அம்பையின் படைப்புலகம் 3

 [ஆகஸ்ட் 2023 நீலி இதழில் வெளியான கட்டுரை]

காட்டில் ஒரு மான் சிறுகதை தொகுப்பை முன் வைத்து.

              

 நீரெல்லாம் கங்கை

 அவள் எந்தச் சேறும்,சகதியும்,பாசியும் சேர்க்காமல் ஓடிக்கொண்டே இருப்பவள். தொடக்கம்,முடிவு இல்லாதவள்

                                     _அம்பை

[பிரசுரிக்கப்படாத கைப்பரதி கதையில் இருந்து]

அம்பையின் காட்டில் ஒரு மான் என்ற சிறுகதைத் தொகுப்பு பரவலாக வலுவான பெண் கதாப்பாத்திரங்களை கொண்டுள்ளது. இந்தத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் அடுத்தடுத்த வாசிப்புகளிலும் வாசிப்புசுவை குறையாதவை. இதில் உள்ள சில கதைகளை வெவ்வேறு வயதுகளில் தொடர்ந்து வாசிக்கிறேன். பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர், அடவி, பிரசுரிக்கப்படாத கைப்பிரதி போன்ற கதைகள் முக்கியமானவை.


இந்தத்தொகுப்பில் அம்பையின் மொழி வசீகரமான ஒரு இறகைப்போல இயல்பாக பறக்கிறது. அம்பையின் ஆழ்உள்ளத்தை கட்டமைக்கும் புராண இதிகாச கதைகள் மற்றும் கதைமாந்தர்கள், மரபிசை, தமிழ் இலக்கிய பாடல்கள்,வடஇந்திய இசை போன்றவை கதைப்பின்னலில் இணைந்து கொள்கின்றன. அம்பை நம் மரபில் வேர்விட்டு எழுந்த கேள்விகளை உடைய இலக்கியவாதி என்பது இந்தத்தொகுப்பில் ஆழமாக வெளிப்படுகிறது.

பாரதியாரின் வரிகளைப் பாடும் பெண்கள் தொடர்ந்து கதைகளில் காணக் கிடைக்கிறார்கள். தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டுமின்பம், பட்டுக்கருநீலப்புடவையில் பதித்த நல்வைரம் என்று பெண்கதாப்பாத்திரங்களின் பேச்சின் நடுவே பாரதியின் வரிகளும்,திருமூலரின்  வரிகளும் இயல்பாக வருகின்றன. வள்ளித்திருமணம் நாடகத்தின் ஆயலோட்டும் வள்ளி வெள்ளை வெள்ளை கொக்குகளா என்று பாடுகிறாள். சுதந்திர போராட்டக்காலத்தின் நினைவும் இவரின் கதையில் உள்ளது.

இரவுகளில் பெண்கள் திருச்சதகம் திருப்புலம்பல் வரிகளை முணுமுணுப்பவர்களாக இருக்கிறார்கள். [பிரசுரிக்கப்படாத கைப்பிரதி] ‘உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்’ என்று ஒரு நடுவயதுப் பெண் பாடுவதின் துக்கம் அடிநாதமாக கதைகளில் ஓடுகிறது. ‘அவலக்கடலாய வெள்ளத்தே’ என்று பாடும் பெண் கோவிலுக்கு சென்று நிற்காதவளாக இருக்கிறாள். இந்திய உளவியல், சமூகக்கட்டமைப்பில் ஒரு பெண் தன் நடுவயதில் உற்றாரும்,ஊரும் வேண்டாம் என்று சொல்வதில் உள்ள திசைதிரும்பல் கவனத்திற்குரியது. பெண்ணுக்கு துறவில்லை என்று சொல்லக்கூடியவர்கள் நாம். மரபில் விடுதலைக்கான வழியாக பெண்ணுக்கு தாய்மை, ஆணுக்கு துறவு என்று சொல்லப்படுகிறது. ஆனால் அம்பையின் படைப்புலகில் ‘ப்ளாஸ்ட்டி டப்பாவில் பாராசக்தி முதலியோர்’ கதையில் வரக்கூடிய, அக்மார்க் லௌகீக தாயான குமுதாம்மாவுமே தன் பிள்ளை என்ற எல்லையை கடந்து சென்றே பேரன்னையாக வெளிப்படுகிறார். அம்பை கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்தக்கதைகளை எழுதியிருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. 

