Skip to main content

அதே பாடலாசிரியர்

 விஷ்ணுபுரம் விழாவில் ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது 'கல்லூரி முதலாமாண்டில் நூலகத்தில் பாடலாசிரியர் வைரமுத்து புத்தகங்கள் இருந்த முழு அடுக்கையும் வாசித்தேன் ' என்றேன். அந்த பதிலை சொல்லும் போதே அந்த இலக்கிய அவையில் அந்த பகிர்தல் என்னை கீழிறக்கும் என்று தெரியும். ஆனாலும் உண்மை அது தான். 

ஒரு மலையடிவார கிராமத்திலிருந்து கல்லூரி சென்ற நான் கல்லூரியின் முதல் நாள் நூலகத்தை தேடி கண்டுபிடித்து சென்றேன். இன்றும் மனதில் உள்ள பரவசமான சாயங்காலம் அது. தமிழ் புத்தக அடுக்கில் வரிசையாக வைரமுத்து புத்தகங்கள் தான் இருந்தன. அப்போது கல்லூரியில் தமிழ் துறை இல்லை. கல்லூரி தொடங்கி  ஐந்தாண்டுகள் இருக்கலாம். 

நான் புத்தக அடுக்கின் முன் சென்று நின்ற போது நம் இலக்கிய முன்னோடிகளின் புத்தகங்கள் இல்லை. முதுகலை படிக்கும் போது தான் நவீன இலக்கிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் நூலகத்தில் கிடைத்தன. 

 ஏற்கனவே வலுவான இலக்கிய பின்புலம் உள்ளவர்கள் நல்ஊழ் கொண்டவர்கள். வீட்டில் சிறார்நூல்களிலிருந்து கல்கி வரை வாசிப்பு அறிமுகமிருந்த நான் பாரதியார் கவிதைகள் நூலை மட்டும் பெட்டியில் எடுத்துக்கொண்டு விடுதிக்கு சென்ற போது நூலகம் மட்டுமே வாசிப்பதற்கான வாய்ப்பாக இருந்தது. 

நல்ல வேளை உயர்நிலை பள்ளியில் புதுமைப்பித்தன், சூடாமணி, சுந்தர ராமசாமி, கி. ரா ,கு. அழகிரிசாமி, அசோகமித்திரன், நாஞ்சில்நாடன், வண்ணதாசன் , வண்ணநிலவன் என்று வரிசையாக இருபது இலக்கிய முன்னோடிகளின் கதைகள் ஒவ்வொன்று அறிமுகமாகி இருந்தன. இந்தியா டுடே வழியே சில இலக்கியவாதிகளின் கதைகள்  அறிமுகம் இருந்தது. ஆனால் புத்தகங்களுக்கு நூலகத்தை நம்பியிருந்தேன். 


சாகித்திய அகாதமி, ஞானபீடம் போன்ற இலக்கியவிருதுகள்  சரியான படைப்பாளிக்கு அளிக்கப்பட வேண்டியது மிக முக்கியம். அவர்களின் அனைத்து புத்தகங்களும் நூலகங்களில் இடம்பெறும். புதிதாக வாசிக்க வருபவர்களின் கைகளுக்கு சட்டென்று கிடைக்கும். 

இங்கிருந்து தானே தொடங்குகிறது... வாசிப்பும்.. சிந்தனையும்... மொழியின் மீதான மையலும்.

ஞானபீட விருது பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு அளிக்கப்படுவது சரியில்லை என்று ஏன் சொல்கிறோம் என்று படித்தவர்களுக்கே புரியவில்லை.

காரணம் என்ன... 

இலக்கியம் என்ற தொடர்ச்சியான செயல்பாட்டில் அடிப்படையான அறிமுகமில்லை. 

அப்படியே அறிமுகமிருந்தாலும் வணிக இலக்கியம் வரை தான் தெரிகிறது. 

என் கல்லூரி காலத்தை விட இன்றைக்கு  தொழில் நுட்பம், வாய்ப்புகள், ஊடகங்கள் பெருகிவிட்டன. 

ஆனாலும் என்ன... அதே பாடலாசிரியர் வைரமுத்து தான் விரல்தொடும் இடத்தில்  இருக்கிறார். 

