Skip to main content

கடல் சிறுகதை தொகுப்பின் முன்னுரையும்,என்னுரையும்

 'கடல்' என்னுடைய நான்காவது சிறுகதைத்தொகுப்பு. இந்த ஆண்டு ஜனவரியில் வாசகசாலை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. 






எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் முன்னுரை எழுதியுள்ளார். அவருக்கு என்  அன்பு.



            எளிமையும் ஆழமும்

கமலதேவியின் கதைகள் காட்சிகளாக விரிபவை. காட்சிகளின் வழியாகவும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடல்களின் மூலமாகவும் அவர்களுடைய வாழ்வு முழுவதையும் சொற்களாகவும் உணர்ச்சிகளாகவும் சொல்பவை. வெறும் கதை சொல்லலாக மட்டும் அவை நின்றுவிடுவதில்லை. உறவுகளுக்குள் ஏற்படும் பல்வேறு மோதல்களையும் அவற்றின் ஆழங்களையும் அபத்தங்களையும் தொட்டுக் காட்ட முயல்கின்றன. விவசாயத்தில் தொழிற்படும் மண் சார்ந்த நுட்பங்களைப் பேசுகின்றன. கிராமத்து வாழ்வில் இன்னும் எஞ்சியிருக்கும் நம்பிக்கைகளை, மதிப்பீடுகளை, விழுமியங்களை நினைவுபடுத்துகின்றன. ஒட்டுமொத்தமாக வாழ்வின் பொருள் குறித்தும் அல்லது பொருளின்மையைக் குறித்துமான பலமான கேள்விகளை எழுப்புகின்றன. எந்தவொருக் கதையையும் அவை முழுமையாக விரித்துச் சொல்வதில்லை. கதையின் மையத்தை மிகக் குறைவான சொற்களில் அவை குறிப்புணர்த்துகின்றன. சம்பவங்களை அல்லாது அவற்றுக்கு முன்னும் பின்னுமான உணர்வு நிலைகளையே முதன்மைப்படுத்துகின்றன. இதனால் கதையை வாசித்து முடித்த பின்பும் ஏதோவொன்று முழுமையடையாததுபோலொரு உணர்வை ஏற்படுத்துகின்றன. ஆனால், அந்த உணர்வுக்குப் பின்னால் அழுத்தமான சில கேள்விகளை எழுப்புவதன் வழியாக கதையைக் குறித்து மீண்டும் யோசிக்கச் செய்கின்றன. எனவே, அவை வழக்கமான கதைப்பாணியிலிருந்து மாறுபட்டு கலைத்துப் போடப்பட்ட சித்திரங்களாகவே காணக்கிடைக்கின்றன. சரியான முறையில் ஒவ்வொரு துண்டையும் சேர்க்கும்போது மட்டுமே மொத்த உருவமும் புலப்படும். 

இத்தொகுப்பிலுள்ள ‘தையல்’ என்ற கதையைக் கொண்டு மேற்சொன்ன கதையம்சங்களை சற்று விரிவாகச் சொல்லிப் பார்க்கிறேன். 

தொடை வரை வெட்டுண்ட  காலுடன் குடிசையில் தனித்திருக்கும் செவந்தன்,  தவமிருந்துப் பெற்ற பெண்ணைவிட்டுப் பிரிய முடியாமல், அவளுடன் இருக்கும் செல்லம்மாள் இருவரும் ஒரு மதியப் பொழுதில் வயல்வெளியோர மரத்தடியில் சந்திக்கிறார்கள். காலையில் பொங்கி எடுத்து வந்த சோற்றையும் புளிச்ச கீரையையும் அவன் அவளுக்குத் தருகிறான். மகள் வீட்டில் சமைத்த கோழிக் கறியை அவனுக்காகக் கொண்டு வந்திருக்கிறாள் மனைவி. இதுதான் கதை நமக்குக் காட்டும் காட்சி. 

