புரவி ஆகஸ்ட் இதழில் வெளியான என்னுடைய கதை.
காயம்
தெருவிளக்கு வெளிச்சம் படரும் தகரதாழ்வாரத்து கயிற்றுக்கட்டிலில் செல்வம் அமர்ந்திருந்தார். மனதிலிருப்பதை பேசமுடியாத எரிச்சல் நெற்றி சுருக்கங்களாக வளைந்தது. அவர் பார்வை திண்ணையைத் தாண்டி வீட்டினுள் சென்றது. சௌமியாவும் சத்யாவும் எதுவுமே நடக்கவில்லை என்பதைப்போல இரவு உணவிற்குப்பின் படுக்கையில் கிடந்து பேசிக்கொண்டிருந்தார்கள். தான் எதையாவது பேசி ராத்திரி வேளையில் வம்பாகிவிடக்கூடாது என்று கைகளை கோர்த்து இறுக்கிப்பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். மனம் கண்டபடி ஓடுவதை நிறுத்த இயலாது அவர் தனக்குள் பேசியபடி இருந்தார்.
குட்டிநாயின் மெல்லிய குறைப்பைக்கேட்டு நினைவிலிருந்து திமிறி வெளிவந்தார். பக் நாய்க்குட்டி. மொழு மாழு வென்று செவலையும் கருப்பும் கலந்த நிறம். குடுகுடுவென்று ஓடிவந்து அவர் கால்களை சுற்றியது. காலால் எத்திவிட நினைத்தார். கெடேரி கன்னுக்குட்டி விலையுள்ள நாய்க்குட்டி. ‘எதாச்சும் ஆச்சுன்னா போச்சு’ என்று துணுக்குற்று கால்களை கட்டிலில் தூக்கி வைத்துக்கொண்டார். அது உடலை ஆட்டியபடி கோலிகுண்டு கண்களால் அவரைப்பார்த்தது.
‘எளவு இதுக்கு முகராசியும் இல்ல. நாய் மூஞ்சிக்கான கலையும் இல்ல. இம்புட்டு காசக்குடுத்து வாங்கியிருக்கான். முகராசி பாத்து வாங்கறதுக்கு துப்பில்ல. பன்னிக்குட்டி கணக்கா இருக்கு’ என்று நினைத்தவர் ரமேஷ்ஷின் எக்ஸ்எல் வண்டி சத்தம் கேட்டு நிமிர்ந்தார். பக் உள்ளே ஓடிவிட்டது. ரமேஷ் கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு பாத்திரங்கள் கழுவப்போட்டிருந்த சிமெண்ட் தரையின் ஈரத்தின் ஓரமாக வந்தான். கால்ச்சட்டை பையிலிருந்து நூறுரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டினான்.
“மொதல்ல ஒக்காருடா…இதுக்கு என்ன அவசரம்,”
“நாய்க்குட்டியா ஓடுச்சு…இப்பிடி பயப்படுது…”
“இப்பெல்லாம் நம்மதான் நாய்க்குகாவல் பாத்துக்க...நெலம அப்படி இருக்கு,”
“உப்புக்கண்டம் வாசம் தூக்குது…”என்ற ரமேஷ் மூச்சை இழுத்துவிட்டான்.
“சோறு தின்னு,”
“வேணாண்ணா…”
“நீ ஒன்னும் சொல்லாத… நாள்முழுக்க பாரந்தூக்கற ஒடம்பு. ஒங்கவூட்டுல என்ன தின்னுருப்பேன்னு எனக்குத் தெரியாதா,”என்று உள்ளே சென்றார். உப்புக்கண்டங்கள் ஐந்தாறு விரவிக்கிடக்கும் சோற்றுதட்டும் தண்ணீர் சொம்புமாக வந்தார்.
ரமேஷ் கட்டிலில் இருந்து இறங்கி கல்தொட்டிநீரில் கைக்கழுவிவிட்டு தரையில் அமர்ந்து கொண்டான். அவன் தின்று முடித்து கைக்கழுவும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை. குனிந்தத்தலை நிமிராது தின்றான். எழுந்து தட்டையும் செம்பையும் கழுவி ஓரமாக வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்தான்.
“வயிறு நெறஞ்சு போச்சுண்ணா,” என்றபடி கைகளை முகர்ந்து பார்த்து சிரித்தான். செல்வம் அவன் முதுகில் தட்டினார்.
