Skip to main content

இனிக்கும் முத்தம்: சிறுகதை

     2017 ஏப்ரல் மாத சொல்வனம்  இதழில் வெளியான சிறுகதை.

               இனிக்கும் முத்தம்



பள்ளிக்கூடம்  முடிந்து உள்ளூர்ப்பிள்ளைகள் வீட்டிற்கு சென்றிருந்தனர். ஐந்தாம்வகுப்புப் பிள்ளைகள் மைதானத்தின் கிழக்கு ஓரத்திலிருந்த தரைத்தொட்டியிலிருந்து நீரெடுத்து செடிகளுக்கு  ஊற்றிக் கொண்டிருந்தனர். மதிலோரம் கிழக்கு மேற்காக நீண்ட தோட்டம்.

 மதிலின் மேல்காரையில் உடைந்த கண்ணாடிச்சில்லுகள் நெடுக குத்தி வைக்கப்பட்டிருந்தன.சிலிர்த்து நிற்கும் முள்ளம்பன்றி முதுகென நிற்கும் மதில்.

கருங்கற்களால் வரம்புக்கட்டப்பட்டு மைதானத்திலிருந்து தோட்டம் பிரிக்கப்பட்டிருந்தது. மஞ்சள், நீல,இளஞ்சிவப்பு  மலர்கள் நிறைந்த நிறங்களின்வரிசைகளாய் செடிகள். செடிகளை பிள்ளைகள்  உலைத்ததால் பூச்சிகளும்,கொசுக்களும், வெள்ளை பட்டாம்பூச்சிகளும் எழுந்து பறந்தன.

ஏஞ்சலின் சிஸ்டர்,“போதும்மா…போய்விளையாடுங்க. பஸ் வர நேரமிருக்கு,”என்றார்.மேற்கே வானம் செம்மையேறிக் கொண்டிருந்தது.

கைத்தவறி தரையில் சிதறிய மணிகளாய் மைதானத்தில் பரவினர் பிள்ளைகள். நொண்டி, ஓடிப்பிடித்தல், கயிறுதாண்டுதல் என்று அவரவர் விருப்பப் படி ஆடிக் கொண்டிருந்தார்கள்.

வெள்ளைச்சட்டை ஊதாப்பாவாடையிட்ட பிள்ளைகள். ஓடும்போது பாவாடையை சுற்றி காற்றிலாடி உப்பவைத்து அமர்ந்தார்கள். விரிந்த சிறகு கொண்ட வண்ணத்துப்பூச்சிகளாய் ஓரிடத்தில் நில்லாமல் மாறியபடியிருந்தனர்.

 கிழக்கு கட்டிடத்திற்கான நீண்டபடிகளில் சிந்து ஏறினாள். வராண்டாவிலிருந்த  பெரியதூணில் சாய்ந்து  முட்டியை உயர்த்தி அமர்ந்தாள். கீழே  ரோஜாத் தோட்டத்தின்  மெலிந்து உயர்ந்த தண்டுகளில் ரோஜாக்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன.

பெரிய இரும்புக் கதவங்களின் பக்கவாட்டு உச்சிகளில் இருபுறமும் சிறகுவிரித்த தேவதைசிலைகள். அவற்றின் கடல்வண்ண பறக்கும் உடைகளைப் பார்த்தபடியிருந்தாள். அந்த உயரம்வரை ஏறியிருந்த அந்திமல்லிச்செடியின் மொட்டுகள்  சிதறிய அரிசிப்பொரிகளென கூம்பியிருந்தன. நினைவு நேற்றிலிருந்தது.

“பின்னாடியே சுத்துவியே…நாளக்கி வரமாட்டாரு உங்கதாத்தா,”என்று பாட்டி இவளை இறுக்கிப்பிடித்தாள். பாட்டியின் கைகளில் இருந்த சிந்துவை சேகர்மாமா ஒற்றைகையில் தூக்கி கூட்டத்தில்விட ஒவ்வொரு கையாக மாற்றி தெருமுடக்கில் நின்றாள்.

பரதன்அண்ணா, “வீட்டுக்கு ஓடு.இங்கெல்லாம் வரக்கூடாது..”என்று அதட்டினார். அங்கிருந்த மச்சில் ஆட்கள் நின்றிருந்தார்கள். அவர்களுக்குள் புகுந்து கைப்பிடி சுவரருகே நின்று கொண்டாள். கூட்டத்தின் நடுவே தாத்தாவை வெள்ளை மெத்தையில் தூக்கிக் கொண்டு சென்றார்கள்.

