இலக்கியத்திற்கான கடவுச்சீட்டு
நேற்று யூட்யூபில் எழுத்தாளர் சுந்தரராமசாமியின் ஆவணப்படம் பார்த்தேன். ஏற்கனவே இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் கி.ரா, சு.ரா, ஜெயகாந்தன் ஆவணப்படங்களை ஒரே நாளில் சேர்த்து பார்த்திருக்கிறேன்.
ஜெயகாந்தனின் சிரிப்பும் அந்த தலைப்பாகைக்கட்டும் மனதில் இருந்து அகலவே அகலாது. யோசித்தால் மூவரின் குரலும் சிரிப்பும் பேச்சும் இன்று வரை அவர்களை நினைக்கும் போதெல்லாம் மனதை சுற்றிக்கொண்டே இருக்கிறது. அன்றிலிருந்து வரிசையாக யூடியூபில் கிடைக்கும் எழுத்தாளர்களின் ஆவணப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். பார்க்கும் போது அவ்வப்போது இடைஇடையே மனஎழுச்சியினால் அம்மாவை கூப்பிட்டுக்கொண்டே இருப்பேன். அம்மாவுக்கு ஜெயகாந்தனை தெரியும். அவரைப்பிடிக்கும். அவரின் ஒன்றிரண்டு கதைகளை இளம்வயதில் வாசித்திருக்கிறார்.
சு.ராவிற்கு வார்த்து எடுத்ததைப் போன்ற குரல். ஆவணப்படத்தில் நேர்காணல் செய்யும் இளம் பெண்ணுடன் சு.ரா பேசும் இடம் அழகானது. அதே போல படம் துவங்கும் போது ஆற்றும் உரை.
சு.ராவை பள்ளி வயதில் முதலில் வாசித்தேன். 'உழவுமாடும் கோயில் காளையும்' சிறுகதை பாடப்பகுதியாக இருந்தது. அதற்கு முன்பே 'ஜன்னல்' கதை வாசித்திருந்தேன். ஜன்னல் கதையில் வரும் பையனை எனக்கு மிகவும் பிடிக்கும். அன்று அந்தப் பையனாக என்னை நான் நினைத்துக்கொள்வேன். மேல்நிலை வகுப்பு பாடப்பகுதியாகவே தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களின் கதைகளை முதலில் வாசித்திருப்பதை நினைத்துக்கொள்கிறேன்.
புதுமைப்பித்தனின் ஒரு நாள் கழிந்தது,கி.ராவின் கதவு,கு.அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார்,ஜெயகாந்தன்,சு.ரா,வண்ணதாசன்,வண்ணநிலவன்,சூடாமணி,தி. ஜா,நீல பத்மநாபன்,நாஞ்சில் நாடன் என்று மேல்நிலை வகுப்புகளிலும் பின் கல்லூரி முதலாமாண்டு தமிழ் தாளிலும் வரிசையாக சிறுகதை ஆசிரியர்கள் அறிமுகமாகிறார்கள்.
அந்த வயதில் ஒரு மொழியின் சிறந்த எழுத்தாளர்கள் அறிமுகமாவது மிக முக்கியம் என்று நினைக்கிறேன். நான் அங்கிருந்து அறிந்து கொண்டு, பின்நாளில் அவர்களின் புத்தகங்களை நூலக வரிசைகளில் தேடி எடுத்தேன். நூலகத்திற்கு சென்று நிற்கும்போது பள்ளியில் படித்த அந்த ஒரு கதை, அவர்களை நமக்கு நெருக்கமானவர்களாக ஆக்கிருப்பது பரவசத்தை அளிக்கும்.
நான் விடுமுறையில் அய்யாவுடன் ஊர் நூலகத்திற்கு செல்லும் போது 'இவரை எனக்குத்தெரியும்...இந்தக்கதை படிச்சிருக்கேன்' என்று உற்சாகமாக சொல்வேன். அய்யா தோளில்தட்டி 'அப்படீன்னா.. உனக்கு பிடிச்சதை எடுத்துப்படி,' என்பார். அந்த 'ஒரு கதைகள்' இலக்கியத்திற்கான கடவுச்சீட்டு.
குவிந்து கிடக்கும் நூல்களில் நமக்கான எழுத்தாளர்களை சட்டென்று அந்த வயதில் எடுக்கமுடிவதே பெரியபரவசம். அந்த அறிமுகத்திற்கு பிறகு நூலகம் நமக்கு வசப்பட்டு விடும்.
