[அண்மையில் நான் எழுதிய வெளிச்சம் என்ற சிறுகதை குறித்து நடந்த ஒரு உரையாடல்...எழுத்தாளர் அம்பை வெளிச்சம் கதை பற்றி தான் எழுதியதை என்னிடம் பகிர்ந்தார்..பகிர்ந்ததற்காக அவருக்கு என் நன்றியும் அன்பும்.]
கமலதேவி நான் 'வெளிச்சம்' கதை பற்றி இன்னொரு பதிவர் சுவரில் எழுதியிருப்பதை கேள்விபட்டிருப்பீர்கள். உங்கள் பார்வைக்காக இங்கு...
கமலதேவியின் கதைகள் பிடிக்கும். ஆனால் 'வெளிச்சம்' கதை எழுதியது அறமற்ற செயல். மறைந்துபோன ஒரு எழுத்தாளரைப் பற்றி எவ்வளவு அறிந்திருந்தாலும் அதை கதையாக்குவது சரியல்ல. அதுவும் அதை தன்னிலை கதையாக்குவதற்கு எவ்வித உரிமையும் இல்லை. சூடாமணியை நான் என் எம்.ஏ படிக்கும் காலத்திலிருந்து அவர் மறையும் வரை அறிவேன். அவரின் சகோதரர் சகோதரிகளுடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். யாரும் இப்போது இல்லை. ஆனால் அவர் வாழ்க்கையையோ கருத்துகளையோ கதையாக்க துணிந்ததில்லை. காரணம் அது அறம் இல்லை. அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் இதை படிக்கமாட்டார்கள் என்று தெரிந்திருப்பதால் இந்தக்கதை எழுதியிருந்தால் அது மிகப்பெரிய தவறு. கமலதேவி இதை செய்திருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. K.ரவிசங்கர் இதைப்பற்றி எழுதப்போகிறேன் என்பது இன்னும் வருத்தப்படுத்துகிறது.
நான்:
பகிர்ந்தது குறித்து நன்றிம்மா. சாகித்ய அகாதமி வெளியிடும் இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற நூல்வரிசையில் கே.பாரதி அவர்கள் எழுத்தாளர் சூடாமணி பற்றி எழுதிய நூலை அடிப்படையாக வைத்து வெளிச்சம் கதையை எழுதினேன். கதையில் வரும் ஆசிரியர்கள் பெயர்கள் உண்மை. மற்றபடி கதை நிகழ்வுகள் புனைவு. அந்த நூலில் சூடி என்று அவரை அழைப்பது பல இடங்களில் உள்ளது. மேலும் இது முற்றிலும் நேர்மறையான கதை. அறப்பிழை என்று சொல்லுமளவிற்கு எதுவும் இல்லை என்று நம்புகிறேன். அவருடைய குடும்பத்தார் வாசிக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் நான் இந்தக்கதையை எழுதவில்லை.
எழுத்தாளர் சூடாமணி எதோ ஒரு வகையில் என் மனதின் ஆழத்தில் விழுந்துவிட்டார். அதனால் தான் எழுதினேன். ஒரு வகையில் அவருக்கு செய்த மரியாதை என்றே நினைக்கிறேன். எழுத்தாளர்கள் மிகப்பெரிய ஆளுமைகள். அவர்கள் புனைவாவது இயல்பானது.
[எழுத்தாளர் சூடாமணியும் நானும். கொலாஜ் செய்த படம்.]
இதில் உங்களுக்கும், ரவிசங்கர் அவர்களுக்கும் மாற்று கருத்து இருந்தால் அதைப்பற்றி கண்டிப்பாக எழுதுங்கள். நீங்கள் பகிராவிட்டால் இந்த விவாதம் பற்றி எனக்கு தெரிந்திருக்காது. அதற்காக உங்களுக்கு அன்பு.
இன்னும் இந்த விவாதம் அரவிந்த் வடசேரி என்பவரின் கருத்துடன் தொடர்ந்தது. அதற்கு பதிலாக நான் கூறியது.
தொடர்ந்து இது போன்ற கதைகளை எழுதுவேனா என்று தெரியவில்லை. மனதை பாதிப்பவர் பற்றி மட்டுமே எழுதமுடியும் இல்லையா..
எழுத்தாளர் அம்பை:
இல்லை கமலதேவி. இது கட்டாயம் அறமற்ற செயல். நேர்மறையாக இருந்தாலும். இது அந்த மோனோ கிராஃபை வைத்து எழுதியது என்று புரிந்துவிட்டது. மனதை பாதிப்பவர் குறித்து கட்டுரை எழுதலாம். கதை எழுத You have no moral right. குடும்பத்தார் அவரை சூடி என்று அழைத்தது உண்மை தான். உண்மையை எழுதுவதால் அது சரியான செயலாகிவிடாது.
அப்படி என்றால் நீங்கள் எழுதியது சரிதான் என்று நீங்கள் கருதுகிறீர்கள். வருந்துகிறேன்.
நான்:
இதில் என்ன பிழை உள்ளது என்று கண்டிப்பாக யோசிக்கிறேன். அதுவரை உண்மை ஆளுமைகள் பற்றி கதை எழுதுவதை தற்காலிகமாக நிறுத்திவைக்கிறேன்.
♦♦♦
நான் எழுத்தாளர் சூடாமணி பற்றி கதை எழுதியது அறம்இல்லை என்று சொல்லப்படுவதால் மட்டுமே இதை தளத்தில் பதிவிடுகிறேன். நான் வேறெந்த எந்த சமூகஊடகங்களையும் பயன்படுத்துவதில்லை.
மற்றபடி எழுத்தாளர் சூடாமணி ஒரு மயிலிறகு போல என் மனதில் விழுந்தவர்.
கதை எழுதும் மனம் ஓடிவரும் நீர் போன்றது. அதற்கு முன்னால் எதிர்ப்படும் எதுவும் அந்த நீரை இன்னும் பெரிய நதியாக மாற்றும். அது எங்கோ எதையோ யாரையோ, எதுவாகவோ யாராகவோ மாற்றிக்கொள்ளும்.
எழுத்தாளர் சூடாமணியின் காலம் 1931 _2010 என்றாலும் கூட இந்தக்கதை வரலாற்று புனைவு என்ற வகைமையின் கீழ் வரும்.
[எழுத்தாளர் அம்பையிடம் உரையாடலை வலைதளத்தில் பதிவிடுவதாக சொல்லியபின்பே பதிவிடுகிறேன்]
இந்த பதிவிற்கான பதில் பதிவு
https://kamaladeviwrites.blogspot.com/2024/05/blog-post_4.html
Comments
Post a Comment