பனிநீர்,குளிர்,தண்மை,நளிர்,அளி என்று பல சொற்கள் நம்மிடம் உண்டு. எனக்கு தண்மை என்ற சொல் மீது ஈர்ப்பு உண்டு. அந்த சொல்லிலேயே அந்த உணர்வு தெரியும். குறைச்சல் கூடுதலில்லா ஒரு இதநிலை. அன்பு போல.
இங்கு அனைத்து பருவநிலைகளுமே கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். கோடை, குளிர், மழை,காற்றுகாலம் என்று அனைத்துமே.
கோடை மழைக்கான முதல் முழக்கமே எங்காவது பக்கத்தில் இடிவிழும் சத்தத்துடன் நம்மை அதிரவைத்தடி வரும். இந்த கோடைமழையும் எப்பொழுதும் போல இரண்டு நாட்களுக்கு முன் ஒரு வீட்டில் இடிவிழுந்தபடி வந்தது. சென்ற முறை ஒரு பனைமரத்தை எரிய வைத்தது.
இரண்டுநாட்களுக்கு முன் மழைப்பெய்யாமல் முழக்கமாக மட்டும் அமைதியாகிவிட்டது. அடுத்தநாள் காலையில் மாடியில் படிந்திருந்தன புழுதியில் நீர்சொட்டுகளின் தடங்கள். கண்ணன் தன் மழைக்கால்களுடன் சீராக நடந்து விளையாடியது போல தூரலின் காய்ந்த தடங்கள். மாடியின் சிவப்பு ஓட்டுத்தரை முழுவதும் ஏதோ ஒரு லிபியை தூரல்கள் எழுதி சென்றிருந்தன.
நேற்று இரவு அரைமணி நேரத்திற்கு மேல் மழை. ஒரு உழவு மழை. காய்ந்து கிடக்கும் மண்ணை கலப்பையால் மேலாக ஒரு கீறுகீறிப்போடலாம். ஆனால் பெரும்பாலும் இங்கு அப்படி ஒன்றும் நிலத்தை சும்மா போட்டு வைப்பதில்லை. ஆற்றுப்பாசனம் நின்று போனால் ஏரி, கிணறுகள்,ஆழ்குழாய் நீர் பாசனங்கள் என்று மாற்று வழியில் நீர் வளங்கள் உண்டு. ஆனால் விவசாயிகளின் தங்கள் பயிர் ஒருமுறையாவது 'மழைமுகம்' காண வேண்டும் என்று பயிர் நடவுக்கு பிறகு வானத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். அது குழந்தை தாய்முகம் காண்பது போன்ற ஒன்று.
வடக்கத்தி மழை. மழை வரும் முன்னரே நல்ல தண்மையான காற்று. படிகளில் காற்றை உணர்ந்தபடி நின்றேன். அமிர்தம் என்ற சொல் மனதில் சட்டென்று வந்தது. உடலே தித்திக்கும் ஒரு உணர்வு. நகரவே தோன்றவில்லை.
அம்மா , "என்னா மின்னலு உள்ள வர மாட்ட...மூத்த பிள்ளைங்க இடி மின்னலுல நிக்கவே கூடாது..." என்று கத்தினார். சிறுவயதிலிருந்தே கேட்பது. தலைச்சம்பிள்ளைகள் மேல் தான் இடி முதலில் விழுமாம். ஏமனுக்கு பிடிச்சதும் தலைச்சம் பிள்ளைகள் தான் என்பார்கள்.
மழை முடிந்த கொஞ்ச நேரத்தில் மறுபடி எப்போதும் போல புழுக்கம். மழை பெய்த சுவடே இல்லை.
காலையில் எழுந்ததும் வழக்கம் போல அறைக்குள் வெப்பம். மாடிக்கு சென்று நின்றால் கொல்லிமலை குளிப்பாட்டி தூங்க வைத்த குழந்தை போல மேகங்கள் சிகரங்களை மறைக்க அமைதி தவழ படுத்திருந்தது. இத்தனை நாட்களாக பார்க்கவே கொஞ்சம் மிரட்சியாக இருந்தது. செம்பு நிறத்தில் பார்க்கும் போதே வெப்பம் தெரியும்படி...தவம் செய்யும் விஸ்வாமித்திரரை போல. கோபத்துடன் ரங்கநாதர் படுத்திருப்பது போல,கோபம் கொண்ட கன்னி என்று ஒவ்வொரு நாளும் ஒன்று தோன்றும்.
'தங்கச்சி செல்லியாயி கோவத்துல இருக்கா... மாரியாயி வரனும் 'என்பார்கள். யாருக்கும் தணியாத அந்த கன்னி மாரிக்கு கனிவாள் என்பது நம்பிக்கை. செல்லியாயின் கோபமே கோடையாக மாறி நிற்கிறது. அக்கையும் தங்கையும். மழையும் வெயிலுமாக நிற்கும் ஒன்றின் இருமுகங்கள்.
காலையில் மாடியில் நல்ல தண்மை. இந்தத் தண்மையை அமிர்தமாக உணர வேண்டும் என்றால் செயற்கை குளிர் சாதனங்கள் இல்லாது இந்த நிலம் போல வெயிலில் தவமிருந்திருக்க வேண்டும். [ கொஞ்சம் நடைமுறை உணர்வு இல்லாமல் சொன்னாலும் உண்மை] இன்னும் ஒரு படி மேலே சென்று உயிர்சிலிர்ப்பை உணர வேண்டும் என்றால் ஒரு விவசாயியாக வெயிலின் கீழ் நாள் முழுதும் நிற்க வேண்டும். அதனால் தானோ என்னவோ மாரி அவர்களுக்கு தலையில் கைவைத்து அருளும் அன்னை, அவர்கள் தொட்டு சிலிர்க்க வைக்கும் செல்ல மகள். அவர்கள் கெஞ்சியும் கொஞ்சியும் கூத்தாடும் தேவி.
அக்கை முகம் கண்டாள் தங்கை. இனி இருவரும் மாறிமாறி விளையாடும் விளையாட்டில் இந்த நிலம் செழிக்கும்.
Comments
Post a Comment