சுவடிகள்

 [அக்டோபர் 2023 ஆவநாழி இதழில் வெளியான கதை]

அந்த செம்மண் நிலமெங்கும் சித்திரையின் அனல் அடித்து  இரவும் பகலும் தகித்திருந்தது. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை நிலம் புழுதியாகிப் பறந்தது. அதிகாலையின்  மெல்லிய தண்மையும்  நிலம்கூடாத அந்த கருக்கல்  பொழுதில், கழுத்து வியர்வையின் நசநசப்பில் கரையாளருக்கு முழிப்பு தட்டிவிட்டது. திண்ணையில் இருந்து திரும்பிப் படுத்து கிழக்குப் பக்கமாகப்  பார்த்தார். வானம் மீன்கள்பூத்து நிறைந்திருந்தது. இனி கண்கூட்டி தூங்கமுடியாது. எழுந்து அமர்ந்து கைக்கால்களை நீட்டி மடக்கியப்பின் பின்பக்கமாக  சென்றார். பின்புற சுவரில் சாய்ந்திருந்த பெரிய மண்பானையை உற்றுப்பார்த்தார். கரிய மினுமினுப்பாக நீர் தெரிந்தது. குட்டிச்சுவர்களை தாண்டிக்கொண்டு முள்காட்டிற்குள் சென்று திரும்பும்போது வானம் வெளுக்கத் தொடங்கியது. பானையில் இருந்த தண்ணீரை மண்ணாலான  உலைமூடியால் அள்ளி அள்ளி உடலில் ஊற்றிக்கொண்டார். உடலில் தண்ணீர் வழிய வழிய மனம் விழித்துக்கொண்டது. இன்னைக்கு இந்தக்கடனை அடைக்கனும் என்று நினைத்தவராக உடலின் ஈரம்  காயும் வரை  நின்றார். 

எட்டின தொலைவு வரை முள்காடு. குட்டிச்சுவருக்கு அந்தப்பக்கமிருந்த நுணாமரம் வெள்ளை மூக்குத்திகளை வாரி இறைத்ததைப்போல பூத்துக்கிடந்தது.

“அத்தனையும் சக்கம்மாவோட மூக்குத்திடா..நம்ம முப்பாட்டனாருங்க நெலம் தேடி அலைஞ்ச காலத்துல வழி நெடுக்க சக்கம்மா தான் நொணாமரமா நிழலுக்கு நின்னாளாம்…ஒரு பெரிய நொணா மரம் நிறைஞ்சு பூத்துக்கெடந்த காலத்துல தான் முடிமன்னுக்கு நம்ம ராசா வந்தாராம். சூரியனோட அனல் தாங்காம இந்த நெலமே பட்டு போயி கெடந்துச்சாம்..அவங்க எல்லாருக்கும் நடந்து நடந்து காலெல்லாம் தேஞ்சு போயி கெடக்கு. எங்கினியாச்சும் ஒரு பத்து நாளைக்கு ஒக்காந்தா போதுன்னு மனசு ஓஞ்சு போச்சாம். நொணா மரத்து நெழலுல எல்லாரும் சக்கமாவை நெனச்சு கண்ணமூடி தெறந்து சகுனம் பாத்தாங்க. பசிச்சப்பிள்ளை பாலு குடிக்கற பொழுதுக்குள்ள ஒரு சலசலப்பு கேட்டுச்சாம். அங்க ஒரு  மொசக்குட்டியும் கீரிகுஞ்சும்  வேட்டைக்கு அலையறது இவங்க கண்ணுல பட்டுச்சு. இந்தமண்ணுல உசிரு இருக்குடா..இங்க பொழச்சு கெடந்து செத்து போவோம்டான்னு ஒரு பெரியாத்தா சொன்னாளாம்,” என்று கரையாளரின் மூத்தாத்தா தன் பரம்பரைக் கதையை சொல்லும்.

சென்ற அமாவாசையன்று முள்ளுகாட்டில் நினைவழிந்து விழுந்த கரையாளர் தானே  விழிப்புத்தட்டி வீட்டிற்கு  எழுந்துவந்தார். அன்றிலிருந்து அவருக்கு சுவடிக்கட்டுகளும், அய்யாவும், மூத்தாத்தாவும் மாறி மாறி கனவில் வந்து கொண்டிருந்தார்கள். எழுந்து அமர்ந்தால் பனைக்கருக்கை வைத்து மனதை  ராவுவதைப்போல அவரின் புத்தி வலியால் சீறத்தொடங்கியது.


கைவலிக்க முதுகுவலிக்க யார் இதையெல்லாம் ஓலையில எழுதினார்கள் என்று அவருக்குத் தெரியாது. ஆனால் அவற்றை ஆற்றில் விட அவருக்கு மனமில்லை.  அந்த சங்கரதாசர் இன்றைக்கு முடிமன்னுக்கோ, போடிநாயக்கனூருக்கோ நாடகம் போட வருவதை   தெரிந்து கொண்டார். நாடகம் எழுதுகிறவரிடம்  ஒப்படைக்கலாம் என்று மனதிற்குள் தோன்றியதும் ஒரு மாதமாக இருந்த அயர்ச்சி நீங்கி காலையிலேயே எழுந்துவிட்டார்.