பிரசுரிக்கப்படாத கைப்பிரதி கதையில் வரும் பதின்வயது செந்தாமரையின் கனவுகள் குறிப்பிடத்தக்கவை. ஒரு நாள் ஒவையாராக இருப்பவள் மறுநாள் பாரதியாகிறாள். அடுத்தடுத்த நாட்களில்  நக்கீரர்,வீணை தனம்மாள்,அக்கமா தேவி, பேகம் அக்தர்,ஸில்வியா ப்ளாத், பாரி என்று வெவ்வேறுஆளுமைகளாக தன்னை மாற்றி கண்ணாடி முன் நின்று கனவு கண்பவள். தன் உடலில் அரும்பி எழும் சிறு முலைகளுக்கு அங்கவை, சங்கவை எனப்பெயரிடும் விளையாட்டுப்பெண்.  வயதடைவதை எதிர்கொள்ள அச்சப்படும் பதின் வயது பெண்களில் இருந்து மாறுபட்டவள். 

இவர் கதைகளின் பெண்கள் ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா என்று ஆண் பெண்ணிற்காக பாடக்கூடாதா?’ என்று கேட்பவர்கள். பெண் மட்டுமே துக்கநிவாரணியாக இருக்க வேண்டுமா? ஏன் பெண் துன்பத்திற்காக ஒரு யாழ் இசைக்கப்படவில்லை என்று கேட்பவர்கள். அம்பை மறுபடி மறுபடி பெண் ஒரு சகஉயிர்,தனி உயிர் என்று நம் சமூகப்பிரக்ஞையை தட்டிச்சொல்கிறார். விஷ்ணுவின் காலடியில் அமர்ந்திருப்பதை அன்றி அவளுக்கும் கனவுகள் உண்டே என்கிறார். காசியின் கங்கைக்கரையில் உள்ளத்தை உருக்கும் தும்ரிப்பாடல்களை பாடும் வயோதிக  பாடகிகளுடன்,பைராகிகளுடன்,சாவை நோக்கியிருக்கு வயதான  விதவைகளுடன் கங்கை இவர் கதைகளில் நகர்கிறாள். இந்த கங்கை தன் குழந்தைகளை ஆற்றில் பலி கொடுப்பவள் அல்ல. இவள் எமனை ஏய்ப்பவள்.



‘விஷ்ணுவின் காலடியில் அமர்ந்திருக்கும் திருமகள்’ அம்பையை தொந்தரவு செய்யும் முக்கியமான மரபுப்படிமம். அம்பைக்கு சகமனிதர்களிடமிருந்து தெய்வங்கள் வரை மாற்றில்லாமல் உன்சகி உனக்கானவள் மட்டுமா? அவள் உனக்கு வேலை செய்பவள் மட்டுமா? என்ற கேள்வியை கேட்கிறார்.  நவீனவாகனத்தை பற்றி பேசுவதென்றால் சிம்மவாகினியிலிருந்து, பிள்ளையாரின் சுண்டெலி, அன்னபட்சி, புஷ்பகவிமானம் வரை இயல்பாக செல்கிறார். அம்பையின் படைப்புமொழியானது இந்திய ஆழ்மனப்படிமங்களால் ஆன தனித்துவமான மொழி. 

 அம்பையின் கதைகளில் உள்ள பெண்களின் தந்தைகள் முக்கியமானவர்கள். பிரசுரிக்கப்படாத கைப்பிரதி  கதையின் நாயகியான திருமகளின் தந்தை ராமசாமி முக்கியமான கதாப்பாத்திரம். கணவனை இழந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் அவர் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பதாக சொல்லும் பிரச்சாரவாதிகளை ‘அது என்ன வாழ்க்கை கொடுப்பது’ என்று கேள்வி கேட்பவராக இருக்கிறார். 

சமையல் வேலைகளை, வீட்டுவேலைகளை இயல்பாக பகிர்ந்து கொள்ளும் ஆண் கதாப்பாத்திரங்கள் அம்பையின் கனவு. அம்பை சமையலை பற்றி எழுதும் பொழுதே அது எவ்வளவு நேரத்தை பெண்களுக்கு இல்லாமல் ஆக்குகிறது என்ற ஆதங்கம் தெரிகிறது. ஆண்கள் எவ்வளவு சாமார்த்தியமாக அதில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறார்கள் என்று காட்டிக்கொண்டே இருக்கிறார்.