நியாயமாக செல்லம்மாள் ஊன்றுகோலுடன் சிரமப்படும் செவந்தனுடன் இருக்கவேண்டும். மகள் ராக்குவை விட்டுவிட்டு அவள் வருவதில்லை. தவமிருந்து பெற்ற மகள். தன்னைவிட வயதில் மூத்த பெரியசாமியை ராக்கு காதல் மணம் புரிந்தபோதும் அவளைவிட்டு அவன் ஓடிப்போனபோதும்கூட செல்லம்மாள் எதுவுமே கேட்பதில்லை. மகளின் சொல் பொறுக்க முடியாமல் மனம் நொந்து செவந்தன் வீட்டைவிட்டு வெளியேறும்போதும்கூட செல்லம்மாள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள். பேரப் பிள்ளைகளால் அவமானப்படுகிறாள். ஏராளமான வீட்டு வேலைகளை முகம் சுளிக்காமல் செய்கிறாள். செல்லம்மாள் ஏன் இப்படி இருக்கிறாள்? எதற்காக? என்ற கேள்விகளை கதை விவரிப்பதில்லை. 

‘பாசப் பிள்ளைய கையில வெச்சுட்டு நிக்கற பெருமா மல அடிவாரத்து பிச்சாயி’தான் குலதெய்வம் என்ற ஒற்றை வரியினுள் செல்லம்மாளின் இந்த மனப்போக்கைப் புரிந்துகொள்வதற்கான சாவி கதையினூடே ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது.  

மகள் உதாசீனப்படுத்துகிறாள், மனைவியும்  உடனிருந்து உதவுவதில்லை என்றபோதும் தனித்து வாழும் செவந்தனின் குணத்தைச் சுட்டும் விதமாக கதையின் தொடக்கத்திலேயே ‘முருங்கை’மரம் ஒரு குறிப்பாக இடம் பெற்றுள்ளது. ‘உப்புத் தண்ணி கேணியில வெட்டிப் போட்டா தண்ணியோட உப்புக் குணம் மாறிப்போகும். பஞ்சத்துக்கு ஒரு முருங்கை போதும்’ என்ற வரிகள் முருங்கையை மட்டுமல்லாது செவந்தனைக் குறித்ததும்தான். மிகச் சுலபமாக எளிய காரணங்களுக்காக உறவுகள் உடைபடக்கூடும், முருங்கையைப் போலவே. அதே சமயத்தில் அவை குறுகிய காலத்தில் சிரமமில்லாது தழைவதும் சாத்தியம்தான். அன்றாட நடப்புகளிலிருந்து விவசாயத்தின் நடைமுறைகளிலிருந்து வாழ்வைக் குறித்த பெரும் புரிதலை மிகச் சாதாரணமாக போகிற போக்கில் சொல்லும்போது கதையின் அடர்த்தி பன்மடங்கு கூடிவிடுகிறது- 

மகள் என்ன செய்தாலும் அதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் அவளை இடுப்பிலிருந்து இறக்கிவிடாமல் இறுக்கி வைத்திருக்கிற செல்லம்மாளுக்கும், ‘ஒக்காந்து தின்னு’வதாய் மகள் சொன்ன சொல்லுக்காக ரோஷம் பொறுக்காமல் வீட்டிலிருந்து வெளியேறிய செவந்தனுக்கும் இடையில் எந்த சண்டையும் இல்லை. இருவரும் பிரிந்திருப்பதற்குக் காரணம் மகள்தான். இருவரும் அவரவர் புரிதலில் உறுதியாய் நிற்கிறார்கள். ஒருவரை ஒருவர் கட்டாயப்படுத்துவதுமில்லை, அனுசரித்துப்போவதுமில்லை. இந்தப் புரிதலின் அழகுதான் இந்தக் கதைக்கு வலு சேர்த்திருக்கிறது. 

