பசியற்ற வேட்டை

காட்டின் நிச்சயமற்ற தன்மைக்கு தன்னை ஒப்புக்கொடுக்க முடியாத மனித இனம் உருவாக்கிக்கொண்ட அனைத்தும் ஒரு போர்சூழலில் தலைகீழாக மாறுகிறது. 

உலகின் அனைத்து நாடுகளிலும், சிறு பிரதேசங்களும், ஊர்களிலும் ஏன் குடும்பத்திலும் கூட வெளியில் வந்து சேர்பவர்களும், பூர்வீகமான அங்கே வாழ்பவர்களும் சேர்ந்தே வாழ்கிறோம். மனித இனம் அது உருவான காலத்தில் இருந்தே நடந்து நடந்து குடியேறி பல்கிப்பெருகியது. காட்டில் உள்ள வேட்டை சூழலில் இருந்து  தப்பித்து  இத்தனை தொலைவு மானுடம் வந்து சேர்ந்திருக்கிறது. 

மனிதனின் ஆதிஉணர்வுகளில் அச்சம் மனித இனத்தை காட்டில் நிலைகொள்ள விடாது துரத்தியது. சமூகமாகி அந்த அச்சத்தை வென்ற பின், தனக்கான அனைத்தையும் அவனால் உருவாக்கிக் கொள்ள முடிந்தது. அவன் அகமும்புறமும் ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க முயன்று கொண்டே இருக்கிறான்.

இயற்கைக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்க முடியாத வித்தியாசமான விலங்கு மனிதன். தன் ஆதி விழைவுகள் மீது கட்டுப்பாடுகள் வேண்டும் என்று உணர்ந்த விலங்கும் மனிதனே. 

ஒரு போர்சூழல் அவன் உருவாக்கிய அனைத்தையும் குழைத்துப்போடுகிறது. போர்சூழலில் அதிகாரத்தின் கட்டற்ற தன்மை மீண்டும் அவனை காட்டுவிலங்காக மாற்றுகிறது. 

எழுத்தாளர் வாசுமுருகவேலின் 'ஆக்காண்டி' நாவல் இலங்கை யுத்தத்தில் ராணுவத்தின் நடவடிக்கைகளை மையமாகக்கொண்டது.

        
              எழுத்தாளர் வாசுமுருகவேல்


மனிதன் உருக்கிய சமூகத்திற்குள் அரூபமான ஒரு காடு எப்போதும் இருக்கிறது. அதில் மனிதனுக்கு மனிதனே இரை.

சிங்கத்தைப் போல புலியைப்போல ,ஏன் ஒரு மானின் ஓட்டத்தை போன்ற வலிமைக்கூட இல்லாத ஒரு விலங்கு பாதுகாப்பிற்காக, உணவிற்காக ஆயுதங்களை உருவாக்குகிறது. பசி தீர்ந்தும் அவை ஆயுதங்களாக மட்டுமே இருக்கும் போது மீண்டும் காட்டை நோக்கியே செல்கிறான்.

அவன் காட்டை நோக்கி செல்ல செல்ல மீண்டும் தூயவிலங்காகிறான். அவனுடைய அசலான பண்புகள் அவனில் வேகம் கொள்கின்றன. ஒரு பக்கம் அச்சமுற்ற விலங்கான அவன் மறுபக்கம் மிகவும் இரக்கமற்ற விலங்கும் கூட.

அந்த அசலான விலங்குத்தனத்தின் தன்மைகளை காட்டும் நாவலாக ஆக்காண்டி நாவலை பார்க்கிறேன். பசியற்ற வேட்டையை வன்முறை எனலாம். வேட்டை என்பதும் வன்முறை என்பது முற்றிலும் வேறு. 

போர் சார்ந்த வன்முறை சாதாரண மக்கள் மீது பாய்வதை இந்த நாவல் பேசுபொருளாகக் கொண்டுள்ளது. ஒரு பனை மரத்தின் பிம்பத்தை பனித்துளியில் காணும் அனுபவத்தை இந்த நாவலில் அடையமுடிகிறது. இலங்கை போர்சூழலில் சாதாரண மக்களுக்கு நடந்தது என்ன? என்பதே இந்த நாவல். சாதாரணமக்கள் ஏன் போராளிகளாக மாறினார்கள்? என்றும் தொட்டுக்காட்டுகிறது.

ஒரு அரசு சொல்லிய அறிக்கைகளுக்கு மாற்றான அறிக்கை அல்லது தன்னிலை விளக்கங்களாக இலங்கை யுத்தத்தை பேசுபொருளாகக்கொண்ட எழுத்துகளை பார்க்கலாம். 