“யாரது…? பப்பி ஸேம்ல பாவாடையை மடக்காம இருக்கறது….”என்ற குரல்கேட்டு கீழே பார்த்தாள். ஐஞ்சாம்மா சிஸ்ட்டர். எழுந்து நின்றாள்.

“இங்க வா,”

சிவந்த மெல்லிய உடலுடன் அரைப்பாவாடையைப் பிடித்தபடி படியிறங்கினாள்.“இதைக்கையில பிடிச்சுக்கிட்டு எங்கூட வா,”என்று பூக்கூடையை அவளிடம் தந்தார். பனையோலையில் செய்த அகன்ற செவ்வகப்பெட்டியை இருகைகளிலும் பிடித்துக் கொண்டாள்.

வெள்ளை அங்கியைத் தூக்கிப்பிடித்தபடி சிலுவை வயிற்றில் ஆட நடக்கும் அவரைப் பார்த்துக் கொண்டே தோட்டத்திற்குள் இறங்கினாள்.ஈரம் மண்ணோடு சேர்ந்து கால்களில் கொழகொழத்தது.

கையில் கத்தரியுடன் ஒவ்வொரு செடியாய் வளைத்துப் பார்த்து மலர்களைத் தேடிக் கொண்டிருந்தார்.

”சிந்து ஏன்  விளையாடப் போகல?”

“விளையாடப் புடிக்கல சிஸ்டர்…”

“உடம்பு சரியில்லயா?”

“நல்லாயிருக்கேன் சிஸ்டர்…”

மஞ்சள் அரளிப்பூக்கள் அவள் வைத்திருந்த கூடையில் விழுந்தன.

“பஸ் வருதான்னு  பாத்துட்டிருந்தியா?”

“இல்ல ….பஸ்வந்தா வீட்டுக்கு போகனுமே…”

“ஆமாம்…”என்றார். அவர் கால்பட்டு மரவட்டை  கருப்புசிகப்பு சங்குசக்கரமென சுருண்டது. விலகி அடுத்தசெடிக்கு நகர்ந்தார்.

 குனிந்து தரையைப் பார்த்தபடி உதட்டைப்பிதுக்கிக் கொண்டாள். சிஸ்டர் திரும்பிப் பார்த்து புன்னகைத்தார்.கொசுக்கள் எழுந்து பறந்து சூழ்ந்து வந்தன.

“காலையில அம்மாவோட சண்டப்பிடிச்சியா?”

“இல்ல”என்று பளிங்குகண்களை சிமிட்டினாள்.

“வீட்டுக்கு போக பிடிக்கலியா..”

“வீட்டுக்குப் போனதும் பால்குடிச்சிட்டு தாத்தாவீட்டுக்கு போவேன்…இன்னிக்கு போகமுடியாது…அதனாலதான்….”என்று குனிந்தவளின் கைக்கூடையில் வெண்ணிற அடுக்குமல்லி  விழுந்தது.

“ஊருக்கு போயிட்டாரா?”

“சுடுகாட்டுக்கு போயிட்டாராம்,”

 செடியில் அமர்ந்திருந்தசிட்டு” கிச்” என்று  ஏதோ சொல்லி பறந்தது.

“பாட்டாவா…?”

“இல்லங் சிஸ்டர் ….எங்க வீடுதாண்டி ஒருமொடக்கு இருக்குல்ல அந்த சந்துலபோனா  பெரியகல்லு போட்ட வீடு தாத்தாவீடு…”

“ம்….அப்படியா?”

 சிலநாட்களுக்கு முன் நட்டிருந்த செவ்வந்தி பூத்திருந்ததைக்  கண்டு புன்னகைத்து நடந்தார்.

“தாத்தா வீட்ல யாரெல்லாம் இருக்காங்க?”

“பெரியபோட்டாவுல காந்திதாத்தா,நேருமாமா இன்னும் நிறையபேர்.அந்த மல்லியப்பூசெடி மாதிரி தாத்தாவீட்லயும் இருக்கு…எங்ககூட  தாத்தாவும் பூப்பறிப்பார். பின்னாடி பாட்டி இருப்பாங்க..”