‘பாம்போட ரோஷந்தான் வெஷம் தெரியுமா?’ என்று சொல்லும் செவந்தன் அந்த விஷத்தை கழுத்தில் அணிந்திருக்கிற சிவனாக தோற்றமளிக்கும்போது, தீட்டென்று எதுவுமில்லை என்று அனைத்தையும் ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு எல்லையிலும் காவல் நின்று மழையாக எல்லா நிலத்திலும் பெய்யும் மாரியாத்தாவாக செல்லம்மாள் உருமாறுகிறாள். இருவேறு குணங்கள், இருவேறு அணுகுமுறைகள். ஆனால், இவை ஒன்றுக்கொன்று நிரப்பிக்கொள்பவை. ஒரு குணம் ஓங்கி எழும்போது மறு குணம் தாழ்ந்தும் அடுத்தது உக்கிரம் கொள்ளும்போது இன்னொன்று தணிந்தும் சமன்செய்து கொள்பவை. பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தின் இருவேறு ஆற்றல்கள். மோதியும் முயங்கியும் உயிரியக்கத்தைப் பேணும் ஆணும் பெண்ணுமான சக்திகள். இத்தனை செய்திகளையும், சிந்தனைகளையும் இந்தக் கதையின் எளிமையான எடையற்ற வார்த்தைகளை, உரையாடல்களை கவனமாகப் பின்தொடரும்போது மட்டுமே புரிந்துகொள்ள முடியும். மேலோட்டமாக கவனமில்லாமல் வாசிக்கும்போது இவை எதுவுமே புலப்படாமல் போகிற சாத்தியம் உண்டு. 

செவந்தனின் கால் எதனால் துண்டுபட்டது என்பதைக் குறித்து பெரிய சித்தரிப்புகள் கதையில் இல்லை. ‘பைசலை வேடிக்கைப் பார்க்க நின்றவரின் கால்களை எவன் வெட்டினான் என்றே இதுவரைத் தெரியவில்லை’ என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. அன்றாடம் சந்திக்க நேரும் அபத்தங்களில் ஒன்று ஒரு மனிதனின் எதிர்காலத்தையே நொறுக்கிச் சாய்க்கும் துயரத்தை பல சமயம் நாம் உணர்வதில்லை. உரச் சாக்குகளை வீணடிக்காமல் படுதாக்களாக மாற்றி அறுப்பு காலத்தில் பயன்படுத்தத் தெரிகிற அளவு பயன்பாட்டு மதிப்பைத் தெரிந்தவர்களுக்கு, சாதாரண உறவுச் சிக்கல்களை, சண்டைகளைப் பொருட்படுத்தாமல் விட்டுக்கொடுத்து ஒத்துப்போகத் தெரிவதில்லை. 

கிராமங்களின் உழவு சார்ந்த வழக்கங்களை கதைகளில் வெறும் தகவல்களாக அடுக்காமல் அவற்றை கதையின் செறிவான அடுக்குகளாக மாற்றும் தன்மை கமலதேவியின் கதைகள் பலவற்றிலும் பார்க்க முடியும். அறுப்பு முடிந்து சும்மா கிடக்கும் நிலத்தில் விதைகளைத் தூவி அவை முளைத்ததும் காட்டை உழும் வழக்கத்தைப் பற்றிய உரையாடல் ‘நாத்து போடற வரைக்கும் ஆடு மாடு திங்கற மிச்சம் மண்ணுக்குத்தான்’ என்று முடிகிறது. இது கதைக்குள் இடம்பெறுகிற ஒரு வரியாக மட்டும் அமையாமல் மனிதர்களைப் பற்றியும் வாழ்வின் பொருளைக் குறித்துமான ஒரு கேள்வியையும் எழுப்புகிறது. வயல்களில் உள்ள பாம்புப் புற்றுகளை தெரிந்தோ தெரியாமலோ சேதப்படுத்தவோ அல்லது அவற்றைத் தொந்தரவு செய்யவோ நேரும், அதனால் அவற்றின் கோபத்துக்கு ஆளாகலாம் என்பதற்காக சேவல் அறுத்து காவு தரும் வழக்கம் இந்தக் கதையில் சொல்லப்பட்டுள்ளது. மண்ணின்  மீதும் உயிர்களின் மீதும் மனிதர்களின் கொண்டிருந்த அணுகுமுறையும் இயற்கையுடன் தன் வாழ்வையும் இணைத்துப் பார்த்த விகாசத்தையும் துலக்கிக் காட்டும்விதமாகவே அமைந்துள்ளது. 