இவை இன்னும் இன்னும் எழுதப்பட வேண்டிய தேவை உள்ளது. எப்போதும் அதிகாரத்திற்கு மாற்றான ஒன்று இருந்தாக வேண்டியது நியதி. அறிக்கைகளுக்கு மாற்றாக அசலான ஒன்று. ஆவணங்களுக்கு மாற்றான வாழ்க்கை ஒன்று இருந்தாக வேண்டும். 

வன்முறைக்காக குற்றஉணர்வு கொள்ளவும் ,மாற்று தரப்பை பரிசீலிக்கவும், இவற்றை தாண்டி வன்முறைக்கு அடியில் தேங்கி நிற்கும் ஒற்றை வெளியே எடுத்துவிடும் விசை தேவைப்படுகிறது. அந்த ஒன்றை மறைத்த வன்முறையை அடையாளம் காட்டக்கூடிய ஒன்றாக இந்த நாவல் உள்ளது.

வாசுமுருகவேள் இந்த நாவலில் கையாண்டுள்ள மொழி ஒரு அறிக்கை தன்மையை கொண்டுள்ளது. நுண்ணிய வன்முறைகளை எந்த வித உணர்ச்சி கொந்தளிப்பும் இன்றி சொல்லிச் செல்கிறார். அப்படி சொல்வது வாசிப்பவரை தொந்தரவு செய்கிறது. 

நாவல் முழுவதும் குழந்தைகளும் பெண்களும் ஆண்களும் கூட்டம் கூட்டமாக வாள்களால் பலகூறுகளாக வெட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். வெளியேற்றுதல் என்ற பெயரில் நடக்கும் பசியற்ற வேட்டை. ஊர் ஊராக மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

ஒரு மனிதன் ஏதும் செய்ய இயலாத நிலையில் நிற்கும் போது அதிகாரம் அவனை முதலில் நிர்வாணப்படுத்துகிறது. இந்த நாவல் முழுவதும் ஆண்களும், பெண்களும் நிர்வாணப் படுத்தப்படுகிறார்கள். ஒரு போர்சூழலில் அதிகாரம் எளிய மனிதர்களில் அனைத்து உணர்வுகளையும் நிர்வாணப்படுத்துகிறது.

நாவலில் உயிருள்ள ஒரு பெண் உடல் ராணுவமுகாமின் குடிலில் கிடக்கும். சுற்றி நிற்கும் ஆண்களும் நிர்வாணப்படுத்தப்பட்டிருப்பார்கள். அது பாதிக்காத அளவுக்கு அவர்கள் அடிபட்டிருப்பார்கள். நினைவு மங்கிய நிலையில் இருப்பார்கள். நிர்வாண ஆண்உடலை அந்த பெண் உடல் மீது வீசுவார்கள். அந்த பெண்உடல் அதிர்ந்து கொண்டிருப்பதை அவன் உணர்ந்தாலும் அப்படியே உறங்கிவிடுவான். என்ன நடக்கிறது என்று ராணுவக்காரர்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள். 

இந்த ஒரு அத்தியாயமே இலங்கை ராணுவ முகாம்களில் மனித உணர்வுகள் மீது சகமனிதனால் செலுத்தப்படும் வன்முறையை உணர வைப்பதாக இருக்கிறது. அத்தியாயங்கள் தோறும் இதே போல நிர்வாணங்களும், இரத்தமும், வாள்களுமாக உள்ளது. 

அதிகாரம் என்ற வாளின் சுழற்சியில் சிதையும் மானுடம் கண்முன்னே விரிகிறது. மதத்தின் கையிலிருக்கும் வாள் அரசிடம் கையளிக்கப்படுகிறது. அரசின் வாள் ராணுவத்திடம் கையளிக்கப்படுகிறது. ராணுவத்தின் வாள் அடிப்படைவாதத்தின் கையில் சேர்ந்து தன் பசியற்ற வேட்டையை நிகழ்த்துகிறது.

காக்க வேண்டிய அனைத்து சக்திகளாலும் கைவிடப்பட்ட மனிதர்களின் கண்ணீரும் இரத்தமும் அவமானங்களும் நிறைந்த நாவல் இது. 

இந்த நாவலில் செயல்படும் உளவியல் மிகக்கள்ளமானது. ஒரு அரசு ராணுவத்தை கட்டவிழ்த்துவிடுகிறது. எந்த ஒரு நாடும் புரட்சிகளை கையாள முடியாத போது போது செய்யக்கூடியது என்றாலும் அந்த ராணுவம் அதே நாட்டின் இன்னொரு இனக்குழுவிற்கு அதிகாரம் அளித்து ஏவுகிறது. அந்த குழு செய்யும் வன்முறையில் அடிப்படைவாதம் உள்ளது என்பது ஒரு கோணம். ஆனால் அதையும் மீறிய ஒன்றுண்டு. 