“இப்ப உங்கிட்ட குடுத்தது ஐநூறு ரூவா ஞாபகம் இருக்கட்டும். கொல்லப்பட்டியாரு வயலுக்கு நெல்லு மூட்டை தூக்கின கூலி. மதியமே அவரு உன்னக் கேட்டாரு…”
“ம்…”
“அவரு வயல்ல நாத்துகட்டு கட்டிப்போட்டிருக்கு. பொழுதோட நடவு. உனக்கு வேணுங்கறத விடியகாத்தாலயே எடுத்துக்க சொன்னாரு,”
“இத்தன வயசானப்பிறவும் மனுசர நம்புறாரே…அவர யாரும் ஏமாத்தாமையா விட்டுவச்சிருப்பாங்க,”என்ற செல்வம் புன்னகைத்தார்.
ரமேஷ் இந்த ராவுப்பொழுதில் எதற்காக வந்தானோ அதைத்தொடாமல் இருவரும் சுற்றிசுற்றி வந்தார்கள். சிறிதுநேரம் அமைதியாக இருளில் வீட்டின் முன் காற்றில் குலையும் வேம்பை பார்த்திருந்தார்கள். பக்கத்துவீட்டில் தாலாட்டு கேட்டது.
“இந்த ஓலவாயி கெழவி எத்தனை பெத்தபிள்ளைக, பேரப்பிள்ளைக, கொள்ளு பேரப்பிள்ளைகளப் பாத்திருச்சு…சலிக்காதா இந்தப்பொம்பளைங்களுக்கு. மவன் பேரன்னு ஒருபயலும் ஒருசொல்லு கேக்கமாட்டிக்கிறானுங்க. ஆனா கெழவி வேலவரும், ரெங்கநாதரும், மன்னவரும் வந்து பெறந்திருக்குன்னு பாடுது,”
“கெழவிக்கு வளந்தபிள்ளை பத்தி எந்த விசனமும் இல்ல. புதுசா பெறந்திருக்கறத சீராட்டுது. பிள்ளைங்க பெறக்கும் ...போகும். இதெல்லாம் ஒருநாளும் பிள்ளை ஆச கொறயாத சென்மம்,”
சட்டென்று ரமேஷ்,“சௌமியா விசயத்துல எதாச்சும் பிரச்சனையாண்ணே,”என்றான்.
“அது வேலை செய்யற எடத்துல லீவு. அந்தப்பய கார்ல கொண்டுவந்து விட்டுட்டு போனான்…”
“கல்யாணத்துக்கு முன்னாடி எதுக்கு இதெல்லாம்,”
“கல்யாணத்த முடிச்சிடுங்கன்னு சொன்னாலும் ஜாதகம்,வியாபாரம் தொடங்கனும்ன்னு இழுக்குறானுங்க…”
“நம்ம அண்ணன் உன்னைய கைநீட்டிருச்சாமே. நீ ஒன்னும் மனசுல வச்சிக்காத. நீ கைநீட்டினா தப்பா போயிரும்…”
“ஆமாண்டா…அவனுங்க எதுக்கெடுத்தாலும் நம்மமேல கைய நீட்டுவானுங்க. நம்ம கைய மடக்கிக்கிட்டு இருக்கனும்…”
கன்னத்தையும் தோள்ப்பட்டையையும் தடவிக்கொண்டார்.
“அண்ணன் சொல்றதும் வாஸ்தவம் தானே. காசு பணம் இல்லன்னாலும்…”என்று ரமேஷ் இழுத்தான். செல்வம் வாடிய முகத்துடன்,“என்னப்பண்றது எம்பிள்ளை செத்துப்போனா எழப்பு உனக்கா எனக்கான்னு கேட்டதும் வாயமூடிக்கிட்டு போயிட்டான்,”என்றார்.
பேசிக்கொண்டிருந்துவிட்டு ரமேஷ் சென்றுவிட்ட பின்னும் இவர் உறக்கம் கண்கூடாமல் புரண்டு கொண்டிருந்தார்.