வீட்டை சுற்றி வந்து தென்னம்படலில் கிடந்த வேட்டியை எடுத்து கட்டிக்கொண்டார். வீட்டினுள் மினுங்கிக் கொண்டிருந்த அரிக்கேன் விளக்கை எடுத்துக்கொண்டு உள் முற்றத்தில் இறங்கினார். பொருக்குத்தட்டிப் போயிருந்த தரை அவரின் கால்கள் பட்டு நொறுங்கியது.  கேப்பை காயவைப்பதற்காக மூத்தாத்தா சாணத்தை கொழுக்க கரைத்து முற்றம் முழுவதும் ஊற்றி, தென்னைமாரால் இழுத்துவிட்டு முழு முற்றத்தையும் மெழுகி வைப்பாள். மெழுகிய தரையில் வேண்டுமென்றே கால் வைத்து நடக்கும் அவரைப் பார்த்து முகவாயில் கைவைத்து சிரித்து , “கரையாளுக்கு ரங்கநாதராட்டம் அகண்ட பாதம்..பொம்முக்க வம்சம்..கோதையிலருந்து காவேரி தாண்டி நடந்து நடந்து அகண்ட பாதம்,” என்று வானத்தை பார்த்து கும்பிடுவாள். அவளுக்கு வெயில் பிடிக்கும். “வெயிலை தனக்குள்ள ஏத்துக்கிட்டுத்தான் மரமெல்லாம் பூக்குது,” என்பாள். வெயில் காலத்தில்தான் செத்துப்போனாள். அவள் சொன்னபடி இந்த காரியத்தை இந்த வெயில்காலத்திலேயே முடிக்க வேண்டும் என்று நினைத்தவராக கருத்த மரத்தாலான கதவைத் தள்ளினார். அது கடகடவென்ற சத்தத்துடன் திறந்துகொண்டது. தென்மேற்கு மூலையில்  இருந்த குதிர் வீடு அது. சுவர் ஓரமாக  விளக்கை வைத்தார். அவரைச் சுற்றி ஆட்கள் நிற்பதை போல குதிர்களின் நிழல்கள் எழுந்து வந்தன. சுற்றி சுற்றி பார்த்தார். அப்பன்,பாட்டன், முப்பாட்டன், வெள்ளைகாரர்களுக்கு எதிரே நின்று கத்தியை தூக்கிய பொம்முவும் ஊமைத்துரையும் அவரை சூழ்ந்து கொண்டனர்.

“சக்கம்மா எனக்கு வழியக்காட்டு..” என்று கண்களை மூடிக்கொண்டார். ‘கரையாளா நம்ப வம்சம் மட்டுமில்ல நம்மளை நம்பி வந்தவுங்க வம்சமும் அழிஞ்சு போச்சு. “மனுச மண்ணுக்குள்ள போயி புழுதியா பறந்தாலும் அவுக நெனப்பு மண்ணுக்கு மேல மரமாட்டம் இருக்கனுன்னா.. பாட்டுபாடறவன் கையில் இந்த ஓலையெல்லாம் போய் சேரனும்,” என்ற மூத்தாத்தாவின் குரல் மனதிற்குள் ஒலித்தது. வாகைமரப்பெட்டியை திறந்தார். கருவறைக்குள் என இருளில் சுவடிக்கட்டுகள் படுத்திருந்தன. அவற்றை வெள்ளை வேட்டியை விரித்து அடுக்கி மூட்டையாகக்கட்டி எடுத்துக்கொண்டார்.

கால் வலிக்கும்போது மரத்தடி நிழலில் உட்கார்ந்தும்,குடிசை வாசலில் நின்ற பெண்ணிடம் பழைய கஞ்சி வாங்கிக்குடித்தும் நடந்தார். சாயுங்காலமாக  அவர்  முடிமன்னுக்கு சென்று சேரும் போது வெயில் உக்கிரத்துடன் இருந்தது. உடலை போர்த்தியிருந்த துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டார். ஊர் முன்னால் இருந்த அந்த காரை வீட்டின் வாசலில் நாடகக்காரர்களின்  மாட்டுவண்டிகள் நின்றன. 

அதில் ஒருவர் மேல்சட்டையை கழற்றிவிட்டு வேட்டியை கால்களுக்கு இடையேவிட்டு வரிந்து கட்டினார். சட்டையை மாட்டுவண்டியின் பக்கவாட்டு பிடிக்குச்சி ஒன்றில் மாட்டினார். மாட்டு வண்டியின் சக்கர அச்சில் காலூன்றி நின்று  திரைசீலைகளை கோர்க்கும் மூங்கில்களை ஒருகையால்  உருவி எடுத்து கீழே  போடத்தொடங்கினார். அவரின் முதுகிற்கு பின்னால் சூரியன் மறைந்து கொண்டிருந்தான். கரையாளருக்கு கெண்டை கால்களில் வலி வெடுக் வெடுக்கென்று துடித்தது. காரைவீட்டை ஒட்டி எதிரில் இருந்த குட்டிவீடு பூட்டிக்கிடந்தது. அந்தவீட்டிற்கு முன்னால் எரிப்பானிற்காக பனம்மட்டைகள்  குவிக்கப்பட்டிருந்தன.   பெருமூச்சுடன் அந்தவீட்டின் மண் திண்ணையின் ஓரத்தில் உட்கார்ந்தார். 