அடவி என்ற கதையில் வரும் அப்பா தன் மகளின்  விருப்பத்திற்கு மதிப்பு கொடுப்பவராக இருக்கிறார். சென்ற கட்டுரையில் அம்பையின் கதைகளில் குழந்தைகள் நிறைந்திருக்கிறார்கள் என்று எழுதியிருந்தேன். அதே போலவே கதைகளில் அங்கங்கே தென்படும் பெண்களின்அப்பாக்கள் நிதானமானவர்களாக, தங்கள் பெண்களை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். தந்தைகள்  இவரின் மொத்த படைப்புலகையும் சமனமாக்குவதை தொடர்ந்து வாசிக்கும் போது உணரமுடிகிறது. உதாரணமாக பிரசுரிக்கப்படாத கைப்பிரதி கதையில் பதிப்பாளர் மற்றும் எழுத்தாளரான திருமகள், முத்துக்குமரன் என்ற கவிஞரை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். கவிஞர் போதைப்பழக்கங்கள் உடையவர். வழக்கமாக நம் சமூகத்தின் ஆண்மனநிலையின் பிம்பமாக இருக்கிறார். சொல்லாலும், செயல்களாலும் வன்முறை படிந்த அந்த கதாப்பாத்திரத்தை,அன்பும் மென்மையும் உள்ள திருமகளின் தந்தை கதாப்பாத்திரம் ஈடுசெய்கிறது. கதையின் உணர்வுநிலையை, பேசுபொருளை சமனமாக்குகிறது. நீயெல்லாம் ஒரு பொம்பளையா என்று ஒவ்வொரு முறையும் அந்தக்கதாப்பாத்திரம் கேட்கும் போதும் ,வாசிக்கும் நமக்கு நம் சமூகத்தின் ஆழ்மனநிலை என்ன என்பது தெளிவாகிறது. குழம்பை சூடு செய்யாததில் இருந்து, ஒரு பெண் தனியாக தனக்கு ஒரு டைப் ரைட்டர் வைத்துக் கொண்டு எழுதுவது வரை பெண்ணின்  தனித்துவமான எதையும் ஏற்கமுடியாத ஆண்மனநிலை அல்லது சமூகத்தின் மனநிலை கொண்ட கதாப்பாத்திரம் இது. இந்தக்கதாப்பாத்திரம் நம் சமூகத்தின் ஒட்டுமொத்த மனநிலையின் சாரம். 

மேலும் நமக்கு இன்னொரு சிக்கல் உண்டு. ஒரு பெண்ணிற்கு திருமணமாகிவிட்டால்  கணவனைத்தவிர யாரும் அவள் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ளக்கூடாது. பெற்ற தந்தையாக இருந்தாலும் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படை என்ன என்பதை அம்பை தன் கதைகளில் தொடர்ந்து விசாரிக்கிறார். யாரும் எந்த கேள்வியும் கேட்கவிடாது விலைக்கு வாங்கிய பசுவை கொட்டிலில் அடைக்கும்  உரிமையாளரின் மனோபாவத்தை எடுத்துக்காட்டுகிறார். இவரது படைப்புலகில்  ஒரு எல்லையில் சீதைக்கு ராவணன் கூட நண்பனாக, இசைகுருவாக மாறமுடிகிறது. ஆனால் கணவனான ராமனால் அது ஒருபோதும் முடிவதில்லை. அது ஏன்? என்பது அம்பையின் படைப்புலக கேள்விகளின் முக்கியமான சரடுகளில் ஒன் று.