இத்தொகுப்பிலும் இதற்கு முந்தைய மூன்றுத் தொகுப்புகளிலும் உள்ள கமலதேவியின் கதைகள், பலவும் இவ்வாறான அடர்த்தியையும் ஆழத்தையும் கொண்டிருப்பவை. உரையாடல்களால் நகர்பவை. முக்கியமல்லாததுபோலத் தோற்றம் தரும் தகவல்களினிடையே கதையின் முடிச்சை ஒளித்து வைத்துவிட்டு அவற்றை அவிழ்க்கும் யுக்தியை மனச் சலனங்கள், உணர்ச்சிக் கொந்தளிப்புகள், அக மோதல்களினூடே தொட்டுக் காட்டுகின்றன. நேரடியான கதைகள் போலத் தோற்றம் மட்டுமே தரும் இவற்றில் உள்ள விடுபட்ட இடங்களைப் பூர்த்தி செய்வதன் மூலமாக மட்டுமே முழுமையாக புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் கமலதேவியின் கதைகள் சவாலானவை. 

சொல் விளையாட்டு, சிக்கலான வாக்கிய அமைப்பு, காலத்தை புரட்டி முன்னும் பின்னுமாக அமைப்பது போன்ற பல்வேறு யுக்திகள் எதுவுமின்றி மிக யதார்த்தமான கிராமிய வாழ்வின் பின்னணியில் துல்லியமான உரையாடல்களைக் கொண்டே ஆழமான கேள்விகளை எழுப்புவதோடு வாசிப்பில் நிறைவையும் தரமுடியும் என்பதை கமலதேவியின் இக்கதைகள் வலுவாக உணர்த்துகின்றன.

கோவை

21 டிசம்பர் 2021 எம்.கோபாலகிருஷ்ணன்


என்னுரை






பச்சை…நீலம்… தொடுவானம்

இதற்கு முந்தின தொகுப்பான ‘கடுவழித்துணை’ இறப்புகளும் நோய்களும் சேர்த்து முடைந்த மூங்கில் கூடை போல. அதில் சொட்டு சொட்டாக விழக்கூடிய அமுதம் எதுவோ அது இந்தத்தொகுப்பில் நிகழ்ந்திருப்பதாக எழுதும் இக்கணத்தில் தோன்றுகிறது.

அன்பு என்பது எப்போதும் நமக்கு ‘க்ளீசே’ தான். என்றாலும்கூட தேய்ந்து தேய்ந்து உதிர்ந்தது போக தேயும் வெம்மையில் மெருகேறும், மேலும் கூராகும். உயிர்கள் பூமிக்கு எத்தனை பழையதோ அத்தனை பழையது அன்பும். உணரும் இடத்தில் அன்பாகவும், உணர இயலாத இடத்தில் வாழ்வியல் நியதியாகவும் உருமாறுகிறது. அன்பின் பொருட்டு செய்யப்படும் சிறுசெயலும் எனக்கானது என்ற பைபிள் வாசகம்  தெய்வநம்பிக்கை மட்டுமல்ல. 

வன்மம் போலவே அன்பும் ஆதிஉணர்வுகளுக்குரிய குணங்களை கொண்டது.  அதன் இயல்பிற்குரிய சாத்வீக குணங்களான பிடிவாதம் போன்ற மூர்க்கத்தனத்தையும், விட்டுக்கொடுத்தல் என்ற விடாப்பிடியான தன்மையையும் கொண்டதாக இந்தக்கதைகளின் மாந்தர்களின் இயல்புகள் உள்ளன.