சிறுபயல் ஒருவன் வண்டிக் காளைகளின் பக்கமாக தள்ளி நின்றான். அவன் அன்னாந்து வண்டிசக்கரத்தில் ஏறி நின்றவரையே பார்த்துக் கொண்டிருந்தான். காளைகள் பெருமூச்சு விடும் சத்தம் தனியாகக் கேட்டது.  சக்கரத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவன் சுற்றிவிடுமோ என்ற பயத்திலோ என்னவோ ஓடிப்போய் சக்கரத்தைப் பிடித்தான்.

அவர்,“டேய் சண்முகம்…சக்கரத்துக்கிட்ட நிப்பாங்களாடா..கீழ எறங்குனேன்னா  தோலை உரிச்சுப்பிடுவேன்,”என்று கத்தினார். அவன் விலகி நின்று அவரையும் ,காளைகளின் அசைவையும் மாறிமாறி பார்க்கத் தொடங்கினான். அவனுடைய குண்டுமணிக் கண்கள் சுழன்று சுழன்று நடப்பவைகளை பரபரப்பாக பார்த்துக் கொண்டிருந்தன. புது ஊரைக் கண்ட மலர்ச்சி. அவன் அவ்வப்போது கரையாளரையும் ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டான்.

ஒருவர் வேட்டியை தூக்கிப்பிடித்துக் கொண்டு சிவப்பு கடுக்கன் சூரிய ஔியில் துலங்கித்தெரிய, வண்டிகளை நோக்கி ஓட்டமும் நடையுமாக கையாட்டிக்கொண்டே வந்தார். அவரைப் பார்த்ததும் வண்டிசக்கரத்தில் நின்றவர் எடுத்த மூங்கிலை வண்டியிலேயே போட்டு விட்டு ஆரக்காலில் கால் மாற்றி நின்றார்.

“கந்தசாமிப்பிள்ளை..உம்மைத்தான்..இறங்குமய்யா…எதுக்கு இந்த முரட்டு ஜோலி..வண்டிக்காரன் வந்ததும் ஆளோடு ஆளா செய்யற வேல. ராத்திரிக்கு வேஷம் கட்டவேணாமா,” என்றார்.

“அதுக்கு எதுக்கு இப்படி ஓடி வாரீர்..கம்பெனி மொதலாளி பழனியாப்பிள்ளை இந்த  நாடகக்காரனால செத்தாருன்னு பேரு வாங்கித் தரனுமோ,” 

“ஆமாவே..நாம் மொதலாளியா இருந்தா இப்படி வேட்டிய சுருட்டிக்கிட்டு உம்மப் பின்னாடி எதுக்கு ஓடிவரனும்..நானும்  உழைப்பு பாங்காளிய்யா,”

“நாங்க நாடகம் போடறதே புராணக்கதைங்க..நீரு உம்மப் புராணத்தை விட்டு போட்டு சேதியச் சொல்லும்,”

“போடிநாயக்கனூர் இங்கருந்து பக்கத்துல ஒரு மைல் தூரத்துல தான். அங்கதான் கொட்டகை இருக்காம். நாடக சாமானெல்லாம் வண்டியிலயே இருக்கட்டும்..அவங்கவங்க  மூட்டைகளை மட்டும் எடுத்துக்கிடுங்க,’

“வீடு இங்கையா?”

“ஆமாவே..அங்க வீடு இல்ல..இங்க கொட்டகை இல்லை,”

“நம்ம பொழப்பு மாறில்ல இருக்கு.. வசூலாவுமா..நாடகம் பாக்க ஆளுங்க  வருவாகளா,”

“ஊரோட நாமத்தை மனசில  வாங்கினீரா..முடிமன்னு..நாகமநாயக்கன் மவன் விசுவநாத நாயக்கன் இங்க ஆட்சி எடுக்கறப்ப தன்னோட வந்த படையாளுகளை காட்டை திருத்தி குடிவச்சான். அதுல ஒரு கூட்டம் நிலந்தேடி வாரப்ப  இங்கதான் முயல் நாய எதுத்துச்சாம்..பொம்முங்கறவனுக்கு மனசு மலர்ந்து போச்சு.  இங்கதான் நாம இருக்கனுன்னு கூட்டத்துக்கு முன்னாடி வேல்கம்பை தரையில் குத்தி நின்னு சொன்னானாம்..”

“நாடகம் எழுதும்ய்யா..நல்லா கதை சொல்றீரு.”

“அய்யா…. மெதுவா பேசறதே உம்ம வழக்கத்துல இல்லையே..சுவாமிகள் காதில விழப்போகுது..இந்த ஊருக்கு வாரப்பவே இந்தக்கதை தான்  முதல்ல காதுல விழுந்துச்சு”

“வசனம் பேசிப்பேசி குரலே அப்படியாக்கும்,” என்றபடி கண்ணுசாமிப்பிள்ளை சிரித்துக்கொண்டே கீழே இறங்கினார். உள்ளங்காலில் ஒட்டியிருந்த வண்டி மையை மண்ணில் தேய்த்தார். பழனியாப்பிள்ளை மேடை அமைப்பவரை அழைத்துக்கொண்டு வண்டியிலேறி  கிளம்பினார்.