அம்பை பெண்அரசியலை பேசியவர் என்ற பொதுவான பிம்பம் உண்டு. அதையும் மீறி அவர்கதைகளில் சமூக அரசியலின், பண்பாட்டு அரசியலின் அடர்ந்த நிறங்கள் உள்ளன. உதாரணமாக கடற்கரையில் ஒரு காவிப்பிள்ளையார், திக்கு போன்ற கதைகளை சொல்லலாம். ஒரு பெண் நடைப்பயிற்சி செய்யும் சாலையில் ஏற்படும் தடைகளை மையமாகக் கொண்ட கதையில் மதம் சார்ந்த அரசியலில் இருந்து சுற்றுபுறம் சார்ந்த அரசியல், பேச்சு உரிமை என்ற பொய் அரசியல் வரை அனைத்தையும் எழுதிவிட அம்பையால் முடிகிறது. அதே கதையில் பாபர் மசூதி இடிப்பு வருகிறது. வடகம் பிழியும் மாடியில் காக்கையை விரட்ட அமர்ந்திருக்கும் சிறுமிகளின் அம்மா ‘இந்தியாவில் குந்தி தின்னும் கொக்குகளா…’ என்ற வெள்ளைக்காரர்கள் பற்றிய பாடலை பாடிக்காட்டுகிறார். அவர்கள் பின்னாளில் உலகவங்கியையும், அனைத்துலக ஸ்தாபனங்களையும் நினைத்தும் இந்தப்பாடலை பாடலாம் என்கிறார்கள். இயல்பாக தன் படைப்புலகில் பெண்களின் அரசியல் பிரக்ஞையை கையாண்டுள்ளார். பெண் ஆணை பெயர் சொல்லி அழைப்பதால் ஏற்படும் ஈகோ நுணுக்கமாக அம்பையின் கதைகளில் வெளிப்படுகிறது. மறுபடியும் பிரசுரிக்க முடியாத கைப்பிரதி கதையை சொல்ல வேண்டியிருக்கிறது. அந்த கதைநாயகரான கவிஞர் மனைவியிடம் ‘பேர் வச்சி கூப்பிடாதேடி…மரியாதை இல்லாம..நீயெல்லாம் ஒரு பொம்ளையா’ என்கிறார். இந்தக்கதையில் அவர் நீயெல்லாம் ஒரு பொம்பளையா? என்று எதற்கெல்லாம் கேட்கிறார் என்று பட்டியலிடலாம். அந்தப்பட்டியல் ஒட்டுமொத்த சமூகமும் பெண்ணிற்கு வகுத்தளித்த பட்டியல். அந்தப்பட்டியலை நாம் இன்னும் விரித்தால் கிட்டத்தட்ட ஆணிற்கு கீழே,குடும்பத்திற்கு கீழே,பிள்ளைகளுக்கு கீழே அமர்ந்து ஒரு பெண் செய்ய வேண்டிய சேவகங்கள் அனைத்தும் வரும். நம்முடைய இந்த வாழ்க்கை முறையை அச்சாகக் கொண்டு அம்பையின் எழுத்துலகம் சுழல்கிறது.

பிளாஸ்ட்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர் என்ற கதை அம்பையின் கதைகளில் முக்கியமானது. தனி ஒரு சிறுகதை என்ற அளவிலேயே ஒரு கலைப்படைப்பு. அதில் வரும் அம்மா தனி ஒருத்தி இல்லை. படிக்கல்லை தட்டி ‘கிருஷ்ணா ரா…’ என்று அழைத்து அன்னமிட்டு உயிர்குலத்திற்கே அன்னையாகும் மானிடப்பெண். அவளுக்கு மனித குழந்தையிலிருந்து காக்கை, அணில் என்று அனைத்துமே கிருஷ்ணன் தான். தன் மகளில் இருந்து வெள்ளைக்கார பெண்,அணில்கள் வரை அனைத்து கர்பிணிகளும் அவளுக்கு மகள்களே. அண்டைவீட்டாரின் வலிகளுக்கு உதவ அவள் கரங்கள் நீண்டு கொண்டே இருக்கின்றன. எந்த எதிர்பார்ப்பும் அவளிடம் இல்லை. ‘திக்குத் தெரியாத காட்டில்’ பாடலை உருக்கமாக பாடக்கூடிய உள்ளுக்குள் தனிமை கூடிய அம்மா. தன் அருகில் இருப்பவர்களின் மீது அக்கறை கொண்ட மனுஷி. அடுத்தத் தலைமுறையின் விஷயங்களில் மூக்கை நுழைக்காது அவர்கள் சோர்ந்த நேரத்தில் கைக்கொடுப்பவள். அம்மா தனி மனுஷி இல்லை ஒரு ஸ்தாபனம் என்று மகள் ஒருமுறை சொல்வாள். குமுதாம்மா உணவின் மூலமும், சகமனிதன் மீது கொண்ட அக்கறை மூலமும் வாழ்வின் ருசியை மகளுக்கு உணர்த்துகிறார். அவள் வாழ்வின் வெறுமையை நீக்குகிறார். அன்பை துயரத்தின் பாதையாகவோ, மீட்பின் பாதையாகவோ ஆக்காமல், ஏமாற்றத்தின் வலியாகவோ காட்டாமல், வாழ்வின் ருசியாக மாற்றும் இந்தக்கதை மிக முக்கியமான கதை. இந்தக்கதை மேற்சொன்ன அத்தனை சாத்தியங்களும் கொண்ட கதை. ஒரு கதையில் படைப்பாளி எதைத் தன் தேடலாகக் கொள்கிறார் என்பதில் உள்ள ரகசியம் எப்போதும் பிடிபடாத ஒன்று.