அடுத்து வந்த நாட்களில் பப்பியை காண்பவர்கள் பொட்டநாய்க்குட்டியா என்று கிண்டலாக கேட்டார்கள். அதை தினமும் குளிக்க வைப்பதும், வீட்டிற்குள்ளேயே வைத்திருப்பதையும், அதன் சிறிய உருவத்தையும் பயத்தையும் கேலி செய்யாதவர்கள் இல்லை.
இதற்கெல்லாம் மலையேற்றுவது மாதிரி தாழ்வாரத்தில் மின்காற்றாடியை வைத்து பப்பியை கட்டிலில் படுக்க வைப்பது. தெருவில் போறது வரது எல்லாம் புருவத்தை தூக்கிப்பார்த்து புரணி பேச நல்ல விஷயம் கிடைத்துவிட்டது. சௌமியா காலையிலும் இரவிலும் பப்பியை நடக்க அழைத்து சென்று வந்தாள். அதன் தரமான பெல்ட்டைப் பார்க்கும் போதெல்லாம் செல்வத்திற்கு பற்றிக்கொண்டு வந்தது.
திருச்சியில் கோழிப்பண்ணையில் நிர்வாக வேலை என்று சௌமியா கிளம்பிவிட்டாள். அவன் சொல்லி வாங்கிக்கொடுத்திருக்கிறான். மாசச்சம்பளம் வீட்டு நிலைமைக்கு நினைத்து பார்க்க முடியாத உயரம். வேலைக்கு போகும்போது இந்தப்பப்பியை தலையில் கட்டிவிட்டு சென்றுவிட்டாள்.
அடுத்தநாள் தாழ்வாரத்தின் கோடியில் நின்ற சத்யா, செல்வத்திடம் ,“பாப்பாவைக்குளிப்பாட்டனு வா…”என்றாள்.
“என்னது…”
“ஒருஆளா முடியாது…வாய்யா..”
நல்ல மொழு மொழுவென்ற உடம்பு. கைகளுக்குள் இருக்காமல் முரண்டு செய்து, வழுக்கி விழுவதும் எழுவதுமாக விளையாடியது. கைக்குள் சிறிய உடல். சிறிய கால்கள். முகராசியை விட்டால் நாய் நல்ல அம்சம் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டார்.
“இதுக்கு தனிசோப்பா…”
“ஆமாயா…”
“நெதமும் குளிப்பாட்டனுமா…”
“பின்ன…”
“சுடுதண்ணி வச்சி ஊத்தலாமில்ல…”
“சுடுதண்ணில்லாம் இதுக்கு சேராதாம்…”
“ஏம்புள்ள…நீயும் அந்தபிள்ளகூட சேந்துக்கிட்டு கூத்துக்கட்ற…”
“வெவரம் புரியாத ஆளாயிருக்கியே. இது குட்டிப்போட்டா என்ன வெல விக்குன்னு தெரியுமா?”
நாய்க்குட்டி குவளையிலிருந்த நீரை எத்திவிட்டது.
“அப்பா அடிச்சுருவாரு பாப்பா…”
“என்னா…”
“எதுக்கெடுத்தாலும் என்னா..என்னான்னு…”
இவளிடம் வாய்க்கொடுத்து மீளுவதற்கு நாயை சகிக்கலாம் என்று அமைதியானார். இவளும் இப்படி மாறிப்போவாள்ன்னா நம்ம விதியை என்னன்னு சொல்றது மனதிற்குள் புன்னகைத்துக்கொண்டார். யாருமே தன்னை புரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணம் அவரை வீட்டில் பழையபடிக்கு இல்லாமல் ஒதுங்கியிருக்க வைத்தது.
தாழ்வாரத்தில் படுத்துக்கொண்டு தினமும் நாயை பார்த்துக்கொண்டிருந்த ஒலவாயிக்கிழவி ஒருநாள், “நாய்ன்னா நமக்கு முன்னாடி குரைக்கனும்,நடக்கனும்…தெருவு அதுக்கு சொந்தம். இதென்ன வூட்டுக்குள்ள ஔிஞ்சுக்குது,”என்று வாயில் கைவைத்து சிரித்தாள். செல்வம் அதன் விலையை சொன்னதும், “என்னைய காடு சேக்கறதுக்குண்டான பணம் போட்டு நாய் வாங்குனியாடா…நல்லப்பொழப்பு. தெருவுல சோத்துக்கில்லாம எத்தன திரியுது. அதுல ஒன்ன தூக்கி வளத்துனாலும் புண்ணியம்,”என்று முறைத்தாள்.