நாடகக்காரர்கள் இரவு சோறு தின்றுவிட்டு  வெளித்திண்ணையில் வந்து படுத்தார்கள். கரையாளரும் ஊர்ப்பேரை சொல்லி மூன்றாவது வீட்டு அம்மாளிடம் சோறு வாங்கி தின்றுவிட்டு அவளிடம் சுவடி மூட்டையைக்  கொடுத்து பாதுகாப்பாக வைக்கும்படி கேட்டுக்கொண்டார். திரும்பி வந்து திண்ணையில் படுத்தார்.

எமன் கந்தசாமி கயிற்றுக்கட்டிலை திண்ணையை ஒட்டி வீதியில் போட்டுப்படுத்தான்.  சுவாமிகளின் இருமல் சத்தம் உள்ளிருந்து அவ்வப்போது கேட்டது. கரையாளர் எட்டிப்பார்த்தார். சங்கரதாச சுவாமிகள் தரையில் விரித்த தடுக்குப்பாயில் அமர்ந்து சாய்வுப்பலகையில் நோட்டை விரித்து வைத்து அரிகேன் விளக்கு வெளிச்சத்தில் எழுதிக்கொண்டிருந்தார். முதுகை வளைத்து சாய்வுப் பலகையில் கையூன்றி பனை ஓலை விசிறியை மறுகையில் பிடித்திருந்தார். அரிகேன் விளக்கு ஔியில் அவருடைய முகம் மட்டும் வெளிச்சமாக தெரிந்தது. நீண்ட வெண்ணிற தாடி விசிறிக்காற்றில் அசைந்தது. முன்னால் நின்ற இருளை சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அங்கே பின்பாட்டுக்காரர்கள் படுத்திருந்தார்கள். தண்ணீர் குடித்துவிட்டு குனிந்து எழுதத்தொடங்கினார். 

“சுவாமிகள்…என்ன நாடகம் எழுதறார்ன்னு தெரியுமா,” என்று வெளித்திண்ணையில் இருந்து இரணியன் முத்துசாமி கேட்டார்.

“நாலு மாசம் முன்னாடி காந்தி மதுரைக்கு வந்தாரே அதை நாடகமா எழுதுவாரோ..” என்ற பவளக்கொடி கிருஷ்ணன் தானும் எட்டிப்பார்த்தான்.

“தெரியலை…முடிச்சதும் எப்படியும் நமக்கு தானே பாடம் கொடுப்பார்,”

 நடிகர்களில் ஒன்றிரண்டு பேரைத்தவிர மற்றவர்கள் இருபது வயதுக்கும் குறைந்த பிள்ளைகள்.

“ஒரு முழு நாடகப்பாடத்தையும் பாட்டுகளும் வசனங்களுமா ஒரு ராத்திரிக்குள்ள எப்படி எழுதறாரு..”

“யாருக்குத்தெரியும்…” என்றபடி பவளக்கொடி திரும்பிப் படுத்தான். 

கொஞ்சம் கொஞ்சமாக பேச்சொலிகள் தேய்ந்து குரட்டை ஒலி கேட்கத்தொடங்கியது. 

“அடேய்..சித்ரகுப்தா..” என்ற குரல் கேட்டு கரையாளர் துள்ளி எழுந்து அமர்ந்தார்.

“அந்த நாரதனை வரச்சொல்,” என்று எமன் கந்தசாமி கையை நீட்டினான். அருகிலிருந்த கை அந்தக்கையை தள்ளிவிட்டு, “அமைதி..தர்மராஜரே,”என்று சொல்லிவிட்டு திரும்பிக் கொண்டது.

“யாரிடம்..யாரை கோர்த்துவிடுகிறார்..நானும் ஈஸ்வரன் தான்,”

பின்னாலிருந்து ஒருவர் எழுந்து “அதோ ஈஸ்வரனே வந்துவிட்டார் பிரபு,”என்றதும் எமன் பதில் சொல்லாமல் திரும்பிப்படுத்து குறட்டை விடத்தொடங்கினான். அடுத்ததாக இன்னொரு குரல் காயாத கானகத்தே என்று தொடங்கவும் கரையாளர் புன்னகைத்தபடி கண்களை மூடிக்கொண்டார்.

அடுத்தநாள் காலையில் அனைவரும் அங்கும் இங்கும் நடந்து வசனங்களை படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து கரையாளர் தலையாட்டிக் கொண்டார். சின்னப்பயல் சண்முகமும் கூட்டாளிகளும் தங்களின் பிஞ்சுகுரலை உயர்த்தி உயர்த்தி பாடிக்கொண்டிருந்தார்கள். மத்தியான தூக்கத்திற்கு பிறகு குளிப்பதற்கு எமன் கந்தசாமியும்  ராமகிருஷ்ணனும் நீர் தேடி அலைந்தார்கள். அவர்கள் கண்டுபிடிக்கட்டும் நாம் பின்னால் சென்று குளிக்கலாம் என்று மற்றவர்கள் திண்ணையில் படுத்து பேசிக்கொண்டிருந்தார்கள். அத்தனை சோம்பலை பார்க்க கரையாளருக்கு என்னவோ போல இருந்தது. அரசாணிமாலை  வைத்தியலிங்கம் கையை தலைக்கு வைத்து தூங்கிக் கொண்டிருந்தான்.  அவன் நேரம் கிடைத்தால் சட்டென்று எங்கு படுத்தாலும் தூங்கிவிடுவான். ‘முப்போதும் ஒறக்கமில்லாம இதெல்லாம் ஒரு பொழப்பா’ என்று சொல்லிக் கொண்டிருப்பான்.