அன்னங்களும் பட்சிகளும் நெய்யப்பட்ட ஒரு ரோஜா வண்ணப்புடவை என்ற கதை இந்திய பெண்குழந்தைகளை தத்தெடுக்கும் வெளிநாட்டுகாரர்கள் பற்றிய கதை. அவ்வாறு தத்தெடுக்கும் பெற்றோருக்கான ஒரு கூடல் விழா நடக்கிறது. அந்த பெற்றோரில் இந்திய பெண்ணான கீதாவும்  வருகிறாள். இத்தனை பெண்குழந்தைகள் அனாதையாக வீசி எறியப்படுகிறார்களா என்ற திடுக்கிடலை அந்த விழாவில் உணர்கிறாள். தன் கையை பற்றிக்கொள்ளும் ஒரு குழந்தைக்கு தன் தாய் பயன்படுத்திய பட்டுப்புடவையின் முந்தானையை துண்டாக்கி போர்த்திவிடுகிறாள். அந்த புடவையில் அப்பாவின் காதல், கூட்டுக்குடும்ப நெருக்கடிகள், அம்மாவின் மகிழ்ச்சி, துயரம், இசை, பிரிவு, பிடித்தப் பாடல்கள் என்று வாழ்நாள் நினைவுகள் படிந்திருக்கின்றன. குழந்தையை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு, அந்த முந்தானையை குழந்தைக்கு போர்த்துவதன் மூலம் அதனுடன் தன்னையும், பிறந்த மண்ணையும் பிணைக்கிறாள். இந்தக்கதையில் ‘சில விஷயங்கள் அவளுள் அமிழ்ந்து போயிருந்தன. அவை கையால் தொடக்கூடியவை அல்ல’ என்று கீதா நினைப்பாள். இவ்வாறு அம்பையின் கதைகளில் மனம் சார்ந்த விஷயங்கள் கவித்துவத்துடன் வெளிப்படுகின்றன. 

ஒட்டகசவாரி என்ற கதை பாலைவனத்திலிருந்து கடற்கரைக்கு கேளிக்கை பொருளாக வரும் ஒட்டத்தை மையமாகக் கொண்டது. அவை உடல் தளர்ந்த காலத்தில் தெருக்களில் அனாதையாக துரத்திவிடப்படுகின்றன.  திருநங்கைகளை வீட்டைவிட்டு வெளியேற்றி விடுவதையும் இணைத்து எழுதப்பட்ட கதை இது. இந்தக்கதை பயன்பாடு மட்டும் தான்  அனைத்தையும் தீர்மானிக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.  விலங்குகளை பிணைக்கும் மூக்குக் கயிறும் பெண்களின் மூக்கணிகளும் கதையில் படிமங்களாகின்றன. ஆண்மைய சமூகம் தன்னால் அடக்க முடியாத ஒன்றை பிணைத்து வைத்து, அடங்க மறுக்கும் ஒவ்வொரு முறையும் பிணையை இறுக்கிக் காயப்படுத்தி பணிய வைப்பதை அம்பை சொல்லிச்செல்கிறார். உதாரணமாக ஒரு கதையில் மூக்கணியாக சொல்லப்படுவது அடுத்தக்கதையில் உடையாகிறது. இன்னொரு கதையில் சடங்காகிறது. ஒரு நாணயத்தின் இருபக்கத்தில் ஒன்றிற்கு இத்தனை ஔியும், மறுபக்கத்திற்கு இத்தனை இருளும் ஏன் என்ற கேள்விகளால் ஆனது அம்பையின் படைப்புலகம்.

ஒருவர் மற்றொருவர் என்ற கதை ஹிப்பி வாழ்க்கை முறையின் சாயல் கொண்டது. ஓவியக்கலைஞர் ஒருவரின் வாழ்வையும், அமைதியான இறப்பையும் அவரின் சகாவின் நட்பை சொல்லும் கதை. கலைஞர்களில் வித்தியாசமான வாழ்க்கை முறையை,அவர்களின் மனப்போக்கை மையமாகக் கொண்ட கதை. 