பதில் சொல்ல முடியவில்லை. கிழவியின் உலகம் அதுகாலத்தில் நிற்கிறது. சொல்லி விளங்க வைக்கமுடியாது.
பப்பி முதல் முறையாக குட்டிகளை ஈன்ற கொஞ்சநாளில் மூன்று குட்டிகளையும் சௌமியா தூக்கிச்சென்றாள். பப்பி சுற்றி சுற்றி வந்தது. மறுமுறை வரும்போது இருபத்தைந்தாயிரத்தை முழுசாக தந்துவிட்டு சென்றாள்.
“என்னாம்மா...இம்புட்டு பணம்,”
“பப்பீஸ்களை வித்ததுப்பா. நெலக்கதவ நல்லமரக்கதவா மாத்தனுன்னியே. இது யூஸ் ஆவும்,”
பப்பி வாசல் நிலையில் அமர்ந்து தெருவை வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது. அதன் கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தன. வயலுக்குச் சென்று வீட்டிற்கு வரும் வரை வாசலில் காத்திருந்தது. வயலில் கருப்பியும் கன்று ஈன்றது. நல்ல பால் பீய்ச்சம் இருந்தது. காளைக்கன்று என்பதால் அத்தனை கலகலப்பில்லை.
அன்று வயலிற்கு செல்ல டி.வி.எஸை எடுக்கும் போது வாசலில் பப்பி அமைதியாக அவரையே பார்த்துக்கொண்டிருந்தது. “குட்டி பலாக்காயாட்டம் இருக்க…உனக்கெல்லாம் மூணு குட்டி. ஒன்னுக்கூட பக்கத்துல இல்லையே. குட்டில்லாம் அப்படிதான்…வா,” என்றதும் அவர் காலடிக்கு ஓடிவந்தது. தூக்கி முன்னால் அமர்த்திக்கொண்டார். இரண்டு கால்களால் அதை அணைத்துப்பிடித்தபடி வண்டியை எடுத்தார்.
பப்பி வயலுக்கு வந்தால் தொட்டி பக்கத்தில் கட்டியிருக்கும் கருப்பியிடம் படுத்துக்கொள்ளும். கொஞ்சநாளில் கன்றுடனும் பசுவுடனும் விளையாடத்தொடங்கியது.
“கருப்பிக்காச்சும் பால் நிக்கும்மட்டும் இந்த விதி இருக்கு…பப்பிக்கு அதுவுமில்ல …”என்று சத்யா பெருமூச்சு விடுவாள்.
பப்பி இரண்டாம் முறை குட்டிகளை ஈன்று அவை விற்கப்பட்டன. முன்பிருந்த சுறுசுறுப்பு இல்லை. வயிறு தளர்ந்து,முலைக்காம்புகள் நீண்டு உடல் குலைந்து போயிருந்தது. நடையில் துள்ளல் இல்லை. ஆனால் ஆள் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்பதைப்போல உடன் ஒட்டிக்கொண்டது. பால் நின்றதும் கன்றை விற்று பட்டியும் களையிழந்திருந்தது.
தினமும் பின்காலையில் செல்வம் ஆற்றுபாசன வாய்க்காலில் இருந்து வயலிற்கு தண்ணீர் திருப்பி அடைத்துவிடுவார். பின் கறுப்பியை மேய்ச்சலுக்கு விட்டப்பின் பட்டியில் கட்டுவார். அதுவரை பப்பி அவர் தோளில் இருக்கும். உச்சிக்கு கயிற்றுக்கட்டிலைப்போட்டு பப்பியுடன் படுத்துக் கொள்வது வழக்கமானது.
அவர் மீது காலை தூக்கி போடுவதும், பக்கத்தில் குறுகிப்படுத்துக்கொள்வதும், மூக்கால் முகத்தை தடவி முகர்வதுமாக பப்பி கூடவே இருந்தது. அவர் எழுந்து ரமேஷ் வயலிற்கு மடைவாயை திருப்பி அடைப்பதற்குள் பப்பி மேட்டுவரப்பிலிருந்து அழைத்துக்கொண்டேயிருக்கும்.