ஊர்க்கிணற்றில் நீர் எடுத்து தள்ளிநின்று குளிக்கலாம் என்று இரண்டு ஈயபோகினிகளுடன் சென்று குளித்து விட்டு வந்து இரவு உணவை முடித்துக்கொண்டு தயாராக இருந்தார்கள். சுவாமிகளிடம் சொல்லிக்கொண்டு நடக்கத்தொடங்கினார்கள். சற்று நேரம் கழித்து வெளியே படுத்திருந்த கரையாளரும் நாடகக்கொட்டகை நோக்கி நடந்தார்.

“கொஞ்சதூரம் போனா புழுதி ஆளையே மூடிரும் போல..மேக்கப்பு இல்லாட்டாலும் அடையாளம் தெரியாது,” என்று பபூன் ராமசாமி சொல்லிவிட்டு வேட்டியை மடித்துக்கட்டினான்.

ஊர் எல்லையைக் கடந்ததும் அந்த ஒற்றையடிப்பாதை முள்மரங்களும், செடிகளும், புதர்களும், சப்பாத்திக் கள்ளிகளுமாக இருந்தது. 

“போலிநாயக்கனூருக்கு இந்த வழி மட்டுந்தானா..”

“இந்த வழியில்லேன்னா மூணு ஊர் சுத்திக்கிட்டு தான் போகனுமாம்,”

செடிகள் உடலில்பட்டு கிழித்துவிடாமல் இருக்க ஒருவர் பின் ஒருவராக கூர்ந்து பார்த்தபடி சென்றார்கள். வழக்கமான பேச்சு குறைந்திருந்தது. முன்னால் சென்ற செல்லய்யா நீண்ட தடியால் முள்செடிகளை விலக்கியும், தரையில் தட்டிக்கொண்டும் நடந்தான். 

நாடகக்கொட்டகைக்கு சென்றதும் வியர்வையை துடைத்துக்கொண்டு காற்றாட நின்றப்பின் அனைவரும் இயல்பானார்கள். 

“எவ்வளவு தொலைவு எத்தனை ஊருங்கல்ல நடந்திருக்கோம்..பயத்துல ஒரு மைல் நடக்கறதுக்குள்ள  புதுப்பானையில பொங்கறாப்ல வேர்வை பொங்குது,” என்ற செல்லய்யா அங்கிருந்த அட்டையாலான மேகத்தை எடுத்து விசிறிக்கொண்டான். 

“பேய் தொரத்தறாப்ல…”

“பேய் தொரத்துனாக் கூட என்னத்தா வேணும்..எங்கள்ல்ல யாரையாச்சும் பிடிருச்சிருக்கான்னு கேட்டுப்பாக்கலாம்..பாம்புல்ல வந்துருமோன்னு அடிவயிறு கலங்குது,” என்று  சொல்லிவிட்டு ராமசாமி  தன்கன்னத்தில் சிவப்பு நிறத்தில் வட்டம் வரைந்தான். அனைவரும் சகஜமாகி நாடகத்திற்கான உடைகளை பார்த்து எடுத்து ஒப்பனை செய்துகொள்ளத்  தொடங்கினார்கள்.

நாடகம் தொடங்குவதற்காக தகரத்தை கோலால் தட்டி ஒலியெழுப்பினார்கள். ஏற்கனவே பக்கத்து ஊர்களுக்கெல்லாம் தண்டோரோ போட்டிருந்தார்கள். மேடையின் முன்னால் வெட்டவெளியில் ஆட்கள் அமரத் தொடங்கினார்கள். சற்றுநேரத்தில் மழைகாலத்து ஊருணி போல கண்முன்னே அந்த வெட்டவெளி ஆட்களால் நிறைந்தது. இந்த நேரத்துக்கு  தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் ஆட்கள் என்று நினைத்த கரையாளர் சொல்ல முடியாத உணர்ச்சியால் திரும்பித்திரும்பி கூட்டத்தையே பார்த்தார். 

மேடையில் வள்ளி, “மலையில புனம்காத்து வானத்து பறவைகளாட்டம் வலம் வருவோம்,” என்று பாடுகிறாள்.

“பொண்ணு  மணம் முடிக்கிற வயசாச்சே” என்று பாடிக்கொண்டு தடியை ஊன்றி அவள் அருகில் கிழவனார்  செல்கிறார்.

“முன்னமே ஒரு கிழவியோட சுதந்திரத்தை பறிச்சு வச்சிருக்கறது போதாதா, ” என்னபடி வள்ளி தள்ளி ஓடினாள்.

