறுகிறார். குருதட்சணை தருவேன் என்று பிடிவாதமாக கேட்பதால் விஸ்வாமித்திரர் ஒரே மாதிரி நிறமுள்ள எண்ணூறு குதிரைகளை தட்சணையாக கேட்கிறார். ஆபூர்வ நிறம் கொண்ட குதிரைகள் அவை.
தர்மத்தில் உயர்ந்த அரசரான யயாதியிடம் காலவர் சென்று தானமாக கேட்கிறார். யயாதி தன்னிடம் அந்த மாதிரி குதிரைகள் இல்லாததால் தன்மகளான மாதவியை தனமாக அளிக்கிறார். குழந்தை பெற்று முடித்ததும் கன்னித்தன்மைக்கு மீளும் வரம் பெற்ற அவளைக்கொண்டு அபூர்வகுதிரைகள் வைத்துள்ள மூன்று அரசர்களுக்கு திருமணம் செய்வித்து குதிரைகளை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கிறார்கள். முதல் பார்வையிலேயே மாதவி காலவர் மீது காதல் கொண்டுவிடுகிறாள்.
மூன்று அரசர்களிடமிருந்து குதிரைகளை பெறுவதும்,மீதம் இருநூறு குதிரைகளுக்காக யாரை மணக்க வேண்டிருந்தது? என்றும் ,இறுதியில் மாதவியின் காதல் என்னவானது என்பதும் நாவலின் கதை.
காலவன் மீதுள்ள காதிலிற்காக மாதவி அத்தனை திருமணங்களுக்கும் ஒப்புக்கொள்கிறாள். எப்படியும் இறுதியில் காலவனுடன் வாழப்போகிறோம் என்ற விருப்பதால் அவள் தனக்கு ஒவ்வாதவற்றை மனதிடத்துடன் செய்கிறாள்.
முதல் திருமணத்தில் அவளை உடலாக மட்டுமே பார்க்கும் அயோத்தி அரசனிடம், மனதை இழக்க வாய்ப்பு இல்லாமலேயே கடந்து வந்து விடுகிறாள். இரண்டாவதாக காசி அரசன், காலகருடன் அவள் மனதளவில் கொண்ட எண்ணத்தால் அவளின் மனதில் களங்கம் உள்ளது என்று குற்றம் சுமத்தி வியாக்கியானம் செய்கிறான். அந்த உறவிலிருந்தும் அவள் ஒரு குழந்தை பிறப்பிற்கு பின் வெளியே வந்துவிடுகிறாள்.
மூன்றாவதாக போஜஅரசன் ஒரு கலைஞன். அவளை ஆத்மார்த்தமாக நேசிக்கிறான். காலகருக்கும் மாதவிக்குமான காதல் தெரிந்ததும் காலகரிடம், அவர் செய்யும் காரியத்தால் மாதவியின் மனம் மிக விரைவாக வயோதிகம் அடைவதை சொல்லி எச்சரிக்கிறான்.
உடல் அளவில் நித்யகன்னியான அவளின் மனதை முதலில் பார்ப்பவன் அவனே. மாதவி காலகர் மீது கொண்ட காதலின் பலத்தால் மட்டுமே அவனிடமிருந்து விலக முடிகிறது.
அடுத்ததாக மீதி பரிகளுக்காக விஸ்வாமித்திரர் 'என்னை மணந்து ஒரு மகவை தருக' என்கிறார். இப்போது காலகன் அவளுக்கு மைந்தன்.
குழந்தை பிறப்பிற்கு பின் கன்னியாகி மீண்டும் யயாதியின் மகளாக நித்யகன்னியாக நாடுதிரும்பும் அவளுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அவள் தனக்கான முடிவை எடுக்கிறாள்.
ஆண்களும் ,சமூகமும், பெண்ணிற்கு அவரவர் இடத்தில் இருந்து தர்மம் என்ற பெயரில் உருவாக்கி வைத்துள்ள நியதிகள் நாவல் முழுவதும் கதாப்பாத்திரங்கள் மூலம் பேசப்படுகிறது.