அம்பையின் கதைகளில் சமையல், தேநீரின் வித்தியாசமான மணங்கள், வெவ்வேறு பிரதேசங்களின் உணவுபண்டங்கள் பற்றிய தெளிவாக விவரணைகள் எப்போதும் உண்டு. அது கதைக்கு ஒரு  நம்பகத்தன்மையை இயல்புத்தன்மையை அளிக்கிறது. மேலும் புடவைகளின் வண்ணங்கள், வேலைப்பாடுகள் பற்றிய நுணுக்கமான குறிப்புகள் இசை நுணுக்கங்கள் அளவுக்கே சொல்லப்படுகின்றன. அம்பை கதைகளில் இசைபற்றிய குறிப்பில்லாத கதைகள் அனேகமாக இல்லை. ராகங்களின் பெயர்கள், ஸ்ருதி, பாடல் வரிகள் என்று விவரணைகள் கதைகளில் உண்டு. இந்த சிறப்பம்சங்களே அம்பையின் கதைமொழியை தனித்துவமாக்குகின்றன.  நீண்ட கதைகளாக இருப்பது அவரின் எழுத்துக்கு சாதகமாக அம்சம் என்று சொல்லலாம். இந்த அம்சம் நம்மை கதைக்குள் ஒன்றச்செய்கிறது. 

அடவி என்ற கதை நாற்பது வயதிற்கு மேலான பெண்ணின் அலைகழிப்புகளை மையமாகக் கொண்டது. அதில் தன்னுடைய ராமாயணத்தையும் அம்பை இணைக்கிறார். அதில் ராவணர் மத்திம வயது சீதையின்  நண்பனாவது அழகிய கற்பனை. மீண்டும் மீண்டும் காட்டிற்கு அனுப்பட்டு சோதிக்கப்படும் சீதை நம் ஆழ்மனப்படிமம். இந்தக் கதையின் நாயகியான செந்திரு தன் கணவனுடன் வியாபாரத்தை பெருக்குவதற்கு அவனை விட அதிகமாக உழைக்கிறாள். ஆனால் முதலாளி ஸ்தானத்தில் சமபங்கு அளிக்கப்படுவதில்லை என்பதால் மனம் கசந்து காட்டிற்கு பயணப்படுகிறாள். அவள் ராமாயணத்தை தன் போக்கில் எழுதிப்பார்க்கிறாள். அனைவருக்கும் காடு தேவைதான். மனதிற்குள்ளாவது ஒரு தனித்த காடு.

பெண்ணிற்கு ஆண் நண்பனாக இருக்கலாம் என்பதை இன்னமும் கூட சரியாக உள்வாங்கிக் கொள்ளாத ஒரு சமூகத்தின் படைப்பாளி அம்பை. இதிகாச ராவணனிலிருந்து, நேற்றைய ரிபோர்ட்டர் பெண்ணின் நண்பன் வரையான கதாப்பாத்திரங்களை அம்பை தன் கதைகளில் நண்பனாக கையாள்கிறார். ஆண் பெண் நட்பை வலுவாக முன் வைக்கும் படைப்பாளி அம்பை. ஆண் பெண் உறவை விஸ்தீரப்படுத்தியவர் என்றும் சொல்லலாம். அப்பாவுக்குப் பிள்ளை, கணவனுக்கு மனைவி, பிள்ளைக்குத்தாய் என்பதைக் கடந்து பெண்ணை தோழியாக மாற்றியவர். பாலியல் உறவோ,உறவுகளின் உரிமையாடலோ இல்லாத ஒரு நிலை. இந்த நட்பும் இவர் கதைகளின் ஆதாரத்தை சமனப்படுத்துவதில் பங்கெடுக்கிறது. திக்கு என்ற கதையில் விஷ்ணு உறங்கும் நேரத்தில் ஆதிஷேசன் உனக்கு என்னாச்சு லஷ்மி? என்று அவளின் வாடிய முகத்தை பார்த்துக் கேட்கிறான். விஷ்ணு எடுக்கும் அவதாரங்களில் எல்லாம் அவனுடைய வால் போல இருக்கிறேன். இவன் காலடியில் கிடந்து எனக்கு என்ன சுகம் ஆதி?  ஒரு தனிப்படுக்கையாவது உண்டா என்று ஆதங்கப்படுகிறாள். உடனே ஆதி ஒரு தனி பாம்புப்படுக்கையை உருவாக்கித்தருகிறான். அதில் உடலை ஒடுக்காமல் தாராளமாக படுத்து உறங்குகிறாள். பெண்தெய்வத்தின் ஆதங்கங்களைக்கூட நண்பன் தான் புரிந்து கொள்கிறான். ஆண் பெண் நட்பு அம்பையின் அனைத்துத் தொகுப்புகளிலும்  உள்ளன. முன்பு தந்தையை சொல்லியதைப் போலவே அம்பையின் படைப்புலகை நிகர் செய்து ஒருபக்கமாக சரியவிடாது ஆண் நண்பர்கள் சமனப்படுத்துகிறார்கள்.