சுதந்திரம் என்ற வார்த்தையை கேட்டதும் கூட்டத்தில் அங்கங்கே சலசலப்பு. வயிறு மட்டும் உள்ள ஜீவராசிகளாக நடமாடிக்கொண்டிருந்த ஊர்க்காரர்களின் கண்களில் பந்த ஔி பிரதிபலிப்பதை கரையாளர் கண்களை விரித்துப்பார்த்தார். பொட்டல் வெளியில் சில ஆட்களின் குரல்கள் விரிந்து பரவுவதை கேட்டபடி அவர் குனிந்து வேட்டியால் முகத்தை துடைத்துக்கொண்டார். சாவக்களை கொண்டிருந்த அவர் முகம் பந்த வெளிச்சத்தில் மழை விழுந்த நிலமாக குழைந்தது. ‘இன்னும் செத்துப்போயிரல உசுரு ஒட்டிக்கிட்டு இருக்கு’ என்று அவர் வாய் முணுமுணுத்துக் கொண்டது. பெண்கள் குழந்தைகளுடன் வள்ளியைப் பார்த்து சிரித்தார்கள்.

நாடகம் முடிந்து ஒப்பனையை கலைக்கும் போது மறுபடி எப்படி அதே பாதையில் திரும்புவது என்ற பதட்டம் அவர்களை சூழ்ந்து கொண்டது.

பழனியாப்பிள்ளை, “ஒரு ரெண்டு நாளுக்கு பயமா இருக்கும்..பிறவு சாமாளிச்சுக்கலாம்,” என்று சொல்லிவிட்டு நாடகப்பொருட்களை வைத்து பூட்டும் கீற்றுக் கொட்டகை நோக்கி நடந்தார். அவர்கள் ஒப்பனைகளை கலைத்துவிட்டு காற்றாட வெட்டவெளியில் சற்று நேரம் அமர்ந்திருந்தார்கள். 

“தண்ணிக் கிடைக்கிற ஊரா இருந்தா..நாலு சொம்பு தண்ணிய ஒடம்புல ஊத்திக்கிட்டா சொகமா இருக்கும்…என்னா புழுக்கம். நம்ம மதுர எம்புட்டோ தேவலை,” என்றபடி இராமசாமி நிலைக்கொள்ளாமல்  நடந்தான். கன்னத்தில் தடவியிருந்த சிவப்பு நிறம்  மங்கித்தெரிந்தது.

ஆட்கள் கூட்டமாக நிற்பதைப் போன்று சப்பாத்திக்கள்ளிகள் முள்இலைகளை நீட்டிக்கொண்டு நின்றன.  கொட்டகையில் இருந்து கிளம்பி ஒற்றையடிப் பாதையின் அருகே நின்றார்கள். பழனியாப்பிள்ளை சாமான்களை சரிபார்த்து விட்டு வந்தார். அவரைக் கண்டதும் அர்மோனியம் சங்கய்யா தன் கையிலிருந்த அரிகேன் விளக்கை அவரிடம் தந்தார்.

“நீங்க தான் முன்னால் வழிகாட்டிக்கொண்டு நடக்க வேண்டும்,” என்று சொல்லிவிட்டு தலைப்பாகையாக துண்டை கட்டிக்கொண்டார். அவருக்கு வியர்வை உடல் என்பதால் தலைபாரத்தால் தினமும் சிரமப்படுவார். இந்த ஒற்றையடிப்பாதையில் வரும் போதே அவருக்கு பதட்டத்தில் தலையிலிருந்து உடல் முழுவதும் தெப்பமாக நனைந்திருந்தது. 

பழனியாப்பிள்ளை அரிக்கேன் விளக்குடன் நடக்கத்தொடங்கியதும் அவர் பின்னால் எறுப்பு வரிசையைப்போல ஒருவர் பின் ஒருவராக சென்றார்கள். கடைசியாக கரையாளர் இடைவெளி விட்டு அவர்களை பின்தொடர்ந்தார்.  அவர் மனதில் நடந்து முடிந்த வள்ளித்திருமணம் மறுபடியும் நடந்து கொண்டிருந்தது. கிழமுருகனின் சேஷ்ட்டைகளை நினைத்து அவர் முகம் விளைந்த சோளக்கருதாக மலர்ந்து கொண்டிருந்தது. ஒருவர் தோளை ஒருவர் தொட்டுக்கொண்டு நடந்தார்கள். சண்முகம் அப்பாஜி ராவின் இடுப்பிற்கு மேல் இருந்த சட்டையை பிடித்து நடந்து கொண்டிருந்தான். திடீரென்று, “யாரய்யா பின்னால  வாரது,”என்று கடைசியாக வந்த ரங்கய்யாவின் குரல் அதட்டியது.

அப்பாஜீராவ் சண்முகத்தை தூக்கிக்கொண்டு,“பிரகலாதன் வீரன்….அழக்கூடாது…”என்றார். முன்னால் இருந்த விளக்கு பின்னால் கைமாற்றி வந்தது.

“யாரோ பின்னால வராப்ல இருந்தது,”

புஸ் என்று ஒரு சத்தம் கேட்டதும் அனைவரும் மூச்சுவிடாமல் நின்றார்கள்.

“அய்யா…பாம்பு போயிருக்கும்…நடங்க,” என்ற குரல் கேட்டு அனைவரும் பதறி அடித்து நிலைக்கு வந்தார்கள். புதர்களுக்குள் இருந்துதான் குரல் வந்தது. 

