விண்மீன்
‘அவன்
தலைகீழாய்ப்
புரட்டி வைக்கும்
மணற் கடிகாரத்தில்
முடிவுறாக் குழந்தைமையில்
என் முதற்கணமெனச்
சொட்டும் ஒரு
துகள்.’
___________
எதையேனும் மறக்க
முனைந்தே கழிகிறது
என் பொழுது
ஒரு நாள்
ஒரு ஆள்
ஒரு ஊர்.
மறதியின் முதல்கல் இடறி
கலையும் தேன்கூடென
வரிசையில் வந்து தாக்கும்
நாட்கள் ஊர்கள்
மற்றும் மனிதர்கள்
கவிஞர் எம்.யுவன்
தர்க்கத்திற்கு என்று ஒரு ‘உணர்வுபூர்வ கிறுக்கு’ உள்ளதை இவர் கவிதைகளில் காணமுடிகிறது.
திறந்து கிடக்கும் கூண்டுந்து கிடக்கு
பறந்துவிட்டது.
திறந்து கிடக்கிறது கூண்டு.
எத்தனை பழங்கள்
எத்தனை பருக்கைகள்
எத்தனை கனவுகள்
திறந்து கிடக்கிறது கூண்டு.
வீட்டின் பகுதியாய் கூண்டும்
கூண்டின் பகுதியாய் வீடும்’
வீட்டை பறவையின் கூண்டின் பகுதியாகக் காண்பதுடன், பறந்து சென்ற ஒன்றின் இருப்பின்மையின் வாதை இந்தக்கவிதையில் உள்ளது. காலிக்கூண்டை எந்தவிதமாக சொன்னாலும் அதன் வெற்றிடம் மனதை அறையவே செய்கிறது.
இவர் கவிதைகள் தர்க்கத்திற்குள் நிற்கும் போது மேலும் மேலும் கவித்துவத்தின் சிறகில் ஏறிப் பறக்கின்றன.
‘கொண்டு வந்த கடல்
இந்த முறை சங்கு கொண்டு வந்தேன்.
சென்ற முறை சிப்பி.
அதற்கு முன்னால் சோழி
பாலிதீன் பைகளில்
செதில் கலந்த மணலும்,
கரைக்கோயில் குங்குமும்
கொண்டு வந்ததுண்டு.
ஒரு முறைகூட
கடலின் பரிதவிப்பை
பரிவை ஆறுதலை
கொண்டு வரமுடிந்ததில்லை.’
உணர்வுகளால் அரற்றும் மனம் ஒன்று தான் காணும் அனைத்திலும் ஒரு பிடிமானத்தை தேடி கண்டடைகிறது. ஆனால் பிடிமானத்தின் நிலையின்மையால் மேலும் மேலும் அலைவுறுகிறது.
அறிவு, தர்க்கம் என்பவை தீவிரஉணர்வுநிலை என்ற தளத்திற்கு நகர்வதை, தர்க்கம் என்ற பிரக்ஞை பூர்வ தளத்தில், உணர்வு அதிதீவிரம் அடைவதை அதன் வாதையை இந்தக்கவிதைகளில் அடையமுடிகிறது.
‘அழுகவிருக்கும்
பழத்தைச் சூழ்
கொண்டது
அப்போதுதான் பூத்த மலர்’
மூதாதை, தான், பின்னால் வருகிறவர் என்ற காலக்கோடுகளை கடந்த உணர்வை எட்டும் இடத்தில் யுவன் கவிதைகள் ஆதிகவியின் ‘யாதும்’ என்ற உணர்வு நிலையை தொடுகிறது. ஆனால் அது அன்பை தொடும் இயல்பான தன்மையுடன் நம்முள் உறையும் மாறாத வன்முறையை தொடுகிறது.
'இடமாற்றம்'
உலகமொன்றும்
புதிதில்லை எனக்கு.
இன்றைய சமுத்திரம்
அன்றைய மேகமாய்க்
கிடந்தநாளில்
பார்த்திருந்தவன் நான்.
மரங்களும் மலைகளும்
உறைந்த யுகத்தில்
குகைக்குள் பனித்துகளாய்
ஒடுங்கியிருந்ததும் நானே.
நடக்க ஊன்றிய கைகள்
உயர்ந்து நிமிர்ந்த போது
கதிர் அறுக்கப்போனேன்.