ஆரம்பகாலக்கவிதை என்ற கதையில் பதின்வயது பெண்ணின் துறவு பற்றிய கனவுகள் கதையாக்கப்பட்டுள்ளது. இறைவன் பற்றிய கவிதைகளை எழுதிப்பார்க்கிறாள். ஒரு நாள் அவள் கண்முன்பு எளிய பெண்ணை கணவன் அடித்து துன்புறுத்துவதை காணும் போது அதை தடுக்க இயலாத தெய்வ நம்பிக்கை அவளை விட்டு விலகுகிறது. பின் அவள் கவிதைகள் எழுதுவதில்லை. ஒரு இளம் பெண்ணின் லட்சியம் சார்ந்த அலைமோதல்களை கருவாகக் கொண்டக் கதை என்ற அளவில் தனித்தன்மை வாய்ந்த கதை.

கடற்கரையில் ஒரு காவிப்பிள்ளையார் என்ற கதையில் கடற்கரையின் அழகிற்கு இணையாக, கடலில் ராட்சச பிள்ளையாரை கரைக்கும் வழிபாட்டு முறை வருகிறது. நம் வழிபாடுகளுக்குள் ஆடம்பரங்கள் நுழையும் தருணங்களையும் அதனால் சிற்றுயிர்களுக்கு ஏற்படும் ஆதாரமான சிக்கல்களையும் மையமாகக் கொண்டக்கதை. இந்த கம்பியெல்லாம் மீனை புண்ணாக்காதா என்று ஒரு சிறுமி கேட்பாள். இது போன்ற சிலகதைகளை அம்பைக்குள் இருக்கும் சிறுமி எழுதியிருக்கக்கூடும்.

ஒரு எலி ஒரு குருவி என்ற கதையில் நகரத்து வீடும் வாழ்க்கையும் மானுடரை எந்த அளவிற்கு சிறுத்துப்போகச் செய்கிறது என்று எழுதியிருக்கிறார். எலி பொந்து, குருவிக்கூட்டை போன்ற ஒரு வீடும் இளம் தம்பதிகளும் கதையில் வருகிறார்கள். வலை தேவைப்படும் எலியும், மரக்கிளை தேவைப்படும் குருவியும் போல அவர்கள் அந்த நகரத்தின் நெருக்கத்தில் கசங்குகிறார்கள். இந்தத்தொகுப்பை வாசித்து முடித்ததும் இந்தக்கதையும் அடவிக்கதையும் இணைந்து கொண்டது. ஒரு காடே தேவைப்படும் மனிதனுக்கு நகரம் எத்தனை பெரிய நெருக்கடி.

