முதல் குயிலோசை


 எப்பொழுதும் கோடை முடியும் தருணத்தில் ஜூன் மாதத்துவக்கத்தில் குயிலின் முதல் குரல் கேட்கும். ஒரு வாரமாக தினமும் மதிய நேரத்தில் மழை துவங்கி பெய்வதும் நிற்பதுமாக இருக்கிறது. திடீரென்று நல்ல மழை. பின் தூரல். வெயில் இல்லாத புழுக்கம்.

இன்று காலையில் சமையலறையில் இருக்கும் போது கூகூகூ என்று இந்த ஆண்டின் முதல் குயில் குரல். ஒரே ஒரு கூவல் தான். பின்பு கேட்கவில்லை. வீட்டின் மேற்கு புறம் பின்வாசலின் பக்கவாட்டில் பெரிய காலிஇடம் உண்டு. முருங்கை ,தென்னை, பெரிய நுணா மரம், செடிவகைகள் வளர்ந்த இடம். அங்கு குயில்களை பார்க்கமுடியும். 

குயில் குரலை கேட்தும் முதலில் 'ஐ' என்று ஒரு குதூகலம். அது ஒரு வெயிலின் குரல் என்று என் மனதில் பதிந்துவிட்டது. ஒரு ஆண்டு என்பது ஒவ்வொருவருக்கும் அவரவர் மனம்படி பலமுறை தொடங்கும். சிலருக்கு அவர்களின் பிறந்தநாள். சிலருக்கு வேலை கிடைத்தநாள். பலருக்கு திருமண நாள் என்று பலவிதங்களில் மீண்டும் மீண்டும் நம்மை புதிதாய் துவக்கிக்கொள்ள முயல்கிறோம். 

எப்போதும் ஓடக்கூடிய வண்டி என்றாலும் காற்று குறைவது போல...டயர் மாற்றுவது போல...ரயில் தண்டவாளங்களை பழுது பார்ப்பது போல ஒன்று. அவரவர் மனநிலைக்கு ஏற்ப.

எனக்குள் எப்போதும் உள்ள சிறுமிக்கு ஜூன் மாதம் ஒரு தொடக்கம். அதில் இந்த குயிலின் குரலுக்கு முக்கிய பங்குண்டு.  பள்ளி முடித்து பல ஆண்டுகள் ஆனாலும் எனக்கு ஜூன் மாதம் என்றால் ஒரு திருப்பம். வாழ்வில் பெரிதாக எதுவும் நடக்க வேண்டும் என்றில்லை.

இப்போதும் ஒன்றுமில்லை. என்றாலும்... குயிலின் முதல் குரல் சட்டென்று ஒரு மகிழ்ச்சியை தருகிறது. அது வெறுமையின் குரல் அல்லது தாபத்தின் குரல். அது நாம் நினைக்கும் அன்றாட தளத்தின் தாபம் அல்ல.

பூஜ்ஜியத்தில் எதை சேர்த்தாலும் மதிப்பு என்பதை போன்ற ஒன்று. செயலுக்கு நம்மை அழைப்பது. ஒரு மழை பெய்து கடும் கோடை மாறி நிலம் துளிர்ப்பதை போன்றது. 

ஒரு வட்டத்தின் முடிவும் துவக்கமும் ஒன்று என்பது போல. கோடை அதன் முழு தீவிர அர்த்தத்தில் இருந்து இந்த ஆண்டு விடைபெற்றுவிட்டது. 

 ஒவ்வொரு பருவமும் மாறும் தருணம் அழகானது. எத்தனை இழப்புகளுக்குப் பிறகும் கவிஞன் சொல் நம்முடன் இருக்கிறது. பாரதி சொல்வது போல எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா...










Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்