மானை முயலைத் துரத்திப் பின்
வதக்கி உண்டதில்
பின்னும்
வளர்ந்தவன்.
இரையைத் துரத்துவது ஓய்ந்து
அணுவைத் துரத்தியதும்
நிலவில் சென்று நான்
இறங்கி நடந்ததும்
யாவரும் அறிந்ததே.
புதைந்த காலங்களில்
அமிழ்ந்த வன்முறை
மட்டைக்கும் பந்துக்கும்
இடம் மாறி
மைதானமங்கும் பரவுவதை
கலர் டி.வி.யில்
வியந்தவண்ணம்
காத்திருக்கிறேன்
தற்சமயம்.’
கவிதையில் தர்க்கம் ஒரு மணல்வெளி. ஆனால் இந்தக்கவிதைகளில் அது ஆற்று மணற்பரப்பு போல கைவைக்கும் இடத்தில் எல்லாம் ஊற்று கசிகிறது. இந்தக்கவிதைகளில் தர்க்கம் என்பதே அந்த ஈரத்தை காயவிடாத ஒரு களிம்பாக படலமாக மாறும் விந்தை நடக்கிறது.
‘நூற்றாண்டு நிழலில்
உறங்கி விழித்த குழந்தை
கனவில் தொலைந்த
பொம்மைக்காக
அழுங்கிறது ஏங்கி’
காலத்தை,வெளியை சிந்தனை செய்யும் அறிவாளி மனமும்,உணர்வுபூர்வமான கவிமனமும் சேர்ந்து,
‘குடியேறின மூணாம் மாசம்
தானும் வந்து சேர்ந்தது
அந்தக்குருவி….
….அந்தக்குருவியின் வீட்டில்தான்
இப்போது குடியிருக்கிறேன்’
என்று சொல்கிறது. அன்றாட உலகத்தில் இருந்து கொண்டு அந்தக்குருவியின் வீட்டில் குடியிருக்கிறது.
காலம் நழுவிச்செல்லும் ஏக்கத்தை,அது கொடுத்து செல்லும் நிலையின்மையை இவற்றிற்கு மாறாக அந்த பள்ளத்தில் ஊரும் அன்பை தர்க்கம் என்று சொல்லி கண்சிமிட்டும் சிறுவனிடம் நாமும் கண்சிமிட்டி சரி என்று தலையாட்டலாம். யுவன் தன்னுள்ள உணரும் காலம், வெளி, நிலையின்மை பற்றிய பதற்றத்திற்கு மாற்றாக அனைத்திலும் தன்னை காணும் பேதமற்ற தன்மை எய்தும் இந்தக் கவிதை விண்மீன்கள் போல காலத்தின் அந்தரத்தில் நிற்கின்றது.
‘யாதுமாகி
அப்போது
பட்டாம் பூச்சியாயிருந்தேன்
கணக்கற்று மலர்ந்தவற்றில்
தன் பூ தேடி
சிறகு துடிக்க அலைகிறது
பட்டாம்பூச்சி.
பின் ஒரு பூவானேன்
இள் நிழல் காணா
நதியின் கரையில்
அன்றாடம் மலரும்
ஒரு பூ
கொஞ்ச காலம்
நதியாயுமிருந்தேன்.
தனக்குள் தான் விரையும்
நதியின் விசையில்
அசையும் பூ மேல்
அமர்ந்தது பூச்சி’
எழுதுபவர்கள் இங்கே அன்பும் வன்மமும் ,கருணையும் சகிப்பும், காமமும் காதலும், வன்முறையும் அலைவுறுத்தலுமான வதைபட்டுக் கொண்டிருக்கும் போது தர்க்கம் என்ற இருபக்கமும் கூர் உள்ள வாளை ஏந்தி நிற்கும் களிக்கும் விரலைக் கண்டு கொஞ்சம் பொறாமையாக இருந்தது. ஆனால் அங்கேயும் இதே வதைதான் என்பதில் ஆசுவாசம். [ ஆசுவாசம் என்பதற்கு பதிலியாக ஜாலி என்று எழுதலாம்]
நான் பார்வையாலும்
நீ தானியத்தாலும்
அவன் அம்பாலும்
அணுகுவது ஒரே
பறவையை
கவிஞர் எம்.யுவன்
விஷ்ணுபுரம் விருது பெறும் யுவன்சார்க்கு அன்பும் வணக்கங்களும்.
Comments
Post a Comment