ஒவ்வொருவரும் மாதவி மீது தங்களுக்கென ஒரு தர்மத்தை முன் வைக்கிறார்கள். தந்தை தன் பெண்ணை தனமாக அளிக்கிறார். ஒருவன் நீ உடல் மட்டுமே என்கிறான். இன்னொருவன் மனம் மட்டுமே என்றான். இன்னொருவன் 'எனக்காக நீ எதுவேண்டுமானாலும் செய்யவேண்டும் 'என்கிறான். அவளும் அவன் மீதுள்ள அன்பால் செய்கிறாள். பெண்ணின் இந்த குணம் பாயும் எல்லையை நாவல் சென்று தொடுவதே நாவலின் சிறப்பம்சம் என்று நினைக்கிறேன்.
தன் காதலுக்காக ஆண்உடல்களை கடந்து பித்து என்ற எல்லை வரை செல்கிறாள். அவளுக்கு தான் கொண்ட காதலின் முன் இத்தனை திருமணங்களோ ,அதன் மூலம் தான் அடையும் தர்மசங்கடங்களோ பெரிதாக தெரிவதில்லை.
அவள் நித்யகன்னி வரம் பெற்றவள் என்பதே இந்த நாவலில் உள்ள ஆண்கள் அனைவருக்கும் போதுமானதாக இருக்கிறது. உடல் கன்னித்தன்மைக்கு மீண்டு விட்டால் நம் தர்மங்கள், சடங்குகள் மூலம் அவளை உடைமையாக்கி விட முடியும் என்ற எண்ணத்தால், அவரவர் விருப்பதிற்கு அவள் கைமாற்றப்படுகிறாள்.
காலத்துக்கு ஏற்றபடி பெண்ணிற்கான தளைகள் மாறிமாறி வந்திருப்பதை இங்கே இணைத்துக்கொள்ளலாம்.
காலக்கெடு முடிந்ததும் அவளை அவளின் தந்தையிடம் சென்று திரும்ப பெற்றுக்கொள்ளும் எண்ணத்துடன் இருப்பவன் போஜ அரசனும், கலைஞனுமான உசீநரன் மட்டுமே. அவள் காலகனுடன் இருந்தால் தான் மகிழ்ந்திருப்பாள் என்பதை உணர்ந்த உசீநரன் அவளை உடைமையாக்கக்கூடாது என்று காலகரிமே ஒப்படைக்கிறான். காலகனே அவளை அப்படி நடத்துவதில்லை. அவள் தந்தையும் அவளை அப்படி நடத்துவதில்லை. மற்ற கணவர்களும் உரிய காலம் முடிந்தும் மாதவியை விலக்கி விட்டால் போதும் என்றே நினைக்கிறார்கள்.
மனஅலைவுகளால் பித்தியாகி வெட்டுண்ட உசீநரனின் தலையை எடுத்து முத்தமிடும் மாதவி இறுதியில் அத்தனை அலைவுகளுக்குப்பின் உண்மையான காதல் என்ன என்று உணர்ந்ததும் அனைத்து பந்ததிலிருந்தும் வெளியேறுகிறாள்.
மகாபாரதத்தின் கிளைக்கதை ஒன்றிலிருந்து நாவலின் கரு எடுக்கப்பட்டுள்ளது. காமம் சார்ந்தும், காதல் சார்ந்தும் மனிதனின் ஆழ் உணர்வுகள் வரை சென்று தொட எம்.வியால் முடிந்திருக்கிறது. அதற்காக அவன் கொள்ளும் பசப்புகள், அதற்கு வாய்ப்பாக இருக்கும் சடங்குகள், தர்மஉபதேசங்களின் கள்ளத்தன்மையை எம்.வியின் கூரிய வார்த்தைகள் ஊடுருவி காட்டுக்கின்றன.
அவள் என்ன பொம்மையா? உணர்வும், உயிரும் உள்ள அந்த மாமிசத்திற்கு, மனமும் உண்டு என்று படைப்பாளியின் மனம் அலைமோதும் வெளியாக நாவல் இருக்கிறது. இது ஒரு உருவக நாவல். சமூகத்தின் பிரதிநிதிகளின் சாரங்களை காவிய பாத்திரங்களுக்கு கொடுத்துள்ளார்.
ஆண்கள் மாதவியை காதல் என்ற பெயரிலும், தர்மம் என்ற பெயரிலும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். விஸ்வாமித்திரரின் ஆசிரமத்தில் ரிஷிபத்தினிகள் அவளை விபச்சாரி என்று சொல்கிறார்கள்.