இந்தத்தொகுப்பின் சிறப்பம்சம் ஆளுமைமிக்க பெண்கள். காவிய நாயகியான சீதையில் இருந்து, எழுத்தாளரான திரு, வணிகம் செய்யும் பெண்ணான செந்திரு, பேரன்னையின் வடிவமான குமுதாம்மா,பதின்வயது செந்தாமரை வரை அனைவரும் ஆளுமை மிக்கவர்களாக இருக்கிறார்கள். அவரவர் இருக்கும் இடத்திற்கும் காலத்திற்கும்  ஏற்ப தன் ஆளுமை திறனுடன்  கதாப்பாத்திரங்களை இந்தத்தொகுப்பில் அம்பை கையாண்டிருக்கிறார். எந்த நீரும் கங்கை என்பதைப்போல எந்தப் பதவியில்,எந்த  நிலையில் இருந்தாலும் இந்தப்பெண்கள் தங்களுக்குரிய தனித்த ஆளுமையுடன் இந்தக்கதைகளில் வலம் வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய பலகீனங்களை, பதட்டங்களை, சிக்கல்களை உடையவர்களாகவும் இருக்கிறார்கள். அவற்றை கடந்து அவர்கள் நிற்கும் இடம் முக்கியமானது என்று நினைக்கிறேன். மீண்டும் மீண்டும் கதைகளில் இழையோடும் அம்பையின் மானுடத்தின் மீதான கரிசனமே கடைசியில் மனதில் ஒட்டி நிற்கிறது என்பதை இன்னொரு முறை பதிவு செய்கிறேன். அந்த ஆதாரமான அன்பிலிருந்து கிளைத்த படைப்பாளி அம்பை. அது சமூகத்தால் நசுக்கப்படுபவர்களின் பக்கம் நின்று பேசுவதால் தீவிரம் கொள்கிறது. அந்தத்தீவிரம் ஒரு உன்னதமான நிலையே தவிர பிரச்சாரம் அல்ல.

அந்தத்தீவிரம் மக்களிடையே மாரியம்மனுக்கும் கன்னிகா பரமேச்வரிக்கும் உள்ள ஏற்றத்தாழ்வை கண்டு புன்னகைக்கிறது. ஆணிற்கும் பெண்ணிற்கும் உள்ள ஏற்றதாழ்வை கேள்வி கேட்கிறது. குழந்தைகளின் மனநிலைகளின் மீது அக்கறை கொள்கிறது. விலங்குகள் மீது அதீத ப்ரியம் கொள்கிறது. ஐந்தறிவு ஜீவிகளுக்கும் ஆறறிவு ஜீவிகளுக்கும் உயிரில், வலியில் வேற்றுமை இல்லை என்று சீறுகிறது. அனைத்தையும் மானுட பயன்பாட்டுக்கு கொண்டு வந்து கீழிறக்குவதை அருவருக்கிறது. அல்லது இதெல்லாம் இயல்பு என்று நினைப்பவர்களிடம் இது இயல்பல்ல என்று உணர்த்த முற்படுகிறது.   

அதற்காக அம்பையின் கதைகள் வாசிப்பின்பம் குறைந்தவை அல்ல. அந்த கதைக்களங்களுக்குள் கதைமொழிக்குள் செல்வதற்கு வாசகருக்கு முன் தடை எதுவும் இருக்கலாகாது. முன்முடிவுகள் இல்லாத வாசகர் உள்நுழையக்கூடிய காடு போன்றது அவரது புனைவுலகம். அங்கங்கே தென்படும் சில எளிய கதைகள் அவரின் மொத்த படைப்புலகின் பலகீனமாகாது. சிறந்த படைப்பாளிகள் அவ்வப்போது எளிய கதைகளையும் எழுதவே செய்கிறார்கள். 

அடவி என்ற கதையில் சூஃபி ஒருவருக்கும், கதை நாயகியான செந்திருக்கும் நடக்கும் உரையாடல்.

சுஃபி:

“எல்லாமே சுருதி தான் இல்லயா…இங்கு எல்லாருமே அஸுர் தான். சுருதி சேர வேண்டும். அனைவருமே சுருதியை பிடிக்க ஓடுபவர்கள்” 

செந்திரு:

“அவ்வளவு சிரமமா சுருதி கூடுவதில்?” 

சூஃபி:

“அது பிடித்துப்போடும் விஷயம் இல்லையே? அலை அது.  அடக்கி அதன் மேல் படகு ஓட்டும் போது கவிழ்த்து விடும். பெரிய அலையாய் எழும். பின் நுரையாய் போய்விடும். ஒரு சமயம் சேரும். பின் குழையும்…”

என்று இருவருக்கும்  உரையாடல் நீளும். அம்பை  ‘சுருதி கூடுதல்’ என்பதை பலக்கதைகளில் பலவிதங்களில் கையாண்டிருக்கிறார். ஆண் பெண் உறவிலிருந்து இயற்கை வரை. 

இறுதியாக அடவிக்கதையில் சீதை ராவணனிடம்,

‘ பல கைகள் பந்தாடிய வாழ்க்கை. நானாகவே கையில் எடுத்துக்கொள்கிறேன்’ என்கிறாள். அம்பை கதைகளின் கனவும் அதுவே.







Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்