“யாரய்யா?” என்ற குரல் கணீரன்று கேட்டது. மிருதங்கம் துரைசாமி பிள்ளையின் குரல்அது. அரிகன் விளக்கை தூக்கிப்பிடித்திருந்தார். கரையாளரின் முகம் தெரிந்தது. வேல்கம்பை  தரையில் தட்டியபடி, “ நாடகம் பாக்க வந்தேன். சங்கரதாஸ சுவாமிகளை பார்க்கனும்,” என்றார்.

 “ராஜபார்ட்டில் நடிக்கலாம்..ஒசரம் ஆறடி இருப்பாரு.. மீசையை பாத்திங்களா..வரப்பு ஒதுக்கறாப்பல ஒதுக்கி வச்சிருக்காரு மனுசன்,” என்று ராமசாமி மெதுவாக சொல்லிக் கொண்டிருந்தான்.

“அவங்களை பாக்கனும்…சௌகரியமாய் பேசணும்,”

“சாமிங்களுக்கு ஒடம்பு சரியில்லே..நாடகத்துக்கு வரல. நாளைக்கு வெள்ளென முடிமன்னுக்கு வாங்க பாக்கலாம்,”

கரையாளர் பின்னால் நடந்தார்.

“பேயா இருக்குமோ,” என்று மறுபடி ராமசாமி தொடங்கினான்.

“வாய மூடிக்கொண்டு வாரும்,” என்று சங்கய்யா சொல்ல அனைவரும் அமைதியாக நடந்தார்கள். ராமசாமி அவர்களுக்கு சொல்லிய பேய்க்கதைகளில் பேய்  வெள்ளை நிற ஆடையுடன் தான் வரும். இப்போது பேசியவர் போல உயரமாக, நல்ல வேகமான குரலுடன் தான் பேசும் என்று நினைத்துக்கொண்ட சண்முகத்தின் முகம் பயத்தில் வெளிறியது.

“ஹனுமான் பாட்டு ஒன்னு யாராச்சும் பாடுங்களேன்..சண்முகம் ரொம்ப பயந்துட்டானே,”என்று அப்பாஜு சொல்லவும் சட்டென்று,

‘ராமசாமி தூதன் நானாடா

அடடா..ராவணா..ராமசாமி தூதன் நானடா..

அடடா..ராவணா..என் பேர் ஹனுமானடா…’ என்று சண்முகத்தின் மூத்தவன் சங்கரன் பாடத்தொடங்கினான். அனைவரும் தலையாட்டியபடி சொடக்குப்போட்டுக் கொண்டு உற்சாகமாக நடந்தார்கள்.

ஒருவழியாக முடிமன்னின் கம்பெனி வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் தான் பேய்க்கதைகளை வாய்விட்டு சொல்லத்தொடங்கினார்கள். சண்முகம் காலையில் எழுந்ததும் மீண்டும் பேய்க்கதைகள் காதில் விழுந்தன. ஆர்மோனியமும், மிருதங்கமும் படுகையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். சங்கய்யா திண்ணையில் படுத்துக்கொண்டே எதிர் திண்ணையில் படுத்திருந்த சாமிநாதனிடம் , “இந்த ஊர்ல பேய்த்தடை பிள்ளைகளுக்கு போடுவாங்களான்னு கேக்கனும்,”என்றார்.

“இங்க செத்துப்போன ராசால்லாம் பேயா அலையறதா சொன்னீரே..நேத்து நாம பார்த்த அந்த ரூபமும் ராசா கணக்கா ஆஜானுபாகுவா தானே இருந்துச்சு,”

“பேயில்லவே..மனுசர். அந்த வீட்டு திண்ணையில நேத்து பாத்தேன். இந்த ஊர்க்காரர்,”

சண்முகம் உள்ளே ஓடி அங்கனத்து பானையில் இருந்த நீரில் முகம் கழுவிக்கொண்டான்.  சுவாமிகளின் அறைக்கு வெளியே இருந்த சன்னல் பக்கமாக சென்று உள்ளே பார்த்தான். அவன் ஜோட்டு பெருமாள் ஓடிவந்து சேர்ந்து கொண்டான்.

“அவரே தான். கருத்த உயரமான ஆள்.  வெள்ளை மீசை,” 

“இப்ப பாக்கறதுக்கு நம்ம ஊரு பாட்டாருங்களாட்டமே இருக்காரு,”

சுவாமிகளின் கண்கள் சன்னல் பக்கமாக திரும்பியதும் இருவரும் அமைதியானார்கள். கரையாளர் திரும்பிப் பார்த்து புன்னகைத்தார். 

“அந்தப்பிள்ளை  சண்முகம்..நேத்து நாரதரா வேசம் கட்டினான்.. பெரியாளா வருவான்..ஆண்டவன் சித்தம்,” என்று சுவாமிகள் கைக்கூப்பினார்.