எந்த காதலனுக்காக இத்தனை தொலைவு ஓடி வந்தாளோ அவனுடன் கொண்ட அன்பு இறுதியில் கள்ளஅன்பாகி அபத்தமாகி நிற்கிறது.
உலகறியாத அரண்மனை பேதையான மாதவியின் வெகுளித்தனம் நாவலிற்கு ஒரு அசாதாரண தன்மையை அளிக்கிறது. தன் உடலை அடகு வைத்து, தன் மனம் கொண்ட காதலை அடைய முடியும் என்று நம்புகிறாள். இந்த வெகுளிதனமே உடலை ஒரு பொருட்டாக நினைக்காமல்,மனதை மட்டுமே பொருட்படுத்தும் அவளின் எண்ணமே 'நித்யகன்னி' என்ற தன்மையாகி நாவலில் நிற்கிறது.
அந்த தன்மையில் உள்ள சத்தியத்தின் வலிமையால், இத்தனைக்கும் நடுவில் அதே போன்ற நித்யமான அன்பை கண்டுகொள்ளவே செய்கிறாள். ஆனால் அது இருப்பதாக அவள் நம்பிய இடத்தில் அது இல்லை.
எந்த மொட்டு பூவாகி கனியாகும் என்று மரங்களே அறிவதில்லை. அந்த மாயம் தான் மானுடத்தை சலிக்கவிடாமல் சுழல செய்யும் உயிர்விசை.
பெண்ணை உடைமையாக்கும் தர்மங்களுக்கும், சட்டதிட்டங்களுக்கும் நடுவே நாவலில் அந்த ஆதாரதாமரை மலரவே செய்கிறது. சேறு என்பது ஒரு நியதி என்றால் அதில் செந்தாமரை மலர்ந்தாக வேண்டியதும் நியதி என்று நாவல் சொல்கிறது. உண்மையான செந்தாமரை எது? என்ற அடையாளங்காட்டுதலும் இந்த நாவலின் மையமாக கொள்ளலாம்.
[தனிப்பட்ட முறையில் 'கண்டதும் காதல்' அல்லது லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் பற்றி எனக்கு மாற்று கருத்து உண்டு. பெண்கள் அப்படி இருக்கக்கூடாது என்பேன். இந்த நாவல் அந்தக்கருத்திற்கு உடன்நிற்பதாக நினைக்கிறேன்.]
தேர்ந்தெடுத்த களத்தில் ,சமூக உருவாக்கம் முதல் இருபதாம் நூற்றாண்டு காலகட்டம் வரை பெண்மீதுள்ள ஆதிக்கத்தை, அதனால் பெண் மனம் கொள்ளும் வதையை காவிய பாத்திரங்கள் மூலம் நாவல் உணர்த்துகிறது.
இந்த நாவலை பொருத்தவரையில் எம்.வி உடலை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது ஒரு ரிநியூவல் ஃபார்ம் என்று அவர் ஆழமாக உணர்ந்திருக்கலாம். அதனாலேயே இது நித்ய கன்னியின் மனதை மட்டுமே பேசும் நாவலாக உள்ளது.
இது கூட காலகாலமாக சலித்து களிம்பேறி காய்த்துப்போன பெண்மனமாக இருக்கிறது. அதன் வழி சீதையிலிருந்து மண்டோதரி வரையான பெண்களும், இந்த நூற்றாண்டின் இன்றைய இளம்மகள் வரை அடங்குவர்.
யார் யாரோ வாழமுடியாத வாழ்க்கை மிச்சமிருக்கும் நிலம் இது. அதில் பெண்களுக்கான பங்கு அதிகம். அது எதனால்? என்ற கேள்வியை நாவல் எழுப்புகிறது. எல்லா ஆறுகளும் கடலுக்கே என்பதை போல மானுடத்தின் பகுதியான பெண்ணை, அவள் மனதை, அவள் மீதிருக்கும் ஆதிக்கத்தை, விசாரிக்கும் நாவல் என்பதால் நித்யகன்னி மானுடத்தை விசாரிக்கும் நாவலாகவும் ஆகிறது.
எம்.வி க்கு என் காலத்தை கடந்த அரூப அணைப்பு.
Comments
Post a Comment