“இரும்மா..வந்துட்டேன்…இங்கதானே இருக்கேன். உங்கூடவே இருந்தா சோத்துக்கு என்ன பண்றது,” என்று எதையாவது பேசிக்கொண்டிருந்தால் அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கும். பேச்சை நிறுத்தினால் மீண்டும் அழைக்கும். மூட்டைத்தூக்க செல்லும் போதும் அங்குவந்து ஓரமாக அமர்ந்து கொள்ளும்.
ஒரு வாரவிடுமுறையில் சௌமியா வந்திருந்தாள்.
“கறி எடுக்கலாமாடி…”
“வேணாம்மா…பண்ணையில இருந்திருந்து பிடிக்கல…பருப்புக்குழம்பு வைம்மா,”
“ஏண்டி…தெனமுந்தான் வெந்ததை தின்னுட்டுக் கெடக்குறோம்,”
“ம்மா…கோழிப்பண்னையில ரெண்டுநாள் இருந்துப்பாரு …”
வழக்கம் போல செல்வம் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்தார். அவர்கள் இருவருக்கும் பேசிக்கொள்ள சிரிக்க எதாவது இருந்தது. ஊர்முழுக்க இருக்கும் சொந்தங்களில் ஒருவனை சௌமியாவிற்கு பிடித்து விடுமோ என்ற பதட்டம் சத்யாவிற்கு இருந்து கொண்டிருந்தது. கல்யாணமான நாளில் இருந்தே தன்னை இவர்கள் வேற்று ஆளாக நினைக்கிறார்கள் என்ற வதை அவளுக்கு இருந்தது. அவள் தூரத்து சொந்தம். பிழைக்கச்சென்றவர்கள் கேரளாவிலேயே இருந்துவிட்டார்கள்.
இத்தனை ஆண்டுகளில் சுற்றிலும் ஏழுஊர்களும் பெண் எடுத்துகொடுத்து வழுவாக இருப்பதன் கசப்பு அவளுக்குள் ஊறியிருந்தது. சௌமியா வேற்றாளை சொன்னதும் சத்யா முதலில் திடுக்கிட்டாள். ஆனால் இதிலிருந்து பிய்த்துக்கொள்ளும் வாய்ப்பாகவே நினைத்திருக்கிறாள். உள்ளிருந்து சௌமியாவின் குரல் கேட்கிறது.
“அப்பா எம்மேல இன்னும் கோவமா இருக்கரா…”
“அதெல்லாம் இல்லடீ...”
வெளியில் வந்த சௌமியா திண்ணையில் அமர்ந்தாள். அதற்கு வெளியே தாழ்வாரத்தில் செல்வம் கட்டிலில் அமர்ந்திருந்தார்.
மெதுவாக பப்பி அவர் மடியில் ஏறி அமர்ந்து பின் படுத்துக்கொண்டது. அவர் கைகள் அனிச்சையாக அதைத் தடவத்தொடங்கியது.
“அப்பா….பப்பிய தூக்கிட்டுப்போய் ஊசிப்போட்டுக்கொண்டு வரனும்ப்பா…”
“எதுக்கும்மா…நல்லாதானே இருக்கு,”
“நாளாகிருச்சுப்பா… இப்பவே நாய்க்குட்டி இருக்கான்னு கேக்கறாங்க…”
“வேணாம்…நாளாக்கட்டும்,”
“டாக்டருக்கிட்ட கேட்டாச்சுப்பா…பப்பி பத்தி உனக்குத் தெரியாது. தவணை போச்சுன்னா இந்த வருஷத்துக்கான டார்கெட் அளவுக்கு பப்பீஸ்கள விக்கமுடியாதுப்பா ,” என்று வழக்கம் போல குரலை உயர்த்தினாள்.