பெரிய செடியிலிருந்த வெள்ளை செவ்வந்திகளைப் பறித்து கூடையிலிட்டார்.

“தாத்தா வீட்டுக்குப் போய் என்ன செய்வ….விளையாடுவியா?”அந்திமல்லிகைமணம் காற்றிலேறிக் கொண்டிருந்தது. சிஸ்டர் மூச்சை இருமுறை ஆழ உள்ளிழுத்தார்.

“ம் ..விளையாடுவேன்.முதல்ல பாடம்படிக்கனும்,சீக்கிரமா வீட்டுப்பாடம் எழுதனும்…தாத்தா சொல்லித்தருவாரு…கடைசியா தாத்தா ஈச்சரை சுத்தி நாங்க ஓடிப்போய் எடம்  பிடிப்போம்”

“நீ எங்க இடம்பிடிப்ப?” என்றபடி காற்றில் பறந்த தலையங்கியை சரிசெய்தார்.

சிறுபூச்சிகள் கண்களிடமே வந்து பறந்துகொண்டிருந்தன. கைகளை ஆட்டியபடி இருவரும் நடந்தனர்.

“தாத்தா கைக்கிட்ட. கையபிடிச்சுக்குவோம். இல்லாட்டி தாத்தா கையப்பிடிச்சுக்குவார். கதை சொன்னதும்…நாங்க முத்தம்கொடுப்போம். தாத்தாவும் கொடுப்பார். முத்தம் இனிக்குதேன்னு பொய்சொல்வாரு..”

“ம்…”என்று புன்னகைத்த சிஸ்டரின் கன்னங்கள் குழிந்தன.

“ஞாயித்துக்கிழம டியூசன் கிடையாது.  டீ.வி பாக்க போகச் சொல்லிருவாரு. நான் மட்டும் தாத்தாக்கூட வயலுக்கு போவேன்,”

செடிகளை பார்த்தபடி சிஸ்டர் முன்னால் சென்றிருந்தார்.

 பாட்டி ,“சிந்துவ இன்னும் காணாம்ன்னு கேட்டுட்டே இருந்தீங்க..இப்ப போ..போன்னு துரத்துறீங்க?”என்று சிரித்தார்.

“துண்டை தூக்கமுடியல அதான் கேட்டேன்…” என்பார்.

சிஸ்ட்டர் அவளை அழைத்து ஞாயிற்றுகிழமை," எங்க போவீங்க" என்று கேட்டார்.

“துண்டையெடுத்து என்னோட  தோளிலுல போட்டுக்கிட்டு தாத்தாவுக்கு முன்னாடி நடப்பேன். வரப்பில கையப்பிடிச்சிப்பார். பப்பிஸேம்ல குளிப்பார்…”என்று ஒருகையால் கண்ணைமூடிக்கொண்டாள்.

“அப்படின்னா?” என்று இவள் முகத்தைப் பார்த்தார் சிஸ்டர்.

“கோமணம் கட்டிட்டு குளிப்பார்…நான் தென்னமரத்துக்கு கீழ ஒக்காந்திருப்பேன். கதை சொல்லிக்கிட்டே இருப்பார். அவரு ஒருமந்திரப்பெட்டி வச்சிருக்கார். அதிலருந்து கதை எடுப்பாராம்.எனக்கு ஒருநாள் காட்டினார்…”என்று புன்னகைத்தாள். கலைந்திருந்த முன்மயிர் இளவியர்வையில் நெற்றியில் ஒட்டியிருந்தது.

“என்ன கதை சொல்வாரு?”

“ம்…நெறய கத,கொக்கு கத,மைனா கத,சாமியார் கத  பாதிதான் சொன்னாரு,”

“சரி. நாளைக்கு அந்தக்கதைய சொல்றேன்,”

“உங்களுக்கு தெரியுமா சிஸ்டர்?”

“ தாத்தா சொன்னத நீ சொல்லு. மீதிய நான் சொல்றேன். கூடையக்குடு,”

“ நீங்க நாளைக்கும் பூப்பறிக்க வருவீங்களா? ஆபீஸ்ரூமிலருப்பீங்களா?” என்று முன்னால் ஓடினாள்.

தோட்டத்திற்கு வெளியே கிளைநீட்டி அடர்பச்சையில் ஆடிக்கொண்டிருந்த வேம்பின் அடியில் அமர்ந்திருந்த ஏஞ்சலின் சிஸ்டர் அருகில் நின்றார்.

