கவிஞர் பிரான்சிஸ் கிருபா 16.11.21 அன்று மாலை இயற்கை எய்தினார்.
பிரான்ஸிஸ் கிருபாவின் கவிதைகள் கண்முன் பெய்யும் மழைபோல அப்பட்டமானவை. அதற்கு எந்த வடிகட்டுதலும் இல்லை. அவை மிகையான உணர்வுகளை கொண்ட கவிதைகள் என்று சொல்லப்படலாம். என்றாலும் அவை அந்தத் தன்மையாலேயே அழகு கொள்கின்றன.
"கணங்கள்தோறும்
என்னை நானே
தண்டித்துக்கொண்டிருக்கும்போது….ஏன்
நீயேனும் கொஞ்சம்
என்னை மன்னிக்கக்கூடாது"
"நடைபோடும் வழிகள்
கடைகள் வரை நினைக்கின்றன
பிள்ளைகள் பற்றிக்கொள்ள
ஒருவிரல் போதுமென்று
ஒற்றை விரலுக்குப் பின்னே
முழுசாய் ஒரு மனுஷி ஒரு மனிதன்
வீணாயிருப்பதை
விளக்க முயல்கிறது வீதி
முயன்றாலும்
நான் மட்டும் நீயின்றி நடந்தால்
ஏனென்றே தெரியாமல்
வலியில் துவள்கிறது நிலம்..."
இந்தக்கவிதையும் ஒரு விரலின் இருப்பை ,இன்மையை பேசுகிறது. அந்தவிரல் யாருடையதாகவும்,எதனுடையதாகவும் இருக்கலாம். காற்றோ, மழையாகவோ அவ்விரல் இருக்கலாம்.
"சூரியனை நம்பக்கூட சந்தேகம் எப்படிப் புலருமென்று தெரியாத பட்சத்தில்..."
முன்னால் உள்ளகவிதைக்கு மாற்றுதிசையில் நிற்கும் கவிதை இது. கொலைவாள்கூட மன்னிக்கும் என்ற நம்பிக்கைக்கு அப்புறம் உள்ள மாபெரும் நம்பிக்கையிழப்பு.
பிரான்சிஸ் கிருபா விகடனுக்கு அளித்த பேட்டிலிருந்து மூன்று பதில்கள் மட்டும்:
“நிலம், இருப்பிடம் என்பதைப் பற்றியான உங்களின் மதிப்பீடு என்ன?’’
“ `நிழலைத்தவிர ஏதுமற்றவன்’ என்ற என் படிமம்போல, ஏனோ நிலமும், இருப்பும் எனக்குப் பொருந்தமாட்டேன் என்கின்றன. அறைகள் எனக்குச் சலிப்பூட்டுகின்றன. உறங்குவதற்கு மட்டுமானவையாக அவை எஞ்சி நிற்கின்றன. கடற்கரைதான் எனக்கு நெருக்கமாக இருந்திருக்கிறது.”
“உங்கள் கவிதைகளில் பைபிளின் தாக்கம் இருக்கிறதே?’’
“ `பழைய ஏற்பாடு’ நான் விரும்பி வாசித்தது. அதன் மொழி உச்சம். ஒருவேளை என்னுடைய உரைநடையில் அதன் தாக்கமிருக்கலாம்.”
“வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“என்னால் மூன்று இட்லிகளைக்கூட முழுமையாகச் சாப்பிட முடியாது. சில சமயங்களில் அதற்கும்கூடப் பணமிருக்காது. முகம் தெரியாதவர்களின், நண்பர்களின் அன்புதான் எனக்குள்ளிருக்கும் வெற்றிடத்தை இட்டு நிரப்புகிறது. நண்பர்கள்தான் என்னைப் பார்த்துக்கொள்கிறார்கள்.”
கவிதை எழுதுகிறேன் என்று எழுதத்தொடங்கித்தான் எழுதுபவர்கள் தொடக்ககாலத்தில் எதையாவது எழுதத்தொடங்குகிறோம். என்றாலும் கவிஞராகவே இருப்பது என்பது வெகுசிலருக்கே வாய்க்கிறது அல்லது வெகுசிலரே அத்தனை வலிமை உள்ளவர்களாக இருக்கிறார்கள். எப்போதும் கவிஞர்கள் என் வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரியவர்கள். கவிஞருக்கு அஞ்சலி.
பிரான்ஸிஸ் கிருபாவின் படைப்புகள்
நாவல்
- கன்னி
கவிதை தொகுப்புகள்
- மல்லிகைக் கிழமைகள்
- சம்மனசுக் காடு
- ஏழுவால் நட்சத்திரம்
- நிழலன்றி ஏதுமற்றவன்
- மெசியாவின் காயங்கள்
- வலியோடு முறியும் மின்னல்.
Comments
Post a Comment