இந்த வலைப்பூவில் நம் முன்னோடிகளின் படைப்புகள் மற்றும் சமகால படைப்புகள் பற்றி கட்டுரைகள் எழுதியுள்ளேன் . அந்தத் தகுதியில் ஒரு தமிழ் இலக்கிய வாசகியாக ,எழுத்தாளராக இதை சொல்கிறேன். பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு ஞானபீட விருது அளிக்கப்படுவது தமிழின் இலக்கிய தகுதியை மிகக்குறைத்து மதிப்பிடும் செயல். 




Comments

Popular posts from this blog

டமருகத்தின் தாளமானவள்

 திரியை மட்டும் திரும்பத்திரும்ப மாற்றி..  ஒவ்வொரு முறையும் எரியும் சுடர் ஒன்றே தானா.. ?  வேறு.. வேறா..                             _  சம்யுக்தா மாயா நம் கவிதை மரபில் காதலுக்கும் பக்திக்கும் இடையில் ஈசலின் சிறகு போன்ற மெல்லிய தடுப்பே உள்ளது. அது இருபக்கமும் ஊடுருவும் சவ்வு. பக்தி அதிகமானால் காதல். காதல் அதிகமானால் பக்தி. இந்த மாற்றம் புதிரானது.  அதே போல நாயகன் நாயகி ஃபாவம். அரங்கனை நோக்கி பாடப்பட்ட பாடல்களில்  நாயகி ஃபாவம் மேலோங்கி உள்ளது. ஈசனுக்கு பித்தா..பிறைசூடா என்று சக்ய ஃபாவம் இயல்பாக வருகிறது.  ஈசனை காதலனாக ஃபாவிப்பது என்பது முன்னால் நின்று அவனை பாடுவது அல்ல. அவன் பாதியாகவே ஆவது. ருத்ரனின் பகுதி என்பது அத்தனை எளிதல்ல என்பதாலோ என்னவோ பெண்களில் திலகவதி மட்டுமே பாடியிருக்கிறார்.  காரைக்காலம்மையால் அவனை விளையாட்டு பிள்ளையாக்கி ஆட வைக்க முடிகிறது. ( பொதுவாகவே ஈசன் மீது பாடப்பட்ட பாடல்களில் நாயக நாயகி ஃபாவம் குறைவு)  பெண்கவிகளில் ருத்ரனுக்கு இணையான காளியை சம்யுக்தாவின...

லில்லி மலர் பூக்கும் நிலம்

  ( முனைவர் யோ . ஞான சந்திர ஜாண்சன் அவர்களின் கிறித்தவக்காப்பியங்கள் நூலை   முன் வைத்து … ) காப்பியம் என்பதும் காவியம் என்பதும் ஒரே பொருள்படுபவை . வடமொழியில் காவியம் . தமிழில் காப்பியம் . தமிழில்   1. ஐம்பெருங்காப்பியங்கள் 2. ஐஞ்சிறுகாப்பியங்கள் 3 . சமயகாப்பியங்கள் என்ற வகைமைகள் உள்ளன . சமய காப்பியங்களுள் கிருத்துவ காப்பியங்கள் வருகின்றன . சைவ வைணவ காப்பியங்கள் பக்தி காலகட்டத்தை சேர்ந்தவை . இதன் காலம் தோராயமாக பத்தாம் நூற்றாண்டிலிருந்து பனிரெண்டாம் நூற்றாண்டு வரை.  கிருத்தவக்காப்பியங்களின் காலம் கிருத்தவர்கள் நம் நாட்டிற்குள் வந்த காலகட்டத்தில் துவங்குகிறது . இந்தியாவில் முதன்முதலாக அச்சான மொழி தமிழ் . இயேசு சபை துறவியான ஆன்ட்ரிக் அடிகளார் கோவாவில் தமிழில் உலோக அச்சுகள் உருவாக்கி பயன்படுத்தி தமிழ் அச்சு வரலாற்றை தொடங்கி வைக்கிறார் . 1570 களில் இந்த தொடக்கம் நிகழ்ந்து விட்டது . கொல்லத்தில் முதல் நூலான தம்பிரான் வணக்கம் அச்சடிக்கப்படுகிறது . தமிழில் அச்சு நூலாக வந்த முதல் நூல் ஒரு மொழி ...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...