“நானும் கோழி ஆடு மாடு பூனை வளக்கறவன் தான். கொஞ்ச நாள் போட்டுமே. கேக்கறவங்க கேப்பாங்கதான். இல்லன்னு சொல்லு…”
“வாங்கின அவருக்கு தெரியாதா,”
“காசு குடுத்து வாங்கிட்டா எல்லாம் தெரிஞ்சுருமா. அவங்களே வச்சு வளக்க வேண்டியதுதானே. இங்கெதுக்கு வளக்க விட்டிருக்க…”
“காசுல பாதி நம்ம வீட்டு செலவுக்கு தானேப்பா…”
“இனிமே வேணாம்…”
“எதுக்குப்பா வீம்புப்பண்ற…”
“எங்க கண்ணு பாக்காம தூக்கிட்டு போயிருந்தா நான் எதுக்கு சொல்றேன். இன்னிக்கு சொல்றதுதான்…கருப்பியாட்டம்தான் இதுவும். இதுக்கு என்ன செய்யனுன்னு எனக்குத்தெரியும்…போன வருஷம் ஆடிப்பட்டத்துக்கு வானம் தப்பிப்போச்சு. தைப்பட்டத்துக்குதான் நாத்து போட்டோம்…”
சௌமியா சற்று அலட்சியமாக உதட்டை கோணிக்கொண்டாள். பப்பி பெல்ட்டை சரிசெய்யும் நேரத்தில் செல்வம் தயக்கத்தை விலக்கி யாருக்கோ சொல்வதைப்போல,
“விதைக்கும், நாத்துக்கும்… பருவந்தெரிஞ்ச எங்களுக்கு இதுக்கு தெரியதா? அதுக்குஒடம்பு தேறட்டும்…நீங்க கார் எடுத்துட்டு வரனுன்னு இல்ல. மடியிலயே வச்சு பஸ்ஸில கொண்டாந்து வுடுறேன்…டாக்டருங்க பொதுவா ஒரு கணக்கு சொல்லுவாங்க. ஒவ்வொரு உசுருக்கும் ஒடம்பு வேத்தும உண்டுல்ல…தொட்டு தூக்கிப்பாக்கறவன் நானு. தவணை மாறாம செய்யறதுக்கு இதென்ன மிஷினா. தண்ணி எறக்கிறப்ப ஏத்துக்கு ஒன்னுமில்ல…நமக்கும் தண்ணி வந்தா போதும். மாட்டுக்கு கழுத்துவலிக்குமுல்ல, ”என்று அழுத்திச்சொன்னார்.
சௌமியா ஒன்றும் பேசாமல் வெடுக்கென்று உள்ளே சென்றுவிட்டாள். உள்ளே முணுமுணுப்புக் கேட்டது.
“உங்கப்பனுக்கு தெரியாதது உனக்கென்னடி தெரியும். விவரந்தெரிஞ்சதுலருந்து மண்ணப்பாத்து, மாடு கன்னு வளத்திருக்கு. அதுசரியாதான் சொல்லும்…”
“அப்பா என்னம்மா நாத்து,ஏத்துன்னு சம்மந்தமில்லாம பேசுது. பக்டாக் பத்தி அப்பாவுக்கு என்னம்மா தெரியும்,”
“வாயமூடுடீ…பிச்சுப்புடுவேங் கழுத. அதுவே இப்பதான் வாட்டம் குறஞ்சிருக்கு…மனுச மனச என்னன்னு நெனச்ச. வெளயாட்டு பொம்மையா. மூட்டத்தூக்கற ஓடம்புடீ…படுத்தா எந்திரிக்கமுடியாது….” என்று பேசிக்கொண்டே சென்றாள்.
பப்பி காலை சுற்றிவந்து அழைத்தது.
“நடக்கப்போவனுமா பாப்பா…” என்று அதன் பெல்ட்டை பிடித்தபடி வெளியே வந்தார். வீட்டு சந்தைக்கடந்து தெரு விளக்கு வெளிச்சத்தில் வேடிக்கைப்பார்த்தபடி நடந்தது. ராசு வீட்டு பெருத்த வேம்பையும், நீலா வீட்டு தென்னைமரங்களையும் கடந்திருந்தார்கள். இந்தநேரத்தில் பப்பி பதட்டமில்லாமலிருக்கும்.
“என்ன பாப்பா…ஜாலியா இருக்கியே…வயவரைக்கும் போய் நெல்லங்காட்டுல தண்ணி நிக்குதான்னு பாத்துட்டு வரலாமா? இல்ல…ஓடப்பாதையோட வூட்டுக்கு போயிரலாமா…என்னம்மா பப்பி…நான் பேசறது எதாச்சும் புரியுதா…”
பப்பி கீச்சுக்குரலில் லொள் லொள் என்றது. அவர் தலையை உயர்த்தி வானத்தைப்பார்த்தார். விண்மீன்களில்லா வானம் மழை வருமென காட்டியது.
Comments
Post a Comment