கரையாளர் குத்துக்கால் போட்டு சுவரில் சாய்ந்து கொண்டார். இரண்டு கால் முட்டிகளாலும் தாங்கப்பட்ட கை சிம்மாசனத்தில் நீண்டிருக்கும் கைப்பிடி போல இருந்தது. செம்மண் பழுப்பேறிய வெள்ளை தலைப்பாகை கட்டு. பக்கத்தில் சுவடி மூட்டை. புறாவை தடவுவதைப் போல அவரின் ஒரு கை இறங்கி அந்த மூட்டை மீது மெதுவாக அமர்ந்தது.

சுவாமிகள் பலகையில் அமர்ந்து நீண்ட தாடியை தடவிக்கொண்டிருந்தார். அவர் அருகில் நாடகப் பாடங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கரையாளரின் கண்கள் அந்த நாடகப்பாடங்களின் மீதே இருந்தது. 

“நேத்து நடுநிசிக்கு என்னையத் தேடி வந்தீராமே..என்னிட்ட உமக்கு அப்படி என்ன பேசனும்,”

“ரெண்டு நாளா உங்க கூட்டத்துக்கு பின்னாடியே தான் அலையறேன். உங்களைப் பத்தி கேள்விப்பட்டதிலருந்து மனசு கெடந்து பறக்குது..நீர் எனக்காக இல்லைன்னாலும் எம்ம பாட்டன் ஊமத்துரைக்காவ  இதை செய்யனும்.  உம்மத்தேடி வந்தது அந்த ஜக்கம்மாவோட விளையாட்டுதான்னு ரெண்டுநாளா மனசுக்குள்ள ஒயாம சோழி உருளுது,”

“வந்த கரியத்தை இன்னும் சொல்லலையேய்யா..” என்று சொல்லிவிட்டு வந்தவர் பேசட்டும் என்று சுவாமிகள் அமைதியாக இருந்தார்.

அப்பாஜிராவ் வந்தவருக்கு பித்தளை லோட்டாவில் மோர் தந்தார். அன்னாந்து ஒரே மூச்சில் குடித்துவிட்டு லோட்டாவை கீழே வைத்தார். சுவாமிகள் முகத்தில் புன்னகையுடன் கனிவாகப் பார்த்தார்.   

கரையாளர் திரும்பி தன் பக்கத்திலிருந்த மூட்டையை பிரித்தார். சுவாமிகள் நிமிர்ந்து அமர்ந்தார். பயல்கள்  எக்கிக்கொண்டு சன்னலை பிடித்துத் தொங்கியபடி பார்த்தார்கள். சண்முகம் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தான்.  

“ அந்த வேல்கம்பு தாத்தா பாவண்டா.. நாடகம் பாக்கறப்ப துண்டால கண்ணை தொடச்சுக்கிட்டே இருந்தாரு,” என்றபடி சண்முகம் பெருமாளின் தோளில் கைப்போட்டுக் கொண்டு அவர்கள் பேசுவதை உற்றுக்கேட்டான்.

“இது எங்க முப்பாட்டனுக்கு பாட்டன் ஊமைத்துரை ராசாவோட கதையை எழுதி வச்சிருக்கிற சுவடிங்க…ஜக்கம்மாக்கிட்ட வச்சு பாதுகாத்து கொண்டு வந்துட்டோம்..இனிமே உங்கப்பொறுப்பு…”

“யாரு எழுதுனாங்கன்னு தெரியுமாய்யா..”

“யாருன்னு தெரியலை..ஒருத்தரா..ஒன்னுக்கு மேப்பட்டவங்களான்னும் தெரியலை,”

சுவாமிகள் ஒருசுவடிக்கட்டை எடுத்துப் பிரித்தார்.

“நேத்து ராவு உம்ம நாடகம் பாத்தேன்..நீங்க எப்பவாச்சும் இதை நாடகமா எழுதனுன்னு கேட்டுக்கறேன்,” என்றபடி கைக்கூப்பினார்.

“எழுதறேன்..இப்ப ஒடம்புக்கு சுகமில்ல..பிற்பாடுதான் எழுதனும்,”

கரையாளர் எழுந்து கும்பிட்டார். அவரின் முழுஉடலும் குறுகி நின்றது.  சுவாமிகளும் எழுந்து கொண்டார்.

வெளியில் சுவரில் சாய்த்து வைத்திருந்த வேல்கம்பை கரையாளர் எடுத்துக்கொண்டார். சுவாமிகள் சுவடிக்கட்டுகளை முருகன் படத்திற்கு  கீழே வைத்துவிட்டு வீட்டின் பின்கட்டிற்கு சென்றார்.

சண்முகம் கரையாளர் பின்னாலேயே கொஞ்சதூரம் ஓடினான். கண்களுக்கு முன்னால் அடர்ந்த பச்சையில் செழித்து, வெள்ளை விண்மீன்களாய் பூத்திருந்த நுணாவை பார்த்தவர், “ஜக்கம்மா கானல்ல பூக்கறவ,” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு நடந்தார். பாதையில் இருந்து இறங்கி காய்ந்த சோளக்காட்டிற்குள் தனியே நடந்தார். வெயில் பொழிந்து கொண்டிருந்தது. அவர் உருவம் மறையத்தொடங்கி தலைப்பாகை மட்டும் கண்களுக்குத் தெரிந்தது. சண்முகம் வெகுநேரம் நுணாமரத்தில் சாய்ந்து கொண்டிருந்தான்.






Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்