ஓட்டைப்பானைகளை  வழியவழிய நிரப்பும் ஓயாத மழை அது. அதுதான் வன்மம்,பழிஉணர்வு,இயலாமை மற்றும் வாழ்வின் எதார்த்தம், இரக்கமின்மை என்ற அனைத்திற்கும் மாற்றாக நிற்கும் ஒற்றை தரப்பென உணர்ந்த இந்தக்கதாப்பாத்திரங்கள் அன்பை மூர்க்கமாக பற்றிக்கொள்கிறார்கள்.

அன்பு என்பதுதான் வெறுப்பாக, சினமாக, நோயாக, மாறாவஞ்சமாக, சுயநலமாக, அழிவாக உருமாறுகிறது. அன்பை அன்பாகவே வைத்திருக்கும் சவாலை இந்தக்கதைகளின் கதாப்பாத்திரங்கள் எதிர்கொள்கின்றனர்.

 மழையென பொழிந்து ஆறென பெருகி கடலென விரியும் மனுடர் அறியா ரகசியம் அது. அந்தக்கடலின் கரையில் கால் நனைத்து கண்மூடி சிரிக்கும் இந்தக்கதாப்பாத்திரங்கள் அறிந்தே இருக்கிறார்கள்… அதில் உறையும் உவர்ப்பையும். 

அன்பு மீளமீள கொள்ளும் ரூபங்கள் ஓயாதவை. எழுத எழுத தெய்வங்கள் என எழுந்து வருபவை.

என் தந்தை எனக்கு ஆசிரியராகத்தான் பதின்வயது வரை நினைவில் இருக்கிறார். வீடு,பள்ளி,ட்யூசன் என்று அம்மாவை விட அவருடன்தான் அதிக நேரம் இருந்தேன். கையெட்டும் தொலைவில் மேசையில் அமர்ந்திருக்கும் அவர், என்மீதான அன்பை எப்போதும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அதையெல்லாம் விட மற்ற பிள்ளைகள்,பயல்களை என் கண்முன்னாலேயே கொஞ்சுவதை, மடியில் அமர்த்திக்கொள்வதை, முத்தங்கள் தருவதை,பாராட்டுவதை பார்த்துக்கொண்டு ஒன்றுமே நடக்காததைப்போல ஓரக்கண்ணால் கண்டும்காணாமல் அமர்ந்திருக்க வேண்டும். பொசசிவ்வை தூக்கிப்போட வைத்தவர்.  நேசிப்பதற்கு எந்த காரணமும்,எதிர்பார்ப்பும் தேவையில்லை அது நம் இயல்பு என்று வாழ்ந்த அய்யாவுக்கு இந்த நூலை சமர்ப்பிக்கிறேன். 

மேல் பத்தியில் வரும் என்தந்தை,நான் என்ற வார்த்தைகளை எழுத அத்தனை தயக்கமாக இருந்தது. நம்…நாங்கள் என்ற வார்த்தைகளே பயன்படுத்த எளிதானவை. கிராமங்கள் இன்றும் நான்,என் என்ற வார்த்தைகளை சொல்வதற்கு பழகவில்லை. சொந்தப்பிள்ளையை மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும் போது நம்மப்பிள்ளைதான்…நம்ம பாப்பாதான் வார்த்தைக்காகவாவது சொல்கிறார்கள்.

நான் எழுதும் கதைகளை என்னுடையவை என்று ஒருபோதும் சொல்வதற்கில்லை. அவை அந்தக் கதாப்பாத்திரங்களுடையவை.

எழுத்து முன்னோடிகளுக்கு என் வணக்கங்களும் பேரன்பும். அவர்களில் இருந்து துளிர்த்த சிறுதளிர் நான் என்று எப்போதும் உணர்கிறேன்.

                                                                                                                                                அன்புடன்,  

                                                         கமலதேவி       

                                                                                                                                            






Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...