அதே நிலத்தில் உன்மீதும் இதே வன்முறை நடக்கும் என்று சொல்லாமல் சொல்கிறது. வாழத்துடிக்கும் இன்னொரு  மக்கள் குழுவின் அடிப்படை விழைவை தூண்டிவிடுகிறது. அந்த ஊரில் உள்ளவனை வெளியேற்றி கொன்று நீ வாழ்க்கையை அமைத்துக்கொள் என்று அனுமதிக்கிறது. 

ஒரு அரசு அல்லது பெரும்பான்மை... தனக்கு கீழ் உள்ள ஒரு இனக்குழுவை அழிக்க அதே போன்ற மற்றொரு பிரிவை பயன்படுத்திக் கொள்கிறது. அதை நாவல் எந்தவித உணர்ச்சி வேகமும் இன்றி நிதானமாக நஜீப் என்ற ஒரு கதாப்பாத்திரம் மூலம் நிதானமாக சொல்கிறது.

முதன்முதலாக ஒரு ஊரை கைப்பற்ற செல்லும் ராணுவம் ஒரு கருத்ததடியனுடன் [நாவலில் அந்த கதாப்பாத்திரம் கருத்ததடியன் என்றே குறிப்பிடப்படுகிறது]   ஒரு குழுவையும் ஏவுகிறது. அவனுடன் நஜீப் செல்கிறான். ஊர் அமைதியாக இருக்கிறது. எடுத்த எடுப்பில் வாளை வீசி ஒருவன் கையை துண்டித்தப்படி செல்லும் கருப்பன் பிரமித்து நிற்கும் நஜீப்பிடம், " போடா...பாத்துக்கிட்டே இருக்கவா வந்த நீ," என்று கத்துகிறான். மிரண்டு நின்ற நஜீப் இருகைகளாலும் ஔிரும் வாளை உயர்த்திப் பிடிக்கிறான். வெறிகொண்டவன் போல ஓடியவன் சற்று தூரத்தில் மீண்டும் குழப்பத்துடன் நிற்கிறான். அவனுக்கு ஏன் வெட்டுவது? யாரை வெட்டுவது? என்று குழப்பமாக இருக்கிறது.கறுப்பன் கிழவியை சுட்டிக்காட்டி, "வெட்டு" என்று அழுத்தி சொல்கிறான். அதற்குப்பிறகு நஜீப் நாவல் முழுவதும் வன்முறையில் திளைக்கிறான். 

மனிதனின் ஆதி குணங்களான இச்சை, குரோதம் ,வன்மம் என்ற அனைத்தும் ஒரு பிரிவு மக்கள் மீது அவிழ்த்துவிடப்படுகிறது. அது அந்த பிரஜைகளை கடித்துக்குதறி சின்னாபின்னமாகி தெருவில் வீசுகிறது. துரத்தி துரத்தி சிதைக்கிறது. மனிதர்களை குப்பை கூலங்களை சேர்ப்பது போல சேர்த்து எரிக்கிறது.

நஜீப் ஒருகையால் அலட்சியமாக ஒரு குழந்தையின் சடலத்தை போகிற போக்கில் தீயில் வீசும் இடத்தை வாசகரால் மறக்கமுடியாது.

இலங்கை யுத்தத்தின் பெரும்பகுதியாக நாட்டிற்குள் நடந்தேறிய 'பொதுமக்கள் அழிப்பை' இந்த நாவல் மையமாக கொண்டுள்ளது. அங்கிருந்த எளிய மக்கள் மீது நடந்த வன்முறையின் மிகச்சிறிய பாகத்தை நுண்ணோக்கியின் அடியில் வைத்து பார்க்கும் பார்வையை நாவல் கொண்டுள்ளது. 

அரசுக்கும் போராட்டக்காரர்களுக்குமான நியாயங்கள் ஒரு தளமாக இருக்கட்டும். அதை சாராத எளிய மக்களை 'நீ அவனா' 'நீ அவளா' என்ற ஒற்றை கேள்வி மூலம் வாள்முனையில் அந்த மக்கள் குழுவை சின்னபின்னமாக்கி அழிக்கிறது.

நாவலின் இறுதியில் அத்தனை வன்முறை, இழப்புகளை கடந்து  அகிலனும் தாசனும் கம்போடியா செல்வது உறுதியாகும் நேரத்தில் கட்டிப்பிடித்து கண்கலங்குவது மனிதர்களுக்கு வாழ்வின் மீதுள்ள நம்பிக்கையாக இருக்கிறார்கள். உலகம் முழுவதும் வசிக்கும் ஒவ்வொரு ஈழத்தமிழரும் அப்படியானவர்களே.