 “ஏஞ்சலின் இவளுக்கு ‘வளரும்இளமை’ கிளாஸ்க்கு நீங்கதானே எடுக்கறீங்க?”

“ஆமா சிஸ்டர்,”

 தலையாட்டிவிட்டு தண்ணீர்தொட்டி பக்கம் சென்றார்.

குழிக்கல்லில் இருந்த நீரில் கால்களை அலசினாள். வட்டமான சிறு சிமெண்ட்குளத்தில் மலரத் துவங்கியிருந்த அல்லிகளை மண்டியிட்டு பார்த்துக்கொண்டிருந்த சிந்துவிடம் சிஸ்டர்,“வா போகலாம்” என்று பள்ளியின்  இறைக்கூடம் நோக்கி நடந்தார்.

வடக்குபுறமிருந்த நீண்டபடிகளில் ஏறி மரஇருக்கைகள் கடந்து முன்னால் சென்றார்கள். சிஸ்டர் மேசைமேல் வைத்திருந்த பெரிய கிண்ணத்தில் பூக்களை மிதக்கவிட்டபடி“எங்கப்பாவும் ஒருநாள் வராமலாயிட்டார்… தாத்தாமாதிரி,ஏசப்பாவ அப்பாவா நினைச்சுக்கிட்டேன்,”என்றார்.

 சிந்து நிமிர்ந்து சிலுவையேசுவைப் பார்த்துவிட்டு குனிந்துகொண்டாள்.கீழே ஒற்றைமெழுகு உருகிக்கொண்டிருந்தது.

“என்ன சிந்து?”

“தாத்தா கருப்பா இருப்பார். சிரிச்சுக்கிட்டேயிருப்பார்…”என்று மீண்டும் நிமிர்ந்து பார்த்தாள். சிஸ்டர்  ஜெபம்சொல்லும்வரை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தாள். ஓடிப்போய்  எக்கி நின்று  ஆணிஅறையப்பட்ட கால்களில் முத்தமிட்டாள்.

வெளியே, “பஸ் வந்திடுச்சு வரிசையா வாங்க…”என்ற குரல்கேட்டது.“தேங்யூ சிஸ்டர்..”என்ற சிந்துவின் தலையில் கை வைத்து நெற்றியில் சிலுவைக்குறியிட்டு, “எங்கள் பிள்ளையின் மீது அன்பாய் இரும் பிதாவே..”என்றார்.

 படியிறங்கி பையை எடுத்து மாட்டிக் கொண்டு ஓடினாள். தவறி விழுந்திருந்த ரோஜாவின் காம்புமுள் சிந்துவின் கால்களில் தைத்தது. கையிலிருந்த இலவச பேருந்துசீட்டுடன் பூவையும் பிடித்துக் கொண்டு வாயிலைக் கடந்தாள்.

படிகளில் நின்று அவளையே பார்த்துக்கொண்டிருந்த சிஸ்டர் ,“அப்பா…”என்று கண்களைமூடி அமர்ந்தார். விழிதிறந்து உள்ளே பார்த்தார். ஒற்றை மெழுகு உருகிக்கொண்டிருந்தது. மெல்லிய இருள்சூழ மெழுகின் ஔியில் தேவகுமாரன் இருளிலிருந்து பூத்த மெழுகுமலரெனத் தெரிந்தார்.

சற்றுநேரம் பார்த்திருந்த சிஸ்டர்,  “ இனிப்பதெதுவோ அதுவே புளிக்கும்.புளித்ததிலிருந்து திரள்வது நீயல்லவா எந்தையே… “என்றபடி  விளக்கைப் போடுவதற்காக எழுந்தார்.

எங்கிருந்தோ ஜிம்மி வாலாட்டியடி வந்தது . சிஸ்ட்டரின் பார்வைப் பட்டதும் தன்னுடலையே வாலாக்கியபடி ஓடிவந்து ஈரமூக்கால் அவர்முகத்தைத் தடவியது. அதன் மென்கழுத்தில் கைகளைத் தடவினார். 

“என்ன வேணும்? எங்கபோய் சுத்திட்டு வர்ர?”

ஜிம்மி தலையை ஆட்டியது. மீண்டும் மூக்கினால் அவர்முகத்தைத்தொட எம்பியது.








Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...