பதினொன்றிலிருந்து பதினெட்டிற்குள் சத்தியசோதனையும் அறிமுகமாகவேண்டிய புத்தகம். நம் சூழலில் எழுத்தாளர்களும் ,முக்கியமான புத்தகங்களும் பாடப்புத்தகத்தில் அறிமுகமாவது முக்கியம் என்று நினைக்கிறேன். ஒரு வகுப்பில் நாற்பது பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்கு வாசிக்கும் ஆர்வம் இருக்கக்கூடும். அவர்களுடைய சூழலில் எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகத்திற்கான சாத்தியம் குறைவு. இப்போதைக்கு உள்காட்டு கிராமம் வரை ஒவ்வொரு மாணவரிடமும் செல்லும் துணை பாடப்புத்தகத்தில் நம் சிறந்த எழுத்தாளர்கள் அறிமுகமாவது முக்கியம். காலம் மாறும் போது இது அவசியம் இல்லாமலும் ஆகலாம். [இப்போது துணைப்பாடம் தனியாக இல்லை. பாடப்புத்தகத்துடன் இணைந்து விட்டது]
அந்த வயதில் எழுத்தாளர் அறிமுகமாக வேண்டும். அது ஒரு பரவசம். அவர்கள் எப்போதும் நம் மனதில் நாயகர்களாக இருப்பார்கள். நமக்கான நாயகர்கள் எந்த வயதிலும் நமக்கு வேண்டும். பதின்வயதின் நாயகர்கள் நம்மீது வாழ்க்கை முழுதும் செல்வாக்கு செலுத்த முடியும். அப்படி நமக்கு அறிமுகமானவர்கள், நம் மனதில் நிலைப்பவர்கள் காலத்தால் மங்காதவர்களாக இருப்பது அவசியம். அதற்கு ஒரு மொழியின் சிறந்த எழுத்தாளர்கள்,சிந்தனையாளர்களை விட்டால் வேறு வழியில்லை.
நான் சென்ற சில தினங்களாக சற்று யோசனையாக இருந்தேன். உடல் புற சூழல்கள் பற்றிய ஓயாத சிந்தனையை விலக்கிக்கொண்டே இருந்தாலும் பாசி படிந்து கொண்டே இருந்தது. லா.ச.ரா,யுவன் என்று அந்த பாசியை அறுக்கும் எத்தனிப்பு.
ஆனால் சு.ராவின் ஆவணப்படம் மிக எளிதாக மனதை பரவசமாக்கிவிட்டது. இதே பரவசத்தை அந்த வயதில் அறிமுகமாகும் மற்ற எழுத்தாளர்களும் அளிப்பார்கள். ஜே.ஜே சில குறிப்புகளும், புளியமரத்தின் கதையையும், கோபல்ல கிராமத்தையும் துறையூர் புத்தக கண்காட்சியில் வாங்கும் போது அங்கிருந்த வயசாளி ஒருவர் 'இவங்கள முன்னமே தெரியுமா பாப்பா..இப்பதான் வாங்கறியா' என்று கேட்டார். நான் 'ஸ்கூல் புக்குல இவங்க கதை படிச்சிருக்கேன்.. முழுஆண்டு பரிச்சையில கூட கேள்வி வந்துச்சு' என்று பெருமிதமாக சொன்னேன். அவர் ஆசிரியராக இருக்கக்கூடும். தோளில் தட்டி 'படி... படி' என்று சிரித்தார். அம்மா அவரிடம் சிரித்தபடி நீங்க வேறங்கய்யா...என்று பேசத்தொடங்கினார். அன்று அவர் எனக்கு மேக்சிம் கார்க்கியின் தாய் புத்தகம் வாங்கிக் கொடுத்தார். யாரென்றே தெரியாத ஒருவரின் ப்ரியத்தை நினைத்தால் இன்றும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நம் நாயகர்களாக எழுத்தாளர்கள் இருப்பது வாழ்வில் ஒரு நல்ல வாய்ப்பு. அவர்களே காலத்தால் மங்காது மேலும் ஔிர்பவர்கள்.
இன்றைய காட்சிஊடக நாளில் ஆவணப்படங்களும் அத்தகைய கடவுசீட்டாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. நான் படிக்கும்போது பள்ளியில் மிருகங்கள் சார்ந்த [அனகோண்டா,ஜூராசிக் பார்க்] சினிமாக்களுக்கு அழைத்து செல்வார்கள். வரிசையாக ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி இரண்டிரண்டு பேராக மூன்றுஊர்கள் தாண்டி இருக்கும் சினிமாகொட்டகைக்கு நடந்து செல்ல வேண்டும். [மூன்று மைல் தொலைவு தான்] ஒன்றிரண்டு ஆசிரியர்களும் சைக்கிளை தள்ளிக்கொண்டு வருவார்கள். ஆண்டுக்கு இரு முறை.
இன்று பள்ளிகளிலேயே பிள்ளைகளுக்கு எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்களை காண்பிக்கலாம்.
சில மாதங்கள் கழித்து நேற்று இரவு பத்துமணிக்கு மேல் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று தோன்றியது.
Comments
Post a Comment