வாசுமுருகவேலின் மிதமான உணர்ச்சி வசப்படாத மொழிநடை நாவலில் செயல்பட்டுள்ள வன்முறையை நிதானமாக கடத்துகிறது. இது நாவலின் பலம்.

கல்லூரியில் ஒரு முறை எங்கள் தமிழாசிரியர் ராதா ஒரு புராணக்கதை சொன்னார். அவர் இலங்கை யுத்தம் பற்றி வகுப்பறையில் அடிக்கடி பேசுவார்.

பார்வதிதேவி சிவனாரிடம் நமக்கு என்று மாளிகை வேண்டும் என்று கேட்டார். அதற்கு சிவனார் நாம் பனிமலையில் வாழ்வதே நமக்கான விதி என்று சொல்ல, தேவி அப்படியானால் தென்கோடியில் திரிகோணமலையில் ஒரு மாளிகை அமைத்துத்தாருங்கள் என்று மடக்கினாராம். வேறு வழியின்றி மயனை அழைக்க,அவர் திரிகோணமலையில் அழகிய பொன்னொளியில் மின்னும் மாளிகையை அமைத்து தந்தார். மாளிகை பிரவேசத்திற்கான சடங்குகளை செய்ய அழைக்கப்பட்ட ராவணன் சடங்குகள் முடிந்ததும் தானமாக மாளிகையை  கேட்டாராம். தேவி மனத்தவிப்புடனும் ஏமாற்றத்துடனும் கோபத்துடனும் ஒப்புக்கொண்டாளாம். அதனால் அங்கே போர் நடந்து கொண்டே இருக்கிறதாம்.

இதே போன்ற ஒரு அபகரிப்பு இந்த நாவலில் எளிய மக்களின் வீடுகள் ,உடல்கள்,உரிமைகள்,உணர்வுகள் மீது நடக்கிறது. 

அகப்பட்ட மனிதரின் உணவு, தண்ணீர், வெளிச்சம், உடை ,இருப்பிடம் என்ற அடிப்படைகள் அனைத்தையும் கைக்குள் வைத்துக்கொண்டு மனிதனை உடலியல், உளவியல் ரீதியான துன்புறுத்தல்களால் ஆட்டுவிக்கும் ஒரு மிருகவிளையாட்டு நாவல் முழுதும் உள்ளது. பட்டினி போட்டு அமுதனையும் தாசனையும் ரம்புத்தான் பழங்கள் பழுத்த பெரிய தோட்டத்தின் முன் கட்டிவைப்பார்கள். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தண்ணீர் அளிக்கப்படும். உணவு உண்டு நன்றாக தண்ணீர் குடித்தப்பின் அவர்களை துன்புறுத்தி ஓட வைப்பார்கள். தொண்டை அடைத்துக்கொண்டு விழும் வரை துரத்துவார்கள்.

அதிகாரம் பாயும் பாதாளத்தை இந்த நாவல் காட்டுகிறது. அறமற்ற அதிகாரத்தை, அது செயல்படும் விதத்தை,அதன் பின்னுள்ள உளவியலை வைக்கும் நாவல் ஆக்காண்டி. 

இந்த வகையில் இந்த ஆள்காட்டி[ஆக்காண்டி] குருவி உலகை நோக்கி கட்டற்ற அதிகாரத்தின் வன்முறை பற்றி எச்சரிக்கை குரல் எழுப்புகிறது. போர் என்ற பெயரில் செய்யப்பட்ட வன்முறையை உலகிற்கு அறிவிக்கிறது. அது வன்முறைக்கு ஆட்பட்டு அழிந்தவர்களில் தன்னிலை விளக்க அறிக்கையாகவும் இருக்கிறது. அதிகாரத்தின் கருவிகளாக செயல்படுபவர்களை,அந்த கருவிகளை செலுத்தும் விசைகளை அடையாளம் காட்டுகிறது.

ஈழத்தின் ஆக்காண்டிக்குருவிகள் நடந்ததை மறந்து விடாதே என்று உலகை நோக்கி கத்திக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் வாசுமுருகவேலின் இந்த நாவல் எளிய மனிதர்கள் மீது நடந்த வன்முறையின் கதை. தெளிவான அறிக்கைளின் மீது வீசப்பட்ட மை. 

மழை பருவம் தப்பிப்போனால் விதைகளை காப்பாற்ற சாணத்தில் விதைகளை  புதைத்து  தட்டி வரட்டிகளாகக் காய வைப்பார்கள். புனைவெழுத்தும்  கூட அப்படியானது தானே. வரலாற்றின் நிஜமான தளங்களை காலத்தினால் அழியாது காப்பாற்றி வைக்கும் வைக்கும் கலங்கள்.

எழுத்தாளர் வாசுமுருகவேலிற்கு அன்பும் வாழ்த்துகளும். 





 


Comments

Popular posts from this blog

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்